Monday, December 7, 2009

135. காணவே வந்தேன்!




பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். இப்புலவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். ஆய் அண்டிரனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: முடமோசியார் ஆய் அண்டிரனைக் காணச் சென்றார். அவருடைய புலமையை நன்கு அறிந்திருந்த ஆய், அவருக்கு யானை, குதிரை, தேர் போன்றவற்றைப் பரிசாக அளிக்க முன்வந்தான். அவர் அவற்றை விரும்பவில்லை. ஆய் மகிழ்ச்சியோடு அளிக்கும் பரிசுகளை வேண்டம் என்று கூறினால் அவன் வருந்துவானோ என்று கருதி, ஒரு பாணன் ஆயைக் காணும் விருப்பம் மட்டுமே உள்ளத்தில் கொண்டு அவனக் காண வந்ததாகவும், அவன் தனக்கு யானை, குதிரை, தேர் போன்றவை வேண்டாம் என்று கூறி ஆயின் வலிமையையும் புகழையும் பாராட்டிப் பாடுவது போலும் இப்பாடலில் கூறித் தன் கருத்தை முடமோசியார் வெளிப்படுத்துகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.

கொடுவரி வழங்கும் கோடுயர் நெடுவரை
அருவிடர்ச் சிறுநெறி ஏறலின் வருந்தித்
தடவரல் கொண்ட தகைமெல் ஒதுக்கின்
வளைக்கை விறலியென் பின்னள் ஆகப்
5 பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின்
வரிநவில் பனுவல் புலம்பெயர்ந்து இசைப்பப்
படுமலை நின்ற பயங்கெழு சீறியாழ்
ஒல்கல் உள்ளமொடு ஒருபுடைத் தழீஇப்
புகழ்சால் சிறப்பின்நின் நல்லிசை உள்ளி
10 வந்தெனன் எந்தை யானே: என்றும்
மன்றுபடு பரிசிலர்க் காணின் கன்றொடு
கறையடி யானை இரியல் போக்கும்
மலைகெழு நாடன் மாவேள் ஆஅய்!
களிறும் அன்றே; மாவும் அன்றே;
15 ஒளிறுபடைப் புரவிய தேரும் அன்றே;
பாணர் பாடுநர் பரிசிலர் ஆங்குஅவர்
தமதுஎனத் தொடுக்குவர் ஆயின் எமதுஎனப்
பற்றல் தேற்றாப் பயங்கெழு தாயமொடு
அன்ன வாகநின் ஊழி; நின்னைக்
20 காண்டல் வேண்டிய அளவை; வேண்டார்
உறுமுரண் கடந்த ஆற்றல்
பொதுமீக் கூற்றத்து நாடுகிழ வோயே!

அருஞ்சொற்பொருள்:
1.கொடுவரி = புலி; கோடு = மலைச் சிகரம்; வரை = மலை. 2. விடர் = பிளவு. 3. தடவரல் = பெருந்துயர், வளைவு; தகை = தளர்வு, அழகு; ஒதுக்கு = நடை. 5. புரி = முறுக்கு. 6. வரி = இசைப்பாடல்; நவிலல் = கற்றல், பெரிது ஒலித்தல் ; பனுவல் = பாட்டு. 7. படுமலை = படுமலைப் பலை (ஒரு பண்). 8. ஒல்கல் = தளர்ச்சி. 12. கறை = உரல்; இரியல் = விட்டுப் போதல், விரைந்து செல்கை; இரியல் போக்குதல் = திரளாகக் கொடுத்தல். 15. ஒளிறு = ஓளி விடும்; புரவி = குதிரை. 17. தொடுத்தல் = சேர்த்தல், வளைத்துக் கொள்ளுதல். 18. தேற்றா = தெளியா; தாயம் = சுற்றம். 19. ஊழி = வாழ்நாள். 20. வேண்டார் = பகைவர். 21. உறு = மிக்க; முரண் = வலிமை, மாறுபாடு. 22 = பொது = அனைவரும்; மீக்கூறுதல் = புகழ்ந்து கூறுதல்.

கொண்டு கூட்டு: நாடு கிழவோய், யான் வந்தது, களிறு முதலியன வேண்டியன்று; நின்னைக் காண்டல் வேண்டிய அளவே; நின்னூழி அன்னவாக எனக் கூட்டுக.

உரை: புலிகள் திரியும் உயர்ந்த சிகரத்தையுடைய நெடிய மலையின் கடத்தற்கரிய பிளவுகளுடைய சிறுவழியில் ஏறி வந்ததால் வருத்தத்தோடும், வளைந்த உடலோடும், நடையில் தளர்ச்சியோடும் வளையல்களை அணிந்த விறலி என் பின்னால் வர நான் மலைப்பாதையில் வந்தேன். நான் வரும் வழியில், பொன்னை உருக்கிக் கம்பியாகச் செய்ததைப் போன்ற முறுக்கிய நரம்புகளுடைய என்னுடைய யாழ், இசையுடன் கூடிய பாடல்களை நிலத்திற்கேற்ப மாறி மாறி பெருமளவில் ஒலித்தது. என்னுடைய யாழ் படுமலைப் பண் அமைந்த பாடல்களைப் பாடுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அத்தகைய சிறிய யாழைத் தளர்ந்த மனத்தோடு ஒரு பக்கம் தழுவிக்கொண்டு, புகழ்தற்கு அமைந்த சிறப்புடைய உன் நல்ல புகழை நினைத்து நான் என் தலைவனாகிய உன்னிடத்து வந்தேன்.

எந்நாளும் மன்றத்திற்கு வந்த பரிசிலரைக் கண்டால் உரல்போன்ற பருத்த அடிகளுடைய யானைகளையும் அவற்றின் கன்றுகளையும் திரளாக வழங்கும் மலை நாட்டினனே! பெருமைக்குரிய வேளிர் குலத்தவனே! நான் உன்னிடத்து வேண்டுவது யனையும் அன்று; குதிரையும் அன்று; ஒளிமிக்க படையுடன் குதிரைகள் பூட்டப்பட்ட தேரும் அன்று. பாணரும், புலவரும், பரிசிலரும் ஆகியோர் தமது என உன் பொருளை வளைத்துக் கொள்வாராயின், அதனை எம்முடையது என்று அவரிடமிருந்து மீண்டும் (கைக்கொள்வதை அறியாத) கைக்கொள்ளாத, பயனுள்ள சுற்றத்தோடு கூடியதாக உன் வாழ்நாட்கள் அமையட்டும். உன்னைக் காண வேண்டுமென்பதற்காகவே வந்தேன். பகைவருடைய மிகுந்த வலிமையை அழிக்க வல்ல ஆற்றலும், எவரும் புகழந்து கூறும் நாட்டையும் உடையவனே!

134. அறவிலை வணிகன் ஆய் அலன்!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். இப்புலவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். ஆய் அண்டிரனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: ஆய் கொடைத் தன்மை மிகுந்தவன். தன்னிடம் உள்ள பொருளைப் பிறர்க்கு அளிப்பதால் மறுபிறவியில் நன்மைகளை அடையலாம் என்று எண்ணி அவன் கொடையை ஒரு வணிகமாகக் கருதுபவன் அல்லன். அறச் செயல்களைச் செய்வதுதான் சான்றோர் கடைப்பிடித்த நெறி என்று உணர்ந்து அவன் அறச் செயல்களைச் செய்கிறான் என்று இப்பாடலில் முடமோசியார் கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.


இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆஅய்அலன் பிறரும்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன்று அவன்கைவண் மையே.

அருஞ்சொற்பொருள்:
4. ஆங்கு = அவ்வாறு, அவ்விடம்; பட்டன்று = பட்டது.

உரை: இப்பிறப்பில் செய்யும் அறச்செயல்கள் மறுபிறப்பில் பயனளிக்கும் என்று கருதி, அறம் செய்வதை ஆய் ஒரு விலைபொருளாகக் கருதுபவன் அல்லன். அறம் செய்வதுதான் சான்றோர் கடைப்பிடித்த வழி என்று உலகத்தவர் கருதுகிறார்கள். ஆய் அண்டிரனின் கொடைச் செயல்களும் அவ்வழிப் பட்டவையே.

சிறப்புக் குறிப்பு: ஈகை என்ற அதிகாரத்தில்,

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து. (குறள் - 221)

என்று வள்ளுவர் கூறுகிறார். அதாவது, “வறுமையில் உள்ளவர்களுக்குக் கொடுத்து உதவுவதுதான் ஈகை. மற்றெல்லாம் ஒரு குறிப்பிட்ட பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையதாகும்” என்று வள்ளுவர் கூறுகிறார். சான்றோர் கடைப்பிடிக்கும் நெறி என்ற கொள்கையோடு, ஆய் அண்டிரன் எதையும் எதிர்பார்க்காமல் ஈகை செய்வது வள்ளுவரின் குறளோடு ஒப்பு நோக்கத் தக்கது.

அடுத்து வரும் குறளில் (குறள் - 222), ”மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று” என்று வள்ளுவர் கூறுகிறார். ஈகையினால் மேலுலகத்திற்குச் செல்ல முடியாவிட்டாலும் ஈகை நல்ல செயல்தான் என்று வள்ளுவர் கூறியிருப்பதும் ஆய் அண்டிரனின் செயலோடு ஒப்பிடத் தக்கதாகும்.

133. காணச் செல்க நீ!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். இப்புலவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். ஆய் அண்டிரனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: விறலி ஒருத்தி, ஆயின் புகழைக் கேட்டிருந்தாலும் அவனை நேரில் கண்டதில்லை. அவளை ஆய் அண்டிரனிடம் முடமோசியார் ஆற்றுப்படுத்தும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: விறலியாற்றுப்படை. அரசனின் புகழ்பாடும் விறலியை அரசனிடம் ஆற்றுப்படுத்துதல்.

மெல்லியல் விறலிநீ நல்லிசை செவியிற்
கேட்பின் அல்லது காண்புஅறி யலையே;
காண்டல் வேண்டினை ஆயின் மாண்டநின்
விரைவளர் கூந்தல் வரைவளி உளரக்
5 கலவ மஞ்ஞையின் காண்வர இயலி
மாரி யன்ன வண்மைத்
தேர்வேள் ஆயைக் காணிய சென்மே!

அருஞ்சொற்பொருள்:
3.மாண்ட = பெருமைக்குரிய. 4. விரை = மணம்; வரை = மலை; வளி = காற்று; உளர்தல் = தலை மயிராற்றுதல், அசைத்தல். 5. கலவம் = தோகை; மஞ்ஞை = மயில்.

உரை: மெல்லிய இயல்புடைய விறலியே! நீ நல்ல புகழைப்பற்றிக் கேள்விப் பட்டிருப்பாய்; ஆனால், அத்தகைய புகழுடையவரைக் கண்டிருக்க மாட்டாய். அத்தகைய புகழுடையவரைக் காண விரும்பினால், உன் பெருமைக்குரிய மணம் வீசும் கூந்தல், மயில் தோகை போல் மலைக் காற்றில் அசையுமாறு காட்சி அளிக்கும் வகையில் நீ நடந்து, மழை போன்ற வள்ளல் தன்மையோடு தேர்களைப் பரிசாக வழங்கும் ஆயைக் காணச் செல்க.

132. முன் உள்ளுவோனைப் பின் உள்ளினேனே!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். இப்புலவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். ஆய் அண்டிரனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: ஆய் அண்டிரனைக் கண்டு, அவனோடு பழகி, அவன் கொடைத் தன்மையை நேரில் கண்ட முடமோசியார், இத்துணை நாட்களும் ஆயை நினையாமல் மற்றவரை நினைத்தும், அவர் புகழ் பாடியும், அவர் புகழைக் கேட்டும் இருந்ததை எண்ணி வருந்துகிறார். தான் செய்த தவறுக்காகத் தன் உள்ளமும், நாவும், செவியும் அழியட்டும் என்று இப்பாடலில் கூறித் தன் வருத்ததைத் தெரிவிக்கிறார். மற்றும், வட திசையில் உள்ள புகழ் மிக்க இமயத்திற்கு ஈடாகத் தென்திசையில் புகழ் மிக்க ஆய்குடி இருக்கிறது. அது இல்லையாயின், இவ்வுலகம் தலைகீழாகப் பிறழும் என்றும் இப்பாடலில் கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

முன்உள்ளு வோனைப் பின்உள்ளி னேனே!
ஆழ்கஎன் உள்ளம்; போழ்க என் நாவே!
பாழ்ஊர்க் கிணற்றின் தூர்கஎன் செவியே!
நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
5 குவளைப் பைஞ்சுனை பருகி அயல
தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும்
வடதிசை அதுவே வான்தோய் இமயம்
தென்திசை ஆஅய்குடி இன்றாயின்
பிறழ்வது மன்னோஇம் மலர்தலை உலகே.

அருஞ்சொற்பொருள்:
2.ஆழ்தல் = அமிழ்தல்; போழ்தல் = அழிதல், பிளத்தல். 3. தூர்த்தல் = நிரப்புதல். 4. நரந்தை = நாரத்தை; கவரி = கவரிமா (ஒரு விலங்கு). 5. பை = பசுமை; சுனை = நீர் நிலை; அயல் = அருகிடம், பக்கம். 6. தகரம் = தகர மரம்; பிணை = பெண் மான்; வதிதல் = தங்குதல், துயிலுதல். 7. தோய்தல் = உறைதல், கலத்தல். 9. பிறழ்தல் = மாறுபாடுதல் (தலை கீழாக மாறுதல்); மலர்தல் = விரிதல், பரத்தல்.

உரை: ஆய் அண்டிரனை முன்னமேயே நினைக்காமல் காலந்தாழ்த்திப் பின்னர் நினைத்தேனே! என் உள்ளம் வருத்தத்தில் மூழ்கட்டும்; என் நாக்கு அழியட்டும்; பாழ் அடைந்த ஊரில் உள்ள கிணறுபோல் என் செவிகள் அடைபட்டுப் போகட்டும். நாரத்தம் பழங்களையும் மணமுடைய புல்லையும் தின்ற கவரிமா, குவளை மலர்களுடன் கூடிய பசுமையான நீர்நிலையில் உள்ள நீரைக் குடித்துவிட்டு அதனை அடுத்துள்ள தகர மரத்தின் குளிர்ந்த நிழலில் தன் பெண்ணினத் துணையோடு தங்கியிருக்கும் வானளாவிய இமயம் வடதிசையில் உள்ளது. தென் திசையில் ஆயின் குடி இல்லை எனின் இப்பரந்த உலகம் தலைகீழாக மாறிவிடும்.

சிறப்புக் குறிப்பு: ஆய் அண்டிரனை முன்பே நினைக்காதது தவறு. அத்தவற்றை எண்ணித் தன் உள்ளம் வருத்தத்தில் மூழ்கட்டும் என்றும், ஆயின் புகழைப் பாடாமால் பிறர் புகழைப் பாடியதால் தன் நாக்கு அழியட்டும் என்றும், ஆயின் புகழைக் கேளாமல் பிறர் புகழைக் கேட்டதால் தன் செவித் துளைகள் பாழூர்க் கிணறு போல் அடைபட்டுப் போகட்டும் என்றும் முடமோசியார் கூறுவது போல் இப்பாடல் அமைந்துள்ளது. மற்றும், புகழால் சிறந்த இமய மலைக்கு ஈடாக ஆய் வாழும் ஆய்குடியும் புகழ் மிக்கதாக இருப்பதால்தான் இப்பரந்த உலகம் நிலைபெற்றிருக்கிறது. ஆய்குடி இல்லை எனில், இவ்வுலகம் தலைகீழாக மாறி அழிந்துவிடும் என்றும் முடமோசியார் கருதுவதாகவும் தோன்றுகிறது.

131. குன்றம் பாடின கொல்லோ?

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். இப்புலவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். ஆய் அண்டிரனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: ஆயின் நாட்டில், மலைப்பகுதியில் இருந்த காடுகளில் மிகுந்த அளவில் யானைகள் இருப்பதை முடமோசியார் கண்டார். அந்த யானைகளைக் கண்டவுடன், இரவலர்க்கு எண்ணற்ற யானைகளைப் பரிசாக ஆய் அண்டிரன் அளிப்பதை நினைவு கூர்ந்தார். அந்நிலையில், “இம்மலையும் ஆய் அண்டிரனைப் புகழ்ந்து பாடியதால் அதிலுள்ள காடுகள் இத்தனை யானைகளைப் பரிசாகப் பெற்றதோ” என்று முடமோசியார் தனக்குள் வியப்பதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.


மழைக்கணம் சேக்கும் மாமலைக் கிழவன்
வழைப்பூங் கண்ணி வாய்வாள் அண்டிரன்
குன்றம் பாடின கொல்லோ;
களிறுமிக உடையஇக் கவின்பெறு காடே?

அருஞ்சொற்பொருள்:
1.மழை = மேகம்; கணம் = கூட்டம்; சேக்கும் = தங்கும். 2. வழை = சுரபுன்னை; வாய் = தவறாத. 4. கவின் = அழகு.

கொண்டு கூட்டு: களிறுமிக உடையஇக் கவின்பெறு காடே; குன்றம் பாடின கொல்லோ?

உரை: மிகுந்த யானைகள் உள்ள அழகான காடுகள் இம்மலையில் உள்ளனவே! மேகங்கள் கூட்டமாகத் தங்கும் பெரிய இம்மலைக்கு உரிமையுடையவனும் சுரபுன்னைப் பூவாலான மாலையைத் தலையில் அணிந்தவனும் குறி தவறாத வாளையுடையவனுமாகிய ஆய் அண்டிரனை இம்மலை பாடிற்றோ?

சிறப்புக் குறிப்பு: களிறு என்ற சொல் ஆண் யானையைக் குறிக்கும் சொல். ஆனால், இப்பாடலில் களிறு என்ற சொல் பொதுவாக யானையைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.