Monday, January 9, 2012

296. நெடிது வந்தன்றால்!

296. நெடிது வந்தன்றால்!

பாடியவர்: வெள்ளை மாறனார். இவர் பெயர் சில நூல்களில் வெள்ளை மாளர் என்றும் வெள்ளை மாளனார் என்றும் காணப்படுகிறது. சங்க இலக்கியங்களில், இவர் இயற்றிய பாடல் இது ஒன்றுதான்.
பாடலின் பின்னணி: ஒருகால், ஓரூரில் போர் நடைபெற்றது. அப்போர் முடியும் தருவாய் நெருங்கியது. அச்சமயம், போருக்குச் சென்ற வீரர்கள் பலரும் அவரவர் வீடுகளுக்குத் திரும்பினர். அவர்களின் வீடுகளில், பெண்டிர் வேப்பிலகளை வீட்டின் கூரையில் செருகினர்; காஞ்சிப் பண் பாடல்களைப் பாடினர்; கடுகுகளைப் புகைத்தனர். இவ்வாறு, எல்லா வீடுகளிலும் ஆரவாரம் மிகுதியாக இருந்தது. ஒரு வீட்டில் மட்டும், போருக்குச் சென்ற ஆண்மகன் இன்னும் திரும்பி வரவில்லை. அவன் பகைவேந்தனைக் கொன்றுவிட்டுத்தான் திரும்புவான் போலும் என்று அவன் தாய் நினைக்கிறாள். இக்காட்சியை, புலவர் வெள்ளை மாறனார் இப்பாடலாக இயற்றியுள்ளார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.

துறை: ஏறாண் முல்லை. வீரமிகுந்த மறக்குடியை மேலும்மேலும் உயர்த்திக் கூறுதல்.

வேம்புசினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்
எல்லா மனையும் கல்லென் றவ்வே
வெந்துஉடன்று எறிவான் கொல்லோ?
5 நெடிதுவந் தன்றால் நெடுந்தகை தேரே?

அருஞ்சொற்பொருள்:

1. வேம்பு = வேப்ப மரம்; சினை = கிளை; காஞ்சி = ஒரு பண். 2. ஐயவி = வெண்கடுகு; கல் – ஆரவாரக் குறிப்பு. 5. உடன்றல் = சிதைத்தல், பொருதல், சினக் குறிப்பு; எறிதல் = வெட்டுதல், வெல்லுதல்; நெடுந்தகை = பெரியோன்.

கொண்டு கூட்டு: எல்லா மனையும் கல்லென்ற; தேர் நெடிது வந்தன்று; அதனால், எறிவான் கொல்லோ எனக் கூட்டுக.

உரை:வேப்ப மரத்தின் கிளைகளை ஒடிப்பதும், காஞ்சிப் பண் பாடுவதும், நெய்யுடைய கைய்யோடு வெண்கடுகைப் புகைப்பதும் ஆகிய நிகழ்ச்சிகள் எல்லா வீடுகளிலும் ஆரவாரமாக நடைபெறுகின்றன. பகை வேந்தனைச் சினந்து அவனை வீழ்த்தாமல் மீளேன் என்று இவன் போர் புரிகிறான் போலும். அதனால்தான் இப்பெரியோனின் தேர் காலம் தாழ்த்தி வருகிறது போலும்.

சிறப்புக் குறிப்பு: வீடுகளில் வேப்பிலையைச் செருகுவதும், காஞ்சிப் பண்ணைப் பாடுவதும், ஐயவி புகைப்பதும், போரில் காயமடைந்தவர்களின் புண்களை ஆற்றுவதற்காக நடைபெறும் செயல்களாகும்.

No comments: