Sunday, September 23, 2012


346. பாழ் செய்யும் இவள் நலனே!

பாடியவர்: அண்டர் மகன் குறுவழுதி. இவர் அண்டர் நடுங்கல்லினாரின் மகனாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.  பாண்டிய மன்னர்களுக்குக் கீழ் பணியாற்றிய தானைத் தலைவர்களும் மற்ற தலைவர்களும் பாண்டிய மன்னர்களின் பெயர்களுள் சிலவற்றைத் தாமும் கொண்டிருந்ததாக ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார்.  வழுதி என்பது பாண்டிய மன்னர்களின் சிறப்புப் பெயர்களில் ஒன்று. இப்புலவர், பாண்டிய மன்னன் ஒருவனிடம் பணியாற்றியதால் வழுதி என்ற பெயர் பெற்றிருக்கலாம். இவர் புறநானுற்றில் இயற்றிய ஒருபாடல் (346) மட்டுமல்லாமல், அகநானூற்றில் இரண்டு (150, 228) பாடல்களும் குறுந்தொகையில் ஒருபாடலும் (345) இயற்றியுள்ளார்.

 
பாடலின் பின்னணி: மறக்குடியில் பிறந்த பெண் ஒருத்தியை மணக்க விரும்பிப் பலரும் வந்தனர்.  அவளுடைய தந்தையும் உடன்பிறந்தோரும் அவளை அவர்களுக்கு மணம் செய்விக்க விரும்பாததால் போர் நிகழ்ந்தது.  அதைக் கண்ட அண்டர் மகன் குறுவழுதியார் போரால் அவ்வூர் பாழாகும் என்பதை நினைத்து இப்பாடலை இயற்றியுள்ளார்.

திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.

துறை: மகட்பாற் காஞ்சி. ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.


பிறங்கிலை இனியுள பாலென மடுத்தலின்,
ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள்;
கல்வியென் என்னும் வல்லாண் சிறாஅன்
ஒள்வேல் நல்லன்; அதுவாய் ஆகுதல்
அழிந்தோர் அழிய ஒழிந்தோர் ஒக்கல்                                      5


பேணுநர்ப் பெறாஅது விளியும்
புன்தலைப் பெரும்பாழ் செயும்இவள் நலனே.

 

அருஞ்சொற்பொருள்: 1. பிறங்குதல் = நிறைதல்; மடுத்தல் = உண்ணச் செய்தல். 4. வாயாகுதல் = உண்மை ஆகுதல். 5. ஒக்கல் = சுற்றம். 6. விளியும் = இறக்கும்.

 
கொண்டு கூட்டு: தாய் வேண்டாள் அல்லள்; சிறாஅன் நல்லன்; பெரும் பாழ் செய்யும் இவள் நலன்; அது ஆகுதல் வாய் எனக் கூட்டுக.

 
உரை: உனக்கு இன்னும் வயிறு நிறையவில்லை. இன்னும் கிண்ணத்தில் பால் எஞ்சியுள்ளது.  அதையும் குடித்து முடி. என்று கூறும் அவள் தாய் அவளை விரும்பாதவள் அல்லள். நான் கல்வி அறிவு உடையவன் என்று கூறும் சிறுவனாகிய அவள் உடன்பிறந்தவன் ஒளி பொருந்திய வேலோடு போர் புரிவதில் திறமையுடையவன்.  இந்தப் பெண்ணை மணக்க விரும்பி வந்தோர் பலரும் போரில் இறந்தனர்.  இறந்தவர்களின் சுற்றத்தாரைப் பாதுகாப்பவர் யாரும் இல்லாமல் இவ்வூர் அழிய நேரும். இவள் அழகு இச்சிறிய ஊரைப் பெரும்பாழிடமாக ஆக்கப் போவது உண்மை.

 

சிறப்புக் குறிப்பு: இப்பாடலில், சிறான் யார் என்பது விளங்கவில்லை. இப்பெண்ணுக்கு இச்சிறுவன் தமையனா அல்லது தம்பியா என்பது தெரியவில்லை.  பெண்ணின் தந்தையைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.  சிறான் அவளுடைய உடன்பிறந்தவனாகக் கருதப் படுவதால், ஒள்வேல் நல்லன் என்பது அவள் தந்தையைக் குறிப்பதாகச் சிலர் கருதுகின்றனர்.  இப்பெண்ணை அன்பிலும், அறிவிலும், வீரத்திலும் சிறந்த ஆண்மகனுக்கு மணம் செய்விக்க வேண்டும் என்று அவள் தந்தை விரும்பி இருக்கலாம். இதுவரை இப்பெண்னை மணம் செய்துகொள்ள வந்த ஆடவர் எவரும் இக்குடும்பத்திற்கு ஏற்றவர்களாக இல்லாததால் போர் நடைபெற்றிருக்கலாம். இவள் தந்தை அப்போரில் இறந்திருக்கலாம்.  இப்பாடலில் பல செய்திகள் தெளிவாக இல்லாததால், நம் கற்பனைக்கு ஏற்றவாறு பொருள்கொள்ள வேண்டியதாக உள்ளது.

345. நிரல் அல்லோர்க்குத் தரலோ இல்!


பாடியவர்: அண்டர் நடுங்கல்லினார். இவரைப் பற்றிய குறிப்புக்களை பாடல் 283-இல் காண்க.

 
பாடலின் பின்னணி: அழகான பெண் ஒருத்தி, அவள் பெற்றோர்களால் வீட்டில் காவலில் வைக்கப்பட்டிருந்தாள். அவளை மணக்க விரும்பிப் பல மன்னர்கள் வருகின்றனர். ஆனால் அவள் தமையன்மார் அவளைத் தகுதியுடையவர்க்குத்தான் தருவோம் என்று கூறிப் போரிட ஆயத்தமாகின்றனர்.  அங்கு நடைபெறப்போகும் போரால் அவ்வூர் என்ன ஆகுமோ என்று புலவர் அண்டர் நடுங்கல்லினார் வருந்துவதை இப்பாடலில் காணலாம். 

 

திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.

துறை: மகட்பாற் காஞ்சி. ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.

 
களிறுஅணைப்பக் கலங்கின, காஅ
தேர்ஓடத் துகள்கெழுமின, தெருவு
மாமறுகலின் மயக்குற்றன, வழி
கலம்கழாஅலின் துறை கலக்குற்றன
தெறல்மறவர் இறைகூர்தலில்                                5


பொறைமலிந்து நிலன்நெளிய
வந்தோர் பலரே வம்ப வேந்தர்
பிடிஉயிர்ப் பன்ன கைகவர் இரும்பின்
ஓவுறழ் இரும்புறம் காவல் கண்ணிக்
கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை            10


மையல் நோக்கின் தையலை நயந்தோர்
அளியர் தாமேஇவள் தன்னை மாரே
செல்வம் வேண்டார் செருப்புகல் வேண்டி
நிரல்அல் லோர்க்குத் தரலோ இல்எனக்
கழிப்பிணிப் பலகையர் கதுவாய் வாளர்                          15


குழாஅங் கொண்ட குருதிஅம் புலவொடு
கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல்
இன்ன மறவர்த் தாயினும் அன்னோ !
என்னா வதுகொல் தானே
பன்னல் வேலிஇப் பணைநல் லூரே!


அருஞ்சொற்பொருள்: 1. அணைப்பு = தழுவுகை; கா = சோலை. 2. துகள் = புழுதி. 3. மா = குதிரை; மறுகுதல் = சுழல்தல், உலாவுதல். 4. கலம் = படைக்கலம். 5. தெறல் = அழிக்கை; இறைகூர்தல் = தங்குதல்.  6. பொறை = பாரம். 7. வம்பு = புதுமை. 8. பிடி = பெண்யானை; உயிர்ப்பு = பெருமூச்சு; கைகவர் இரும்பு = கையால் பற்றி ஊதப்படும் துருத்தி. 9. ஓவு = கதவு; உறழ்தல் = ஒத்தல்; இரு = பெரிய; புறம் = பக்கம்; கண்ணி = கருதி.12. அளியர் = இரங்கத் தக்கவர்; தன்னைமார் = தமையன்மார்.13. செரு = போர். 14. நிரல் = ஒப்பு. 15. பலகை = கேடயம்; கதுவாய் = வடுப்படுதல்; வாளர் = வாளை ஏந்தியவர். 17. கழாஅத்தலையர் = கழுவாத தலையையுடையவர்; கருமை = வலிமை; கருங்கடை = வலிதாகக் கடையப்பட்ட. 18. அன்னோ = ஐயோ. 20. பன்னல் = பருத்தி; பணை = வயல், மருத நிலத்து ஊர்.

 
கொண்டு கூட்டு: கா கலங்கின; தெரு துகள் கெழுமின, வழி மயக்குற்றன, காவல் கண்ணி வந்த வம்ப வேந்தர் பலர்; தன்னைமார், வேண்டி, வேண்டாராய், பலகையராய், வாளராய், கழாத்தலையராயுள்ளனர்; இன்ன மறவர்த்தாயினும் நல்லூர் என் ஆவது எனக் கூட்டுக.


உரை: யானையின் பெருமூச்சுப்போல் காற்றை வெளியிடும் உலைத் துருத்தியின் வாயிரும்பு போன்ற இரண்டு கதவுகள் ஒன்றோடு ஒன்று பொருந்தும் இடத்தில் இப்பெண் பாதுகாவலாக வைகப்பட்டிருக்கிறாள். அவளை அடைய விரும்பி வேந்தர் பலரும் தங்கள் பெரும்படையுடன் வந்தனர். போர்புரிவதைத் தம் இயல்பாகக் கொண்ட மறவர்கள் தங்கள் படைக்கருவிகளுடன் வந்து தங்கியதால் நிலம் சுமையைத் தாங்க முடியாமல் நெளிந்தது.  யானைகளைக் கட்டுவதால் சோலையிலுள்ள மரங்கள் நிலைகுலைந்தன.  தேரோடியதால் தெருக்களில் புழுதிகள் நிரம்பின. குதிரைகள் சுற்றித் திரிவதால் வழிகள் உருத் தெரியாதவாறு மாறின. படைக்கலங்களைக் கழுவுவதால் நீர்த்துறைகள் குழம்பின.  இவ்வாறு, தம் படையோடு புதிது புதிதாகப் பலவேந்தர்கள் இப்பெண்ணை விரும்பி வந்தனர்.

 
கரிய கண்களையும், விருப்பத்தையுண்டாக்கும் முலைகளையும், மயக்கம் உண்டாக்கும் பார்வையும் உடைய இவளை மணக்க விரும்பி  வந்தவர் இரங்கத் தக்கவர்.  இவள் தமையன்மார், பெண்கேட்டு வந்தவர் தரும் செல்வத்தை விரும்ப மாட்டர்கள். எமக்கு நிகரில்லாதவர்களுக்கு இவளைத் தரமாட்டோம். என்று கூறி, போர்புரிவதையே விரும்பி, கழிகளால் கட்டப்பட்ட கேடயத்தை ஏந்தி, பகைவர்களுக்குப் புண்களை உண்டாக்கும் வாளோடு, கூட்டமாகக், குருதி நாறும் புலாலுடன் கழுவாத தலையினராய், வலியக் கட்டப்பட்ட காம்பையுடைய நெடிய வேலேந்துவர்.  இத்தகைய வீரர்கள் இருந்தாலும், ஐயோ, பருத்திவேலி சூழ்ந்த இந்த மருதநிலத்து ஊர் என்ன ஆகுமோ?

344. இரண்டினுள் ஒன்று!


பாடியவர்: அண்டர் நடுங்கல்லினார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 283-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஆண்மகன் ஒருவன் அழகிய பெண் ஒருத்தியைக் கண்டான். அவன் அவளை மணக்க விரும்பினான். அவள் தந்தைக்குப் பெருமளவில் பொருள் கொடுத்தோ அல்லது அவனோடு போரிட்டோ அவளை அடைவது என்று முடிவு செய்தான்.  இப்பாடல் அவன் கூற்றாக அமைந்துள்ளது.

திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.

துறை: மகட்பாற் காஞ்சி. ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.

 
செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை
செறிவளை மகளிர் ஓப்பலில் பறந்தெழுந்து
துறைநணி மருதத்து இறுக்கும் ஊரொடு
நிறைசால் விழுப்பொருள் தருதல் ஒன்றோ,
புகைபடு கூர்எரி பரப்பிப் பகைசெய்து                            5


பண்பில் ஆண்மை தருதல் ஒன்றோ,
இரண்டினுள் ஒன்றா காமையோ அரிதே;
காஞ்சிப் பனிமுறி ஆரங் கண்ணி. .  . .
கணிமே வந்தவள் அல்குல்அவ் வரியே.


அருஞ்சொற்பொருள்: 1. பை = அழகு; தோடு = தோகை; மஞ்ஞை = மயில். 2. செறிதல் = மிகுதல், நெருங்கல்; ஓப்பல் = ஓட்டுதல். 3. நணி = அண்மையான இடம்; இறுத்தல் = தங்குதல். 4. நிறை = நிறைவு; சால் = நிறைவு; விழு = சிறந்த. 5. கூர் = மிகுதி. 8. காஞ்சி = ஒரு வகை மரம்; பனி = குளிர்; முறி = தளிர்; ஆர் = ஆத்தி. 9. கணி = வேங்கை மரம்; மே = அன்பு; மேவருதல் = விரும்புதல்.

 

 

உரை: இப்பெண்ணை அடைவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, வளையல்களை நிறைய அணிந்த மகளிர் ஓட்டுவதால், செந்நெல் கதிர்களை உண்ட, அழகிய தோகைகளையுடைய மயில், பறந்து எழுந்து, நீர்த்துறையை அடுத்த மருதமரத்தில் தங்கும் ஊரையும், மிகுந்த அளவில் சிறந்த பொருட்களையும் இவள் தந்தைக்குத்  தருவது.   மற்றொன்று, பகைகொண்டு மிகுந்த அளவில் தீயையும் புகையையும் பரப்பிப் பண்பில்லாத செயல்களைச் செய்வது.  இவ்விரண்டினுள் ஒன்று நடைபெறுவது உறுதி. காஞ்சியின் குளிர்ந்த தளிர்களோடு ஆத்திப்பூவைக் கலந்து தொடுத்த மாலைசூடும்… இவள் வேங்கைமரத்தின் பூக்களை விரும்பித் தன் இடுப்பில் வரிசையாக அணிபவள்.

 
சிறப்புக் குறிப்பு: இப்பாடல் சிதைந்துள்ளதால் இப்பாடலின் பிற்பகுதிக்குச் சரியாகப் பொருள் விளங்கவில்லை

343. ஏணி வருந்தின்று!


343. ஏணி வருந்தின்று!


பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 4-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஓருரில் அழகிய பெண் ஒருத்தி இருந்தாள். அவளை மணக்க விரும்பி, மன்னன் ஒருவன் வந்தான். அவன் மிகுந்த செல்வத்தைக் கொடுத்தாலும் அப்பெண்னின் தந்தை அவளை அவனுக்குத் திருமணம் செய்விக்க உடன்படவில்லை. அதனல், போர் மூளும் நிலை உருவாகிறது. நடைபெறப்போகும் போரில் அவ்வூர் அழியுமோ என்று நினைத்துப் புலவர் பரணர் வருந்துவதை இப்பாடலில் காணலாம்.

 

திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.

துறை: மகட்பாற் காஞ்சி. ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.


மீன்நொடுத்து நெற்குவைஇ
மிசையம்பியின் மனைமறுக்குந்து;
மனைக்குவைஇய கறிமூடையால்
கலிச்சும்மைய கரைகலக்குறுந்து;
கலந்தந்த பொற்பரிசம்                                                    5


கழித்தோணியாற் கரைசேர்க்குந்து;
மலைத்தாரமும் கடல்தாரமும்
தலைப்பெய்து வருநர்க்கீயும்
புனலங்கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்
முழங்குகடல் முழவின் முசிறி யன்ன                                10


நலஞ்சால் விழுப்பொருள் பணிந்து கொடுப்பினும்,
புரையர் அல்லோர் வரையலள் இவளெனத்
தந்தையும் கொடாஅன் ஆயின், வந்தோர்
வாய்ப்பட இறுத்த ஏணி ஆயிடை
வருந்தின்று கொல்லோ தானே பருந்துஉயிர்த்து              15


இடைமதில் சேக்கும் புரிசைப்
படைமயங்கு ஆரிடை நெடுநல் ஊரே.


அருஞ்சொற்பொருள்: 1. நொடுத்து = விற்று; குவைஇ = குவித்து.  2. மிசை = மேல்; அம்பி = படகு; மறுக்குதல் = மனஞ்சுழலல். 3. கறி = மிளகு. 4. கலி = ஆரவாரம்; சும்மை = ஒலி; கலக்குறுந்து = கலக்கும், மயக்கும். 5. பரிசம் = முன்பணம், பொருள். 6. கழி = கடலை அடுத்த உப்புநீர்ப் பரப்பு. 7. தாரம் = அரிய பொருள். 8. தலைப்பெய்தல் = ஒன்றாய்க் கூடுதல், கலத்தல். 9. புனலம் =புனல்+அம் = தண்ணீர்; அம் – சாரியை; பொலன் = பொன்; குட்டுவன் = சேர மன்னன். 11. சால் = நிறைவு; விழு = சிறந்த. 12. புரையர் = ஒப்பானவர்கள். 14. வாய்ப்பட = வழி காண்பதற்கு, கைப்பற்ற; ஆயிடை = அவ்விடத்து. 15. தான் – அசிச் சொல்; உயிர்த்தல் = இளைப்பாறல். 16. புரிசை = மதில்; சேக்கும் = தங்கும். 17. மயங்குதல் = மாறுபடுதல், கலத்தல்; ஆரிடை = அரிய இடம்

 

கொண்டு கூட்டு:  முசிறியன்ன விழுப்பொருள் கொடுப்பினும், தந்தையும் கொடாஅன்; வந்தோர் இறுத்த ஏணி வருந்தின்று கொல்லோ; நெடுநல் ஊரே எனக் கூட்டுக.

 

உரை: மீன்களை விற்று அதற்குப் பண்டமாற்றாகப் பெற்ற நெல் படகுகளின் மீது  குவிக்கப்பட்டிருக்கிறது. அந்த நெற்குவியல்கள் வீடுகள் போல் உயர்ந்து இருக்கும் காட்சி ’வீடு எது?’,  ’நெற்குவியல் எது?’,  என்று பிரித்து அறிய முடியாதவாறு காண்போரை மயங்கச் செய்யும்.  மனையிடத்தே குவிக்கப்பட்ட மிளகு மூட்டைகள் ஆரவாரம் மிக்க ஒலி பொருந்திய கடற்கரையோ என்று காண்போரைக் கலங்கச் செய்யும்.  மரக்கலங்களில் கொண்டுவந்த பொன்னாலான பொருட்கள் கழிகளில் இயங்கும் தோணிகளால் கரை சேர்க்கப்படும்.  பொன்னாலான மாலை அணிந்த குட்டுவனுடைய நாட்டில் தண்ணீரைப்போல் கள் மிகுதியாக உள்ளது.  அவன் கடலில் உள்ள பொருட்களையும் மலையில் உள்ள பொருட்களையும் கலந்து வந்தோர்க்கெல்லாம் அளிப்பவன்.  அவன் நாட்டில் கடல்போல் முழங்கும் முரசை உடைய முசிறி என்னும் ஊர் உள்ளது.  அந்த முசிறி நகரத்தை ஒத்த செல்வத்தை பணிந்துவந்து கொடுத்தாலும் தன் தகுதிக்கு ஏற்றவர்கள் அல்லாதாரை  இவள் திருமணம் செய்துகொள்ள மாட்டாள்.  இவள் தந்தையும் தகுதியற்றவர்களுக்கு இவளை மணம் செய்விக்க உடன்படமாட்டான்.

 

ஆனால், இவளை மணம் செய்ய விரும்பி வந்தவர்கள் இவளை அடைவதற்காகப் போர் செய்வார்கள் போலிருக்கிறது. அதற்கு ஆயத்தமாக, பருந்துகள்கூடப் பறந்து உச்சிக்குச் செல்லமுடியாமல் இடையே களைப்பாறும் உயர்ந்த மதில்களில், மேலே செல்வதற்காக, அவர்கள் தங்கள் ஏணிகளைச் சார்த்தியிருக்கிறார்கள்.  படை ஏந்திய வீரர்கள் பாதுகாக்கும் அரிய வழிகளையுடைய நெடிய நல்ல ஊரில்  நடைபெறப்போகும் போரை நினைத்து அந்த ஏணிகள் வருந்தும் போலும்.

 

சிறப்புக் குறிப்பு: சங்க காலத்தில், சேர நாட்டிலிருந்த முசிறி என்ற ஊர், ஒரு சிறந்த, வளமான, ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த வணிகத் தொழில் மிகுந்த துறைமுகப் பட்டினமாக விளங்கியதாக வரலாறுகள் கூறுகின்றன. அவ்வூர், தற்காலத்தில் பெரியாறு என்று அழைக்கப்படும் கள்ளியம் பேரியாறு என்ற ஆறு கடலில் கலக்கும் இடத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இப்பாடலில், குட்டுவன் என்று குறிப்பிடப்பட்டிருப்பது கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் குறிப்பதாக ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார்.  கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்று அழைக்கப்பட்டவனும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகனாகிய சேரன் செங்குட்டுவனும் ஒருவனே என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்து.

 

சேரன் செங்குட்டுவனின் நாட்டில் நீர்வளமும், நிலவளமும், மலைவளமும், கடல்வளமும் நிறைந்து இருந்ததையும், அவனுடைய கொடைத் தன்மையையும் இப்பாடலில் பரணர் புகழ்ந்து பாடியுள்ளார்.

342. வாள்தக உழக்கும் மாட்சியர்!


பாடியவர்: அரிசில் கிழார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 146-இல் காண்க.

பாடலின் பின்னணி: அழகிய பெண் ஒருத்தியைப் பார்த்த ஆடவன் ஒருவன் “அவள் ஒருமறக்குலப் பெண்ணா?” என்று புலவர் அரிசில் கிழாரைக் கேட்டான்.  அதற்கு அவர், “அவள் மறக்குலப் பெண்தான். அப்பெண்ணை மணம் செய்துகொள்ள  விரும்பிப் பலர் வந்தனர். அவர்களில் எவருக்கும் அவளை மணம் செய்விக்க விரும்பாமல்,  அவளுடைய தந்தையும் தமையன்மாரும் அவர்களுடன் போர்செய்ததால், இறந்தவர்களின் உடல்கள் வைக்கோற் போர் போலக் குவிந்து கிடக்கின்றன” என்று விடையளிப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது.

 

திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.

துறை: மகட்பாற் காஞ்சி. ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.



கானக் காக்கைக் கலிச்சிறகு ஏய்க்கும்
மயிலைக் கண்ணிப் பெருந்தோட் குறுமகள்
ஏனோர் மகள்கொல் இவளென விதுப்புற்று
என்னொடு வினவும் வென்வேல் நெடுந்தகை
திருநயத் தக்க பண்பின் இவள் நலனே;                           5


பொருநர்க்கு அல்லது பிறர்க்கு ஆகாதே;
பைங்கால் கொக்கின் பகுவாய்ப் பிள்ளை
மென்சேற்று அடைகரை மேய்ந்துஉண் டதற்பின்
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை
கூர்நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம்            10


தண்பணைக் கிழவன்இவள் தந்தையும் வேந்தரும்
பெறாஅ மையின் பேரமர் செய்தலின்
கழிபிணம் பிறங்கு போர்பு அழிகளிறு எருதா
வாள்தக வைகலும் உழக்கும்
மாட்சி யவர் இவள் தன்னை மாரே.                       15



அருஞ்சொற்பொருள்: 1. கானம் = காடு; கலித்தல் = தழைத்தல்; ஏய்க்கும் = ஒக்கும். 2. மயிலை = இருள்வாசி (ஒருவகைப் பூ); கண்ணி = தலையில் அணியப்படும் மாலை, மாலை; குறுமகள் = இளம்பெண். 3. ஏனோர்= பிறர், மற்றோர்; விதுப்பு = ஆசை, விரைவு. 5. திரு = திருமகள்; நயத்தக்க = விரும்பத்தக்க; நலன் = நலம் = அழகு, புகழ், நன்மை. 7. பை = உடல் வலிமை; பகு = பிளந்த. 8. அடைகரை = கரைப்பக்கம். 9. ஆரல் = ஒருவகை மீன்; ஐயவி = சிறு வெண் கடுகு. 10. கூர் = மிகுதி; இறவு = இறால் மீன். 11. தண்பணை = மருதநிலத்து ஊர். 12. அமர் = போர். 13. கழி = மிகுதி; போர்பு = போர் (நெற்போர்); பிறங்குதல் = செறிதல், பெருகுதல்; அழி = வைக்கோல். 14. தக = தகுதிக்கேற்ப; வைகலும் = நாளும்; உழக்குதல் = உழவு செய்தல், மிதித்தல், வெல்லல், கலக்குதல். 15. ஐயர் = பெரியோர்; தன்னை = தன்+ஐ = தமையன்மார்.

 

கொண்டு கூட்டு: நெடுந்தகை, இவள் நலன், அல்லது, ஆகாது; தந்தயும் கிழவன்; தன்னையார் மாட்சியர் எனக் கூட்டுக.

 

உரை: காட்டுக் காக்கையின் தழைத்த சிறகைப் போன்ற இருள்வாசிப் (இருவாட்சி) பூவால் தொடுக்கப்பட்ட மாலையையும் பெரிய தோளையும் உடைய இந்த இளம்பெண், வீரர்களின் குடியைச் சேர்ந்தவளாக அல்லாமல் பிறர்குடியில் பிறந்தவள் என்று கருதி அவளை மணம் செய்துகொள்ளும் விருப்பத்தோடு அவளைப் பற்றி என்னிடம் கேட்கும் வெற்றி பொருந்திய வேலையுடைய பெருவீரனே! இவள் திருமகளும் விரும்பத்தக்க பண்பும் அழகும் உடையவள். இவள் வீரர்கள் அல்லாது பிறரால் அடைய முடியாதவள்.  இவள் தந்தை, வலிய கால்களையுடைய கொக்கின் அகன்ற வாயையுடைய குஞ்சு, மெத்தென்றிருக்கும் சேற்றில், கரையோரத்தில் நின்று, மீன்களை மேய்ந்து உண்டபின், ஆரல்மீன்கள் இட்ட வெண்கடுகு போன்ற சிறிய முட்டைகளை நல்ல இறாலின் குஞ்சுகளுடன் தாய்க் கொக்கு தர உண்ணும்  மருதநிலத்து  ஊருக்குத் தலைவன். இவளை மணக்க விரும்பி வந்த வேந்தர்களுடன் இவள் தந்தையும் தமையன்மாரும்  செய்த பெரும்போரில்  பலரும் இறந்தனர்.  அவர்களின் பிணங்கள் வைக்கோற் போர் போல் குவிந்து கிடக்கின்றன. நெற்கதிர்களையும் வைக்கோலையும் பிரித்து ஒதுக்குவதற்கு உழவர்கள் எருதுகளைப் பயன்படுத்துவது போல், இறந்தவர்களின் பிணங்களை ஒதுக்குவதற்கு  இவள் தமையான்மார் யானைகளைப் பயன்படுத்துகிறார்கள்.  இவள்  தமையன்மார், தமது வாளாற்றலுக்கேற்ப நாள்தோறும் போர் செய்யும் பெருமை உடையவர்கள்.

 

சிறப்புக் குறிப்பு: மருதநிலத்தில் தாய்க்கொக்கு தன் குஞ்சைப் பேணிப் பாதுகாத்து ஊட்டி வளர்ப்பதுபோல் இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெண் அவள் பெற்றோர்களால் அன்போடு வளர்க்கப்படுகிறாள் என்ற கருத்தும் இப்பாடலில் உள்ளதாகத் தோன்றுகிறது.