374. அண்டிரன் போல்வையோ ஞாயிறு?
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி
முடமோசியார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 13-இல் காண்க.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 127-இல் காண்க.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 127-இல் காண்க.
பாடலின் பின்னணி:
இப்பாடலில்,
புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், ஞாயிறைப் பார்த்து, ’ வானத்தில் வெறிதே செல்லும்
ஞாயிறே! நீ ஆய் அண்டிரனைப் போல வள்ளன்மை உடையவனா?’ என்று கேட்கிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய
புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: பூவை நிலை.
மனிதரைத் தேவரோடு உவமித்துக் கூறுதல்.
கானம் மேய்ந்து வியன்புலத்து அல்கும்
புல்வாய் இரலை நெற்றி அன்ன
பொலம்இலங்கு சென்னிய பாறுமயிர் அவியத்
தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர்
மன்றப் பலவின் மால்அரைப் பொருந்திஎன் 5
தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி
இருங்கலை ஓர்ப்ப இசைஇக் காண்வரக்
கருங்கோற் குறிஞ்சி அடுக்கம் பாடப்
புலிப்பல் தாலிப் புன்றலைச் சிறாஅர்
மான்கண் மகளிர்க்கு ஆன்றோர் அகன்துறைச் 10
சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங்குறை
விடர்முகை அடுக்கத்துச் சினைமுதிர் சாந்தம்
புகர்முக வேழத்து மருப்பொடு மூன்றும்
இருங்கேழ் வயப்புலி வரிஅதள் குவைஇ
விருந்துஇறை நல்கும் நாடன் எங்கோன் 15
கழல்தொடி ஆஅய் அண்டிரன் போல
வண்மையும் உடையையோ? ஞாயிறு!
கொன்விளங் குதியால் விசும்பி னானே.
அருஞ்சொற்பொருள்:
1. அல்கும் = தங்கும். 2. புல்வாய் = கலைமான் (ஒருவகை மான்); இரலை
= ஆண்மான். 3. சென்னி = தலை; பாறுதல் = சிதறுதல்; அவிதல் = தணிதல், ஒடுங்குதல். 4.
உறைதல் = ஒழுகுதல், பெய்தல்; ஞாங்கர் = பக்கம், இடம். 5. மால் = பெருமை; அரை = மரஅத்தின்
அடிப்பக்கம். 6. தெளிர்ப்ப = ஒலிக்குமாறு; ஒற்றி = அடித்து. 7. இரு = பெரிய; கலை =
ஆண்மான்; ஓர்த்தல் = கூர்ந்து கேட்டல்; இசைஇ = இசைத்து; காண்வர = அழகு உண்டாக. 8. கோல்
= மரக்கொம்பு; குறிஞ்சி = குறிஞ்சி மரம்; அடுக்கம் = அடுக்காக அமைந்த மலை. 11. சிலை
= வில்; முளவுமான் = முள்ளம்பன்றி; குறை = தசை. 12, விடர் = மலைப்பிளவு; முகை = குகை;
சினை = கிளை; சாந்தம் = சந்தனம். 13. புகர் = புள்ளி; மருப்பு = கொம்பு. 14. இரு =
கரிய; கேழ் = நிறம்; வயம் = வலி; அதள் = தோல்; குவைஇ = குவித்து. 15. இறை = கடமை. 16.
தொடி = கையில் அணியும் அணி. 18. கொன் = பயனின்மை.
கொண்டு கூட்டு: தண்பனி உறைக்கும்
ஞாங்கர், பொருந்தி, தெளிர்ப்ப ஒற்றி, பாட, ஆன்றோர் கொழுங்குறையும், சாந்தமும், மருப்பும்
என்ற மூன்றும் குவைஇ,
விருந்திறை
நல்கும் நாடன், எங்கோன் அண்டிரன் போல, விளங்குதியாகலின், வண்மையும் உடையையோ கூறுக எனக்
கூட்டுக.
உரை: காட்டில் மேய்ந்த
பிறகு, அகன்ற இடத்தில் தங்கும் புல்வாய் என்னும் மானினத்தைச் சேர்ந்த ஆண்மானின் நெற்றிமயிர்
போலப், பொற்றாமரை விளங்கும் என் தலையிலுள்ள தலைமயிர் சிதறிப் பரந்து கிடந்தது. அப்படிக்
கலைந்திருந்த என் தலைமுடி அடங்கிப் படியுமாறு, பொழுது புலராத விடியற்காலத்தில் குளிர்ந்த
பனித்துளிகள் விழுந்தன. அந்நேரத்தில், ஊர்ப்பொதுவிடத்தில், பெரிய பலாமரத்தின் அடியில்
இருந்து, என்னுடைய தெளிர்ந்த கண்ணையுடைய பெரிய கிணைப்பறையை நன்கு ஒலிக்குமாறு கொட்டி,
கரிய தண்டினையுடைய குறிஞ்சிமரங்கள் நிறைந்த மலைப்பக்கத்தில் அழகாகப் பாடினேன். பெரிய
கலைமான்கள் என் பாட்டைச் செவிசாய்த்துக் கேட்டன. புலிப்பல் கோத்த தாலியை அணிந்த சிறுவர்களைப்
பெற்ற, மானின் கண்களைப் போன்ற கண்களையுடைய மகளிரின் கணவர், அகன்ற நீர்த்துறையில் தம்
வில்லால் கொன்ற முள்ளம்பன்றியின் கொழுவிய தசைத்துண்டுகள், மலைப்பிளவுகளையும் குகைகளையுமுடைய
மலைப்பக்கத்தில் பெரிய கிளைகளுடன் கூடிய சந்தனமரக்கட்டை, புள்ளிகள் பொருந்திய முகமுடைய
யானையின் தந்தம் ஆகிய மூன்றையும், வலிய புலியின் கரிய நிறக்கோடு அமைந்த தோலில் குவித்து
விருந்தினர்க்கு அளிப்பார்கள். எங்கள் மன்னன், கழலவிடப்பட்ட தொடியை அணிந்த ஆய் அண்டிரன்
அத்தகைய நாட்டிற்குத் தலைவன். ஞாயிறே, நீ வானில்
வெறிதே செல்கின்றாயே! நீ அவனைப் போல வள்ளல்
தன்மை உடையவனா?
No comments:
Post a Comment