பாடியவர்: இடைக்குன்றூர் கிழார். பாண்டிய நாட்டில் இருந்த இடைக்குன்றூர் என்பது இவரது ஊர். இவர் வேளாண் மரபினர். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல்கள் நான்கு (76, 77, 78, மற்றும் 79). இந்நான்கு பாடல்களும் பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்தில் நடைபெற்ற போரில் சேர சோழ மன்னர்களையும் குறுநில மன்னர் ஐவரையும் வென்றதைப் பாராட்டிப் புகழ்ந்து பாடப்பட்டவையாகும்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இவன் தலையாலங்கானத்தில் தன்னை எதிர்த்து வந்த எழுவரை மற்ற அரசர்களின் துணையின்றித் தான் ஒருவனே போரிட்டு வென்ற சிறப்பை மதுரை நக்கீரர், குட புலவியனார், ஆலம்பேரி சாத்தனார், மாங்குடி மருதனார், கல்லாடனார், இடைக்குன்றூர் கிழார் முதலிய சான்றோர் பலர் புகழ்ந்து பாடியிருக்கின்றனர். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றிய விரிவான செய்திகளைப் பாடல் 72-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: தலையாலங்கானத்தில் இப்பாண்டிய மன்னன் வென்றதைப் புகழ்ந்து பாடிய புலவர் பலருள்ளும் இடைக்குன்றூர் கிழார் சிறந்தவர் என்பது மிகையாகாது. இவர், இப்போர் நிகழ்ந்த காலத்தில் போரைத் தாமே நேரில் பார்த்தது போல் எழுதியிருப்பதிலிருந்து இவர் போர் நிகழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் என்று கருதுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.
ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை;
இன்றின் ஊங்கோ கேளலம்; திரள்அரை
மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்
5 நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து,
செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி
ஒலியல் மாலையொடு பொலியச் சூடிப்
பாடின் தெண்கிணை கறங்கக் காண்தக
நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன்
10 பீடும் செம்மலும் அறியார் கூடிப்
பொருதும் என்று தன்தலை வந்த
புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க
ஒருதான் ஆகிப் பொருது களத்து அடலே!
அருஞ்சொற்பொருள்
1. அடுதல் = அழித்தல்; தொலைதல் = கெடுதல் (தோற்றல்). 3. ஊங்கு = முன்னர்; அரை = மரத்தின் அடிப்பக்கம். 4. மன்றம் = மரத்தடிப் பொதுவிடம். சினை = மரக்கொம்பு. 5. பவர் = நெருக்கம், அடர்ந்த கொடி. 6. பாய்தல் = பரவுதல். 7. ஒலியல் = தழைத்தல் , வளைய மாலை. 8. பாடு = ஓசை; கிணை = பறை; கறங்கல் = ஒலித்தல்
கொண்டு கூட்டு: ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவ தன்று; இவ்வுலகத் தியற்கை. செழியன் பொருதுமென்று வந்த எழுவர் நல்வல மடங்க ஒருவனாகித் தெரியலை மாலையொடு காண்டகச் சூடிக் கிணை கறங்கப் பொருது களத்து அடல் இன்றின் ஊங்கோ கேளலம் எனக் கூட்டுக.
உரை: ஒருவனை ஒருவன் அழித்தலும் ஒருவனிடம் ஒருவன் தோற்பதும் புதியது அன்று; அது இவ்வுலகத்து இயற்கை. ஊர்ப்பொதுவில் உள்ள திரண்ட அடிப்பாகத்தை உடைய வேப்ப மரத்தின் பெரிய கிளையின் ஓளி பொருந்திய தளிரை நீண்ட உழிஞைக் கொடியுடன் கலந்து நெருக்கமாகத் தொடுத்த தேன் மிக்க மாலையை வளைய மாலையுடன் சிறப்பாகச் சூடி, இனிய போர்ப்பறை ஒலிக்கக் கண்ணுக்கு இனிய பசும்பொன்னாலான அணிகலன்களை அணிந்த நெடுஞ்செழியனின் செல்வம் பொருந்திய நாட்டையும் அவனுடைய பெருமையையும் அறியாமல், கூடிப் போர் செய்வோம் என்று தன்னிடத்தில் வந்த கழலணிந்த எழுவரின் நல்ல வலிமை அடங்குமாறு தான் ஒருவனாக நின்று போர்க்களத்தில் அவர்களை அழித்ததை இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை.
Monday, May 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment