344.
இரண்டினுள் ஒன்று!
பாடியவர்: அண்டர் நடுங்கல்லினார்.
இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 283-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஆண்மகன் ஒருவன் அழகிய பெண் ஒருத்தியைக் கண்டான். அவன் அவளை மணக்க விரும்பினான். அவள் தந்தைக்குப் பெருமளவில் பொருள் கொடுத்தோ அல்லது அவனோடு போரிட்டோ அவளை அடைவது என்று முடிவு செய்தான். இப்பாடல் அவன் கூற்றாக அமைந்துள்ளது.
பாடலின் பின்னணி: ஆண்மகன் ஒருவன் அழகிய பெண் ஒருத்தியைக் கண்டான். அவன் அவளை மணக்க விரும்பினான். அவள் தந்தைக்குப் பெருமளவில் பொருள் கொடுத்தோ அல்லது அவனோடு போரிட்டோ அவளை அடைவது என்று முடிவு செய்தான். இப்பாடல் அவன் கூற்றாக அமைந்துள்ளது.
திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப்
பாதுகாத்தல்.
துறை: மகட்பாற் காஞ்சி. ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.
செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை
செறிவளை மகளிர் ஓப்பலில் பறந்தெழுந்து
துறைநணி மருதத்து இறுக்கும் ஊரொடு
நிறைசால் விழுப்பொருள் தருதல் ஒன்றோ,
புகைபடு கூர்எரி பரப்பிப் பகைசெய்து 5
பண்பில் ஆண்மை தருதல் ஒன்றோ,
இரண்டினுள் ஒன்றா காமையோ அரிதே;
காஞ்சிப் பனிமுறி ஆரங் கண்ணி. . . .
கணிமே வந்தவள் அல்குல்அவ் வரியே.
அருஞ்சொற்பொருள்:
1.
பை = அழகு; தோடு = தோகை; மஞ்ஞை = மயில். 2. செறிதல் = மிகுதல், நெருங்கல்; ஓப்பல்
= ஓட்டுதல். 3. நணி = அண்மையான இடம்; இறுத்தல் = தங்குதல். 4. நிறை = நிறைவு; சால்
= நிறைவு; விழு = சிறந்த. 5. கூர் = மிகுதி. 8. காஞ்சி = ஒரு வகை மரம்; பனி = குளிர்;
முறி = தளிர்; ஆர் = ஆத்தி. 9. கணி = வேங்கை மரம்; மே = அன்பு; மேவருதல் = விரும்புதல்.
உரை: இப்பெண்ணை அடைவதற்கு
இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, வளையல்களை நிறைய அணிந்த மகளிர் ஓட்டுவதால், செந்நெல் கதிர்களை
உண்ட, அழகிய தோகைகளையுடைய மயில், பறந்து எழுந்து, நீர்த்துறையை அடுத்த மருதமரத்தில்
தங்கும் ஊரையும், மிகுந்த அளவில் சிறந்த பொருட்களையும் இவள் தந்தைக்குத் தருவது. மற்றொன்று, பகைகொண்டு மிகுந்த அளவில் தீயையும் புகையையும்
பரப்பிப் பண்பில்லாத செயல்களைச் செய்வது. இவ்விரண்டினுள்
ஒன்று நடைபெறுவது உறுதி. காஞ்சியின் குளிர்ந்த தளிர்களோடு ஆத்திப்பூவைக் கலந்து தொடுத்த
மாலைசூடும்… இவள் வேங்கைமரத்தின் பூக்களை விரும்பித் தன் இடுப்பில் வரிசையாக அணிபவள்.
No comments:
Post a Comment