306. ஒண்ணுதல் அரிவை!
பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார். இவர் ஒரு பெண்பாற் புலவர். இவர் பாண்டிய நாட்டில் இருந்த அள்ளூர் என்னும் ஊரைச் சார்ந்தவர் என்று கருதப்படுகிறது. இவர் புறநானூற்றில் இயற்றிய ஒருபாடலும், குறுந்தொகையில் பத்துப் பாடல்களும் அகநானூற்றில் ஒருபாடலும் இயற்றியுள்ளார்.
பாடலின் பின்னணி: மறக்குலப் பெண் ஒருத்தி நாள்தோறும் தன் முன்னோர்களின் நடுகல்லுக்குச் சென்று, தம் கணவன் போரில் வெறி பெறவேண்டும் என்றும், தன் இல்லத்திற்கு நாள் தோறும் விருந்தினர்கள் வரவேண்டும் என்றும், தன் அரசன் போர்புரிவதற்கு பகைவர்கள் இருக்க வேண்டும் என்றும் வழிபட்டாள். அவள் வழிபடுவதைக் கண்ட புலவர் நன்முல்லையார், தான் கண்ட காட்சியை இப்பாடலில் குறிப்பிடுகிறார்.
இப்பாடலில் சில சொற்கள் கிடைக்கவில்லை.
திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை: மூதின் முல்லை. வீரர்க்கல்லாமல் அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் சினமுண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்.
களிறுபொரக் கலங்கு கழல்முள் வேலி
அரிதுஉண் கூவல் அங்குடிச் சீறூர்
ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது;
விருந்து எதிர் பெறுகதில் யானே; என்ஐயும் 5
ஒ .. .. .. .. .. .. வேந்தனொடு
நாடுதரு விழுப்பகை எய்துக எனவே.
அருஞ்சொற்பொருள்: 1. கூவல் = பள்ளம், கிணறு (சிறிதளவே நீருள்ள நீர்த்துறை). 2. அம்குடி = அழகிய குடி. 3. ஒலித்தல் = தழைத்தல். 4. பரவல் = வணங்கல், வாழ்த்துதல்; ஒடியாது = இடைவிடாமல், நாள்தோறும். 7. விழுப்பகை = சிறந்த பகை.
உரை: யானைகள் படிந்ததால் கலங்கிச் சேறாகி, உண்ணும் நீர் சிறிதளவே உள்ள நீர்த்துறையையும், முள்ளையுடைய கழற்கொடிகளாலாகிய வேலி சூழ்ந்த அழகிய சிறுகுடிகளையுமுடைய சிற்றூரில் வாழும், தழைத்த மெல்லிய கூந்தலையும் ஒளி பொருந்திய நெற்றியையும் உடைய பெண் ஒருத்தி, நாளும் தவறாமல் தன் முன்னோர்களின் நடுகல்லைத் தொழுது, ”நாள்தோறும் விருந்தினர் என் இல்லத்திற்கு வர வேண்டும்; என் கணவனும் ….. அவன் தலைவனாகிய வேந்தனும் பிற நாடுகளை வென்று பொருள் பெற உதவும் பெரும்பகையை அடைவானாகுக” என்று அவள் நடுகல்லை வழிபட்டாள்.
சிறப்புக் குறிப்பு: தன் இல்லத்திற்கு நாள் தோறும் விருந்தினர் வரவேண்டும் என்று இப்பாடலில் ஒருபெண் வேண்டுவது, விருந்தோம்பல் மிகவும் சிறந்த நற்பண்பாகவும், இல்லற வாழ்க்கையைப் பின்பற்றுபவர்களுக்கு விருந்தோம்பல் இன்றியமையாத ஒழுக்கமாகவும் சங்க காலத்தில் கருதப்பட்டது என்பதைக் காட்டுகிறது.