Sunday, January 6, 2013

375. பாடன்மார் எமரே!


375. பாடன்மார் எமரே!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
பாடலின் பின்னணி:  ’ஆய் அண்டிரனே, நீ புலவர்க்குப் புகலிடமாய் இவ்வுலகில் நீடு வாழ்க; நீ இல்லாவிட்டால் இவ்வுலகம் வறுமை அடையும். அப்பொழுது, இவ்வுலகில் புலவர் இல்லாது போவாராக; ஒருகால், புலவர்கள் இருந்தாலும், அவர்கள் பெருமையில்லாத மன்னர்களைப் பாடாதிருப்பாராக.’ என்று உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் இப்பாடலில் கூறுகிறார்.   

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: வாழ்த்தியல். தலைவனை வாழ்த்துதல்.

அலங்குகதிர் சுமத்த கலங்கல் சூழி
நிலைதளர்வு தொலைந்த ஒல்குநிலைப் பல்கால்
பொதியில் ஒருசிறை பள்ளி யாக
முழாஅரைப் போந்தை அரவாய் மாமடல்
நாரும் போழும் கிணையோடு சுருக்கி           5

ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅ
ஊழ்இரந்து உண்ணும் உயவல் வாழ்க்கைப்
புரவுஎதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார்எனப்
பிரசம் தூங்கும் அறாஅ யாணர்
வரையணி படப்பை நன்னாட்டுப் பொருந!   10

பொய்யா ஈகைக் கழல்தொடி ஆஅய்!
யாவரும் இன்மையின் கிணைப்பத் தவாது
பெருமழை கடல்பரந் தாஅங்கு யானும்
ஒருநின் உள்ளி வந்தனென்; அதனால்
புலவர் புக்கில் ஆகி, நிலவரை            15

நிலீஇயர் அத்தை நீயே; ஒன்றே
நின்னின்று வறுவிது ஆகிய உலகத்து
நிலவன் மாரோ புலவர் துன்னிப்
பெரிய ஓதினும் சிறிய உணராப்
பீடின்று பெருகிய திருவின்                          20

பாடில் மன்னரைப் பாடன்மார் எமரே!


அருஞ்சொற்பொருள்: 1. அலங்குதல் = அசைதல்; சூழி = நீர்நிலை. 2. நிலை = பூமி; ஒல்குதல் = தளர்தல், கெடுதல், மெலிதல்; ஒல்கு நிலை = வலிமை குன்றிய நிலை. 3. பொதியில் = அம்பலம், மன்றம்; சிறை = பக்கம்; பள்ளி = படுக்கை. 4. முழா = முரசு; அரை = மரத்தின் அடிப்பக்கம்; போந்தை = பனை; அரவாய் = அரத்தின் வாய்; மாமடல் = பெரிய பனைமட்டை. 5. போழ் = பனங்குருத்து. 6. ஏரின் வாழ்நர் = உழவர்; புகாஅ = உணவு. 7. உயவு = வருத்தம். 8. புரவு = பாதுகாப்; எதிர்தல் = கொடுத்தல். 9. பிரசம் = தேன்கூடு; அறாஅ = குறையாத; யாணர் = புதுவருவாய். 10. அணி = அண்மை; படப்பை = தோட்டம்.  12. கிணைப்ப = கிணையை ஒலிக்க; தவல் = வறுமையால் வருந்துதல். 13. மழை = மேகம். 15. புக்கில் = புகலிடம்; வரை = அளவு. 16. அத்தை – முன்னிஅலை அசைச் சொல். 18. நிலவுதல் = நிலைத்திருத்தல்; துன்னி = நெருங்கி. 19. ஓதுதல் = சொல்லுதல். 20 பீடு = பெருமை. 21. பாடு = பெருமை; எமர் = எம்மினத்தவர் (புலவர்).

உரை: காற்றில் பறந்துவந்து நீரில் மிதந்து அசையும் கதிர்களைச் சுமந்து கலங்கிய நீர்நிலை போல் நிலைதளர்ந்து, பாழடைந்து சீரழிந்த தரையையும், பல தூண்களையுமுடைய மன்றத்தின் ஒருபக்கத்தை படுக்கையிடமாகக் கொண்டு, முரசு போன்ற அடிப்பக்கத்தையுடைய பனைமரத்தின் அரத்தின் வாய் போன்ற கருக்கையுடைய பெரிய மட்டையிலிருந்து எடுத்த நாரையும் குருத்தையும் கிணைப்பறையுடன் சேர்த்துக் கட்டி, உழவர்களின் குடியிருப்பை அடைந்து, முறையே அவர்கள் அளிக்கும் உணவை இரந்து உண்ணும் வருத்தத்துடன் கூடிய  வாழ்வையுடைய எம்மைப் பாதுகாக்கும் சான்றோர் எவருளர் என்று எண்ணினேன். தேன்கூடுகள் தொங்குகின்ற, புதுவருவாய் குறையாத மலைசார்ந்த தோட்டங்களையுடைய நல்ல நாட்டின் தலைவனே!    பொய்யாத வள்ளன்மையும் கழலவிடப்பட்ட தொடியையுமுடைய ஆய் அண்டிரனே! நாங்கள் கிணைப்பறையைக் கொட்டிப் புகழ்ந்து பாடினால் எங்களைப் பாதுகாப்போர் எவரும் இல்லாததால், இருந்த இடத்ததே இருந்து வறுமையை நினைத்து வருந்தாமல், நீரைப் பெறுவதற்காக மேகம் கடலை நோக்கிச் செல்வது போல், நானும் ஒப்பற்ற உன்னை நினைத்து வந்தேன். அதனால், புலவர்களுக்குப் புகலிடமாகி, இவ்வுலகம் உள்ளளவும் நீ நிலைபெற்று வாழ்வாயாக. ஒன்று, நீ இல்லாததால் வெறுமையாகும் இவ்வுலகில் புலவர் இல்லாமல் போவாராக. அல்லது, நெருங்கிச் சென்று பல சொற்களால் எடுத்துரைத்தாலும், சிறிதளவும் அவற்றை உணரக்கூடிய திறமை இல்லாத, பெருஞ்செல்வத்தையுடைய மன்னர்களை எம்மைப் போன்ற புலவர்கள் பாடாது ஒழிவாராக. 

1 comment:

Cinema Figures said...

மிக்க நன்று