Monday, May 18, 2009

74. வேந்தனின் உள்ளம்



பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை. இம்மன்னன் இரும்பொறை மரபைச் சார்ந்தவன். கணைய மரத்தைப் போன்ற வலிய கால்களை உடையவன் என்ற காரணத்தால் இவன் இப்பெயரைப் பெற்றதாகச் சிலர் கருதுகின்றனர்1. இரும்பொறைப் பரம்பரையில் கடைசியாக ஆட்சி புரிந்த சேர மன்னர்களுள் இவனும் ஒருவன் என்றும் இவன் ஆட்சிக் காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்றும் வரலாற்று ஆசிரியர் சுப்பிரமணியன் கூறுகிறார்2.

பாடலின் பின்னணி: சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் சோழன் செங்கணானுக்கும் பகை மூண்டது. அப்பகையின் காரணத்தால் அவர்களுக்கிடையே போர் தொடங்கியது. இருவரும் பெரும்படையுடன் கழுமலம் என்னுமிடத்தே போர் செய்யத் தொடங்கினர். போர் நிகழ்ந்தவிடம் குணவாயிற் கோட்டமெனத் தமிழ் நாவலர் சரிதையும், வெண்ணிப் பறந்தலை என்று நற்றிணை முன்னுரையும், திருப்போர்ப்புறம் என்று புறநானூற்றுக் குறிப்பும் கூறுவதாக ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் தம் உரை நூலில் குறிப்பிடுகிறார்3. போரில் சேரன் கணைக்கால் இரும்பொறை தோல்வியுற்றுச் சோழனால் சிறைப்படுத்தப்பட்டான். ஒரு நாள், சேரமான் பசியின் கொடுமை தாங்காமல், சிறைக் காவலர்களிடம் உணவு அளிக்குமாறு கேட்டதாகவும், அவர்கள் காலம் தாழ்த்திச் சிற்றுணவை கொண்டு வந்ததாகவும். அதனால் வெட்கமும் வேதனையுமும் அடைந்த சேரமான் தன்னிரக்கத்தோடு இப்பாடலை எழுதிவைத்துவிட்டு உயிர் துறந்ததாகவும், புறநானூற்றில் இப்பாடலின் அடிக்குறிப்பு கூறுகிறது. ஆனால், வேறு சிலர், சேரமான் கணைக்கால் இரும்பொறை இப்பாடலை பொய்கையார் என்ற புலவருக்கு அனுப்பியதாகவும், அதைப் பெற்ற பொய்கையார் சோழனிடம் சென்று சேரமானைச் சிறையிலிருந்து விடுவிக்கச் செய்ததாகவும் கருதுகின்றனர்2. இப்பாடலின் பின்னணியைப் பற்றிய பல செய்திகள் ஆய்வுக்குரியன.

குழந்தை இறந்து பிறந்தாலும் (அல்லது பிறந்து இறந்தாலும்), உருவமற்ற தசைப் பிண்டமாகப் பிறந்தாலும், அதை மார்பில் வாளால் வெட்டிப் புதைப்பது மறக்குல மரபாகப் பழந்தமிழ் நாட்டில் இருந்ததாக இப்பாடலில் நாம் காண்கிறோம். குறிப்பாக, அரசர்களிடத்தில் இந்த வழக்கம் இருந்ததாகப் புறநானூற்றுப் பாடல் 93-இல் ஒளவையார் பாடியிருப்பதும் இப்பாடலுடன் ஒப்பு நோக்கத் தக்கது.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.

துறை: முதுமொழிக் காஞ்சி . அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருட்களைப் பற்றிக் கூறுவது.

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
'ஆள் அன்று' என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
5 மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் வுலகத் தானே?

அருஞ்சொற்பொருள் 1. குழவி = குழந்தை; தடி = தசை. 3. தொடர்ப்பாடு = பற்று; தொடர் = சங்கிலி; ஞமலி = நாய்; இடர்ப்பாடு = இடையூறு; இரீஇய = இருக்க. 4. கேளல் கேளிர் = பகைவர், அயலார்; வேளாண் = கொடை (உபகாரம்); சிறுபதம் = தண்ணீர் உணவு. 5. மதுகை = வலிமை (மனவலிமை). 6. அளவை = அளவு. 7. ஈனுதல் = பெறுதல்.

கொண்டு கூட்டு: இறப்பினும் பிறப்பினும் வாளில் தப்பார்; இறந்துண்ணும் அளவை ஈன்மரோ இவ்வுலகில் எனக் கூட்டுக.

உரை: எங்கள் குடியில் குழந்தை இறந்து பிறந்தாலும் (அல்லது பிறந்து இறந்தாலும்), உருவமற்ற தசைப் பிண்டமாகப் பிறந்தாலும் அது ஓரு ஆள் அல்ல என்று (புதைப்பதற்கு முன் மார்பில்) வாளால் வெட்டுவதிலிருந்து தவற மாட்டார்கள். ஆனால், யானோ அக்குடியில் பிறந்தவனாகவிருந்தாலும், (போரில் மார்பில் புண்பட்டு வீரனைப்போல் மரணமடையாமல்) சங்கிலியால் நாய்போலக் கட்டப்பட்டு, என் பசியைப் போக்குவதற்கு, என்னைத் துன்புறுத்திய பகைவர்களிடம் மன வலிமையின்றி உணவு வேண்டுமென்றுக் கேட்டதால் அவர்கள் எனக்கு அளித்த நீர்போன்ற உணவை உண்ணும் நிலையில் உள்ளேனே! இப்படி வாழ்வதற்காகவா இவ்வுலகில் என்னை என் பெற்றோர்கள் பெற்றனர்?

சிறப்புக் குறிப்பு: இப்பாடலில், மானத்தோடு வாழ்வதே ஒருவற்குப் பெருமை தரக் கூடியது என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. திருவள்ளுவர், மானத்தோடு வாழ்வதே சிறந்தது என்ற கருத்தை பல குறட்பாக்களில் கூறுகிறார். மானம் என்பதின் பெருமையை உணர்த்துவதற்குத் திருக்குறளில் ஒரு அதிகாரமே (மானம் - அதிகாரம் 97) உள்ளது.

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின், அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று. (குறள் - 967)

பொருள்: பகைவர்க்குப் பின்னே சென்று ஒருவன் மானங்கெட வாழ்தலினும், அப்பொழுதே உயிர் துறந்தான் எனப்படுதல் நலமாகும்.

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை, பெருந்தகைமை
பீடழிய வந்த விடத்து. (குறள் - 968)

பொருள்: ஒருவன் தனது பெருந்தன்மைக்குரிய மானம் அழிய வந்த இடத்தில் , உடலைப் பேணி வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தாகி விடுமோ? (ஆகாது)

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின். (குறள் - 969)

பொருள்: தனது உடலிலுள்ள மயிர்த்திரள் நீங்கினால் உயிர் வாழாத கவரிமாவைப் போல் மானத்தைப் பெரிதாகக் கருதும் மனிதர் தங்கள் மானத்திற்கு கேடு வரின் அக்கணமே தம் உயிரை விட்டு மானத்தைக் காத்துக்கொள்வர்.

மானத்தோடு கூடிய வாழ்க்கையே சிறந்தது என்று எண்ணும் சேரமான் கணைக்கால் இரும்பொறையின் கருத்தும் மானத்தைப்பற்றி திருவள்ளுவரின் கருத்தும் ஒத்திருப்பது குறிப்பிடத் தக்கது.

1. புறநானூறு - தெளிவுரை, புலியூர் கேசிகன், பாரி நிலையம் (பக்கம் 529)
2. Social and Cultural History of Tamilnad (Vol.1), N. Subramanian, Ennes Publications (pp 45)
3. புறநானூறு (பகுதி 1), ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (பக்கம் 188)

No comments: