Sunday, January 6, 2013

372. ஆரம் முகக்குவம் எனவே!


372. ஆரம் முகக்குவம் எனவே!

பாடியவர்: மாங்குடி கிழார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 24-இல் காண்க.
பாடப்பட்டோன்: தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 18-இல் காண்க.
பாடலின் பின்னணி: தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் போரில் வெற்றிபெற்ற பிறகு மறக்களவேள்வி செய்தான். அந்த வேள்விக்குப் பலரும் வந்திருந்தனர். புலவர் மாங்குடி கிழாரும் வந்திருந்தார்.  அங்குப் பொருநன் ஒருவன்,’வேந்தே!, நான் என் தடாரிப் பறையைக் கொட்டிக்கொண்டு உன் புகழைப் பாடிவந்ததெல்லாம் நீ அளிக்கும் முத்து மாலையைப் பெறலாம் என்பதற்காகவே!’ என்று தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை நோக்கிக் கூறினான். அந்தக் காட்சியைப் புலவர் மாங்குடி கிழார் இப்பாடலாக இயற்றியுள்ளார். 

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை: மறக்கள வேள்வி. பேய்கள் உண்ணுமாறு களவேள்வி செய்தல்.

விசிபிணித் தடாரி இம்மென ஒற்றி
ஏத்தி வந்த தெல்லாம் முழுத்த
இலங்குவாள் அவிரொளி வலம்பட மின்னிக்
கணைத்துளி பொழிந்த கண்கூடு பாசறைப்
பொருந்தாத் தெவ்வர் அருந்தலை அடுப்பில்          5

கூவிள விறகின் ஆக்குவரி நுடங்க
ஆனா மண்டை வன்னியந் துடுப்பின்
ஈனா வேண்மாள் இடந்துழந்து அட்ட
மாமறு பிண்டம் வாலுவன் ஏந்த
வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம்                        10

வெவ்வாய்ப் பெய்த புதுநீர் சால்கெனப்
புலவுக்களம் பொலிய வேட்டோய்நின்
நிலவுத்திகழ் ஆரம் முகக்குவம் எனவே.

அருஞ்சொற்பொருள்: 1. விசித்தல் = இறுகக் கட்டுதல்; இம் – ஒலிக் குறிப்பு; ஒற்றி = அறைந்து. 2. ஏத்துதல் = புகழ்தல், உயர்த்திக் கூறுதல்; முழுத்த = குறைவின்றி (முழுதும்). 3. இலங்குதல் = விளங்குதல், அவிர் = ஒளி; வலம் = வெற்றி. 4. கணை = அம்பு.; கண்கூடு = நெருக்கம்; இடம் நிறைந்த.  5. தெவ்வர் = பகைவர். 6. கூவிளம் = ஓரு வகை மரம்; வரி – வரிகளையுடைய குடலைக் குறிக்கிறது; நுடங்குதல் = துவளல் 7. ஆனா = பொருந்தாத; வன்னி = ஒரு வகை மரம். 8. ஈனா = குழந்தைகளைப் பெற்றெடுக்காத; வேண்மாள் = வேளிர்குலப்பெண்; இடத்தல் = தோண்டுதல்; உழத்தல் = புரளல் (துழாவல்); இடந்துழந்து = தோண்டித் துழாவி.  9. மா = விலங்கு; பிண்டம் = உணவு; வாலுவன் = சமைப்போன்; ஏந்தல் = நீட்டல். 10. வதுவை = திருமணம். 11. வெவ்வாய் = சூடான வாய்; சாலுதல் = நிறைதல், அமைதல், பொருந்துதல். 12. புலவு = புலால்; வேட்டோய் = வேள்வி செய்தவனே.  13. ஆரம் = மாலை; முகத்தல் = நிரம்பப் பெறுதல்.

கொண்டு கூட்டு: தடாரி ஒற்றி ஏத்தி வந்ததெல்லாம், வேட்டோய், நின் ஆரம் முகக்குவம் எனவே எனக் கூட்டுக.

உரை: குறைவின்றி விளங்கும் வாளினுடைய மிகுந்த ஒளி வெற்றியை உண்டாக்குவதற்கு மின்னலைப் போல் மின்னி, அம்புகள் மழை போலப் பொழிய, இடம் நிறைந்த பாசறையில் வீற்றிக்கும் வேந்தே! மனம் பொருந்தாத பகைவர்களின் அரிய தலைகளை அடுப்பாகவும், கூவிளமரத்தின் கட்டைகளை விறகாகவும் வைத்து எரித்து ஆக்கப்படும் கூழில், மண்டையோட்டை அகப்பையாகவும், வன்னிமரத்தின் கொம்பை அகப்பையின் காம்பாகவும் கொண்டு, வரிகளையுடைய குடல்கள் நெளியுமாறு, வேளிர்குல மகள் ஒருத்தி சமைத்தாள். அவள் தோண்டித் துழாவிச் சமைத்த உணவு, விலங்குகள்கூட உண்ண மறுக்கும் தன்மையதாக இருந்தது.  அவள் சமைத்த உணவை வேலுவன் (சமையல்காரன்) ஒருவன் எடுத்து கொற்றவைக்குப் படைப்பதற்காக எடுத்து உயர்த்திக் காட்டி, திருமண விழாவில் தெளிப்பது போல் வந்தவர் மீதெல்லாம், ’கலயத்தின் சூடான வாயிலிருந்து வந்த புதுநீர் அமைவதாக.’ என்று தெளித்துப் புலால் நாறும் போர்க்களம் விளங்க மறக்கள வேள்வி செய்தவனே!  இறுகக் கட்டப்பட்ட தடாரிப் பறையை இம்மென ஒலிக்கும்படி அறைந்து, உன்னைப் பாராட்டிப் பாடி வந்ததற்கெல்லாம் காரணம் உன்னுடைய, நிலவுபோல் ஓளியுடன் திகழும் மாலையைப் பெறலாம் என்பதே.

2 comments:

விஸ்வநாதன் க said...

அருமை ஐயா 🙏
தகவல்கள் எனக்கு பெரிதும் பயன் அளிக்கின்றது ஐயா 🙏

முனைவர். பிரபாகரன் said...

அன்பிற்குரிய விஸ்வநாதன் அவர்களுக்கு,
வணக்கம்.
என்னுடைய வலைத்தளம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து படியுங்கள்; நண்பர்களோடு உங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். வாழ்க வளமுடனும் நலமுடனும்!
அன்புடன்,
பிரபாகரன்