Sunday, January 6, 2013

376. கிணைக்குரல் செல்லாது!


376. கிணைக்குரல் செல்லாது!

பாடியவர்: புறத்திணை நன்னாகனார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 176-இல் காண்க.
பாடப்பட்டோன்: ஓய்மான் நல்லியக் கோடன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல்  176-இல் காண்க.
பாடலின் பின்னணி:  பாணன் ஒருவன், ஒருநாள் மாலைப் பொழுதில் நல்லியக் கோடனின் இல்லத்திற்குச் சென்றான். அவன் உடையும் உருவமும் அவன் வறுமையை வெளிப்படுத்தியது. அவனைக் கண்டவுடன், நல்லியக் கோடன் அவனுக்குக் கள்ளின் தெளிவும் உணவும் அளித்தான். பாணனின் வறுமையைப் போக்குவதற்குத் தேவையான பொருள்கள் அனைத்தையும் நல்லியக் கோடன் அளித்தான். அவற்றைப் பெற்றுக் கொண்ட பாணன், தான் வறுமைக் கடலைக் கடப்பதற்கு ஏற்ற தெப்பம் போல் நல்லியக் கோடன்  இருந்ததாகவும், தான் இனி எவரையும் புகழ்ந்து பாடி எவரிடமும் இரக்கப் போவதில்லை என்றும் கூறுவதாக இப்பாடலில் புறத்திணை நன்னாகனார் கூறுகிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: இயன் மொழி. அரசனின் இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்

விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப்
பசுங்கதிர் மழுகிய சிவந்துவாங்கு அந்தி
சிறுநனி இறந்த பின்றைச் செறிபிணிச்
சிதாஅர் வள்பின்என் தெடாரி தழீஇப்
பாணர் ஆரும் அளவை யான்தன்                            5

யாணர் நல்மனைக் கூட்டுமுதல் நின்றனென்,
இமைத்தோர் விழித்த மாத்திரை ஞெரேரெனக்
குணக்குஎழு திங்கள் கனைஇருள் அகற்றப்
பண்டுஅறி வாரா உருவோடு என்அரைத்
தொன்றுபடு துளையொடு பருஇழை போகி 10

நைந்துகரை பறைந்தஎன் உடையும் நோக்கி
விருந்தினன் அளியன் இவன்எனப் பெருந்தகை
நின்ற முரற்கை நீக்கி, நன்றும்
அரவுவெகுண் டன்ன தேறலொடு சூடுதருபு
நிரயத் தன்னஎன் வறன்களைந் தன்றே                  15

இரவி னானே ஈத்தோன் எந்தை;
அன்றை ஞான்றினொடு இன்றின் ஊங்கும்
இரப்பச் சிந்தியேன் நிரப்படு புணையின்;
உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்
நிறைக்குளப் புதவின் மகிழ்ந்தனெ னாகி               20

ஒருநாள், இரவலர் வரையா வள்ளியோர் கடைத்தலை
ஞாங்கர் நெடுமொழி பயிற்றித்
தோன்றல் செல்லாதுஎன் சிறுகிணைக் குரலே.

அருஞ்சொற்பொருள்: 1. விசும்பு = ஆகாயம்; நீத்தம் = வெள்ளம்,கடல்; இறத்தல் = கடத்தல். 2. மழுகி = மழுங்கி = குறைந்து; வாங்கு = வளைவு. 3. சிறுநனி = சிறிதுநேரம்; பின்றை = பின்னர். 4. சிதாஅர் = கந்தை, கிழியல்; வள்பு = வார்; தெடாரி = தடாரி; தழீஇ = தழுவி.  5. ஆர்தல் = உண்ணுதல்; அளவை = அளவு. 6. யாணர் = புதுமை; கூடு = நெற்குதிர். 7. ஞெரேரென = ஞெரேர்+என = விரைவாக. 8. குணக்கு = கிழக்கு; கனை = நெருக்கம். 9. அரை = இடை (இடுப்பு). 11. பறைதல் = கெடுதல், அழிதல் (கிழிதல்). 13. முரற்கை = தாளக்கருவி. 14. அரவு = பாம்பு; தேறல் = கள்ளின் தெளிவு; சூடு = சுடப்பட்ட உணவு; தருபு = தந்து. 15. நிரயம் = நரகம். வறன் = வறுமை. 17. ஞான்று = நாள்; ஊங்கும் = மேலும். 18. நிரப்பு = வறுமை; புணை = மிதவை (தெப்பம்). 20. புதவு = வாய்மடை (மதகு). 21. வரையா = அளவில்லாமல்; கடைத்தலை = தலைவாயில். 22. ஞாங்கர் = இடம், பக்கம்; நெடுமொழி = புகழ்ச்சொல்; பயிலல் = சொல்லல். 23. தோன்றல் = வெளிப்படல்; குரல் = ஓசை.

கொண்டு கூட்டு: அந்தி இறந்த பின்றை, தழீஇ நின்றெனனாக, திங்கள் இருளகற்ற, உருவோடு உடையும் நோக்கி, நீக்கி, களைந்து, பெருந்தகை, ஈத்தோன்; தகையேன், மகிழ்ந்தனெனாகி, புணையின் சிந்தியேன்; சிறுகிணைக்குரல் தோன்றல் செல்லாது எனக் கூட்டுக.

உரை: கடல் போன்ற ஆகாயத்தைக் கடந்து சென்ற ஞாயிற்றின் ஓளி குறைந்து, சிவந்த நிறத்துடன் ஞாயிறு வளைந்து தோன்றும் மாலைப் பொழுது கழிந்த சிறிது நேரத்தில், தோலின் துண்டுகளாலும் கிழிந்த துணியாலும் இறுக்கிக் கட்டப்பட்ட எனது தடாரிப் பறையைத் தழுவிக் கொண்டு, பாணர்கள் உனவு உண்னும் பொழுது, நான் நல்லியக் கோடனின் நல்ல மனையின் நெற்கூட்டின்முன் நின்றேன். கிழக்கே தோன்றிய திங்கள், கண்ணை மூடித் திறக்கும் நேரத்திற்குள், அடர்ந்திருந்த இருளை விரைவாக அகற்றியது. நல்லியக் கோடன் என்னை முன்பு பார்த்திருக்கிறான். ஆனால், இப்பொழுது, அவனால் என்னை அடையாளம் கண்டுகொள்ள முடியாதவாறு என் உடல் உரு மாறியிருந்தது. என் இடுப்பில் இருந்த பழைய உடை, துளைகளுடனும் பருத்த இழைகளுடனும் கூடிக் கெட்டு, மெலிந்து, கரை கிழிந்து கிடந்தது. எனது உடையை நோக்கி, ‘இவன் புதியவன்; இரங்கத் தக்கவன்.’ என்று கூறிப் பெருந்தன்மையுடைய நல்லியக் கோடன், என் கையில் இருந்த தாளத்தைத் தான் வாங்கிக் கொண்டு, பாம்பு சினந்து எழுந்தாற் போன்ற (நன்றாகப் புளித்த) கள்ளின் தெளிவையும் சுட்ட இறைச்சியும் எனக்குத் தந்தான். அன்று இரவே, நரகம் போன்ற என் வறுமையைக் களைவதற்குத் தேவையான பொருள்களை எல்லாம் அவன் அளித்தான். என் தலைவனாகிய நல்லியக் கோடன், என் வறுமைக் கடலை கடப்பதற்கு ஒரு தெப்பம் போல் இருந்ததால், அன்று முதல் இன்றுவரையும், இனி மேலும், பிறரிடம் சென்று இரத்தலை நான் நினைத்திலேன்.  நான் பிறர் உள்ளத்தில் எண்ணுவதை அளந்து அறியும் ஆற்றல் உடையவன். நீர் நிறைந்த குளத்தின் மதகைத் திறந்தால் வெளிப்படும் வெள்ளப் பெருக்குப் போல நான் மகிழ்ச்சி அடைந்தேன்.  இனி, ஒருநாளும், இரப்போர்க்கு குறைவின்றிக் கொடுக்கும் வள்ளல் தன்மை உடையவரின் வாயிலில்கூட அவர்களின் புகழைப் பாராட்டி அவரிடம் இருந்து ஒருபொருளைப் பெறுவதற்கு எனது சிறிய கிணப்பறை ஒலிக்காது.

375. பாடன்மார் எமரே!


375. பாடன்மார் எமரே!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
பாடலின் பின்னணி:  ’ஆய் அண்டிரனே, நீ புலவர்க்குப் புகலிடமாய் இவ்வுலகில் நீடு வாழ்க; நீ இல்லாவிட்டால் இவ்வுலகம் வறுமை அடையும். அப்பொழுது, இவ்வுலகில் புலவர் இல்லாது போவாராக; ஒருகால், புலவர்கள் இருந்தாலும், அவர்கள் பெருமையில்லாத மன்னர்களைப் பாடாதிருப்பாராக.’ என்று உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் இப்பாடலில் கூறுகிறார்.   

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: வாழ்த்தியல். தலைவனை வாழ்த்துதல்.

அலங்குகதிர் சுமத்த கலங்கல் சூழி
நிலைதளர்வு தொலைந்த ஒல்குநிலைப் பல்கால்
பொதியில் ஒருசிறை பள்ளி யாக
முழாஅரைப் போந்தை அரவாய் மாமடல்
நாரும் போழும் கிணையோடு சுருக்கி           5

ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅ
ஊழ்இரந்து உண்ணும் உயவல் வாழ்க்கைப்
புரவுஎதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார்எனப்
பிரசம் தூங்கும் அறாஅ யாணர்
வரையணி படப்பை நன்னாட்டுப் பொருந!   10

பொய்யா ஈகைக் கழல்தொடி ஆஅய்!
யாவரும் இன்மையின் கிணைப்பத் தவாது
பெருமழை கடல்பரந் தாஅங்கு யானும்
ஒருநின் உள்ளி வந்தனென்; அதனால்
புலவர் புக்கில் ஆகி, நிலவரை            15

நிலீஇயர் அத்தை நீயே; ஒன்றே
நின்னின்று வறுவிது ஆகிய உலகத்து
நிலவன் மாரோ புலவர் துன்னிப்
பெரிய ஓதினும் சிறிய உணராப்
பீடின்று பெருகிய திருவின்                          20

பாடில் மன்னரைப் பாடன்மார் எமரே!


அருஞ்சொற்பொருள்: 1. அலங்குதல் = அசைதல்; சூழி = நீர்நிலை. 2. நிலை = பூமி; ஒல்குதல் = தளர்தல், கெடுதல், மெலிதல்; ஒல்கு நிலை = வலிமை குன்றிய நிலை. 3. பொதியில் = அம்பலம், மன்றம்; சிறை = பக்கம்; பள்ளி = படுக்கை. 4. முழா = முரசு; அரை = மரத்தின் அடிப்பக்கம்; போந்தை = பனை; அரவாய் = அரத்தின் வாய்; மாமடல் = பெரிய பனைமட்டை. 5. போழ் = பனங்குருத்து. 6. ஏரின் வாழ்நர் = உழவர்; புகாஅ = உணவு. 7. உயவு = வருத்தம். 8. புரவு = பாதுகாப்; எதிர்தல் = கொடுத்தல். 9. பிரசம் = தேன்கூடு; அறாஅ = குறையாத; யாணர் = புதுவருவாய். 10. அணி = அண்மை; படப்பை = தோட்டம்.  12. கிணைப்ப = கிணையை ஒலிக்க; தவல் = வறுமையால் வருந்துதல். 13. மழை = மேகம். 15. புக்கில் = புகலிடம்; வரை = அளவு. 16. அத்தை – முன்னிஅலை அசைச் சொல். 18. நிலவுதல் = நிலைத்திருத்தல்; துன்னி = நெருங்கி. 19. ஓதுதல் = சொல்லுதல். 20 பீடு = பெருமை. 21. பாடு = பெருமை; எமர் = எம்மினத்தவர் (புலவர்).

உரை: காற்றில் பறந்துவந்து நீரில் மிதந்து அசையும் கதிர்களைச் சுமந்து கலங்கிய நீர்நிலை போல் நிலைதளர்ந்து, பாழடைந்து சீரழிந்த தரையையும், பல தூண்களையுமுடைய மன்றத்தின் ஒருபக்கத்தை படுக்கையிடமாகக் கொண்டு, முரசு போன்ற அடிப்பக்கத்தையுடைய பனைமரத்தின் அரத்தின் வாய் போன்ற கருக்கையுடைய பெரிய மட்டையிலிருந்து எடுத்த நாரையும் குருத்தையும் கிணைப்பறையுடன் சேர்த்துக் கட்டி, உழவர்களின் குடியிருப்பை அடைந்து, முறையே அவர்கள் அளிக்கும் உணவை இரந்து உண்ணும் வருத்தத்துடன் கூடிய  வாழ்வையுடைய எம்மைப் பாதுகாக்கும் சான்றோர் எவருளர் என்று எண்ணினேன். தேன்கூடுகள் தொங்குகின்ற, புதுவருவாய் குறையாத மலைசார்ந்த தோட்டங்களையுடைய நல்ல நாட்டின் தலைவனே!    பொய்யாத வள்ளன்மையும் கழலவிடப்பட்ட தொடியையுமுடைய ஆய் அண்டிரனே! நாங்கள் கிணைப்பறையைக் கொட்டிப் புகழ்ந்து பாடினால் எங்களைப் பாதுகாப்போர் எவரும் இல்லாததால், இருந்த இடத்ததே இருந்து வறுமையை நினைத்து வருந்தாமல், நீரைப் பெறுவதற்காக மேகம் கடலை நோக்கிச் செல்வது போல், நானும் ஒப்பற்ற உன்னை நினைத்து வந்தேன். அதனால், புலவர்களுக்குப் புகலிடமாகி, இவ்வுலகம் உள்ளளவும் நீ நிலைபெற்று வாழ்வாயாக. ஒன்று, நீ இல்லாததால் வெறுமையாகும் இவ்வுலகில் புலவர் இல்லாமல் போவாராக. அல்லது, நெருங்கிச் சென்று பல சொற்களால் எடுத்துரைத்தாலும், சிறிதளவும் அவற்றை உணரக்கூடிய திறமை இல்லாத, பெருஞ்செல்வத்தையுடைய மன்னர்களை எம்மைப் போன்ற புலவர்கள் பாடாது ஒழிவாராக. 

374. அண்டிரன் போல்வையோ ஞாயிறு?


374. அண்டிரன் போல்வையோ ஞாயிறு?

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 13-இல் காண்க.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 127-இல் காண்க.
பாடலின் பின்னணி: இப்பாடலில், புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், ஞாயிறைப் பார்த்து, ’ வானத்தில் வெறிதே செல்லும் ஞாயிறே! நீ ஆய் அண்டிரனைப் போல வள்ளன்மை உடையவனா?’ என்று கேட்கிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: பூவை நிலை.  மனிதரைத் தேவரோடு உவமித்துக் கூறுதல்.

கானம் மேய்ந்து வியன்புலத்து அல்கும்
புல்வாய் இரலை நெற்றி அன்ன
பொலம்இலங்கு சென்னிய பாறுமயிர் அவியத்
தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர்
மன்றப் பலவின் மால்அரைப் பொருந்திஎன் 5

தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி
இருங்கலை ஓர்ப்ப இசைஇக் காண்வரக்
கருங்கோற் குறிஞ்சி அடுக்கம் பாடப்
புலிப்பல் தாலிப் புன்றலைச் சிறாஅர்
மான்கண் மகளிர்க்கு ஆன்றோர் அகன்துறைச்       10

சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங்குறை
விடர்முகை அடுக்கத்துச் சினைமுதிர் சாந்தம்
புகர்முக வேழத்து மருப்பொடு மூன்றும்
இருங்கேழ் வயப்புலி வரிஅதள் குவைஇ
விருந்துஇறை நல்கும் நாடன் எங்கோன்                15

கழல்தொடி ஆஅய் அண்டிரன் போல
வண்மையும் உடையையோ? ஞாயிறு!
கொன்விளங் குதியால் விசும்பி னானே.


அருஞ்சொற்பொருள்: 1. அல்கும் = தங்கும். 2. புல்வாய் = கலைமான் (ஒருவகை மான்); இரலை = ஆண்மான். 3. சென்னி = தலை; பாறுதல் = சிதறுதல்; அவிதல் = தணிதல், ஒடுங்குதல். 4. உறைதல் = ஒழுகுதல், பெய்தல்; ஞாங்கர் = பக்கம், இடம். 5. மால் = பெருமை; அரை = மரஅத்தின் அடிப்பக்கம். 6. தெளிர்ப்ப = ஒலிக்குமாறு; ஒற்றி = அடித்து. 7. இரு = பெரிய; கலை = ஆண்மான்; ஓர்த்தல் = கூர்ந்து கேட்டல்; இசைஇ = இசைத்து; காண்வர = அழகு உண்டாக. 8. கோல் = மரக்கொம்பு; குறிஞ்சி = குறிஞ்சி மரம்; அடுக்கம் = அடுக்காக அமைந்த மலை. 11. சிலை = வில்; முளவுமான் = முள்ளம்பன்றி; குறை = தசை. 12, விடர் = மலைப்பிளவு; முகை = குகை; சினை = கிளை; சாந்தம் = சந்தனம். 13. புகர் = புள்ளி; மருப்பு = கொம்பு. 14. இரு = கரிய; கேழ் = நிறம்; வயம் = வலி; அதள் = தோல்; குவைஇ = குவித்து. 15. இறை = கடமை. 16. தொடி = கையில் அணியும் அணி. 18. கொன் = பயனின்மை.

கொண்டு கூட்டு: தண்பனி உறைக்கும் ஞாங்கர், பொருந்தி, தெளிர்ப்ப ஒற்றி, பாட, ஆன்றோர் கொழுங்குறையும், சாந்தமும், மருப்பும் என்ற மூன்றும் குவைஇ,
விருந்திறை நல்கும் நாடன், எங்கோன் அண்டிரன் போல, விளங்குதியாகலின், வண்மையும் உடையையோ கூறுக எனக் கூட்டுக.

உரை: காட்டில் மேய்ந்த பிறகு, அகன்ற இடத்தில் தங்கும் புல்வாய் என்னும் மானினத்தைச் சேர்ந்த ஆண்மானின் நெற்றிமயிர் போலப், பொற்றாமரை விளங்கும் என் தலையிலுள்ள தலைமயிர் சிதறிப் பரந்து கிடந்தது. அப்படிக் கலைந்திருந்த என் தலைமுடி அடங்கிப் படியுமாறு, பொழுது புலராத விடியற்காலத்தில் குளிர்ந்த பனித்துளிகள் விழுந்தன. அந்நேரத்தில், ஊர்ப்பொதுவிடத்தில், பெரிய பலாமரத்தின் அடியில் இருந்து, என்னுடைய தெளிர்ந்த கண்ணையுடைய பெரிய கிணைப்பறையை நன்கு ஒலிக்குமாறு கொட்டி, கரிய தண்டினையுடைய குறிஞ்சிமரங்கள் நிறைந்த மலைப்பக்கத்தில் அழகாகப் பாடினேன். பெரிய கலைமான்கள் என் பாட்டைச் செவிசாய்த்துக் கேட்டன. புலிப்பல் கோத்த தாலியை அணிந்த சிறுவர்களைப் பெற்ற, மானின் கண்களைப் போன்ற கண்களையுடைய மகளிரின் கணவர், அகன்ற நீர்த்துறையில் தம் வில்லால் கொன்ற முள்ளம்பன்றியின் கொழுவிய தசைத்துண்டுகள், மலைப்பிளவுகளையும் குகைகளையுமுடைய மலைப்பக்கத்தில் பெரிய கிளைகளுடன் கூடிய சந்தனமரக்கட்டை, புள்ளிகள் பொருந்திய முகமுடைய யானையின் தந்தம் ஆகிய மூன்றையும், வலிய புலியின் கரிய நிறக்கோடு அமைந்த தோலில் குவித்து விருந்தினர்க்கு அளிப்பார்கள். எங்கள் மன்னன், கழலவிடப்பட்ட தொடியை அணிந்த ஆய் அண்டிரன் அத்தகைய நாட்டிற்குத் தலைவன்.  ஞாயிறே, நீ வானில் வெறிதே செல்கின்றாயே!  நீ அவனைப் போல வள்ளல் தன்மை உடையவனா?     

373. நின்னோர் அன்னோர் இலரே!


373. நின்னோர் அன்னோர் இலரே!

பாடியவர்: கோவூர் கிழார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 31-ல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத்  துஞ்சிய கிள்ளி வளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-ல் காண்க.
பாடலின் பின்னணி: கிள்ளி வளவன் கொங்கரோடு போர் புரிந்து பொழுது, முரசுகள்
இடிபோல் முழங்கின; யானைகள் மேகங்கள் போல் காட்சி அளித்தன; தேர்களும் குதிரைகளும் சிதைந்து விழுந்தன. கொங்கர் புறமுதுகிட்டு ஓடினர். அவ்வாறே, அவன் குடநாட்டு வஞ்சியிலும் போர் புரிந்து வெற்றி பெற்றான். அவனைப் போர்க்களத்தில் கண்டு, அவன் புகழைப் பாடி பரிசு பெறலாம் என்று பொருநன் ஒருவன் வந்தான். ‘என் முன்னோராகிய பொருநர் பலர், வேந்தர்களுடைய போர்க்களங்களுக்குச் சென்று அவர்களைப் புகழ்ந்து பாடிப் பரிசு பெற்றதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். உன்னைப் போல் வேந்தர் வேறு யாரும் இல்லாததால் உன்னைப் பாடிப் பரிசு பெறலாம் என்று வந்தேன்.’ என்று அப்பொருநன் கூறுவதாக இப்பாடலை கோவூர் கிழார் இயற்றியுள்ளார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை: மறக்கள வழி: அரசனை உழவுத் தொழில் புரியும் வேளாளனோடு ஒப்பிட்டுக் கூறுதல்.
துறை: ஏர்க்கள உருவகம்:  போர்க்களச் செயல்களை ஏர்க்களச் செயல்களாக உருவகப்படுத்திக் கூறுதல்.


உருமிசை முரசம் முழக்கென இசைப்பச்
செருநவில் வேழம் கொண்மூ ஆகத்
தேர்மா அழிதுளி தலைஇ நாம்உறக்
கணைக்காற் றெடுத்த கண்ணகன் பாசறை
இழிதரு குருதியொடு ஏந்திய ஒள்வாள்                  5

பிழிவது போலப் பிட்டைஊறு உவப்ப
மைந்தர் ஆடிய மயங்குபெருந் தானைக்
கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே!
. . . . . . .  . . . . . . தண்டா மாப்பொறி
மடக்கண் மயில்இயன்று மறலி யாங்கு                   10

நெடுங்சுவர் நல்லில் புலம்பக் கடைகழிந்து
மென்தோள் மகளிர் மன்றம் பேணார்
புண்ணுவந்து. . . . . . . . . . . . .
. . . .. .  உளையணிப் புரவி வாழ்கெனச்
சொல்நிழல் இன்மையின் நின்னிழல் சேர              15

நுண்பூண் மார்பின் புன்றலைச் சிறாஅர்
அம்பழி பொழுதில் தமர்முகம் காணா
. . . . . .  . .  . . . வாளில் தாக்கான்
வேந்துபுறங் கொடுத்த வீய்ந்துகு பறந்தலை
மாட மயங்கெரி மண்டிக் கோடிறுபு             20

உரும்எறி மலையின் இருநிலம் சேரச்
சென்றோன் மன்ற கொலைவன் சென்றெறி
வெம்புண் அறிநர் கண்டுகண் அலைப்ப
வஞ்சி முற்றம் வயக்கள னாக
அஞ்சா மறவர் ஆட்போர்பு அழித்துக்           25

கொண்டனை பெரும! குடபுலத்து அதரி
பொலிக அத்தைநின் பணைதயங்கு வியன்களம்
விளங்குதிணை வேந்தர் களந்தொறுஞ் சென்று
புகர்முக முகவை பொலிகென் றேத்திக்
கொண்டனர் என்ப பெரியோர்; யானும்                30

அங்கண் மாக்கிணை அதிர ஒற்ற
முற்றிலேன் ஆயினுங் காதலின் ஏத்தி
நின்னோர் அன்னோர் பிறரிவண் இன்மையின்
மன்னெயில் முகவைக்கு வந்திசின் பெரும!
பகைவர் புகழ்ந்த ஆண்மை நகைவர்க்குத்              35

தாவின்று உதவும் பண்பின் பேயொடு
கணநரி திரிதரும் ஆங்கண் நிணன்அருந்து
செஞ்செவி எருவை குழீஇ
அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே!


அருஞ்சொற்பொருள்: 1. உரும் = இடி; இசை = ஓசை. 2. செரு = போர்; நவிலல் = பழகுதல்; கொண்மூ = மேகம்; 3. மா = குதிரை; தலைஇ = பெய்து; நாம் = அச்சம். 4. கால் = காற்று; கண் = இடம்; பாசறை = பகை மேற் சென்றோர் உறைவிடம். 5. இழிதல் = விழுதல். 6. பிட்டை = பிளவு பட்டது; பிட்டை ஊறு = பிளவுபட்ட புண்; உவத்தல் = விரும்பல். 7. ஆடுதல் = போரிடுதல்; மயங்குதல் = கலத்தல். 9. தண்டா = குறையாத; மா = பெரிய; பொறி = புள்ளி.10. மடம் = அழகு, மென்மை; இயலல் = அசைதல்; நடத்தல்; மறலுதல் = மாறுபடுதல். 11. புலம்பு = தனிமை; கடை கழிந்து = அங்கிருந்து அகன்று சென்று. 12. மன்றம் = பொதுவிடம், போர்க்களப் பரப்பின் நடுவிடம்; பேணல் = விரும்பல். 14. உளை = குதிரையின் பிடரி மயிர்; உளையணி = குதிரைகளின் தலையில் சூட்டப்படும் அணி (தலையாட்டம்). 15. சொல் நிழல் = குறையைச் சொல்லி ஆதரவு பெறும் இடம். 17. தமர் = உறவோர். 19. வீய்ந்து = அழிந்து; உகுதல் = கெடுதல்; பறந்தலை = போர்க்களம்; வீய்ந்துகு பறந்தலை = அழிந்து கெட்ட போர்க்களம். 20. மண்டல் = நெருங்கல்; கோடு = கொம்பு; இறுதல் = முறிதல், ஒடிதல். 21. உரும் = இடி. 22. மன்ற = தெளிவாக; எறிதல் = முறித்தல், மோதுதல் (தாக்குதல்) கொலைவன் = கொலை செய்பவன். 23. அலைத்தல் = வருத்துதல்.  24. முற்றம் = வீட்டு முன்னிடம், பரப்பு (இடவிரிவு); வயக்களன் = போர்க்களம். 25. போர்பு = வைக்கோற்போர்; ஆட்போர்பு = ஆள்+போர்பு = வைக்கோற்போர் போன்ற பிணக் குவியல். 26. குடபுலம் = குடநாடு; அதரி கொள்ளுதல் = நெற்கதிரை கடாவிட்டுழக்குதல். 27. அத்தை - முன்னிலை அசைச்சொல். 27. பணை = முரசு; தயங்கல் = அசைதல். 28. திணை = குடி. 29. முகவை = முகந்து கொள்ளுதல், பரிசுப்பொருள். 34. மன் = அரசன்; எயில் = ஊர், மதில்.  35. நகைவர் = நண்பர்; தா = குறைவு. 37. கணம் = கூட்டம். 38. எருவை = கழுகு; குழீஇ = கூடி. 39. கிழமை = உரிமை.
கொண்டு கூட்டு: கொங்கு புறம்பெற்ற வேந்தே, வஞ்சி முற்றம் வயக்களனாக, குடபுலத்து அதரி கொண்டனை; பெரும, கொண்டனரென்ப பெரியோர்; யானும் முற்றிலனாயினும் ஒற்றி ஏத்தி, இன்மையின் முகவைக்கு வந்திசின்; பெரும, ஆண்மையும் பண்பும் கொண்டு களம் கிழமை பெற்றோய் எனக் கூட்டுக.

உரை: உன்னுடைய இடமகன்ற பாசறையில், இடியின் ஓசையைப் போல் முரசு ஒலித்தது.  போரில் பயிற்சி பெற்ற யானைகள் மேகங்கள் போல் காட்சி அளித்தன. தேர், குதிரை ஆகியவை அழிந்ததால், அவற்றினிருந்து சிதைந்த தூள்கள் மழைத் துளிகள் போல் வீழ்ந்தன. போர்க்களத்தில் எய்யப்பட்ட அச்சம்தரும் அம்புகள் காற்றுப் போல் பறந்தன.   சொரியும் குருதியோடு கையிலேந்திய ஒளிபொருந்திய வாள்களால் உடலைப் பிழிந்து எடுப்பதற்குப் பிளந்ததுபோல் பகைவரைப் பிளத்தலால் உண்டாகிய புண்களைக் கண்டு உன் படைவீரர்கள் மகிழ்ந்தனர். போர் செய்வதை விரும்பித் திரண்ட பெரும்படையால் கொங்கு நாட்டவரைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்த வெற்றியையுடைய வேந்தனே!

பெரிய புள்ளிகளையும், அழகிய கண்களையுமுடைய மயில்கள் அங்கும் இங்கும் நடப்பது போல், மெல்லிய தோள்களையுடைய மகளிர் நெடுஞ்சுவர்களையுடைய தங்கள் வீடுகளை விட்டு அகன்று சென்று, ஊர் மன்றத்தை நெருங்காமல், தங்கள் கணவர் போரிற் பெற்ற விழுப்புண்ணைக் காண விரும்பி ……….  தலையாட்டம் அணிந்த குதிரைகளை வாழ்க என வாழ்த்தி, தங்கள் குறைகளைச்  சொல்லி ஆதரவு பெறுவதற்கு யாரும் இல்லாததால், உன்னிடம் வந்தனர். நுண்ணிய அணிகலன்களை மார்பில் அணிந்த சிறுவர்கள் தம்மிடமிருந்த அம்புகள் எல்லாம் தீர்ந்து போனதால் தமக்கு அவற்றைச் செய்து தரும் உறவினர்களைக் காணதவராய் …..

உன்னை எதிர்த்துப் போரிட்ட அரசன் புறமுதுகிட்டு ஓடியதால் போர்க்களம் அழிந்து கெட்டது. அங்கே, பகைவரின் படைத்தலைவன் ஒருவன், பெரிய மாடங்களைப் பற்றி எரிக்கும் தீப்போல உன் படையை நெருங்கி, உன்னுடைய யானை ஒன்றைத் தாக்கினான். இடியால் தாக்கப்பட்டு விழும் எரிமலை போல அதன் கொம்புகள் ஒடிந்து நிலத்தில் விழுந்த அந்த யானை இறந்தது. வெற்றியோடு சென்ற அந்தப் படைத்தலைவன் உறுதியாகக் கொலை செய்வதில் வல்லவன். உன் படைவீரர்கள், அந்தத் தலைவன் மேற்சென்று அவனைத் தாக்கும் பொழுது உண்டாகிய புண்ணைக்கண்டு அதற்கு மருந்திட்டு ஆற்றுவோரும், தம் கண்களால் அப்புண்ணைக் காண்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவரும் வருந்தினர். வஞ்சி மாநகரத்தின் மன்றம் உனக்கு வெற்றி பொருந்திய போர்க்களமாக மாறியது. அஞ்சாத வீரர்களின் பிணகுவியல்களை நீ குடநாட்டில் கடாவிட்டு அழித்தாய். உன்னுடைய முரசு முழங்கும் பெரிய போர்க்களம் விளங்குவதாக.

வெற்றி பெற்ற வேந்தர்களின் போர்க்களம் தோறும் சென்று, மேலும் வெற்றியுடன் விளங்குக என்று பாராட்டிப் புகழ்ந்து, புள்ளிகள் பொருந்திய முகத்தையுடைய யானையைப் பரிசாகப் பெற்றதாகப் பெரியோர் கூறுவர்.  உன்னைப் போன்றவர் வேறு எவரும் இல்லாததால், அழகிய கண்ணையுடைய தடாரிப் பறையை அதிருமாறு அடித்து, இசையறிவில் முதிர்ச்சி பெறாதவனாக இருந்தாலும், நான் உன்னை அன்புடன் வாழ்த்தி, பெருமானே, நீ பகைமன்னர்களிடமிருந்து பெற்ற பொருளைப் பெறலாம் என்று வந்தேன்.  நீ பகைவர் புகழும் ஆண்மையும், நண்பர்களுக்குக் குறைவின்றி உதவும் பண்பும் உடையவன்.  பேய்க் கூட்டமும் நரிக் கூட்டமும் திரியும் அவ்விடத்தில், ஊன் தின்னும் சிவந்த காதுகளையுடைய கழுகுகள் கூடிக் காண்பவர்க்கு அச்சத்தை உண்டாக்கும் இடமாகிய போர்க்களத்தை உரிமையாக உடையவனே!

372. ஆரம் முகக்குவம் எனவே!


372. ஆரம் முகக்குவம் எனவே!

பாடியவர்: மாங்குடி கிழார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 24-இல் காண்க.
பாடப்பட்டோன்: தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 18-இல் காண்க.
பாடலின் பின்னணி: தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் போரில் வெற்றிபெற்ற பிறகு மறக்களவேள்வி செய்தான். அந்த வேள்விக்குப் பலரும் வந்திருந்தனர். புலவர் மாங்குடி கிழாரும் வந்திருந்தார்.  அங்குப் பொருநன் ஒருவன்,’வேந்தே!, நான் என் தடாரிப் பறையைக் கொட்டிக்கொண்டு உன் புகழைப் பாடிவந்ததெல்லாம் நீ அளிக்கும் முத்து மாலையைப் பெறலாம் என்பதற்காகவே!’ என்று தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை நோக்கிக் கூறினான். அந்தக் காட்சியைப் புலவர் மாங்குடி கிழார் இப்பாடலாக இயற்றியுள்ளார். 

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை: மறக்கள வேள்வி. பேய்கள் உண்ணுமாறு களவேள்வி செய்தல்.

விசிபிணித் தடாரி இம்மென ஒற்றி
ஏத்தி வந்த தெல்லாம் முழுத்த
இலங்குவாள் அவிரொளி வலம்பட மின்னிக்
கணைத்துளி பொழிந்த கண்கூடு பாசறைப்
பொருந்தாத் தெவ்வர் அருந்தலை அடுப்பில்          5

கூவிள விறகின் ஆக்குவரி நுடங்க
ஆனா மண்டை வன்னியந் துடுப்பின்
ஈனா வேண்மாள் இடந்துழந்து அட்ட
மாமறு பிண்டம் வாலுவன் ஏந்த
வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம்                        10

வெவ்வாய்ப் பெய்த புதுநீர் சால்கெனப்
புலவுக்களம் பொலிய வேட்டோய்நின்
நிலவுத்திகழ் ஆரம் முகக்குவம் எனவே.

அருஞ்சொற்பொருள்: 1. விசித்தல் = இறுகக் கட்டுதல்; இம் – ஒலிக் குறிப்பு; ஒற்றி = அறைந்து. 2. ஏத்துதல் = புகழ்தல், உயர்த்திக் கூறுதல்; முழுத்த = குறைவின்றி (முழுதும்). 3. இலங்குதல் = விளங்குதல், அவிர் = ஒளி; வலம் = வெற்றி. 4. கணை = அம்பு.; கண்கூடு = நெருக்கம்; இடம் நிறைந்த.  5. தெவ்வர் = பகைவர். 6. கூவிளம் = ஓரு வகை மரம்; வரி – வரிகளையுடைய குடலைக் குறிக்கிறது; நுடங்குதல் = துவளல் 7. ஆனா = பொருந்தாத; வன்னி = ஒரு வகை மரம். 8. ஈனா = குழந்தைகளைப் பெற்றெடுக்காத; வேண்மாள் = வேளிர்குலப்பெண்; இடத்தல் = தோண்டுதல்; உழத்தல் = புரளல் (துழாவல்); இடந்துழந்து = தோண்டித் துழாவி.  9. மா = விலங்கு; பிண்டம் = உணவு; வாலுவன் = சமைப்போன்; ஏந்தல் = நீட்டல். 10. வதுவை = திருமணம். 11. வெவ்வாய் = சூடான வாய்; சாலுதல் = நிறைதல், அமைதல், பொருந்துதல். 12. புலவு = புலால்; வேட்டோய் = வேள்வி செய்தவனே.  13. ஆரம் = மாலை; முகத்தல் = நிரம்பப் பெறுதல்.

கொண்டு கூட்டு: தடாரி ஒற்றி ஏத்தி வந்ததெல்லாம், வேட்டோய், நின் ஆரம் முகக்குவம் எனவே எனக் கூட்டுக.

உரை: குறைவின்றி விளங்கும் வாளினுடைய மிகுந்த ஒளி வெற்றியை உண்டாக்குவதற்கு மின்னலைப் போல் மின்னி, அம்புகள் மழை போலப் பொழிய, இடம் நிறைந்த பாசறையில் வீற்றிக்கும் வேந்தே! மனம் பொருந்தாத பகைவர்களின் அரிய தலைகளை அடுப்பாகவும், கூவிளமரத்தின் கட்டைகளை விறகாகவும் வைத்து எரித்து ஆக்கப்படும் கூழில், மண்டையோட்டை அகப்பையாகவும், வன்னிமரத்தின் கொம்பை அகப்பையின் காம்பாகவும் கொண்டு, வரிகளையுடைய குடல்கள் நெளியுமாறு, வேளிர்குல மகள் ஒருத்தி சமைத்தாள். அவள் தோண்டித் துழாவிச் சமைத்த உணவு, விலங்குகள்கூட உண்ண மறுக்கும் தன்மையதாக இருந்தது.  அவள் சமைத்த உணவை வேலுவன் (சமையல்காரன்) ஒருவன் எடுத்து கொற்றவைக்குப் படைப்பதற்காக எடுத்து உயர்த்திக் காட்டி, திருமண விழாவில் தெளிப்பது போல் வந்தவர் மீதெல்லாம், ’கலயத்தின் சூடான வாயிலிருந்து வந்த புதுநீர் அமைவதாக.’ என்று தெளித்துப் புலால் நாறும் போர்க்களம் விளங்க மறக்கள வேள்வி செய்தவனே!  இறுகக் கட்டப்பட்ட தடாரிப் பறையை இம்மென ஒலிக்கும்படி அறைந்து, உன்னைப் பாராட்டிப் பாடி வந்ததற்கெல்லாம் காரணம் உன்னுடைய, நிலவுபோல் ஓளியுடன் திகழும் மாலையைப் பெறலாம் என்பதே.