Monday, May 18, 2009

75. அரச பாரம்!

படியவர்: சோழன் நலங்கிள்ளி. சோழமன்னர்களுள் மிகப் புகழ்பெற்ற சோழ மன்னன் கரிகால் வளவன். கரிகால் வளவனுக்கு இரு மகன்கள் இருந்தனர். ஒருவன் பெயர் மணக்கிள்ளி; மற்றொருவன் பெயர் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி. கரிகால் வளவன் இறந்த பிறகு, மணக்கிள்ளி உறையுரைத் தலைநகராகக்கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டான். வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி பூம்புகாரைத் தலைநகராகக்கொண்டு சோழ நாட்டின் மற்றொரு பகுதியை ஆண்டான். வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியின் மகன்களில் ஒருவன் நலங்கிள்ளி. நலங்கிள்ளிக்கும் மணக்கிள்ளியின் மகன் நெடுங்கிள்ளிக்கும் பகையிருந்ததையும் அவர்களுக்குள் நடந்த போர்களைப் பற்றிய செய்திகளையும் பல பாடல்களில் (44, 45, 46,73) காணலாம். இவர்களுக்கிடையே நடந்த போர்களில் நெடுங்கிள்ளி இறந்தான்.

நலங்கிள்ளி படைவலிமை மிக்கவன். அவன் பாண்டிய நாட்டில் இருந்த ஏழு அரண்களை அழித்து அங்கே தன் புலிச் சின்னத்தைப் பொறித்தவன். இவனுடைய படைபலத்தையும் போர் செய்யும் ஆற்றலையும் அறிந்த வடநாட்டு அரசர்கள் இவன் எப்பொழுது தமது நாட்டின்மீது படையெடுத்து வருவானோ என்று கலக்கமுற்றுக் கண்ணுறங்காதிருந்தனர் என்று கோவூர் கிழார் புறநானூற்றுப் பாடல் 31-இல் கூறுகிறார். நலங்கிள்ளி படைவலிமையில் மட்டுமல்லாமல் கொடையில் சிறந்தவனாகவும், நல்லாட்சி புரிபவனாகவும், தமிழ்ப் புலமை மிக்கவனாகவும் இருந்தான் என்பது குறிப்பிடத் தக்கது. இவனைப் புகழ்ந்து பாடிய புலவர்கள் உறையூர் முதுகண்ணன் சாத்தனார், கோவூர் கிழார், ஆலத்தூர் கிழார் முதலியோராவர். புறநானூற்றில் இவனைப் பற்றிய பாடல்கள் 15. இவன் இயற்றிய பாடல்கள் இரண்டு (73, 75).

பாடலின் பின்னணி: ஒரு சமயம் நலங்கிள்ளி தன் அரசவை அறிஞர்களுடன் கலந்துரையாடிக்கொண்டிருந்த பொழுது எத்தகைய அரசுமுறை சிறந்தது என்பதுபற்றிப் பேச்செழுந்தது. “மூத்தோர் இறந்ததால் அரசுரிமைப் பெற்று ஆட்சித் திறனின்றி மக்களுக்கு வரிச்சுமையை அதிகமாக்கும் சிறியோனின் ஆட்சி பொறுத்தற்கரிய சுமையாகும். ஆண்மையும் தகுதியும் உடையவன் ஆட்சிக்கு வந்தால் அரசாட்சி செய்வது உலர்ந்த நெட்டியைப் போல் சுமையின்றியிருக்கும்” என்று தன் கருத்தை இப்பாடலில் நலங்கிள்ளி கூறுகிறான்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.

துறை: முதுமொழிக் காஞ்சி . அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருட்களைப் பற்றிக் கூறுவது.

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்
பால்தர வந்த பழவிறல் தாயம்
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக்
குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
5 சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே!
மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள்
விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர்
அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை
என்றூழ் வாடுவறல் போல நன்றும்
10 நொய்தால் அம்ம தானே; மையற்று
விசும்புஉற ஓங்கிய வெண்குடை
முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே,

அருஞ்சொற்பொருள்
1. கூற்றம் = இயமன், நாட்டின் பகுதி; உய்த்தல் = கொண்டுபோதல், அனுபவித்தல். 2. பால் = உரிமை; பழவிறல் = பழைய வெற்றி; தாயம் = உரிமைச் சொத்து. 4. புரவு = இறை; கூர் = மிகுதி. 6 மண்டுதல் = நெருங்குதல், அதிகமாதல், உக்கிரமாதல்; பரித்தல் = காத்தல், தாங்குதல்; மதன் = வலி, மாட்சிமை, செருக்கு (மனவெழுச்சி); நோன்மை = வலிமை; தாள் = முயற்சி. 7. விழுமியோன் = சிறந்தவன். 8. அறுதல் = இல்லாமற்போதல்; கயம் = குளம்; கிடை = நெட்டி. 9. என்றூழ் = கதிரவன், கோடை, வெயில்; வறல் = சுள்ளி; 10. நொய்மை = மென்மை, மிருது, எளிமை; மை = கறை, இருள், குற்றம்

கொண்டு கூட்டு: தாயம் சிறியோன் பெறின் அது மிகவும் சிறந்ததல்ல; வேந்தர் அரசு கெழு திரு விழுமியோன் பெறின் அது நன்றும் நொய்தல் ஆகும் எனக் கூட்டுக.

உரை: மூத்தோர் மூத்தோர்க்குரிய இடத்தை அடைந்ததால் (இறந்ததால்) முறைப்படி வந்த பழைய வெற்றிகளாலுண்டாகிய அரசுரிமயைப் பெற்றதால் பெரிய சிறப்பை அடைந்ததாக எண்ணித் தன் குடிமக்களிடம் (அதிகமாக) வரி கேட்கும் ஆண்மை மிகுதியாக இல்லாத சிறியோன் செயல் சிறந்ததல்ல. குற்றமற்ற வானில் ஓங்கிய வெண்குடையையும் முரசையும் உடைய அரசாட்சி, துணிந்து போரிடும் மனவெழுச்சியும் வலிய முயற்சியும் உடையவன் பெற்றால், ஆட்சி செய்வது ஆழத்தில் நீர் வற்றிய குளத்தருகில் உள்ள சிறிய சுள்ளி போன்ற வெள்ளிய நெட்டி போல் மிகவும் சுமையற்றதாகும்.

சிறப்புக் குறிப்பு: தகுதியற்றவன் ஆட்சிக்கு வந்து மக்களிடம் அதிகமாக வரி கேட்டு அவர்களைத் துன்புறுத்தி ஆட்சி செய்வது அரசனுக்கு மட்டுமல்லாமல் குடிமக்களுக்கும் பெருஞ்சுமையாக இருக்கும். ஆனால், தகுதி உடையவன் ஆட்சிக்கு வந்தால், அவ்வாட்சி அவனுக்கும் அவன் குடிமக்களுக்கும் சுமை இல்லாததாக இருக்கும் என்பது இப்பாடலின் கருத்து.

வேலொடு நின்றான் இடுவென்றது போலும்
கோலொடு நின்றான் இரவு. (குறள் - 552)

அரசன் அதிகமாக வரி கேட்டு மக்களைத் துன்புறுத்துவது வேலொடு வந்து ஒருவன் கொள்ளை அடிப்பது போன்றதாகும் என்று திருவள்ளுவர் கூறுவது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

2 comments:

Arun said...

இதில் இடம்பெரும் மன்னே என்ற சொல், என்ன பொருளில் பயன்படுத்தப்படுகிறது?

முனைவர். பிரபாகரன் said...

அன்பிற்குரிய அருண் அவர்களுக்கு,

வணக்கம்.


நல்ல கேள்வி. இங்கு மன்னே என்பது மிகுதியைக் குறிக்கிறது. ’சிறந்தன்று மன்னே’ என்பது ’மிகவும் சிறந்தது அல்ல’ என்ற பொருளில் வந்துள்ளது.

நன்றி,
பிரபாகரன்