Monday, July 27, 2009

91. எமக்கு ஈத்தனையே!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.

பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளை பாடல் 87-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: ஒரு சமயம், அதியமான் வேட்டைக்குச் சென்றான். சென்றவிடத்து, ஒரு மலை உச்சியில் இருந்த நெல்லிமரத்தில் ஒரு அருங்கனி இருந்தது. அந்நெல்லிக்கனியை உண்பவர் நெடிது வாழ்வர் என்ற நம்பிக்கை நிலவி இருந்தது. அதியமான் அந்த அரிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாமல் அவ்வையார்க்கு அளித்து அவரை உண்பித்தான். அந்நெல்லிக்கனியை உண்பவர் நெடிது வாழ்வர் என்று தெரிந்திருந்தும், அக்கருத்தைத் தன்னுள் அடக்கி அக்கனியைத் தான் உண்ணாமல் தனக்கு அளித்ததைப் பாராட்டி, அவ்வையார் இப்பாடலில் அதியமானை வாழ்த்திப் பாடுகிறார்.

திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: வாழ்த்தியல். தலைவனை வாழ்த்துதல்

வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி
5 பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக, பெரும! நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
10 ஆதல் நின்னகத்து அடக்கிச்,
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே.

அருஞ்சொற்பொருள்:
1.வலம் = வெற்றி; வாய் = மெய்ம்மை, கூர்மை; ஒன்னார் = பகைவர். 2. தொடி = வளையல்; கடத்தல் = வெல்லுதல்; தடக்கை = பெரிய கை. 3. ஆர்கலி = மிகுந்த ஒலி, ஆரவாரம்; நறவு = கள். 4. பொலம் = பொன்; தார் = மாலை. 5. புரை = போன்ற; சென்னி = தலை; நுதல்= நெற்றி. 6. மிடறு = கழுத்து; ஒருவன் = கடவுள். 8. விடர் = மலைப்பிளப்பு, குகை; மிசை = உயர்ச்சி. 9. குறியாது = கருதாது. 10. ஆதல் = ஆவது.

கொண்டு கூட்டு: அதியர் கோமான்; அஞ்சி! நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் அகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே! மணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும!

உரை: வெற்றி மிகுந்த, குறி தவறாத வாளை எடுத்துப் பகைவர்களைப் போர்க்களத்தில் வென்ற கழலணிந்த காலும், வளையணிந்த பெரிய கையையும், அழன்ற கள்ளையும் உடைய அதியர் தலைவனே! பகைவர்களைப் போரில் வெல்வதால் பெறும் செல்வத்தையும் பொன் மாலையையும் உடைய அஞ்சியே! பழைய பெரிய மலைப்பிளவின்கண் அரிய உயரத்தில் இருந்த சிறிய இலையையுடைய நெல்லியின் இனிய கனியினால் விளையும் (சிறந்த) பயனைக் கூறாது தன்னுள் அடக்கிச் சாதல் நீங்க எனக்கு அளித்தாயே! நீ, பால் போன்ற பிறை நெற்றியிலே இருந்து அழகு செய்யும் தலையையும், நீலமணி போன்ற கறையுள்ள கழுத்தையும் உடைய கடவுள் (சிவன்) போல் நிலைபெற்று வாழ்க!

90. பொருநரும் உளரோ, நீ களம் புகினே?

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: ஒரு சமயம், பகைவர்கள் தன்னோடு போர் புரியக் கருதுகின்றனர் என்று அதியமானுக்குத் தெரிய வந்தது. போரின் விளைவுகளை அவன் சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவ்வையார், “ புலி சினந்தால் மான்கள் உயிர் தப்ப முடியுமா? ஞாயிறு சினந்தால் இருளும் உண்டோ? மிகுந்த பாரத்தைப் பெருமிதத்தோடு இழுத்துச் செல்லும் காளை போக முடியாத வழியும் உண்டோ? அது போல், நீ களம் புகுந்தால் உன்னை எதிர்த்துப் போரிடக் கூடிய பகைவரும் உளரோ?” என்று கூறி அதியமானை ஊக்குவிக்கிறார்.

திணை: தும்பை. பகைவரோடு போர் செய்வதற்கு ஆயத்தமாகும் பொழுது தும்பைப் பூவைச் சூடிக் கொள்ளல்.
துறை: தானை மறம். இருபடைகளும் வலிமையுடயவை என்பதால் அழிவு மிகுதியாகும் என்பதைக் கருதிப் போரைத் தவிர்க்கலாம் என்ற கருத்தைக் கூறுவது.

உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்
அடைமல்கு குளவியொடு கமழும் சாரல்
மறப்புலி உடலின், மான்கணம் உளவோ?
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
5 இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்?
அச்சொடு தாக்கிப் பாருற்று இயங்கிய
பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொலிய,
அரிமணல் ஞெமரக், கல்பக நடக்கும்
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ?
10 எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கை
வழுவில் வன்கை, மழவர் பெரும!
இருநில மண்கொண்டு சிலைக்கும்
பொருநரும் உளரோ, நீகளம் புகினே?

அருஞ்சொற்பொருள்:
1.உடைதல் = தகர்தல், பிளத்தல்; வளை = வளையல்; கடுப்பு = ஒப்பு; காந்தள் = வெண்காந்தள் ( ஒருவகைப் பூ). 2.அடை = இலை; மல்குதல் = நிறைதல், செழித்தல்; குளவி = காட்டு மல்லிகை; சாரல் = மலைப்பக்கம். 3.உடல்தல் = கோபங்கொள்ளுதல், பகைத்தல்; கணம் = கூட்டம். 4. மருளல் = மயங்குதல்; விசும்பு = ஆகாயம்; மாதிரம் = திசை; ஈண்டுதல் = நிறைதல் (சூழ்தல்). 6. பார் = நிலம்; இயங்கிய = புதைந்த. 7. சாகாடு = வண்டி; ஆழ்ச்சி = தாழ்ச்சி, பதிவு, அழுந்துகை; சொலிய = நீங்க, பெயர; 8. ஞெமிர்தல் = பரத்தல்; பக = பிரிய. 9. பகடு = காளைமாடு. 10. எழுமரம் = கணையமரம். 11. வழு = தவறு; மழவர் = வீரர். 12. இரு = பெரிய; சிலைத்தல் = ஒலித்தல், சினங்கொள்ளுதல்.

கொண்டு கூட்டு: “ பெரும, மறப்புலி உடலின் மான்கணம் உளவோ? ஞாயிறு சினவின் இருளும் உண்டோ? பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ? நீ களம் புகின் பொருநரும் உளரோ?” எனக் கூட்டுக

உரை: உடைந்த வளையல்களைப் போல் மலர்ந்த வெண்காந்தளும், இலைகள் நிறைந்த காட்டு மல்லிகையும் மணக்கும் மலைச்சரிவில் வலிய புலி தாக்கின் மான் கூட்டம் அங்கே எதிர்த்து நிற்குமோ? கதிரவன் சினந்தெழுந்தால், மயங்கிய ஆகாயத்திலும் மற்ற திசைகளிலும் இருள் சூழ்ந்து இருக்குமோ? பாரம் மிகுதியால் பண்டங்களைச் சுமந்து செல்லும் வண்டியின் அச்சு தரையில் இடித்துச் செல்லவும், நீரலைகளால் கொழிக்கப்பட்ட மணல் பரக்கவும் கல் பிளக்கவும் பெருமிதத்தோடு வண்டியை இழுத்துச் செல்ல வல்ல காளைக்குப் போக முடியாத வழியும் உண்டோ? முழந்தாள் வரை நீண்ட, கணையமரம் போன்ற, குற்றமற்ற வலிய கைகளையுடைய மழவர் தலைவனே! நீ போர்க்களம் புகுந்தால் உன் பெரிய நிலத்தை கவர்ந்து கொண்டு ஆரவாரம் செய்யக்கூடிய வீரரும் உளரோ?

சிறப்புக் குறிப்பு: “வளையுடந் தன்ன வள்ளிதழ்க் காந்தள்” என்று வேறு நூல்களிலும் (மலைபடுகடாம், 519)குறிப்பிடப்படுவதால், சங்க காலத்தில் வளையல்கள் சங்கு அல்லது முத்து போன்ற வெண்ணிறமான பொருட்களால் செய்யப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

89. என்னையும் உளனே!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.

பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: ஒருகால், அதியமானின் பகைவருள் ஒருவன் அவ்வையாரைப் பார்த்து, “ உங்கள் நாட்டில் போர் வீரர்கள் உளரோ” என்று கேட்டதற்கு, அவ்வையார், “எங்கள் நாட்டில் எறியும் கோலுக்கு அஞ்சாமல் சீறும் பாம்பைப் போல் வெகுண்டு எழும் வீரரும், போர்ப்பறைமேல் காற்று மோதினால் அந்த ஒலி கேட்டு போர் வந்துவிட்டது என்று பொங்கி எழும் அரசனும் உளன்” என்று பதிலளிப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: தும்பை. பகைவரோடு போர் செய்வதற்கு ஆயத்தமாகும் பொழுது தும்பைப் பூவைச் சூடிக் கொள்ளல்.

துறை: தானை மறம். இருபடைகளும் வலிமையுடயவை என்பதால் அழிவு மிகுதியாகும் என்பதைக் கருதிப் போரைத் தவிர்க்கலாம் என்ற கருத்தைக் கூறுவது.

இழை யணிப் பொலிந்த ஏந்துகோட்டு அல்குல்
மடவரல் உண்கண் வாள்நுதல் விறலி!
பொருநரும் உளரோ, நும் அகன்றலை நாட்டு? என,
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!
5 எறிகோல் அஞ்சா அரவின் அன்ன
சிறுவன் மள்ளரும் உளரே; அதாஅன்று
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளி பொரு தெண்கண் கேட்பின்,
10 அது போர்! என்னும் என்ஐயும் உளனே!

அருஞ்சொற்பொருள்:
1.இழைத்தல் = செய்தல், பதித்துச் செய்தல்; ஏந்து கோடு = உயர்ந்த பக்கம். 2.மடவரல் = இளம்பெண்; உண்கண் = மை தீட்டிய கண்; வாள் = ஒளி; நுதல் = நெற்றி; விறலி = உள்ளக் குறிப்பு புறத்தில் வெளிப்பட ஆடுபவள் (நாட்டியம் ஆடும் பெண்). 3. தலை = இடம். 6. வன் = வலிய. 7. விசி = கட்டு; தண்ணுமை = ஒருவகைப் பறை. 8.வளி = காற்று; தெண் = தெளிந்த; கண் = முரசு முதலியவற்றில் அடிக்கும் இடம்.

உரை: “மணிகள் கோத்த அணிகள் விளங்கும் (உயர்ந்த பக்கங்களையுடைய) இடையும், மை தீட்டிய கண்களும் ஓளிபொருந்திய நெற்றியும் கொண்ட நாட்டியம் ஆடும் வெகுளிப் பெண்ணே! அகன்ற இடங்களுடைய உங்கள் நாட்டில் போரிடும் வீரர்களும் உளரோ?” என்று என்னைக் கேட்ட போர்ப்படையுடன் கூடிய அரசே! எங்கள் நாட்டில், அடிக்கும் கோலுக்கு அஞ்சாத பாம்பு போல் வெகுண்டு எழும் இளமையும் வலிமையுமுடைய வீரர்கள் உள்ளனர். அவர்கள் மட்டுமல்லாமல், ஊர்ப்பொதுவில் கட்டித் தொங்கும் தண்ணுமைப் பறைமேல் காற்று மோதுவதால் உண்டாகும் ஒலி கேட்டு, “அது போர்ப்பறையின் முழக்கம்!” என்று பொங்கி எழும் என் அரசனும் உளன்.

88. எவருஞ் சொல்லாதீர்!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.

பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: அதியமான் அஞ்சியோடு போர் செய்ய அவனுடைய பகைவர்கள் முயற்சி செய்வதாக அவ்வையார் கேள்விப்பட்டார். அதைக் கேட்ட அவ்வையார் அவ்வரசர்களை, “அதியமானைக் காணும் முன் கூழைப்படையும் தார்ப்படையும் கொண்டு அதியமானோடு போர் செய்து அவனை வெல்வோம் என்ற எண்ணத்தைத் தவிருங்கள்:” என்று இப்பாடலில் எச்சரிக்கிறார்.

திணை: தும்பை. பகைவரோடு போர் செய்வதற்கு ஆயத்தமாகும் பொழுது தும்பைப் பூவைச் சூடிக் கொள்ளல்.
துறை: தானை மறம். இருபடைகளும் வலிமையுடயவை என்பதால் அழிவு மிகுதியாகும் என்பதைக் கருதிப் போரைத் தவிர்க்கலாம் என்ற கருத்தைக் கூறுவது.

யாவிர் ஆயினும், கூழை தார்கொண்டு
யாம்பொருதும் என்றல் ஓம்புமின்; ஓங்குதிறல்
ஒளிறுஇலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்,
கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்
5 விழவுமேம் பட்ட நற்போர்
முழவுத்தோள் என்ஐயைக் காணா ஊங்கே.

அருஞ்சொற்பொருள்:
1.கூழை = பிற்படை; தார் = முற்படை. 2. ஓம்புதல் = தவிர்தல்; திறல் = வலி. 3. இலங்கல் = விளங்கல்; மழவன் = வீரன்; பெருமகன் = அரசன். 4.அம் = அழகு; பகடு = பெரிய, அகன்ற. 6. காணா ஊங்கு = காண்பதற்கு முன்.

கொண்டு கூட்டு: என்னையைக் காணா ஊங்கு யாவிராயினும் பொருதும் என்றல் ஓம்புமின்.

உரை: அதியமான் ஓங்கிய வலிமையும் ஒளிவிட்டு விளங்கும் நீண்ட வேலையுமுடைய வீரர்களுக்குத் தலைவன். சுடர்விடும் நுண்ணிய வேலைப்பாடுகளுடைய அணிகலன்களை அணிந்த அழகிய அகன்ற மார்பும் போர்க்கள வெற்றி விழாக்களில் மேம்பட்ட நல்ல போர்முரசு போன்ற தோளையுமுடைய என் அரசனாகிய அவனைக் காண்பதற்கு முன்னே நீங்கள் எவராய் இருப்பினும் முற்படையும் பிற்படையும் கொண்டு யாம் போரிடுவோம் என்று கூறுவதைத் தவிருங்கள்.

87. எம்முளும் உளன்!

பாடியவர்: தமிழ் இலக்கிய வரலாற்றில் அவ்வையார் என்ற பெயரில் பெண்பாற் புலவர்கள் பலரைக் காண்கிறோம். சங்க காலத்தில் வாழ்ந்து, அதியமான் நெடுமான் அஞ்சியோடு நெருங்கிய நட்பு கொண்டு அவனைப் புகழ்ந்து பாடிய அவ்வையார் மற்ற அவ்வையார்களைவிடக் காலத்தால் முந்தியவர். இவர் புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை என்னும் எட்டுத்தொகை நூல்களில் 59 பாடல்களை இயற்றியவர். இவர் அதியமான், தொண்டைமான், நாஞ்சில் வள்ளுவன், சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, அதியமான் மகன் பொகுட்டெழினி என்னும் பல அரசர்களைப்பற்றிப் பாடிய 31 பாடல்கள் புறநானூற்றில் உள்ளன.

சங்க காலத்துப் புலவராகிய அவ்வையார்க்குப் பின்னர், நாயன்மார்கள் காலத்தில் (கி.பி. எட்டாம் நூற்றாண்டில்) அவ்வையார் ஒருவர் மிகுந்த சிவ பக்தியோடு வாழ்ந்ததாகவும் சிலர் கருதுகின்றனர்.

அடுத்து, மற்றுமொரு அவ்வையார் கம்பர் ஒட்டக்கூத்தர் போன்ற புலவர்கள் வாழ்ந்த காலத்தில் (கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில்) வாழ்ந்தவர். இவர், அக்காலத்துச் சோழ அரசனுடைய அவைக்களத்திலும், சிறு பகுதிகளை ஆண்ட தலைவர்களோடும் ஏழை எளியவர்களோடும் பழகியவர். இவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைச் சிறுவர்கள் கற்பதற்கு ஏற்ற எளிய நடையில் இயற்றியவர்.

அடுத்து, ஞானக்குறள் என்ற ஒரு நூல் அவ்வையார் என்ற ஒருவரால் இயற்றப்பட்டதாகத் தெரிகிறது. இந்நூலில், உயிரின் தன்மையையும் யோகநெறியையும் பற்றிய ஆழ்ந்த கருத்துகள் காணப்படுகின்றன. விநாயகர் அகவல் என்ற பக்திச் சுவை ததும்பும் நூல் அவ்வையார் என்ற ஒருவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர் ஞானக்குறள் எழுதிய அவ்வையார் அல்லாமல் வேறொருவராக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஆகவே, தமிழ் இலக்கிய வரலாற்றில் பல அவ்வையார்கள் காணப்பட்டாலும், சங்க காலத்து அவ்வையார் காலத்தால் முந்தியவர். அவர் பாடல்கள்தான் புறநானூற்றில் அடங்கி உள்ளன. அவ்வையார் என்ற பெயர் கொண்ட புலவர்களின் வரலாறு தனியே ஆய்வு செய்தற்குரியது.

பாடப்பட்டோன்: அதியமான், நெடுமான் அஞ்சி சேர நாட்டில் ஒரு பகுதியை ஆண்ட குறுநில மன்னன். இவன் அதியர் குலத்தைச் சார்ந்தவன் என்றும் மழவர் என்ற ஒரு கூட்டத்திற்குத் தலைவன் என்றும் கருதப்படுகிறான். அதியமான், சங்க காலத்தில் இருந்ததாகக் கருதப்படும் (கடையேழு) வள்ளல்களில் ஒருவன் என்று சிற்பாணாற்றுப்படை கூறுகிறது1. இவன் தகடூர் என்னும் ஊரைத் தன் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தான். இக்காலத்தில் தர்மபுரி என்று அழைக்கப்படும் ஊர் சங்க காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்டது.

அதியமான் தன் அவைக்களத்தே புலவராக இருந்த அவ்வையார் என்ற பெண்பாற் புலவரிடம் மிகுந்த நட்பும் அன்பும் உடையவனாக இருந்தான். அவ்வையார் புலவராக மட்டுமல்லாமல், அதியமனுக்குத் தூதுவராக மற்ற மன்னர்களிடம் சென்று அவர்களிடத்து அதியமானின் படைவலிமையையும் போர் செய்யும் ஆற்றலையும் எடுத்துரைத்து அவர்கள் அதியமானுடன் போர் செய்யாதிருக்குமாறு அறிவுரை கூறியாதாகப் புறநானூற்றுப் பாடல்கள் கூறுகின்றன. ஒரு சமயம், அதியமானுக்கு ஒரு அரிய நெல்லிக்கனி கிடைத்தது. அதை உண்பவர்கள் நீடித்து வாழமுடியும் என்ற கருத்து நிலவி இருந்தது. அந்நெல்லிக்கனியின் ஆற்றலை அறிந்திருந்தும், அதியமான் அதைத் தான் உண்ணாமல் அவ்வையாருக்கு அளித்து அவரை உண்பித்தான். அதியமான் கொடையிலும், வீரத்திலும், போர் செய்யும் ஆற்றலிலும் சிறந்தவன். பல போர்களில் வெற்றி பெற்றிருந்தாலும், சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேர மன்னனுடன் நடந்த போரில் அதியமான் தோல்வியுற்று இறந்தான். அதியமானின் காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

அவ்வையார் மற்றும் பரணர், பெருஞ்சித்திரனார், பொன்முடியார், அரிசில் கிழார் என்னும் புலவர்கள் அதியமானைப் புகழ்ந்து பாடிய 26 பாடல்கள் புறநானூற்றில் உள்ளன.

பாடலின் பின்னணி: ஒரு சமயம், அதியமான் நெடுமான் அஞ்சியின் பகைவர்கள் தங்கள் வலிமையை எண்ணி இறுமாந்து அவனோடு போர் செய்யத் திட்டமிட்டனர். அதை அறிந்த அவ்வையார் அவர்களிடம் சென்று அதியமானின் வலிமையைப் புகழ்ந்து கூறிப் போர் செய்வதைத் தவிருங்கள் என்று அறிவுரை கூறுவதை இப்பாடலில் காணலாம்.

திணை: தும்பை. பகைவரோடு போர் செய்வதற்கு ஆயத்தமாகும் பொழுது தும்பைப் பூவைச் சூடிக் கொள்ளல்.
துறை: தானை மறம். இருபடைகளும் வலிமையுடயவை என்பதால் அழிவு மிகுதியாகும் என்பதைக் கருதிப் போரைத் தவிர்க்கலாம் என்ற கருத்தைக் கூறுவது.

களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து
எம்முளும் உளன்ஒரு பொருநன்; வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே.

அருஞ்சொற்பொருள்:
1.களம் = போர்க்களம்; ஓம்புதல் = தவிர்தல்; தெவ் = பகை; தெவ்விர் = பகைவர். 2. வைகல் = நாள். 4.வலித்தல் = கருத்தோடு செய்தல்

கொண்டு கூட்டு: போரெதிர்ந்து களம்புகல் ஓம்புமின்; எம்முளும் உளன் எனக் கூட்டுக.

உரை: பகைவர்களே! போர்க்களம் புகுதலைத் தவிருங்கள்; எதிர்த்துப் போரிடும் வீரன் ஒருவன் எங்களிடத்தும் இருக்கிறான். அவன், ஒரு நாளில் எட்டுத் தேர்கள் செய்யும் தச்சன் ஒருவன், ஒரு மாத காலம் கருத்தோடு செய்த தேர்க்காலைப் போன்ற திண்மையும் விரைவும் உடையவன்.
_________________________________________________________________
………………. மால் வரைக்
கமழ் பூஞ்சாரல் கவினிய நெல்லி
அமிழ்துவிளை தீம்கனி ஒளவைக்கு ஈந்த
உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
அரவக் கடல் தானை அதிகனும் (சிறுபாணாற்றுப்படை, 99 - 103)

Monday, July 13, 2009

86. கல்லளை போல வயிறு!

பாடியவர்: காவற் பெண்டு (காதற்பெண்டு எனவும் பாடம்.) காவற் பெண்டு என்பவர் மறக்குடியில் பிறந்து மறக்குடியில் மணம் புரிந்து கொண்ட பெண்பாற் புலவர். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றே.

பாடலின் பின்னணி: ஒரு நாள், ஒரு பெண்மணி காவற் பெண்டுவின் இல்லத்திற்கு வந்து, அவர் மகன் எங்கு உளன் என்று கேட்டாள். அதற்கு, காவற் பெண்டு தன் வயிற்றைக் காட்டி, “ புலி இருந்து சென்ற குகையைப் போன்றது என் வயிறு; என் மகனுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு புலிக்கும் குகைக்கும் உள்ள தொடர்பைப் போன்றது. என் மகன் போர்க்களத்தில் இருப்பான்” என்று கூறுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரிப்பது வாகை எனப்படும்.
துறை: ஏறாண் முல்லை. வீரம் மிகுந்த மறக்குடியை மேல் மேலும் உயர்த்திக் கூறுதல்.

சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்
யாண்டுஉள னோஎன வினவுதி; என்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்;
புலி சேர்ந்து போகிய கல்அளை போல
5 ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே!


அருஞ்சொற்பொருள்:
4. கல் = மலை; அளை = குகை . ஓரும் மற்றும் மாதோ என்பவை அசைச் சொற்கள்

உரை: சிறிய வீட்டின் நல்ல தூணைப் பிடித்துக்கொண்டு, “உன் மகன் எங்கே உள்ளான்” என்று கேட்கிறாய். என் மகன் எங்கே உள்ளான் என்பதை நான் அறியேன். புலி தங்கிச் சென்ற குகையப் போல் அவனைப் பெற்ற வயிறு இது. அவன் போர்க்களத்தில் தோன்றுவான். அங்கு போய்ப் பார்.

85. யான் கண்டனன்!

பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார். இவரைப்பற்றிய செய்திகளை 83-ஆம் பாடலில் காண்க.

பாடப்பட்டோன்: சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி. இச்சோழனைப்பற்றிய செய்திகளை 80-ஆம் பாடலில் காண்க.

பாடலின் பின்னணி: நற்கிள்ளி ஆமூர் மல்லனோடு மற்போர் புரிந்ததை நக்கண்னையார் நேரில் பார்த்தார். நற்கிள்ளி ஆமுரைச் சார்ந்தவன் அல்லன். போரைப் பார்த்தவர்களில் சிலர் “நற்கிள்ளிக்கே வெற்றி” என்றும் வேறு சிலர் “நற்கிள்ளிக்கு வெற்றியில்லை” என்றும் கூறுவதைக் கேட்ட நக்கண்ணையார் போரவையிலிருந்து வீட்டிற்கு ஓடி வந்து அங்கிருந்தபடியே நற்கிள்ளி மற்போரில் வெற்றி பெறுவதைக் காண்பதைப் பற்றி இப்பாடலில் கூறுகிறார்.

திணை: கைக்கிளை. ஒருதலைக் காதலைப்பற்றிய பாடல்கள் கைக்கிளை என்ற திணையில் அடங்கும்.
துறை: பழிச்சுதல். தலைவனைப் போற்றும் பாடல்கள் பழிச்சுதல் என்னும் துறையைச் சாரும்.

என்ஐக்கு ஊர் இஃது அன்மை யானும்
என்ஐக்கு நாடு இஃது அன்மை யானும்
"ஆடுஆடு" என்ப, ஒருசா ரோரே;
"ஆடன்று" என்ப, ஒருசா ரோரே;
5 நல்ல பல்லோர் இருநன் மொழியே;
அஞ்சிலம்பு ஒலிப்ப ஓடி, எம்இல்
முழா அரைப் போந்தை பொருந்தி நின்று
யான்கண் டனன் அவன் ஆடா குதலே.

அருஞ்சொற்பொருள்:
6. அம் = அழகு. 7. முழா = முரசு; அரை = அடிமரம்; போந்தை = பனை. 8. ஆடு = வெற்றி

கொண்டு கூட்டு: என் ஐக்கு ஊர் இஃது அன்மையானும், நாடு இஃது அன்மையானும் ஆடென்ப, ஆடன்று என்ப; யான் கண்டனன் ஆடாகுதல்

உரை: என் தலைவன் இவ்வூரைச் சார்ந்தவன் அல்லன்; இந்த நாட்டைச் சார்ந்தவனும் அல்லன். ஆகவே, என் தலைவனுக்கும் மல்லனுக்கும் இடையே நடைபெறும் மற்போரைப் பார்ப்பவர்களில், ஒரு சாரார் நற்கிள்ளிக்கு “வெற்றி, வெற்றி” என்பர். மற்றொரு சாரார் அவனுக்கு வெற்றி இல்லை என்பர். நல்லவர்களாகிய பலரும் கூறும் இருவகையான கூற்றுக்களும் நன்றாகவே இருந்தன. (ஆனால், என்னால் அங்கே இருக்க முடியவில்லை.) நான் என் அழகிய சிலம்புகள் ஒலிக்க ஓடி வந்து என் வீட்டில் முரசு போல் அடிமரம் பருத்த பனைமரத்தில் சாய்ந்து நின்றவாறு அப்போரில் என் தலைவன் வெற்றி பெறுவதைக் கண்டேன்.

84. புற்கையும் பெருந்தோளும்!

பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார். இவரைப்பற்றிய செய்திகளை 83-ஆம் பாடலில் காண்க.

பாடப்பட்டோன் : சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி. இச்சோழனைப்பற்றிய செய்திகளை 80-ஆம் பாடலில் காண்க.

பாடலின் பின்னணி: நக்கண்ணையார் நற்கிள்ளி இருந்த இடத்திற்கு அருகில் இருந்த போதிலும் அவனோடு நெருங்கிப் பழகவோ அல்லது திருமணம் செய்துகொள்ளவோ வாய்ப்பில்லை. ஆனால், அவர் அவன் மீது கொண்ட காதல் குறையவில்லை. அவர் “ என் தலைவன். தன் நாட்டை விட்டு இங்கு வந்து நல்ல உணவு கூட இல்லாமல் இருந்தாலும் வலிமை குன்றாமல் உள்ளான். அவன் அருகிலேயே நான் இருந்தாலும் அவனை அடைய முடியாத காரணத்தால் நான் பசலை நோயால் வருந்துகிறேன். அவன் போர்க்களம் புகுந்தால் ஏற்றமும் இறக்கமும் உள்ள வழியில் உப்பு விற்போர் படாத பாடு படுவதைப் போல் வீரர்களை வருத்துகிறான்.” என்று இப்பாடலில் கூறுகிறார்.

திணை: கைக்கிளை. ஒருதலைக் காதலைப்பற்றிய பாடல்கள் கைக்கிளை என்ற திணையில் அடங்கும்.
துறை: பழிச்சுதல். தலைவனைப் போற்றும் பாடல்கள் பழிச்சுதல் என்னும் துறையைச் சாரும்.

என்ஐ, புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே;
யாமே, புறஞ்சிறை இருந்தும் பொன்னன் னம்மே
போரெதிர்ந்து என்ஐ போர்க்களம் புகினே,
கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்
5 ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு
உமணர் வெரூஉம் துறையன் னன்னே!

அருஞ்சொற்பொருள்:
1. ஐ = தலைவன்; புற்கை = கஞ்சி, கூழ். 2. புறஞ்சிறை = அருகில், வேலிப்புறம். 5. ஏம் = மயக்கம், செருக்கு. 6. உமணர் = உப்பு விற்பவர்; வெருவுதல் = அஞ்சுதல்; துறை = வழி.

கொண்டு கூட்டு: என் ஐ பெருந்தோளன்னே; யாம் பொன்னன்னம்மே; போர்க்களம் புகினே, உமணர் வெரூஉம் துறை அன்னன்னே.

உரை: என் தலைவன், கூழ் போன்ற உணவை உண்டும் பெரிய தோளை உடையனாக உள்ளான். நான் அவன் இருக்கும் இடத்திற்கு அருகிலிருந்தும் (அவனோடு கூட முடியாமையால்) பசலையால் பொன்னிறமானேன். போரை ஏற்று என் தலைவன் போர்க்களத்தில் புகுந்தால், ஒலிமிக்க விழாக்கோலம் கொண்ட இவ்வூரில், செருக்குடன் போருக்கு வரும் வீரர்களின் நிலைமை, உப்பு விற்கப் போகும் உமணர்கள் தாங்கள் செல்லும் கடினமான வழியை நினைத்து அஞ்சுவார்களே, அதே நிலைமைதான்.

83. இருபாற்பட்ட ஊர்!

பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார். நக்கண்ணன் என்னும் ஆண்பாற் பெயரைப் போல் நக்கண்ணை என்பது பெண்பாற் பெயராகும். கோழி என்பது உறையூருக்கு மற்றொரு பெயர். நாய்கன் என்ற சொல்லுக்கு வணிகன் என்று பொருள். ஆகவே, இப்பாடலை இயற்றிய நக்கண்ணையார் என்பவர் உறையூரைச் சார்ந்த வணிக குலத்தில் இருந்த ஒருவரின் மகள். இவர் புறநானூற்றில் மூன்று பாடல்களையும் (பாடல்கள் 83, 84 மற்றும் 85), அகநானூற்றில் 252-ஆம் பாடலையும் நற்றிணையில் 19, 87 ஆம் பாடல்களையும் இயற்றியவர்.


பாடப்பட்டோன்: சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி. இவனைப்பற்றிய செய்திகளை 80 ஆம் பாடலில் காணவும்.பாடலின் பின்னணி: இப்பாடலின் பின்னனியைப் புரிந்து கொள்வதற்கு, இப்பாடலோடு அடுத்து வரும் இரண்டு பாடல்களையும் (பாடல்கள் 84, 85) ஒருங்கிணைத்துப் பார்க்க வேண்டும். சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளிக்கும் ஓரு மல்லனுக்கும் இடையே ஆமூர் என்னும் ஊரில் மற்போர் நடைபெற்றது. நற்கிள்ளி ஆமூரைச் சார்ந்தவன் அல்லன். ஆனால் மல்லனோ ஆமூரைச் சார்ந்தவன். இருவருக்கும் இடையே நிகழ்ந்த மற்போரைப் பார்த்த மக்களில் ஒரு சாரார் நற்கிள்ளிக்கும் மற்றொரு சாரார் மல்லனுக்கும் ஆதரவு அளித்தனர். நற்கிள்ளி மல்லனை எதிர்த்து மற்போர் புரிந்த ஆற்றலையும், அவன் வலிமையும், அழகையும் கண்டு அவன் மீது நக்கண்ணையார் காதல் கொண்டார். இப்பாடலில், அவர் தன் காதலை மறைக்கவும் முடியாமல் வெளியில் காட்டிக்கொள்ளவும் முடியாமல் கலக்கமுற்று இருக்கும் நிலையைக் குறிப்பிடுகிறார். தான் என்ன செய்வது என்று தெரியாமல் இருவகையான எண்ணங்களோடு போராடுவதைப் போலவே ஆமுர் மக்களும் யாரை ஆதரிப்பது என்று முடிவு செய்ய முடியாமல் கலங்கட்டும் என்ற கருத்தை இப்பாடலில் நக்கண்ணையார் கூறுகிறார்.


திணை: கைக்கிளை. ஒருதலைக் காதலைப்பற்றிய பாடல்கள் கைக்கிளை என்ற திணையில் அடங்கும்.
துறை: பழிச்சுதல். தலைவனைப் போற்றும் பாடல்கள் பழிச்சுதல் என்னும் துறையைச் சாரும்.

அடிபுனை தொடுகழல், மையணல் காளைக்குஎன்
தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே;
அடுதோள் முயங்கல் அவைநா ணுவலே;
என்போற் பெருவிதுப் புறுக; என்றும்
5 ஒருபால் படாஅது ஆகி
இருபாற் பட்ட இம் மையல் ஊரே!

அருஞ்சொற்பொருள்:
1. புனைதல் = அணிதல்; தொடுதல் = அணிதல்; மை = கருநிறம்; அணல் = தாடி. 2. தொடி = கைவளை; கழித்தல் = விலக்கல், நேக்கல்; யாய் = தாய். 3. அடுதல் = வெல்லுதல், வருத்துதல், போரிடுதல்; முயங்கல் = தழுவல். 4. விதுப்பு = நடுக்கம். 6. மையல் = மயக்கம்

கொண்டு கூட்டு: யான் யாய் அஞ்சுவல்; அவை நாணுவல்; இம்மயையலூர் என்போல் பெருவிதுப் புறுக எனக் கூட்டுக.

உரை: கழல் அணிந்த கால்களையும் கருநிறத் தாடியையும் உடைய காளைபோன்ற நற்கிள்ளிமேல் நான் கொண்ட காதலால் என் கைவளைகள் கழல்கின்றன. ஆகவே, நான் காதல்கொண்ட செய்தி என் தாய்க்குத் தெரிந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். அவன் வலிய தோள்களைத் தழுவவேண்டுமென்று என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆனால், அவையில் பலரும் இருப்பதால் அவனைத் தழுவுவதற்கு நாணுகிறேன். நான் என் காதலை வெளிப்படுத்தாமலேயே என் தாய்க்கு என் காதல் தெரிந்துவிடுமோ என்ற அச்சம் ஒரு பக்கம்; மற்றொரு பக்கம், நான் காதலை வெளிப்படுத்தினால் ஊர் மக்களுக்குத் தெரிந்துவிடுமோ என்ற நாணம். அச்சத்திற்கும் நாணத்திற்குமிடையே சிக்கிக்கொண்டு நான் நடுக்கமடைவதுபோல், நற்கிள்ளியை ஆதரிப்பதா அல்லது மல்லனை ஆதரிப்பதா என்று புரியாமல் மயங்கும் இவ்வூர் ஒரு கட்சியாக இல்லாமல் இரு கட்சியாய் இருந்து என்றும் என்போல் பெரிய நடுக்கம் உறுக.

82. ஊசி வேகமும் போர் வேகமும்!

பாடியவர்: சாத்தந்தையார். இப்புலவரைப் பற்றிய குறிப்புகளை 80-ஆவது பாடலில் காணலாம்.
பாடப்பட்டோன்: சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளை 80-ஆவது பாடலில் காணலாம்.
பாடலின் பின்னணி: கோப்பெரு நற்கிள்ளி போரவையில் நிகழ்த்திய மற்போரின் வேகத்தைப் பாராட்டி இப்பாடலை சாத்தந்தையார் இயற்றியுள்ளார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

சாறுதலைக் கொண்டெனப், பெண்ணீற்று
உற்றெனப் பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ
5 ஊர்கொள வந்த பொருநனொடு
ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே!

அருஞ்சொற்பொருள்:
1.சாறு = விழா; தலைக்கொள்ளுதல் = கிட்டுதல்; ஈற்று = மகப்பேறு; உறுதல் = நேர்தல். 2. ஞான்றஞாயிறு = சாயுங்காலம். 3. நிணத்தல் = முடைதல், கட்டுதல்; இழிசினன் = புலைமகன். 4. போழ் = தோல் வார்; தூண்டு = முடுக்கு. மாது - அசைச் சொல். 6. ஆர் = ஆத்தி; தெரியல் = மாலை; நெடுந்தகை = பெரியோன்.
கொண்டு கூட்டு: நெடுந்தகை போர், பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றின்கண் சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற்று உற்றென இழிசினன் கையதாகிய ஊசியின் விரைந்தன்று எனக் கூட்டுக.

உரை: ஊரிலே விழா தொடங்கிவிட்டது; அங்கு போக வேண்டும். மனைவிக்குக் குழந்தை பிறக்கும் நேரம்; வீட்டிற்குச் சென்று அவளுக்கு உதவ வேண்டும். மழை பெய்கிறது; கதிரவன் மறையும் மாலைக் காலமும் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கட்டிலைப் பின்னிக்கொண்டிருக்கும் தொழிலாளியின் (புலையன்) கையிலுள்ள ஊசி எவ்வளவு வேகமாக (கட்டில் பின்னும்) தோல் வாரைச் செலுத்துமோ,அவ்வளவு விரைவாக, ஆத்தி மாலை சூடிய பெரியோன் கோப்பெரு நற்கிள்ளி ஊரைத் தன்வசமாக்கிக்கொள்ள வந்த மற்போர் வீரனுடன் போர் நடத்தினான்.

81. யார்கொல் அளியர்?


பாடியவர்: சாத்தந்தையார். இப்புலவரைப் பற்றிய குறிப்புகளை 80-ஆவது பாடலில் காணலாம்.
பாடப்பட்டோன்: சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளை 80-ஆவது பாடலில் காணலாம்.
பாடலின் பின்னணி: கோப்பெரு நற்கிள்ளி ஆமூரில் இருக்கும் பொழுது போர் தொடங்கியது. அப்போரில் பகைவரை எதிர்த்துப் போரிடும் படைக்குக் கோப்பெரு நற்கிள்ளி தலைமை தாங்கினான். இவனது போர்த்திறமையைப் புகழ்ந்து சாத்தந்தையார் இப்பாடலை இயற்றியுள்ளார்.
திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே
கார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆனாவே;
யார்கொல் அளியர் தாமே ஆர்நார்ச்
செறியத் தொடுத்த கண்ணிக்
5 கவிகை மள்ளன் கைப்பட் டோரே?

அருஞ்சொற்பொருள்:
1.ஆர்ப்பு = பேரொலி. 2.கார் = கார்காலம்; பெயல் = மழை; உரும் = இடி. 3. அளி = இரக்கம்; ஆர் = ஆத்தி. 4. செறிதல் = நெருங்குதல்; கண்ணி = மாலை. 5. கவிகை = கொடுத்துக் கவிந்த கை; கவிதல் = வளைதல்;மள்ளன் = வீரன்
உரை: கோப்பெரு நற்கிள்ளியின் படையினது ஆரவாரம் ஏழு கடலும் கூடி எழுப்பும் ஒலியைவிடப் பெரிது. அவனுடைய யானை கார்காலத்து மழையோடு கூடிய இடியினும் அதிகமாக முழங்குகிறது. கோப்பெரு நற்கிள்ளி நாரால் நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட ஆத்தி மாலையையும் இரவலர்க்கு ஈகை செய்து கவிந்த கையும் உடைய வீரன். அவன் கையில் அகப்பட்டோரில் யார்தான் இரங்கத் தக்கவர்? அவன் யாருக்கும் இரக்கம் காட்டப்போவது இல்லை. அனைவரும் கொல்லப்படுவது உறுதி.