Monday, August 10, 2009

92. மழலையும் பெருமையும்!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.

பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: அதியமான் அவ்வையார்க்கு அரிய நெல்லிக்கனியை அளித்ததால், அவர் மனம் மகிழ்ந்து, நாக்குழறிப் பலவாறாக அவனைப் புகழ்கிறார். அவற்றை அதியமான் அன்போடு கேட்கிறான். அந்நிலையில், அவன் அன்பை வியந்து அவ்வையார் இப்பாடலை இயற்றுகிறார்.

திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;
பொருள்அறி வாரா; ஆயினும், தந்தையர்க்கு
அருள்வந் தனவால் புதல்வர்தம் மழலை;
என்வாய்ச் சொல்லும் அன்ன; ஒன்னார்
5 கடிமதில் அரண்பல கடந்த
நெடுமான் அஞ்சி! நீஅருளல் மாறே.

அருஞ்சொற்பொருள்:
1. கொள்ளுதல் = ஏற்றுக் கொள்ளுதல்; புணர்தல் = பொருந்துதல். 2. அறிவரா = அறிய வாரா. 5. கடி = காவல்; கடத்தல் = வெல்லுதல். 6. மாறு = ஆல்

கொண்டு கூட்டு: புதல்வர் மழலை தந்தையர்க்கு அருள் வந்தன; அஞ்சி, நீ அருளுதலால் என் வாய்ச்சொல்லும் அன்ன எனக் கூட்டுக.

உரை: குழந்தைகளின் மழலை யாழிசையோடும் ஒத்து வராது; தாளத்தோடும் பொருந்தாது; பொருள் அறிவதற்கும் முடியாது. அது அவ்வாறு இருப்பினும், தந்தையர்க்கு அம்மழலைச் சொற்கள் குழந்தைகள் மீது அன்பை வரவழைக்கின்றன. பகைவர்களுடைய காவல் மதில்களையும் பல அரண்களையும் வென்ற அதியமான் நெடுமான் அஞ்சியே! என் சொற்களைக் கேட்டு நீ என்னிடம் அன்பு காட்டுவதால், என் சொற்களும் குழந்தைகளின் மழலைச் சொற்கள் போன்றனவே.

சிறப்புக் குறிப்பு: இப்பாடலில் அவ்வையார் மழலைச் சொற்களின் சிறப்பைக் கூறுவதைப்போல் திருவள்ளுவர்,

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். (குறள் - 66)

என்று கூறுகிறார்.

No comments: