Monday, May 18, 2009

77. யார்? அவன் வாழ்க!

பாடியவர்: இடைக்குன்றூர் கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 76-இல் காணாலாம்.

பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இம்மன்னனைப் பற்றிய செய்திகளை பாடல்கள் 72, 76 ஆகியவற்றில் காணலாம்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.

துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

கிண்கிணி களைந்த கால் ஓண் கழல்தொட்டுக்
குடுமி களைந்த நுதல்வேம்பின் ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து
குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி,
5 நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன்
யார்கொல்? வாழ்க அவன் கண்ணி! தார்பூண்டு
தாலி களைந்தன்றும் இலனே; பால்விட்டு
அயினியும் இன்றுஅயின் றனனே; வயின்வயின்
உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை
10 வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே; அவரை
அழுந்தப்பற்றி அகல்விசும்பு ஆர்ப்புஎழக்
கவிழ்ந்துநிலம் சேர அட்டதை
மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும்அதனினும் இலனே.

அருஞ்சொற்பொருள்
1.கிண்கிணி = சதங்கை (சலங்கை); தொட்டு = செறிந்து (பொருந்தி). 3. பவர் = அடர்ந்த கொடி; மிலைதல் = சூடுதல். 4. சாபம் = வில். 5. கொடுஞ்சி = கொடிஞ்சி = தேர்முன் உள்ள அலங்காரவுறுப்பு. 8. அயினி = சோறு; அயில்தல் = உண்ணுதல்; வயின் = முறை; 9. உடன்று = வெகுண்டு; வம்பு = புதுமை;
மள்ளர் = வீரர். 11. ஆர்ப்பு = பேரொலி. 12. அட்டதை = அழித்ததை. 13. மலிதல் = செருக்குதல்.

கொண்டு கூட்டு: நின்றான் யார் கொல்? வாழ்க அவன் கண்ணி! அட்டதை மகிழ்ந்தன்றும் இலன், மலிந்தன்று அதனினும் இலன் எனக் கூட்டுக.

உரை: சலங்கை கழற்றப்பட்ட கால்களில் ஒளிபொருந்திய கழல்கள் அணிந்திருக்கிறான். தலைமுடி நெற்றியில் விழாமல் விலக்கிக் குடுமியாகக் கட்டப்பட்டத் தலையில் வேம்பின் ஒளிபொருந்திய தளிரை நீண்ட உழிஞைக் கொடியுடன் நெருக்கமாகத் தொடுத்துச் சூடியுள்ளான். சிறிய வளையல்களைக் கழற்றிய கைகளால் வில்லைப்பற்றிக்கொண்டு நெடுந்தேரின் முன் தளத்தில் அழகாக நிற்கின்றானே, அவன் யார்? அவன் (அணிந்திருக்கும் மாலை) வாழ்க! அவன் மாலை அணிந்திருக்கிறான்; ஆனால் அவன் இன்னும் (சிறுவர்கள் அணியும்) தாலியைக் கழற்றியதாகத் தெரியவில்லையே! பாலுணவு உண்ணுவதை நிறுத்தி இன்றுதான் சோற்றுணவு உண்டவன் போலத் தோன்றுகிறானே! வரிசை வரிசையாக வெகுண்டு வந்த புதுப்புது வீரர்களைக் கண்டு அவன் வியக்கவும் இல்லை; அவர்களை இழிவு படுத்தவும் இல்லை. அவர்களை இறுகப் பிடித்து, அகன்ற ஆகாயத்தில் ஒலி எழுமாறுஅவர்களது உடலைக் கவிழ்த்து நிலத்தில் படுமாறு வீழ்த்தி அழித்ததை நினைத்து மகிழவும் இல்லை; தன் செயலை நினைத்துப் பெருமிதமும் அடையவில்லையே!

No comments: