பாடியவர்: இடைக்குன்றூர் கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளை 76 - ஆவது பாடலில் காணலாம்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இம்மன்னனைப் பற்றிய விரிவான செய்திகளை 72-ஆவது பாடலில் காணலாம்.
பாடலின் பின்னணி: முந்திய பாடலில் (புறம் - 77) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் இளமையையும் அவன் பகைவரை வென்றதையும், அவ்வெற்றியினால் வியப்போ பெருமிதமோ அடையாதவனாக அவன் இருந்ததையும் பாராட்டிய புலவர் இடைக்குன்றூர் கிழார், இப்பாடலில் அவன் பகைவர்களைத் தொடர்ந்து சென்று அவர்களுடைய ஊரில் அவர்களை அழித்ததைப் புகழ்ந்து பாடுகிறார்.
திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.
வணங்குதொடைப் பொலிந்த வலிகெழு நோன்தாள்
அணங்குஅருங் கடுந்திறல் என்ஐ முணங்கு நிமிர்ந்து
அளைச்செறி உழுவை இரைக்குவந் தன்ன
மலைப்பரும் அகலம் மதியார், சிலைத்தெழுந்து
5 “விழுமியம், பெரியம், யாமே; நம்மிற்
பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது” என,
எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர் புறத்திற் பெயர,
ஈண்டுஅவர் அடுதலும் ஒல்லான்; ஆண்டுஅவர்
10 மாண்இழை மகளிர் நாணினர் கழியத்
தந்தை தம்மூர் ஆங்கண்
தெண்கிணை கறங்கச்சென்று, ஆண்டு அட்டனனே.
அருஞ்சொற்பொருள்
1. வணக்கல் = வளைதல்; தொடை = தொடர்ச்சி; வணங்கு தொடை = வீரக் கழல்; பொலிதல் = சிறத்தல், அழகு; நோன்தாள் = வலிய கால்; நோனுதல் = நிலை நிறுத்தல். 2. அணங்கு = வருத்தம்; கடுத்தல் = மிகுதல்; திறல் = வலி; முணங்குதல் = சோம்பல் முறித்தல். 3. அளை = குகை; செறிதல் = பொருந்தல்; உழுவை = புலி. 4. மலைத்தல் = பொருதல்; அகலம் = மார்பு; சிலைத்தல் = சினங்கொள்ளுதல், கிளர்தல். 5. விழுமியோர் = பெரியோர், சிறந்தோர். 6. கொண்டி = கொள்ளை. 7. வம்பு = புதுமை, நிலையின்மை; மள்ளர் = வீரர் (பகைவர்). 8. புல் = புன்மை, பார்வை மங்கல். 9. ஒல்லுதல் = இசைதல். 10. கழிதல் = சாதல். 12. தெண் = தெளிந்த; கறங்கல் = ஒலித்தல்
கொண்டு கூட்டு: எள்ளி வந்த வம்ப மள்ளர், புறத்திற் பெயர அடுதலும் ஒல்லான்; தந்தை தம்மூர் ஆங்கண் அட்டனனே எனக் கூட்டுக.
உரை: வீரக் கழல்கள் அழகு செய்யும், வலிய, நிலை தளராத கால்களையுடைய, வருத்தற்கரிய மிக்க வலிமையுடயவன் என் இறைவன் பாண்டியன் நெடுஞ்செழியன். குகையிலிருந்த புலி இரை தேடுவதற்காக சோம்பல் முறித்து வெளியே வருவது போல் அவன் போருக்கு வருகிறான். அவனுடைய வலிமையை (பொருதற்கரிய அகண்ட மார்பை) மதிக்காமல், “நாங்கள் சிறந்தவர்கள்; பெரியவர்கள். நம்மோடு போர் புரிய வந்திருப்பவன் இளைஞன்; இவனைப் போரில் வென்றால் நாம் கொள்ளை கொள்ளக் கூடிய பொருட்கள் இங்கு பெருமளவில் உள்ளன” என்று ஏளனத்தோடு கிளர்ந்து எழுந்து அணியணியாக வந்த ஒளியிழந்த கண்களையுடைய பகைவர்கள் புறமுதுகு காட்டி ஓட, அவர்களைத் தலையாலங்கானத்தில் கொல்ல விரும்பாமல், அவர்களைத் தொடர்ந்து சென்று, அவர்களின் மகளிர் நாணம் கொண்டு இறந்து படுமாறு, அவர்களின் சொந்தமான ஊர்களிலேயே தெளிந்த போர்ப்பறையொலிக்க அவர்களைக் கொன்றான்.
சிறப்புக் குறிப்பு: வம்பு என்னும் சொல் புதுமை அல்லது நிலையின்மை என்று பொருள்படும். போரிட வந்த வீரர்கள் கொல்லப் படுவதால் புதிய வீரர்கள் போருக்கு வருவதைக் குறிக்கும் வகையில் “வம்ப மள்ளர்’ என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.
Monday, June 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment