Monday, August 10, 2009

94. சிறுபிள்ளை பெருங்களிறு!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: அரசவையிலிருந்தாலும் போர்க்களத்திலிருந்தாலும் அவ்வையார்க்கும் அவர் போன்ற புலவர்களிடத்தும் அதியமான் இன்முகமும் இன்சொல்லும் உடையவனாக இருப்பதை வியந்து ” பெரும! நீ எமக்கு இனியவன்; ஆனால் உன் பகைவர்க்கு இன்னாதவன்” என்று அவ்வையார் இப்பாடலில் அதியமானைப் பாராட்டுகிறார்.

திணை: வாகை. வாகைப்பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தல்.
துறை: அரச வாகை. அரசனது வெற்றியைக் கூறுதல்.

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்,
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும எமக்கே; மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
5 இன்னாய் பெருமநின் ஒன்னா தோர்க்கே.

அருஞ்சொற்பொருள்:
1.குறு மாக்கள் = சிறுவர்கள்; கோடு = கொம்பு (தந்தம்); கழாஅல் = கழுவுதல். படிதல் = அமருதல் 4. துன்னுதல் = நெருங்குதல்; கடாம் = யானையின் மத நீர். 5. இன்னாய் = இனிமை இல்லாதவன்; ஒன்னாதோர் = பகைவர்

உரை: பெரும! ஊரில் உள்ள சிறுவர்கள் தனது வெண்மையான தந்தத்தைக் கழுவுவதற்கு நீர்த்துறையில் (பொறுமையாக) அமர்ந்து இருக்கும் பெரிய யானையைப் போல நீ எமக்கு இனிமையானவன். ஆனால், உன் பகைவர்க்கு, நீ நெருங்குதற்கு அரிய மதம் கொண்ட யானையைப் போல இன்னாதவன்.

No comments: