373. நின்னோர் அன்னோர் இலரே!
பாடியவர்: கோவூர் கிழார்.
இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 31-ல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத்
துஞ்சிய கிள்ளி வளவன். இவனைப் பற்றிய செய்திகளைப்
பாடல் 34-ல் காண்க.
பாடலின் பின்னணி:
கிள்ளி
வளவன் கொங்கரோடு போர் புரிந்து பொழுது, முரசுகள்
இடிபோல்
முழங்கின; யானைகள் மேகங்கள் போல் காட்சி அளித்தன; தேர்களும் குதிரைகளும் சிதைந்து விழுந்தன.
கொங்கர் புறமுதுகிட்டு ஓடினர். அவ்வாறே, அவன் குடநாட்டு வஞ்சியிலும் போர் புரிந்து
வெற்றி பெற்றான். அவனைப் போர்க்களத்தில் கண்டு, அவன் புகழைப் பாடி பரிசு பெறலாம் என்று
பொருநன் ஒருவன் வந்தான். ‘என் முன்னோராகிய பொருநர் பலர், வேந்தர்களுடைய போர்க்களங்களுக்குச்
சென்று அவர்களைப் புகழ்ந்து பாடிப் பரிசு பெற்றதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். உன்னைப்
போல் வேந்தர் வேறு யாரும் இல்லாததால் உன்னைப் பாடிப் பரிசு பெறலாம் என்று வந்தேன்.’
என்று அப்பொருநன் கூறுவதாக இப்பாடலை கோவூர் கிழார் இயற்றியுள்ளார்.
திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை: மறக்கள வழி: அரசனை உழவுத் தொழில் புரியும் வேளாளனோடு
ஒப்பிட்டுக் கூறுதல்.
துறை: ஏர்க்கள உருவகம்: போர்க்களச்
செயல்களை ஏர்க்களச் செயல்களாக உருவகப்படுத்திக் கூறுதல்.
உருமிசை முரசம் முழக்கென இசைப்பச்
செருநவில் வேழம் கொண்மூ ஆகத்
தேர்மா அழிதுளி தலைஇ நாம்உறக்
கணைக்காற் றெடுத்த கண்ணகன் பாசறை
இழிதரு குருதியொடு ஏந்திய ஒள்வாள் 5
பிழிவது போலப் பிட்டைஊறு உவப்ப
மைந்தர் ஆடிய மயங்குபெருந் தானைக்
கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே!
. . . . . . . . . . . . . தண்டா மாப்பொறி
மடக்கண் மயில்இயன்று மறலி யாங்கு 10
நெடுங்சுவர் நல்லில் புலம்பக் கடைகழிந்து
மென்தோள் மகளிர் மன்றம் பேணார்
புண்ணுவந்து. . . . . . . . . . . . .
. . . .. . உளையணிப் புரவி வாழ்கெனச்
சொல்நிழல் இன்மையின் நின்னிழல் சேர 15
நுண்பூண் மார்பின் புன்றலைச் சிறாஅர்
அம்பழி பொழுதில் தமர்முகம் காணா
. . . . . . . . . . . வாளில் தாக்கான்
வேந்துபுறங் கொடுத்த வீய்ந்துகு பறந்தலை
மாட மயங்கெரி மண்டிக் கோடிறுபு 20
உரும்எறி மலையின் இருநிலம் சேரச்
சென்றோன் மன்ற கொலைவன் சென்றெறி
வெம்புண் அறிநர் கண்டுகண் அலைப்ப
வஞ்சி முற்றம் வயக்கள னாக
அஞ்சா மறவர் ஆட்போர்பு அழித்துக் 25
கொண்டனை பெரும! குடபுலத்து அதரி
பொலிக அத்தைநின் பணைதயங்கு வியன்களம்
விளங்குதிணை வேந்தர் களந்தொறுஞ் சென்று
புகர்முக முகவை பொலிகென் றேத்திக்
கொண்டனர் என்ப பெரியோர்; யானும் 30
அங்கண் மாக்கிணை அதிர ஒற்ற
முற்றிலேன் ஆயினுங் காதலின் ஏத்தி
நின்னோர் அன்னோர் பிறரிவண் இன்மையின்
மன்னெயில் முகவைக்கு வந்திசின் பெரும!
பகைவர் புகழ்ந்த ஆண்மை நகைவர்க்குத் 35
தாவின்று உதவும் பண்பின் பேயொடு
கணநரி திரிதரும் ஆங்கண் நிணன்அருந்து
செஞ்செவி எருவை குழீஇ
அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே!
அருஞ்சொற்பொருள்:
1.
உரும் = இடி; இசை = ஓசை. 2. செரு = போர்; நவிலல் = பழகுதல்; கொண்மூ = மேகம்; 3. மா
= குதிரை; தலைஇ = பெய்து; நாம் = அச்சம். 4. கால் = காற்று; கண் = இடம்; பாசறை = பகை
மேற் சென்றோர் உறைவிடம். 5. இழிதல் = விழுதல். 6. பிட்டை = பிளவு பட்டது; பிட்டை ஊறு
= பிளவுபட்ட புண்; உவத்தல் = விரும்பல். 7. ஆடுதல் = போரிடுதல்; மயங்குதல் = கலத்தல்.
9. தண்டா = குறையாத; மா = பெரிய; பொறி = புள்ளி.10. மடம் = அழகு, மென்மை; இயலல் = அசைதல்;
நடத்தல்; மறலுதல் = மாறுபடுதல். 11. புலம்பு = தனிமை; கடை கழிந்து = அங்கிருந்து அகன்று
சென்று. 12. மன்றம் = பொதுவிடம், போர்க்களப் பரப்பின் நடுவிடம்; பேணல் = விரும்பல்.
14. உளை = குதிரையின் பிடரி மயிர்; உளையணி = குதிரைகளின் தலையில் சூட்டப்படும் அணி
(தலையாட்டம்). 15. சொல் நிழல் = குறையைச் சொல்லி ஆதரவு பெறும் இடம். 17. தமர் = உறவோர்.
19. வீய்ந்து = அழிந்து; உகுதல் = கெடுதல்; பறந்தலை = போர்க்களம்; வீய்ந்துகு பறந்தலை
= அழிந்து கெட்ட போர்க்களம். 20. மண்டல் = நெருங்கல்; கோடு = கொம்பு; இறுதல் = முறிதல்,
ஒடிதல். 21. உரும் = இடி. 22. மன்ற = தெளிவாக; எறிதல் = முறித்தல், மோதுதல் (தாக்குதல்)
கொலைவன் = கொலை செய்பவன். 23. அலைத்தல் = வருத்துதல். 24. முற்றம் = வீட்டு முன்னிடம், பரப்பு (இடவிரிவு);
வயக்களன் = போர்க்களம். 25. போர்பு = வைக்கோற்போர்; ஆட்போர்பு = ஆள்+போர்பு = வைக்கோற்போர்
போன்ற பிணக் குவியல். 26. குடபுலம் = குடநாடு; அதரி கொள்ளுதல் = நெற்கதிரை கடாவிட்டுழக்குதல்.
27. அத்தை - முன்னிலை அசைச்சொல். 27. பணை = முரசு; தயங்கல் = அசைதல். 28. திணை = குடி.
29. முகவை = முகந்து கொள்ளுதல், பரிசுப்பொருள். 34. மன் = அரசன்; எயில் = ஊர், மதில்.
35. நகைவர் = நண்பர்; தா = குறைவு. 37. கணம்
= கூட்டம். 38. எருவை = கழுகு; குழீஇ = கூடி. 39. கிழமை = உரிமை.
கொண்டு கூட்டு:
கொங்கு
புறம்பெற்ற வேந்தே, வஞ்சி முற்றம் வயக்களனாக, குடபுலத்து அதரி கொண்டனை; பெரும, கொண்டனரென்ப
பெரியோர்; யானும் முற்றிலனாயினும் ஒற்றி ஏத்தி, இன்மையின் முகவைக்கு வந்திசின்; பெரும,
ஆண்மையும் பண்பும் கொண்டு களம் கிழமை பெற்றோய் எனக் கூட்டுக.
உரை: உன்னுடைய இடமகன்ற
பாசறையில், இடியின் ஓசையைப் போல் முரசு
ஒலித்தது. போரில் பயிற்சி பெற்ற யானைகள் மேகங்கள்
போல் காட்சி அளித்தன. தேர், குதிரை ஆகியவை அழிந்ததால், அவற்றினிருந்து சிதைந்த தூள்கள்
மழைத் துளிகள் போல் வீழ்ந்தன. போர்க்களத்தில் எய்யப்பட்ட அச்சம்தரும் அம்புகள் காற்றுப்
போல் பறந்தன. சொரியும் குருதியோடு கையிலேந்திய
ஒளிபொருந்திய வாள்களால் உடலைப் பிழிந்து எடுப்பதற்குப் பிளந்ததுபோல் பகைவரைப் பிளத்தலால்
உண்டாகிய புண்களைக் கண்டு உன் படைவீரர்கள் மகிழ்ந்தனர். போர் செய்வதை விரும்பித் திரண்ட
பெரும்படையால் கொங்கு நாட்டவரைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்த வெற்றியையுடைய வேந்தனே!
பெரிய
புள்ளிகளையும், அழகிய கண்களையுமுடைய மயில்கள் அங்கும் இங்கும் நடப்பது போல், மெல்லிய
தோள்களையுடைய மகளிர் நெடுஞ்சுவர்களையுடைய தங்கள் வீடுகளை விட்டு அகன்று சென்று, ஊர்
மன்றத்தை நெருங்காமல், தங்கள் கணவர் போரிற் பெற்ற விழுப்புண்ணைக் காண விரும்பி
………. தலையாட்டம் அணிந்த குதிரைகளை வாழ்க என
வாழ்த்தி, தங்கள் குறைகளைச் சொல்லி ஆதரவு பெறுவதற்கு
யாரும் இல்லாததால், உன்னிடம் வந்தனர். நுண்ணிய அணிகலன்களை மார்பில் அணிந்த சிறுவர்கள்
தம்மிடமிருந்த அம்புகள் எல்லாம் தீர்ந்து போனதால் தமக்கு அவற்றைச் செய்து தரும் உறவினர்களைக்
காணதவராய் …..
உன்னை
எதிர்த்துப் போரிட்ட அரசன் புறமுதுகிட்டு ஓடியதால் போர்க்களம் அழிந்து கெட்டது. அங்கே,
பகைவரின் படைத்தலைவன் ஒருவன், பெரிய மாடங்களைப் பற்றி எரிக்கும் தீப்போல உன் படையை
நெருங்கி, உன்னுடைய யானை ஒன்றைத் தாக்கினான். இடியால் தாக்கப்பட்டு விழும் எரிமலை போல
அதன் கொம்புகள் ஒடிந்து நிலத்தில் விழுந்த அந்த யானை இறந்தது. வெற்றியோடு சென்ற அந்தப்
படைத்தலைவன் உறுதியாகக் கொலை செய்வதில் வல்லவன். உன் படைவீரர்கள், அந்தத் தலைவன் மேற்சென்று
அவனைத் தாக்கும் பொழுது உண்டாகிய புண்ணைக்கண்டு அதற்கு மருந்திட்டு ஆற்றுவோரும், தம்
கண்களால் அப்புண்ணைக் காண்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவரும் வருந்தினர். வஞ்சி மாநகரத்தின்
மன்றம் உனக்கு வெற்றி பொருந்திய போர்க்களமாக மாறியது. அஞ்சாத வீரர்களின் பிணகுவியல்களை
நீ குடநாட்டில் கடாவிட்டு அழித்தாய். உன்னுடைய முரசு முழங்கும் பெரிய போர்க்களம் விளங்குவதாக.
வெற்றி
பெற்ற வேந்தர்களின் போர்க்களம் தோறும் சென்று, மேலும் வெற்றியுடன் விளங்குக என்று பாராட்டிப்
புகழ்ந்து, புள்ளிகள் பொருந்திய முகத்தையுடைய யானையைப் பரிசாகப் பெற்றதாகப் பெரியோர்
கூறுவர். உன்னைப் போன்றவர் வேறு எவரும் இல்லாததால்,
அழகிய கண்ணையுடைய தடாரிப் பறையை அதிருமாறு அடித்து, இசையறிவில் முதிர்ச்சி பெறாதவனாக
இருந்தாலும், நான் உன்னை அன்புடன் வாழ்த்தி, பெருமானே, நீ பகைமன்னர்களிடமிருந்து பெற்ற
பொருளைப் பெறலாம் என்று வந்தேன். நீ பகைவர்
புகழும் ஆண்மையும், நண்பர்களுக்குக் குறைவின்றி உதவும் பண்பும் உடையவன். பேய்க் கூட்டமும் நரிக் கூட்டமும் திரியும் அவ்விடத்தில்,
ஊன் தின்னும் சிவந்த காதுகளையுடைய கழுகுகள் கூடிக் காண்பவர்க்கு அச்சத்தை உண்டாக்கும்
இடமாகிய போர்க்களத்தை உரிமையாக உடையவனே!
2 comments:
உங்களின் விளக்கம் அருமையாக உள்ளது.
அன்பிற்குரிய ராஜசேகர் அவர்களுக்கு,
வணக்கம்.
என்னுடைய உரையை படித்ததற்கும் பாராட்டியதற்கும் நன்றி.
அன்புடன்,
பிரபாகரன்
Post a Comment