Wednesday, January 18, 2012

302. வேலின் அட்ட களிறு?

302. வேலின் அட்ட களிறு?

பாடியவர்: வெறிபாடிய காமக்காணியார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல்

271-இல் காண்க.
பாடலின் பின்னணி: குதிரையில் விரைந்து சென்று பகைவர்களையும் அவர்களுடைய யானைகளையும் அழிக்கும் வீரன் ஒருவனின் மறச்செயல்களை, இப்பாடலில் வெறிபாடிய காமக்காணியார் வியந்து பாடுகிறார்.

திணை: தும்பை. தும்பைப் பூவைச் சூடிப் பகைவரோடு போர் செய்தல்.

குதிரை மறம்: குதிரை வீரன் ஒருவனின் வீரத்தையோ அல்லது அவன் குதிரையின் வீரத்தையோ கூறுதல்.


வெடிவேய் கொள்வது போல ஓடித்
தாவுபு உகளும் மாவே; பூவே
விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட;
நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய
ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க் 5

கைவார் நரம்பின் பாணர்க்கு ஓக்கிய
நிரம்பா இயவின் கரம்பைச் சீறூர்;
நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி
வேலின் அட்ட களிறுபெயர்த்து எண்ணின்
விண்ணிவர் விசும்பின் மீனும் 10

தண்பெயல் உறையும் உறையாற் றாவே.

அருஞ்சொற்பொருள்: 1. வேய் = மூங்கில். 2. தாவுபு = தாவும்; மா = குதிரை; உகளுதல் = திரிதல். 3. விளங்குதல் = ஒளிர்தல். 4. நரந்தம் = மணம், நரந்தப் பூ; காழ் = முத்துவடம் (வடம்); கோதை = கூந்தல். 5. ஐது = மெல்லிது; பாணி = தாளம்; வணர் = வளைவு; கோடு = யாழின் தண்டு; சீறீயாழ் = சிறிய யாழ். 6. வார்தல் = யாழில் சுட்டு விரலால் செய்யும் தொழில்; ஓக்குதல் = தருதல். 7. நிரம்பு = மிகுதியாக; இயவு = வழி; நிரம்பா இயவு = குறுகிய வழி; கரம்பை =சாகுபடி செய்யக்கூடிய நிலம். செகுத்தல் = அழித்தல், கொல்லுதல். 9. அட்ட = கொன்ற. 10. இவர்தல் = செல்லுதல், உலாவுவுதல்; விசும்பு = ஆகாயம். 11. தண் = குளிர்ச்சி; பெயல் = மழை; உறை = மழைத்துளி; உறையாற்ற = அளவிட முடியாத.

கொண்டுகூட்டு: மா உகளும், பூ கூந்தற் கொண்ட; சீறூர் பாணர்க் கோக்கிய; காளை அட்ட களிறு எண்ணின் மீனும் உறையும் உறையாற்ற எனக் கூட்டுக.

உரை: வளைத்த மூங்கில் விடுபட்டதும் கிளர்ந்து எழுவது போலக் குதிரைகள் தாவி ஒடித் திரிந்தன. ஒளிரும் அணிகலன்களை அணிந்த விறலியரின் கூந்தலில் நரந்தம் பூவால் பலவடங்களாகத் தொடுக்கப்பட்ட மாலை சுற்றப்பட்டிருந்தது. அந்தக் கூந்தலில் பொன்னாலான பூக்கள் இடம் பெற்றன. மெல்லிய தாளத்திற்கேற்ப தம் கையால் யாழின் வளைந்த தண்டில் உள்ள நரம்புகளை மீட்டி இசையெழுப்பும் பாணர்களுக்குக் குறுகிய வழிகளையுடைய, சாகுபடி செய்யக் கூடிய நிலங்கள் உள்ள சிற்றூர்கள் வழங்கப்பட்டன. தன்னைப் பகைத்துப் பார்த்த பகைவரைக் கொல்லும் காளை போன்ற வீரன் ஒருவன் ஊக்கத்தோடு தன் வேலால் கொன்ற களிறுகளை ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்தால், மேகங்கள் பரந்து உலவும் ஆகாயத்திலுள்ள விண்மீன்களும் குளிர்ந்த மழைத்துளிகளும் அவற்றை அளவிடற்கு ஆகா. அதாவது, அவன் கொன்ற களிறுகளின் எண்ணிக்கை வானத்தில் உள்ள விண்மீன்களையும் குளிர்ந்த மழைத்துளிகளையும்விட அதிகம்.

No comments: