Tuesday, May 10, 2011

252. அவனே இவன்!

பாடியவர்: மாரிப்பித்தியார். இவரை பற்றிய குறிப்புகளைப் பாடல் 251-இல் காண்க.
பாடலின் பின்னணி:
முந்திய பாடலில் இளைஞன் ஒருவன் துறவறம் பூண்டொழுகுவதைக் கூறிய மாரிப்பித்தியார் அவன் இல்வாழ்க்கையில் இருந்த பொழுது மகளிரை இனிய சொல்லால் காதல் மொழிபேசி வயப்படுத்தும் வேட்டுவனாய் இருந்தான் என்று இப்பாடலில் கூறுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: தாபத வாகை. முனிவரின் ஒழுக்க நிலையை உரைத்தல்.

கறங்குவெள் அருவி ஏற்றலின் நிறம்பெயர்ந்து
தில்லை அன்ன புல்லென் சடையோடு
அள்இலைத் தாளி கொய்யு மோனே
இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
5 சொல்வலை வேட்டுவன் ஆயினன் முன்னே.

அருஞ்சொற்பொருள்:
1. கறங்கல் = ஒலித்தல். 3. அள்ளு = செறிவு; தாளி = ஒருவகைக் கொடி; புல் = புல்லிய, மென்மையான; மடமயில் = இளம் மயில்.

உரை: ஒலிக்கும் வெண்மையான அருவியில் நீராடுவதால், பழையநிறம் மாறி தில்லைமரத் தளிர் போன்ற வெளிறிய சடையோடு கூடி நின்று, செறிந்த இலைகளுடைய தாளியைப் பறிக்கும் இவன், முன்பு இல்வாழ்க்கையில் இருந்த பொழுது இளம் மயிலை ஒத்த தன் மனைவியை வயப்படுத்தும் சொற்களலாகிய வலையையுடைய வேட்டுவனாக இருந்தான்.

251. அவனும் இவனும்!

பாடியவர்: மாரிப்பித்தியார். இப்பெயர், சில நூல்களில் மாற்பித்தியார் என்றும் வேறு சில நூல்களில் மரற்பித்தியார் என்றும் காணப்படுகிறது. இவர் ஒரு பெண்பாற் புலவர் என்று சிலர் கருதுகின்றனர். மாரிக்காலத்து மலரும் பித்திகம் என்னும் மலரைப் பாடியதால் இவர் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், இவர் பித்திகம் என்னும் மலரைப் பற்றிப் பாடிய பாடல் கிடைக்கவில்லை.

பாடலின் பின்னணி: சிறப்பாக வாழ்ந்த தலைமகன் ஒருவன், துறவறம் பூண்டான். அவன் இல்வாழ்க்கையில் இருந்ததையும் தற்பொழுது துறவறம் மேற்கொண்டிருப்பதையும் நினைத்து இப்பாடலை மாரிப்பித்தியார் இயற்றியுள்ளார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: தாபத வாகை. முனிவரின் ஒழுக்க நிலையை உரைத்தல்.

ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற்
பாவை அன்ன குறுந்தொடி மகளிர்
இழைநிலை நெகிழ்ந்த மள்ளற் கண்டிகும்;
கழைக்கண் நெடுவரை அருவியாடிக்
5 கான யானை தந்த விறகின்
கடுந்தெறல் செந்தீ வேட்டுப்
புறம்தாழ் புரிசடை புலர்த்து வோனே.

அருஞ்சொற்பொருள்:
1. ஓவம் = ஓவியம்; வரைப்பு = மாளிகை. 2. பாவை = பொம்மை. 3. இழை = அணிகலன்; நெகிழ்ந்த = கழன்ற; மள்ளன் = இளைஞன்; கண்டிகும் = கண்டோம். 4.கழை = மூங்கில்;. 5. கானம் = காடு. 6. கடுகுதல் = மிகுதல்; தெறல் = வெம்மை; வேட்டு = விரும்பி. 7. புரிசடை = திரண்டு சுருண்ட சடை; புலர்தல் = உலர்தல்.

உரை: ஓவியம் போல் அழகான இடங்களுடைய மாளிகையில், சிறிய வளயல்களை அணிந்த, பாவை போன்ற மகளிரின் அணிகலன்களை நெகிழவைத்த இளைஞனை முன்பு கண்டுள்ளோம். இப்பொழுது, மூங்கில் மிகுந்த நெடிய மலைகளிலிருந்து விழும் அருவிகளில் நீராடி, காட்டு யானைகள் கொண்டு வந்து தந்த விறகால் மூட்டிய மிகுந்த வெப்பமுள்ள தீயில், விருப்பத்துடன் தன் முதுகுவரை தாழ்ந்துள்ள திரண்டு சுருண்ட சடைமுடியை உலர்த்துபனும் அவனே.

250. மனையும் மனைவியும்!

பாடியவர்: தாயங் கண்ணியார். கண்ணியார் என்பது இவர் இயற்பெயர் என்றும் தாயன் என்பவரின் மகளாதலால் தாயங் கண்ணியார் என்று அழைக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது.
பாடலின் பின்னணி: தாயங் கண்ணியாருக்குத் தெரிந்த ஒருவன் செல்வத்தோடும் சிறப்போடும் வாழ்ந்தான். அவன் இறந்த பிறகு, அவன் மனைவி கைம்மை நோன்பை மேற்கொண்டாள். ஒருகால், தாயங் கண்ணியார், அவளைக் காணச் சென்றார். அவள் கைம்மை நோன்பை மேற்கொண்டு வருத்தத்தோடு வாழும் வாழ்க்கையைக் கண்டு மனம் நொந்து இப்பாடலை இயற்றியுள்ளார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: தாபத நிலை. கணவன் இறந்ததால் மனைவி கைம்மை நோன்பை மேற்கொண்டிருத்தலை உரைத்தல்.

குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்
இரவலர்த் தடுத்த வாயிற், புரவலர்
கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர்க்
கூந்தல் கொய்து, குறுந்தொடி நீக்கி
5 அல்லி உணவின் மனைவியொடு இனியே
புல்என் றனையால் வளங்கெழு திருநகர்
வான்சோறு கொண்டு தீம்பால் வேண்டும்
முனித்தலைப் புதல்வர் தந்தை
தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே.

அருஞ்சொற்பொருள்:
1. குய் = தாளிப்பு; குரல் = ஒலி; மலிந்த = மிகுந்த; அடிசில் = உணவு. 2. தடுத்த = நிறுத்திய. 4. கொய்து = களைந்து. 6. திருநகர் = அழகிய மாளிகை. 7. வான் = சிறந்த. 8. முனித்தலை = குடுமித்தலை. 9. தனித்தலை = தனியே அமைந்த இடம்; முன்னுதல் = அடைதல்.

கொண்டு கூட்டு: நகரே, நீ புதல்வர் தந்தை காடு முன்னியபின், புல்லென்றனை எனக் கூட்டுக.

உரை: அழகிய மாளிகையே! நன்கு தாளித்த, வளமான துவையலோடு கூடிய உணவை அளித்து இரவலர்களை வேறு எங்கும் செல்லாமல் தடுத்து நிறுத்திய வாயிலையும், தன்னிடம் ஆதரவு தேடி வந்தவர்களின் கண்ணீரைத் துடைக்கும் குளிர்ந்த நறுமணமுள்ள பந்தலையும் உடையதாக முன்பு நீ இருந்தாய். சுவையான சோற்றை உண்டு இனிய பாலை விரும்பும் குடுமித்தலையயுடைய புதல்வர்களின் தந்தை தனியிடமாகிய சுடுகாட்டை அடைந்த பின், அவன் மனைவி கூந்தலைக் களைந்து, வளையல்களை நீக்கி, அல்லி அரிசியை உணவாகக் கொள்கிறாள். இப்பொழுது நீ பொலிவிழந்து காணப்படுகிறாய்.

249. சுளகிற் சீறிடம்!

பாடியவர்: தும்பைச் சொகினனார். இவரது இயற்பெயர் சொகினன். இவரது ஊர் தொண்டை நாட்டிலிருந்த தும்பை என்னும் ஊர். சொகினம் என்ற சொல்லுக்கு நிமித்தம் என்று பொருள். இச்சொல் இப்பொழுது சகுனம் என்று மருவியது. இவரது தொழில், நிமித்தம் கூறுவதாக இருந்ததால் இவர் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பாடலின் பின்னணி: பெரிய நாட்டுக்குத் தலைவனாக இருந்த ஒருவன் உயிரோடு இருந்த பொழுது, பலரோடும் கூடி உண்பவனாக இருந்தான். அவன் இறந்த பிறகு, அவன் மனைவி கைம்மை நோன்பை மேற்கொண்டாள். ஒருநாள், அவள் ஒரு சிறிய இடத்தை கண்ணிர் கலந்த சாணத்தோடு மெழுகுவதைக் கண்ட புலவர் சொகினனார் தம் வருத்தத்தை இப்படலில் வெளிப்படுத்துகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: தாபத நிலை. கணவன் இறந்ததால் மனைவி கைம்மை நோன்பை மேற்கொண்டிருத்தலை உரைத்தல்.

கதிர்மூக்கு ஆரல் கீழ்ச்சேற்று ஒளிப்பக்,
கணைக்கோட்டு வாளை மீநீர்ப் பிறழ,
எரிப்பூம் பழனம் நெரித்துஉடன் வலைஞர்
அரிக்குரல் தடாரியின் யாமை மிளிரச்
5 பனைநுகும்பு அன்ன சினைமுதிர் வராலொடு
உறழ்வேல் அன்ன ஒண்கயல் முகக்கும்,
அகல்நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப்
பகல்இடம் கண்ணிப் பலரொடும் கூடி,
ஒருவழிப் பட்டன்று மன்னே; இன்றே,
10 அடங்கிய கற்பின் ஆய்நுதல் மடந்தை
உயர்நிலை உலகம் அவன்புக வார
நீறாடு சுளகின் சீறிடம் நீக்கி
அழுதல் ஆனாக் கண்ணள்
மெழுகு ஆப்பிகண் கலுழ்நீ ரானே.

அருஞ்சொற்பொருள்:
1. கதிர் மூக்கு = கூர்மையான மூக்கு; ஆரல் = ஒரு வகை மீன்; ஒளிப்ப = மறைய. 2. கணை = திரண்ட; கோடு - இங்கு, வாளை மீனின் மீசையைக் குறிக்கிறது. 3. எரிப்பூ = நெருப்பைப் போல் சிவந்த செந்தாமரை; பூ = தாமரை; பழனம்= பொய்கை (குளம்); நெரித்து = நெருங்கி; வலைஞர் = நெய்தல் நில மக்கள். 4. அரிக்குரல் = மெல்லிய ஒலி; தடாரி = சிறுபறை; யாமை = ஆமை. 5. நுகும்பு = குருத்து; சினை = கரு; வரால் = ஒரு வகை மீன். 6. உறழ்தல் = எதிரிடுதல்; கயல் = கெண்டை மீன்; முகத்தல் = மொள்ளல். 7. புகா = உணவு; நெருநை = நேற்றை. 8. பகல் = ஒளி; கண்ணி = கருதி, குறித்து, பொருந்தி. 9. ஒருவழிப்படுதல் = ஒற்றுமைப் படுதல்; மன்னே – கழிந்தது என்ற இரங்கற் பொருளில் கூறப்பட்டது. 10. ஆய் = அழகு; நுதல் = நெற்றி. 11. புகவு = உணவு. 12. நீறு = புழுதி; ஆடுதல் = பூசுதல்; சுளகு = முறம். ஆனாமை = நீங்காமை. 14. ஆப்பி = பசுவின் சாணி; கலுழ்தல் = அழுதல்.

உரை: கூர்மையான மூக்கையுடைய ஆரல் மீன் கீழேயுள்ள சேற்றில் மறைய, திரண்ட மீசையையுடைய வாளைமீன் நீர்மேல் பிறழ, நெருப்புப்போல் சிவந்த செந்தாமரை பூத்த பொய்கையை வலைஞர் அடைந்தவுடன், மெல்லிய ஓசையையுடைய தடாரி போன்ற ஆமை பிறழ, பனங்குருத்தைப் போன்ற கருமுதிர்ந்த வரால் மீன்களோடு, எதிரிடும் வேல் போன்ற கெண்டை மீன்களையும் முகந்து கொள்ளும் அகன்ற நாட்டின் தலைவன் உயிரோடு இருந்த பொழுது, ஒளி பொருந்திய இடத்தில், பலரோடு கூடி உண்டான். அது கழிந்தது. இப்பொழுது, அவன் மேலுலகம் அடைந்ததால், அழகிய நெற்றியும் கற்பும் உடைய அவன் மனைவி அவனுக்கு உணவு படைப்பதற்காக, புழுதி படிந்த முறமளவு உள்ள சிறிய இடத்தைத் தன்னுடைய கண்ணீரில் கலந்த பசுஞ்சாணத்தால் மெழுகுகிறாள்.

248. அளிய தாமே ஆம்பல்!

பாடியவர்: ஒக்கூர் மாசாத்தனார் (248). ஒக்கூர் என்ற பெயருடைய ஊர்கள் சோழ நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் இருந்தன. மாசாத்தன் என்பது இவர் இயற்பெயர். புறநானூற்றில் இவர் இயற்றிய ஒருசெய்யுள் மட்டுமல்லாமல், இவர் இயற்றியதாக அகநானூற்றிலும் ஒரு செய்யுள் (14) உள்ளது.
பாடலின் பின்னணி: தன் கணவனை இழந்த பெண் ஒருத்தி, கைம்மை நோன்பை மேற்கொண்டு வாழ்ந்தாள். அவள் தன் நிலைமையைக் நினைத்து வருந்துவதை இப்பாடலில் காண்கிறோம்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: தாபத நிலை. கணவன் இறந்ததால் மனைவி கைம்மை நோன்பை மேற்கொண்டிருத்தலை உரைத்தல்.

அளிய தாமே சிறுவெள் ளாம்பல்,
இளையம் ஆகத் தழையா யினவே, இனியே,
பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத்து
இன்னா வைகல் உண்ணும்
5 அல்லிப் படுஉம் புல் ஆயினவே.

அருஞ்சொற்பொருள்:
1. ஆம்பல் = அல்லிப் பூ. 2. இளையம் = சிறு வயதில். 3. பொழுது மறுத்து = கலம் கடந்து. 4. இன்னாமை = துன்பம்; வைகல் = நாள். 5. படூஉம் = உண்டாகும்.

உரை: இந்த சிறிய வெண்ணிறமான அல்லிப் பூக்கள் இரங்கத் தக்கன. சிறுவயதில் இந்த அல்லியின் இலைகள் எனக்கு உடையாக உதவின. இப்பொழுது, பெரிய செல்வமுடைய என் கணவன் இறந்ததால், உண்ணும் நேரத்தில் உண்ணாமல், காலம் தாழ்த்தித், துன்பத்தோடு, நாளும் உண்ணும் புல்லரிசியாக இந்த அல்லி பயன்படுகின்றது.

சிறப்புக் குறிப்பு: இளம்பெண்கள் அல்லிப்பூவால் தொடுக்கப்பட்ட தழையுடையை அணிந்து தம்மை அழகு செய்வதுகொள்வது பழங்காலத்தில் வழக்கிலிருந்தது என்பது இப்பாடலிலிருந்து தெரிகிறது.

247. பேரஞர்க் கண்ணள்!

பாடியவர்: மதுரைப் பேராலவாயர் (247, 262). ஆலம் என்ற சொல்லுக்கு நஞ்சு என்று பொருள். ஆலவாய் என்பது சிவனுடைய வாயைக்குறிக்கும். மற்றும், மதுரையில் உள்ள சொக்கநாதப் பெருமானின் கோயிலுக்கும் பெயர் ஆலவாய். மதுரையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு ஆலவாயர் என்று பெயர். இப்புலவர், மதுரையைச் சார்ந்தவராகையால், இவர் பெற்றோர் இவருக்கு ஆலவாயர் என்று பெயரிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. இவர் புறநானூற்றில் இயற்றியுள்ள இரண்டு பாடல்கள் மட்டுமல்லாமல், அகநானூற்றில் இரண்டு செய்யுட்களும் (87, 296), நற்றிணையில் இரண்டு செய்யுட்களும் (51, 361) இயற்றியுள்ளார்.
பாடலின் பின்னணி: பெருங்கோப்பெண்டு தன் கணவனுடைய ஈமத்தீயில் வீழ்ந்து உயிர் துறந்ததைக் கண்ட பேராலவாயர், தம் வருத்தத்தை இப்பாடலில் தெரிவிக்கிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: ஆனந்தப்பையுள். கணவன் இறந்த போது மனைவி துன்புறுதலைக் கூறுதல்.

யானை தந்த முளிமர விறகின்
கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து
மடமான் பெருநிரை வைகுதுயில் எடுப்பி
மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில்
5 நீர்வார் கூந்தல் இரும்புறம் தாழப்
பேரஞர்க் கண்ணள் பெருங்காடு நோக்கித்
தெருமரும் அம்ம தானேதன் கொழுநன்
முழவுகண் துயிலாக் கடியுடை வியனகர்ச்
சிறுநனி தமியள் ஆயினும்
10 இன்னுயிர் நடுங்குந்தன் இளமைபுறங் கொடுத்தே.

அருஞ்சொற்பொருள்:
1. முளித்தல் = காய்தல்; முளிமரம் = காய்ந்த மரம். 2. கானவர் = வேடர்; பொத்துதல் = தீ மூட்டுதல்; ஞெலிதல் = கடைதல்; ஞெலி தீ = கடைந்த தீ; விளக்கம் = ஒளி. 3. வைகல் = தங்கல்; எடுப்பி = எழுப்பி. 4. முன்றில் = முற்றம்; சீக்கல் = கீறிக் கிளறுதல். 6. அஞர் = வருத்தம்; பேரஞர் = பெரும் வருத்தம். 7. தெருமரல் = மனச் சுழற்சி; அம்ம – அசைச் சொல். 8. கடி = காவல்; வியன் = அகலம். 9. சிறுநனி = சிறிது நேரம்; தமியள் = தனித்திருப்பவள்; 10. புறங்கொடுத்தல் = போகவிடுதல்.

கொண்டு கூட்டு: அணங்குடை முன்றிலின் இளமை புறங் கொடுத்துப் பெருங்காடு நொக்கித் தான் தெருமரும் எனக் கூட்டுக.

உரை: பெண் தெய்வத்தின் கோயில் முற்றத்தில், யானைகொண்டுவந்து தந்த, காய்ந்த விறகால் வேடர்கள் மூட்டிய தீயின் ஒளியில் மடப்பம் பொருந்திய மான்களின் கூட்டம் தங்கி உறங்கிக்கொண்டிருந்தது. அங்கு குரங்குகள் தீயைக் கிளறி ஆர்ப்பரித்து அந்த மான்களை உறக்கத்திலிருந்து எழுப்பின. ஓயாது முரசு ஒலிக்கும், காவலுடைய பெரிய அரண்மனையிலிருந்து சிறுபொழுது தன் கணவனைவிட்டுப் பிரிந்து தனித்திருந்தாலும் உயிர் நடுங்கும் பெருங்கோப்பெண்டு, இப்பொழுது நீர் வடியும் தழைத்த கூந்தல் முதுகில் தாழ, தனியளாக, துயரம் மிகுந்த கண்களோடு, பெண் தெய்வத்தின் கோயிலின் முற்றத்திலிருந்து, சுடுகாட்டில் மூட்டப்பட்ட தீயை நோக்கி மனத் துயரத்தோடு, தன் இளமையைத் துறந்து பெருங்கோப்பெண்டு சென்றாள்.

சிறப்புக் குறிப்பு: “முழவுகண் துயிலா” என்பது “ஓயாது ஒலிக்கும் முரசு” என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது.