Monday, August 10, 2009

96. அவன் செல்லும் ஊர்!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் அதியமான் பொகுட்டெழினி. இவன் கொடைச் சிறப்பும் வெற்றிச் சிறப்பும் உடையவன். இவனைப் புகழ்ந்து அவ்வையார் இயற்றிய மூன்று (96, 102, 392) பாடல்கள் புறநானூற்றில் உள்ளன.

பாடலின் பின்னணி: அவ்வையார் பொகுட்டெழினியிடம் மிகுந்த அன்பு உடையவர். அவன் அழகிலும் வலிமையிலும் சிறந்தவன். அவனுடைய அழகாலும் வலிமையாலும் அவனுக்குத் தீங்கு வரக்கூடும் என்ற கருத்தை இப்பாடலில் அவ்வையார் கூறுகிறார்.

திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்
திரண்டுநீடு தடக்கை என்ஐ இளையோற்கு
இரண்டு எழுந்தனவால் பகையே; ஒன்றே,
பூப்போல் உண்கண் பசந்து தோள் நுணுகி
5 நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றோ
‘விழவுஇன்று ஆயினும், படுபதம் பிழையாது
மைஊன் மொசித்த ஒக்கலொடு துறைநீர்க்
கைமான் கொள்ளுமோ?’ என
உறையுள் முனியும்அவன் செல்லும் ஊரே.

அருஞ்சொற்பொருள்:
1. அலர்தல் = மலர்தல்; அம் = அழகு; பகடு = வலிமை, பெருமை (அகன்ற). 2. தடக்கை = பெரிய கை. 4. நுணுகுதல் = மெலிதல். 6. படு - மிகுதிக் குறிப்பு; பதம் = உணவு. 7. மை = செம்மறி ஆடு; ஊன் =தசை, புலால்; மொசித்தல் = உண்ணல்; ஒக்கல் = சுற்றம். 8. கைம்மான் = கைமான் = யானை. 9. உறையுள் = இருப்பிடம்; முனிதல் = வெறுத்தல்.

கொண்டு கூட்டு: என் ஐ இளையோர்க்கு பகை இரண்டு எழுந்தன; ஒன்று, மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றோ துறைநீர்க் கைமான் கொள்ளுமோ என உறையுள் முனியும் அவன் செல்லும் உரே எனக் கூட்டுக.

உரை: மலர்ந்த தும்பைப் பூவாலான மாலையை அணிந்த அழகிய அகன்ற மார்பினையும், திரண்டு நீண்ட பெரிய கையையும் உடைய என் தலைவன் அதியமானின் மகனுக்கு இரண்டு பகைகள் தோன்றி உள்ளன. ஒன்று, பூப்போன்ற, மைதீட்டிய கண்கள் பசந்து, தோள்கள் மெலிந்த பெண்கள் காதல் நோயால் இவன் மீது கொண்ட சினம். மற்றொன்று, விழா இல்லையாயினும், தவறாது மிகுந்த அளவில் ஆட்டுக்கறியை உண்ட சுற்றத்தினரோடு இவன் வேறு வேறு ஊர்களுக்குச் செல்லும் பொழுது அங்குள்ள மக்கள், இவன் யானைகள் அவர்களுடைய நீர்த்துறைகளில் இறங்கி அங்குள்ள நீரை எல்லாம் குடித்துவிடுமோ என்று அவர்கள் கொண்ட வெறுப்பு. இவை இரண்டும் இவனுக்குப் பகையாகும்.

சிறப்புக் குறிப்பு: பொகுட்டெழினியின் அழகிலும் இளமையிலும் மயங்கிய பெண்கள் அவன் மீது காதல் கொண்டு தங்கள் காதல் நிறைவேராததால் அவன் மீது கோபம் கொள்கிறார்கள். மற்றும், அவன் தன் படையுடன் வேறு வேறு ஊர்களுக்குச் செல்லும் பொழுது அங்குள்ள மக்கள் அவன் யானைகள் தங்கள் குளங்களைப் பாழ் செய்துவிடுமோ என்று அவன் மீது வெறுப்படைகிறார்கள். இந்த இரண்டு காரணங்களால் அவனுக்குப் பெண்களும் அவன் செல்லும் ஊரில் உள்ள மக்களும் பகைவர்கள் என்று கூறி, அவ்வையார் பொகுட்டெழினியின் அழகையும் வெற்றிகளையும் பாராட்டுகிறார்.

No comments: