Monday, January 9, 2012

295. ஊறிச் சுரந்தது!

295. ஊறிச் சுரந்தது!

பாடியவர்: ஔவையார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 87-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒருகால், இரு அரசர்களிடையே பெரும்போர் நடைபெற்றது. அப்போரில், வீரன் ஒருவன் சிறப்பாகப் போரிட்டான். அவன் உடல் பல துண்டுகளாகப் பகைவர்களால் வெட்டப்பட்டது. அவன் இறந்த செய்தி அவன் தாய்க்குத் தெரியவந்ததது. அவன் தாய், தன் மகனின் உடலைக் காணப் போர்க்களத்திற்குச் சென்றாள். போர்க்களத்தில், அவன் வீரமரணம் அடைந்ததைப் பார்த்த அத்தாய் பெருமகிழ்ச்சி அடைந்தாள். உனர்ச்சிப் பெருக்கால் அவள் முலைகளினின்று பால் சுரந்தது. இச்செய்தியை ஒளவையார் இப்பாடலில் கூறுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.

துறை: உவகைக் கலுழ்ச்சி. வாளால் புண்பட்ட உடம்பையுடைய கணவனைக் கண்டு மனைவி மகிழ்ந்து கண்ணீர் வடித்தல்; மகன் புண்ணுற்று இறந்தது கண்டு தாய் மகிழ்தல்


கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண்
வெந்துவாய் வடித்த வேல்தலைப் பெயரித்
தோடுஉகைத்து எழுதரூஉ துரந்துஎறி ஞாட்பின்
வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி
5 இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய
சிறப்புடை யாளன் மாண்புகண்டு அருளி
வாடுமுலை ஊறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே.

அருஞ்சொற்பொருள்:

1. கிளர்தல் = எழுதல்; கட்டூர் = கட்டப்பட்ட ஊர் (பாசறை); நாப்பண் = இடையே. 2. வடித்த = கூர்மையாக்கிய. 3.தோடு = தொகுதி (கூட்டம்); உகைத்தல் = செலுத்துதல்; துரந்து = சென்று; ஞாட்பு = போர், போர்க்களம். 4. போழ்தல் = பிளத்தல்; வாய் = இடம். 5. அழுவம் = போர், போர்க்களம். 8. பூட்கை = கொள்கை; விடலை = வீரன்.

கொண்டு கூட்டு: தலைப்பெயரி, ஞாட்பின் விலங்கி, மாண்புகண்டு அருளி ஊறிச் சுரந்தன விடலை தாய்க்கே எனக் கூட்டுக.

உரை: கடல் எழுந்தாற்போல் அமைந்துள்ள பெரிய பாசறையோடு கூடிய போர்க்களத்தின் நடுவில், தீயால் சூடாக்கிக் கூர்மையாகத் தீட்டிய வேலைப் பகைவர்பால் திருப்பி, தன் படையை ஏவித் தானும் எழுந்து சென்று, அம்பும் வேலும் செலுத்திப் பகைவரைக் கொல்லும் போரில் எதிர்த்து வரும் பகைவர் படையைப் பிளந்து தான் போர் செய்வதற்கு இடமுண்டாகுமாறு குறுக்கிட்டுத் தடுத்த வீரன் ஒருவன் படைகளின் நடுவில் துண்டுபட்டு வேறு வேறாகக் கிடந்தான். புறமுதுகு காட்டி ஓடாத கொள்கையையுடைய அவ்வீரனின் தாய்க்குத் தன் மகன் வீரமரணம் அடைந்ததைக் கண்டதால், அன்பு மிகுந்தது. அவளுடைய வற்றிய முலைகள் மீண்டும் பாலூறிச் சுரந்தன.

சிறப்புக் குறிப்பு: போர்வீரர்கள் தங்குவதற்காகப் புதிதாகக் கட்டப்படும் பாசறை கட்டூர் என்று அழைக்கப்பட்டது. போர்க்களத்தில் கொல்லரும் உடனிருந்து வேல் போன்ற படைக் கருவிகளைச் செம்மைப் படுத்திக் கொடுத்தனர் என்பது இப்பாடலிலிருந்து தெரியவருகிறது.

No comments: