பாடியவர்: இடைக்குன்றூர் கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளை 76 - ஆவது பாடலில் காணலாம்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இம்மன்னனைப் பற்றிய விரிவான செய்திகளை 72-ஆவது பாடலில் காணலாம்.
பாடலின் பின்னணி: தலையாலங்கானத்தில் நடைபெறுகின்ற போரில் பாண்டியனின் வீரர்கள் பகைவர்களை அழித்து வருகிறார்கள். பகற்பொழுது கழிந்து கொண்டிருக்கிறது. பாண்டியன் நெடுஞ்செழியன் போர்க்களத்திற்கு வந்து கொண்டிருக்கிறான். அதைக் கண்ட புலவர் இடைக்குன்றுர் கிழார், “இப்பொழுதுதானே மன்னன் வருகிறான்; பகற்பொழுது மிகக் குறைவாக இருக்கிறதே; ஒரு சிலர் உயிர் தப்பிவிடுவரோ?” என்று தனக்குள் எண்ணுவது போல் இப்பாடல் அமைந்துள்ளது.
திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.
மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி
மன்ற வேம்பின் ஒண்குழை மலைந்து
தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி
வெம்போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த
5 வம்ப மள்ளரோ பலரே;
எஞ்சுவர் கொல்லோ பகல்தவச் சிறிதே?
அருஞ்சொற்பொருள்:
1. மண்ணுதல் = மூழ்குதல். 2. குழை = தளிர்; மலைதல் = அணிதல். 3. தெண் = தெளிவு; கிணை = பறை; இயலல் = அசைதல் (நடத்தல்). 5. வம்பு = புதுமை, நிலையின்மை; மள்ளர் = வீரர் (பகைவர்). 6. தவ = மிக
உரை: தனது பழைய நகரத்தின் வாயிற்புறத்தே உள்ள குளிர்ந்த நீருடைய குளத்தில் மூழ்கி, பொதுவிடத்தில் உள்ள வேப்பமரத்தின் ஒளிபொருந்திய தளிர்களை அணிந்து, தெளிந்த ஒலியுடைய பறை முன்னே ஒலித்துச் செல்ல, அதன் பின்னர் யானையைப்போல் பெருமிதத்தோடு நடந்து கடுமையான போர் செய்யப் பாண்டியன் நெடுஞ்செழியன் போர்க்களத்திற்கு வருகிறான். அவனை எதிர்த்துப் போர் புரிவதற்கு அணியணியாகப் புதுப்புது வீரர்கள் பலர் வருகிறார்களே! பகற்பொழுது மிகச் சிறிதே (எஞ்சி) உள்ளதால், சில பகைவர்கள் தப்பிவிடுவார்களோ?
Tuesday, June 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment