Monday, May 17, 2010

170. உலைக்கல்லன்ன வல்லாளன்!

பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார்(60, 170, 321). உறையூரில் மருத்துவராகவும் புலவராகவும் வாழ்ந்தவர் தாமோதரனார். இவர் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனையும் பிட்டங்கொற்றனையும் பாடியவர்.
பாடப்பட்டோன்: பிட்டங்கொற்றன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 168-இல் காணாலாம்.
பாடலின் பின்னணி: ஒருகால், மருத்துவர் தாமோதரனார் பிட்டங்கொற்றனைக் காணச் சென்றார். அவ்வமயம், பிட்டங்கொற்றனின் பகைவர்கள் அவனோடு போர் புரிவதற்குத் திட்டமிட்டுக் கொண்டிருப்பதாக, பகைவர்களின் ஒற்றர்கள் மூலம் அறிந்தார். அவ்வொற்றர்கள் அறியுமாறு, அவர் பிட்டங்கொற்றனின் வலிமையைப் புகழ்ந்து பாடுவதாக, இச்செய்யுள் அமைந்துள்ளது.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: வல்லாண் முல்லை; தானை மறமும் ஆம்.
வல்லாண் முல்லை: ஒரு வீரனுடைய வீட்டையும் ஊரையும் இயல்பினையும் சொல்லி அவன் ஆண்மைத் தன்மையை நன்மை பெருகச் சொல்லுதல்.
தானை மறம்: இரு படைகளும் தங்களுள் போரிட்டுச் சாகாதவாறு வீரன் ஒருவன் பாதுகாத்ததைக் கூறுவது.

மரைபிரித்து உண்ட நெல்லி வேலிப்
பரலுடை முன்றில் அங்குடிச் சீறூர்
எல்அடிப் படுத்த கல்லாக் காட்சி
வில்லுழுது உண்மார் நாப்பண் ஒல்லென
5 இழிபிறப் பாளன் கருங்கை சிவப்ப
வலிதுரந்து சிலைக்கும் வன்கண் கடுந்துடி
புலிதுஞ்சு நெடுவரைக் குடிஞையோடு இரட்டும்
மலைகெழு நாடன் கூர்வேல் பிட்டன்
குறுகல் ஓம்புமின் தெவ்விர்; அவனே
10 சிறுகண் யானை வெண்கோடு பயந்த
ஒளிதிகழ் முத்தம் விறலியர்க்கு ஈந்து
நார்பிழிக் கொண்ட வெம்கள் தேறல்
பண்அமை நல்யாழ்ப் பாண்கடும்பு அருத்தி
நசைவர்க்கு மென்மை அல்லது பகைவர்க்கு
15 இரும்புபயன் படுக்குங் கருங்கைக் கொல்லன்
விசைத்துஎறி கூடமொடு பொருஉம்
உலைக்கல் அன்ன வல்லா ளன்னே.

அருஞ்சொற்பொருள்:
1.மரை = காட்டுப்பசு. 2. பரல் = விதை; முன்றில் = முற்றம். 3. எல் = பகல்; அடிப்படுதல் = அடிச்சுவடு படுதல்; காட்சி = அறிவு. 4. நாப்பண் = நடுவே. கருமை = வலிமை. 6.துரந்து = முயன்று; சிலைத்தல் = ஒலித்த. துடி = குறிஞ்சிப் பறை. 7. குடிஞை = ஆந்தை; இரட்டல் = மாறி மாறி ஒலித்தல். 9. குறுகல் = அணுகல். 12. வெம்மை = விருப்பம்; தேறல் = கள்ளின் தெளிவு. 16. கூடம் = சம்மட்டி. 17. உலைக்கல் = பட்டடைக் கல் (பட்டறை).

கொண்டு கூட்டு: பிட்டன் நசைவர்க்கு மென்மையல்லது பகைவர்க்கு கல்லன்ன வல்லாளனாதலால், தெவ்வீர், அவனைக் குறுகல் ஓம்புமின் எனக் கூட்டுக.

உரை: காட்டுப் பசுக்கள் வீட்டு வேலியில் உள்ள நெல்லிமரத்தின் கனிகளின் விதைகளை நீக்கித் தின்றதால் அவ்விதைகள் வீடுகளின் முற்றங்களில் சிதறிக் கிடக்கும் அழகிய வீடுகளுடைய சிற்றூரில், பகற் பொழுதெல்லாம் வேட்டையாடித் திரிகின்ற, கல்வியில்லாத, வேற்பயிற்சியுள்ள வேட்டையாடி உண்ணும் வேடர்களின் நடுவே, “ஒல்” என்னும் ஓசையுடன் இழிந்த பிறப்பாளன் என்று கருதப்படும் பறை கொட்டுபவன் தன் வலிய கை சிவக்குமாறு விரைந்து அடிக்கும் வலிய கண்ணையுடைய, அச்சம் தரும் பறையின் ஒலி, புலி படுத்திருக்கும் மலையில் ஆந்தையின் அலரலோடு மாறி மாறி ஒலிக்கும். இத்தகைய மலையுள்ள நாட்டுக்குத் தலைவன் கூரிய வேலையுடைய பிட்டங்கொற்றன். பகைவர்களே! அவனை அணுகுவதைத் தவிர்க. அவன் சிறிய கண்களையுடைய யானைகளின் வெண்மையான தந்தங்களில் விளையும் ஒளி பொருந்திய முத்துகளை விறலியர்க்குக் கொடுப்பவன். நாரைப் பிழிந்து எடுத்த விரும்பத்தக்க கள்ளின் தெளிவை, யாழோடும் பண்ணோடும் பாடும் பாணர்களுக்குக் கொடுத்து அவர்களையும் அவர்களின் சுற்றத்தாரையும் உண்ண வைப்பவன். ஆனால், பகைவர்க்கு அவன் இரும்பைப் பயன்படுத்தும் வலிய கொல்லனின் உலைக்களத்தில் விரைந்து சம்மட்டியால் அடிக்கப்படும் பட்டடைக்கல் போன்ற வலிமையுடையவன்.

169. நின் வலன் வாழியவே!

பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்(57, 58, 169, 171, 353). இவர் புறநானூற்றில் ஐந்து பாடல்கள் இயற்றியது மட்டுமல்லாமல், அக்நானூற்றில் மூன்று பாடல்களும் (107, 123, 285), குறுந்தொகையில் ஒரு பாடலும் (297) இயற்றியவர்.
பாடப்பட்டோன்: பிட்டங்கொற்றன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 168-இல் காணாலாம்.
பாடலின் பின்னணி: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பிட்டங்கொற்றனைக் காண விரும்பினார். ஆனால், அவர் பிட்டங்கொற்றனைக் காண முயன்ற பொழுதெல்லாம் அவன் போருக்குச் சென்றிருந்தான். ஒருமுறை, அவனை நேரில் காணும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அப்போது, அவன் மீண்டும் போருக்குப் போவதற்குமுன் தனக்குப் பரிசு கொடுத்து அருள வேண்டுமென்று அவர் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் கடா நிலை என்பது “உன்னைப் பாடிய யாவரும் பரிசில் பெற்றனர்” என்று கூறித் தனக்கும் பரிசில் வேண்டும் என்று புரவலரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது.

நும்படை செல்லுங் காலை அவர்படை
எடுத்தெறி தானை முன்னரை எனாஅ
அவர்படை வருஉம் காலை நும்படைக்
கூழை தாங்கிய அகல்யாற்றுக்
5 குன்றுவிலங்கு சிறையின் நின்றனை எனாஅ,
அரிதால் பெருமநின் செவ்வி என்றும்
பெரிதால் அத்தைஎன் கடும்பினது இடும்பை
இன்னே விடுமதி பரிசில் வென்வேல்
இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார்
10 இகலினர் எறிந்த அகல்இலை முருக்கின்
பெருமரக் கம்பம் போலப்
பொருநர்க்கு உலையாநின் வலன் வாழியவே.

அருஞ்சொற்பொருள்:
2.தானை = ஆயுதங்கள்; முன்னரை = முன்னர் நிற்பவன். 4. கூழை = படை வகுப்பு. 5. விலங்கு = குறுக்கானது; சிறை = தடை; எனாஅ = ஆகலானும் (இடைச்சொல்). 6. செவ்வி = காலம். 7. ஆல், அத்தை - அசைச் சொற்கள்; கடும்பு = சுற்றம்; இடும்பை = துன்பம். 8. இன்னே = இப்பொழுதே. 9. கோசர் = ஒரு வகை வீரர்கள்; கன்மார் = கற்பவர்கள். 10. இகல் = மாறுபாடு. 12. உலைதல் = மனங்கலங்கல்; வலன் = வெற்றி.

கொண்டு கூட்டு: அரிதால் பெரும நின் செவ்வி, பெரிதால் என் கடும்பினது இடும்பை; இன்னே விடுமதி; நின் வலன் வாழியவே.

உரை: உம் படை பகைவரோடு போரிடப் போகும் பொழுது, வேல் முதலியவற்றை எடுத்து எறியும் பகைவரின் படைக்கு முன் நிற்பாய். பகவரின் படை உம் படையோடு போரிட வரும் பொழுது, உம் படையின் அணியைத் தாங்குவதற்காக, அகன்ற ஆற்றைத் தடுத்து நிறுத்தும் மலைபோல் அதனைத் தடுத்து நிற்பாய். அதனால், பெரும, உன்னைக் காண்பதற்கு ஏற்ற காலம் கிடைப்பது எந்நாளும் அரிது. என் சுற்றத்தாரின் துன்பம் பெரிதாகையால், இப்பொழுதே பரிசு அளித்து என்னை அனுப்புவாயாக. வெல்லும் வேலையுடைய இளம் கோசர்கள் பலரும் படைப் பயிற்சி செய்யும் பொழுது வேலெறிந்து பழகும் அகன்ற இலையுடைய முருக்க மரத்தூணால் ஆகிய இலக்கு போல் பகைவர்களைக் கண்டு மனங்கலங்காத உன் வெற்றி வாழ்க.

168. கேழல் உழுத புழுதி!

பாடியவர்: கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார். இவர் பெயர் கருவூர்க் கந்தப்பிள்ளை என்று சிலர் கூறுகின்றனர். இவர் கதப்பிள்ளை என்பவரின் புதல்வர் என்றும் இவர் இயற் பெயர் சாத்தனார் என்றும் கருதப்படுகிறது. இவர் புறநானூற்றில் இயற்றிய இச்செய்யுள் மட்டுமல்லாமல் அகநானூற்றில் 309 - ஆம் செய்யுளையும், நற்றிணையில் 343-ஆம் செய்யுளையும் இயற்றியவர். “தமிழகம்” என்ற சொல்லை முதல் முறையாக இலக்கியத்தில் பயன்படுத்தியது இவர்தான் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
பாடப்பட்டோன்: பிட்டங்கொற்றன்(168, 169, 170, 171, 172). இவன் சேரமான் கோதைக்குப் படைத் துணைவன். இவன் ஆண்மையிலும் கொடையிலும் சிறந்து விளங்கியவன். இவன் குதிரை மலையைச் சார்ந்த நாட்டுக்குத் தலைவன். இவனைப் பாடியவர்கள் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனாரும், உறையூர் மருத்துவன் தாமோதரனாரும், வடம வண்ணக்கன் தாமோதரனாரும் ஆவர்.
பாட்டின் பின்னணி: தமிழகம் முழுதும் பிட்டங்கொற்றனின் புகழ் பேசப்படுவதைக் கண்ட புலவர் கருவூர்க் கதப்பிள்ளை அவனைக் காண வந்தார். இப்பாடல், அவ்வமயம் அவரால் இயற்றப்பட்டது.
திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் துறை; இயன்மொழியும் அரச வாகையும் ஆம்.
பரிசில் துறை: புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.
இயன்மொழி: இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.
அரச வாகை: அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக்
கறிவளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு
கடுங்கண் கேழல் உழுத பூழி
5 நன்னாள் வருபதம் நோக்கிக் குறவர்
உழாஅது வித்திய பரூஉக்குரல் சிறுதினை;
முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்
மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்
மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி
10 வான்கேழ் இரும்புடை கழாஅது ஏற்றிச்
சாந்த விறகின் உவித்த புன்கம்;
கூதளம் கவினிய குளவி முன்றில்
செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ, கூர்வேல்
15 நறைநார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி
வடிநவில் அம்பின் வில்லோர் பெரும,
கைவள் ஈகைக் கடுமான் கொற்ற,
வையக வரைப்பில் தமிழகம் கேட்பப்
பொய்யாச் செந்நா நெளிய ஏத்திப்
20 பாடுப என்ப பரிசிலர் நாளும்
ஈயா மன்னர் நாண
வீயாது பரந்தநின் வசையில்வான் புகழே.

அருஞ்சொற்பொருள்:
1.ஆர்த்தல் = ஒலித்தல்; பயிறல் = கூடுதல்; நனம் = அகற்சி; நனந்தலை = அகன்ற இடம். 2. கறி = மிளகு; அடுக்கம் = மலைப்பக்கம், மலைச் சாரல். 3. மிளிர்தல் = புரளுதல், மேலாதல்; கிளை = இனம், கூட்டம். 4. கடுங்கண் = குரூரம், கொடுமை; கேழல் = பன்றி; பூழி = புழுதி. 5. பதம் = சமயம். 6.பரூஉ = பருமை; குரல் = கதிர், தினை. 7. முந்து = பழைமையான (முன்னர்); யாணர் = புது வருவாய். 8. மரையா = காட்டுப் பசு; தீ = இனிமை. 9. தடி = தசை; புழுக்கல் = அவித்தல்; குழிசி = பானை. 10. வான் = அழகு; கேழ் = நிறம்; புடை = பக்கம்.11. சாந்தம் = சந்தனம்; உவித்தல் = அவித்தல்; புன்கம் = சோறு, உணவு. 12. கூதளம் = வெள்ளரி, கூதாளிச் செடி; குளவி = காட்டு மல்லிகை; முன்றில் = முற்றம். 13. கோள் = குலை; பகுத்தல் = ஈதல், பங்கிடுதல். 15. நறை = பச்சிலைக் கொடி. 16. வடி = கூர்மை; நவிலல் = பழகுதல். 17. வள் = வளம்கடு = விரைவு; மான் = குதிரை. 19. நெளிதல் = வருந்துதல். 22. வீதல் = கெடுதல்.
கொண்டு கூட்டு: பெரும, கொற்ற, பரிசிலர் நின்புகழை ஏத்திப் பாடுப என்ப; அதனால் யானும் நின்பால் பரிசில் பெற்றுப் பாடுவேனாக.
உரை: அருவிகள் ஒலிக்கும், மூங்கில்கள் அடர்ந்த அகன்ற இடத்தில், மிளகுக் கொடி வளரும் மலைப்பக்கத்தில் காட்டுப் பன்றிகள் தன் இனத்தோடு, காந்தளின் வளமான கிழங்குகளைத் தோண்டியெடுப்பதற்காகக் கிளறிய நிலத்தில் தோன்றிய புழுதியில், நல்ல நாள் வந்த சமயம் பார்த்துக் குறவர் உழாமல் விதைத்து விளைந்த பெரிய கதிரையுடைய சிறுதினையப் புது வருவாயாகப் பெற்று அதைப் புது உணவாக உண்ணுவர்.

காட்டுப் பசுவிடம் கறந்த நுரையுடன் கூடிய இனிய பாலில் மான் தசையை வேகவைத்தப் புலால் மணமுள்ள அழகிய நிறமுள்ள பானையின் வெளிப்புறத்தைக் கழுவாமல் உலைவைத்து, சந்தன விறகால் சமைத்த சோற்றை வெள்ளரி சிறந்து விளங்கும், காட்டு மல்லிகை மணக்கும் முற்றத்தில் வளமான குலையையுடைய வாழையின் அகன்ற இலையில் இட்டுப் பலரோடும் பகிர்ந்து உண்னும், குதிரை மலைத் தலைவனே! கூர்மையன வேலையும், பச்சிலைக் கொடியுடன் தொடுத்த வேங்கை மலர் மாலையையும் அணிந்து கூரிய அம்பைச் செலுத்துவதில் பயிற்சி பெற்ற வீரர்களுக்குத் தலைவா! கையால் வழங்கும் ஈகையும் விரைந்து செல்லும் குதிரைகளையும் உடைய தலைவா! உலகத்து எல்லையுள், தமிழகம் முழுதும் கேட்க, இரவலர்க்குப் பரிசளிக்காத மன்னர்கள் நாள்தோறும் நாணுமாறு நன்கு பரவிய உன் பழியற்ற புகழைப் பொய் பேசாத, நடுவு நிலை தவறாத நாவுடையோர் தங்கள் நாவு வருந்துமாறு புகழ்ந்து உன்னை பாடுவர் என்று பரிசிலர் கூறுவர்.

167. நீயும் ஒன்று இனியை;அவரும் ஒன்று இனியர்!

பாடியவர்: கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: ஏனாதி திருக்கிள்ளி. ஏனாதி என்பது முடிவேந்தர்களால் படைத்தலைவர்களுக்கு வழங்கப்பட்ட சிற்ப்புப் பெயர். இவன் சோழநாட்டுக் குறுநில மன்னர்களுள் ஒருவன். பல போர்களில் சோழ வேந்தர்களுக்குத் துணையாகப் போரிட்டவன்.
பாடலின் பின்னணி: ஏனாதியின் வீரத்தையும் வண்மையையும் கேள்விப்பட்டு, அவனைக் காணக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் சென்றவர். அவர் திருக்கிள்ளியின் உடலில் இருந்த வடுக்களைக் கண்டு வியந்து, இகழ்வதுபோல் புகழ்ந்து அவனை இப்பாடலில் சிறப்பிக்கிறார்.
திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

நீயே, அமர்காணின் அமர்கடந்துஅவர்
படைவிலக்கி எதிர்நிற்றலின்
வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கையொடு
கேள்விக்கு இனியை கட்குஇன் னாயே;
5 அவரே, நிற்காணின் புறங்கொடுத்தலின்
ஊறுஅறியா மெய்யாக்கையொடு
கண்ணுக்கு இனியர் செவிக்கு இன்னாரே!
அதனால், நீயும்ஒன்று இனியை;அவரும்ஒன்று இனியர்;
ஒவ்வா யாவுள மற்றே? வெல்போர்க்
10 கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி!
நின்னை வியக்குமிவ் உலகம் அஃது
என்னோ பெரும உரைத்திசின் எமக்கே.

அருஞ்சொற்பொருள்:
1. அமர் = போர்; கடந்து = வென்று. 3. வாய்த்தல் = கிடைத்தல், சேர்தல். கட்கு = கண்ணுக்கு. 6. ஊறு = காயம், தழும்பு. 9. ஒவ்வுதல் = பொருந்துதல் (ஒத்திருத்தல்); ஒவ்வா = பொருந்தாத (ஒப்பில்லாத). 10. கடு = விரைவு. 12. உரைத்திசின் = உரைப்பாயாக.

உரை: நீ, போரைக் கண்டால், அப்போரில் வென்று, அப்பகைவர்களின் படையை எதிர்த்து நிற்கிறாய். அதனால், வாளால் உண்டாகிய தழும்புகளுடைய உடலோடு உள்ள உன் வீரச் செயல்களைக் கேட்பதற்கு இனியவனாய் உள்ளாய். ஆனால், நீ கண்ணுக்கு இனியவனாயக (அழகானவனாக) இல்லை.

உன் பகைவர், உன்னைக் கண்டால் புறங்காட்டி ஓடுவதால் தழும்பில்லாத உடலோடு பார்ப்பதற்கு இனிமையானவர்களாக (அழகானவர்களாக) இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் செயல்கள் கேட்பதற்கு இனிமையானவையாக இல்லை.

அதனால், நீ ஒருவகையில் இனியவன்; அவர்களும் ஒரு வகையில் இனியவர்களாக உள்ளனர். உங்களுக்குள் வேறுபாடுகள் எவை? போரில் வெற்றியும், வீரக்கழல் அணிந்த திருவடிகளும், விரைவாகச் செல்லும் குதிரைகளும் உடைய உன்னைக் கண்டு இவ்வுலகம் வியக்கிறது. அதற்குக் காரணம் என்னவோ? தலைவா! அதை எனக்கு உரைப்பாயாக.

166. யாமும் செல்வோம்!

பாடியவர்: ஆவூர் மூலங் கிழார்(38, 40, 166, 177, 178, 261, 301). இவர் ஆவூர் மூலம் என்னும் ஊரைச் சார்ந்தவர். இவர் சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனையும், மல்லி கிழான் காரியாதியையும், பாண்டியன் கீரஞ்சாத்தனையும், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனையும் பாடியவர்.
பாடப்பட்டோன்: சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன். இவன் சோழநாட்டில் தஞ்சாவூருக்கு அருகில் உள்ள பூஞ்சாற்றுர் என்ற ஊரில் வசித்தவன். இவன் கௌண்டின்னிய கோத்திரத்தைச் சார்ந்தவனாதலால் கௌணியன் என்று அழைக்கப் பட்டான். விண்ணன் என்பது இவன் தந்தையின் பெயர். இவன் இயற் பெயர் தாயன்.
பாடலின் பின்னணி: ஒரு சமயம், சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் ஒரு வேள்வி நடத்தினான். அவ்வேள்விக்கு ஆவூர் மூலங் கிழார் சென்றிருந்தார். அவ்வேள்வியின் சிறப்பையும் விண்ணந்தாயனின் வள்ளல் தன்மையையும் இப்பாடலில் ஆவூர் மூலங் கிழார் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: பார்ப்பன வாகை. கல்வி கேள்விகளால் சிறந்த பார்ப்பானின் வேள்விச் சிறப்பையும் வெற்றியையும் புகழ்ந்து பாடுவது.

நன்றாய்ந்த நீள்நிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகாது
ஒன்றுபுரிந்த ஈரிரண்டின்
ஆறுணர்ந்த ஒருமுதுநூல்
5 இகல்கண்டோர் மிகல்சாய்மார்
மெய்அன்ன பொய்உணர்ந்து
பொய்ஓராது மெய்கொளீஇ
மூவேழ் துறையும் முட்டின்று போகிய
உரைசால் சிறப்பின் உரவோர் மருக!
10 வினைக்குவேண்டி நீபூண்ட
புலப்புல்வாய்க் கலைப்பச்சை
சுவல்பூண்ஞாண் மிசைப்பொலிய;
மறம்கடிந்த அருங்கற்பின்
அறம்புகழ்ந்த வலைசூடிச்
15 சிறுநுதல்பேர் அகல்அல்குல்
சில சொல்லின் பலகூந்தல் நின்
நிலைக்குஒத்தநின் துணைத்துணைவியர்
தமக்குஅமைந்த தொழில்கேட்பக்;
காடுஎன்றா நாடுஎன்றுஆங்கு
20 ஈரேழின் இடம்முட்டாது
நீர்நாண நெய்வழங்கியும்
எண்நாணப் பலவேட்டும்
மண்நாணப் புகழ்பரப்பியும்
அருங்கடிப் பெருங்காலை
25 விருந்துற்றநின் திருந்துஏந்துநிலை
என்றும் காண்கதில் அம்ம யாமே குடாஅது
பொன்படு நெடுவரைப் புயல்ஏறு சிலைப்பின்
பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்
தண்புனற் படப்பை எம்மூர் ஆங்கண்
30 உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்
செல்வல் அத்தை யானே; செல்லாது
மழைஅண் ணாப்ப நீடிய நெடுவரைக்
கழைவளர் இமயம் போல
நிலீஇயர் அத்தைநீ நிலமிசை யானே.

அருஞ்சொற்பொருள்:
1.ஆய்தல் = நுணுகி அறிதல். 2.முது முதல்வன் = இறைவன் (சிவன்); நிமிர் = மேன்மை. 3. புரிதல் = செய்தல். 5. இகல் = மாறுபாடு; மிகல் = வெற்றி, செருக்கு; சாய்தல் = அழிதல்; ஆர்வு = விருப்பம். 7. ஓராது = ஆராயாது; கொளீஇ = கொண்டு. 8. துறை = காரியம் ( வேள்வி); முட்டு = குறைவு. 9. உரவோர் = அறிஞர், முனிவர்; மருகன் = வழித்தோன்றல். 11. புலம் = வயல், இடம்; புல்வாய் = கலைமான். 12. சுவல் = தோள்மேல்; ஞாண் = கயிறு; மிசை = மேல். 13. மறம் = மிகுதி; கடிந்த = நீக்கிய. 14. வலை = ஒரு வகை ஆடை. 20. முட்டாது = குறையாது. 24. கடி = வேள்வி; பெருகுதல் = நிறைதல். 26. தில், அம்ம - அசைச் சொல். 27. வரை = மலை; சிலைத்தல் = முழங்குதல்; புயல் = மேகம்; ஏறு = இடி. 28. புரக்கும் = க்காக்கும். 29. படப்பை = தோட்டம், புழைக்கடை. 31. அத்தை - அசைச் சொல். 32. அண்ணாத்தல் = தலை நிமிர்தல், தலையெடுத்தல். 33. கழை = மூங்கில்.

கொண்டு கூட்டு: உரவோர் மருக, உன் ஏந்து நிலை என்றும் காண்போமாக; யாமும் பரிசில் கொண்டு கொண்டாடுவோமாகச் செல்வேன்; நீ இமயம் போல நிலைபெறுக.

உரை: மேன்மை பொருந்திய நீண்ட சடையை உடைய, எல்லாவற்றையும் நன்கு நுணுகி அறிந்த, முழுமுதற் கடவுளாகிய சிவனின் வாக்கிலிருந்து நீங்காது அறம் ஒன்றையே அடிப்படையாகக் கொண்ட, நான்கு பிரிவுகளும் ஆறு உறுப்புகளும் உடைய பழைய நூலாகிய வேதத்திற்கு மாறுபாடுகளைக் கண்டோரின் செருக்கை அழிக்க விரும்பி, அவரது மெய் போன்ற பொய்யை உணர்ந்து, அப்பொய்யை மெய்யென்று கருதாமல், மெய்யைக் கொண்டு இருபத்தொரு வேள்வித் துறைகளையும் குறையின்றிச் செய்து முடித்த, சொல்லுதற்கரிய சிறப்புடைய முனிவர்களின் (அறிஞர்களின்) வழித்தோன்றலே!

வேள்விக்காக, நீ காட்டு மானின் தோலை உன் பூணுலுக்கு மேல் அணிந்திருக்கிறாய். குற்றமற்ற, அரிய கற்பும், அற நூல்களில் புகழப்பட்ட வலை என்னும் ஆடையையும், சிறிய நெற்றியையும், அகன்ற இடையையும், அதிகமாகப் பேசாத இயல்பையும், மிகுதியான கூந்தலையும் உடைய, உன் தகுதிக்கேற்ற துணைவியராகிய உன் மனைவியர் அவர்களுக்கு இடப்பட்ட பணிகளைச் செய்கின்றனர். காட்டிலும் நாட்டிலும் வாழ்ந்த பதினான்கு பசுக்களின் நெய்யை, நீரைவிட அதிகமாக வழங்கி, எண்ணற்ற பல வேள்விகளைச் செய்து உலகெங்கும் புகழ் பரப்பிய, அரிய வேள்வி நிறைவு பெறும் வேளையில் விருந்தினரோடு கூடியிருக்கும் உன் மேன்மையான நிலையை இன்றுபோல் நாங்கள் என்றும் காண்போமாக; மேற்கில், பொன் மிகுதியாக உள்ள உயர்ந்த மலையில் மேகம் இடியோடு முழங்கியதால் மலர்ந்த பூக்களைச் சுமந்து வரும் காவிரியில் புது வெள்ளம் பெருகி வருவதால் குளிர்ந்த நீருடைய தோட்டங்களுடைய எங்கள் ஊரில், நாங்கள் உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடியும் மகிழ்வோம்; யான் செல்கிறேன். மேகங்கள் அகலாது மழை பொழியும் உயர்ந்த மலைகளையுடைய, மூங்கில் வளரும் இமயம் போல் நீ இவ்வுலகில் வாழ்வாயாக.

சிறப்புக் குறிப்பு: இரிக்கு, யஜுர், சாம, அதர்வணம் என்பவை வேதத்தின் நான்கு பிரிவுகளாகும். சிட்சை, நிருத்தம், சந்தசு, சோதிடம், கற்பம், வியாகர்ணம் என்ற ஆறு நூல்களும் வேதத்தின் ஆறு அங்கங்களாகும்.

Monday, May 3, 2010

165. எனக்குத் தலை ஈய வாள் தந்தனனே!

பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 151-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: குமணன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 158-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: கடையேழு வள்ளல்களின் காலத்திற்குப் பிறகு கொடையிற் சிறந்தவனாக விளங்கியவன் வள்ளல் குமணன். அவன் முதிர மலைப் பகுதியை ஆண்டு வந்தான். அவன் பெரும் புகழோடு நல்லாட்சி நடத்தியதைக் கண்டு பொறாமை அடைந்த அவன் இளவல் இளங்குமணன், குமணனோடு போரிட்டான். அப்போரில் தோற்ற குமணன், காட்டிற்குச் சென்று அங்கே வழ்ந்து வந்தான். அச்சமயம், பெருந்தலைச் சாத்தனார் குமணனைப் பாடிப் பரிசில் பெறச் சென்றார். அவன் அவருக்கு எதுவும் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். அவ்வாறு இருப்பினும், அவன் பெருந்தலைச் சாத்தனார் பரிசு ஒன்றுமில்லாமல் திரும்பிச் செல்வதை விரும்பவில்லை. ஆகவே, அவன் தன் தலையை வெட்டி, அதைக் கொண்டுபோய் இளங்குமணனிடம் கொடுத்தால் அவன் பெருமளவில் பரிசு கொடுப்பான் என்று கூறித் தன் வாளைப் பெருந்தலைச் சாத்தனாரிடம் கொடுத்தான். அவ்வாளைப் பெற்றுக் கொண்டு, பெருந்தலைச் சாத்தனார் குமணன் சொல்லியவாறு செய்யாமல், இளங்குமணனிடம் சென்று தான் குமணனைச் சந்தித்ததையும் அவன் வாள் கொடுத்ததையும் இப்பாடலில் கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் விடை. பரிசில் பெற வந்த ஒருவன் அதனை பெற்றோ அல்லது பெறாமலோ, பரிசில் அளிப்பவனிடம் விடை பெறுதல்.

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே;
துன்னரும் சிறப்பின் உயர்ந்த செல்வர்
இன்மையின் இரப்போர்க்கு ஈஇ யாமையில்
5 தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே;
தாள்தாழ் படுமணி இரட்டும் பூனுதல்
ஆடியல் யானை பாடுநர்க்கு அருகாக்
கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப்
பாடி நின்றெனன் ஆகக் கொன்னே
10 பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல்என்
நாடுஇழந் ததனினும் நனிஇன் னாதுஎன
வாள்தந் தனனே தலைஎனக்கு ஈயத்
தன்னிற் சிறந்தது பிறிதுஒன்று இன்மையின்
ஆடுமலி உவகையோடு வருவல்
15 ஓடாப் பூட்கைநின் கிழமையோன் கண்டே.

அருஞ்சொற்பொருள்:
1.மன்னா = நிலை இல்லாத; மன்னுதல் = நிலை பெறுதல். 2. நிறீஇ = நிலை நிறுத்தி. 3. துன்னுதல் = அணுகுதல். 5. தொடர்பு = தொடர்ச்சி, ஒழுங்கு. 6. படு = பெரிய; இரட்டல் = ஒலித்தல்; பூ = புள்ளி; நுதல் = நெற்றி. 7. அருகா = குறையாத. 8. வய = வலிய; மான் = குதிரை; தோன்றல் = அரசன், தலைவன். 9. கொன்னே = வறிதே. 11. நனி = மிகவும். 14. ஆடு = வெற்றி; மலி = மிகுந்த. 15. பூட்கை = கொள்கை; கிழமையோன் = உரிமையோன்.

உரை: நிலையில்லாத இவ்வுலகில் நிலைபெற நினைத்தவர்கள் தம் புகழை நிறுவித் தாம் இறந்தனர். அணுகுதற்கரிய சிறப்புடைய செல்வந்தர்கள் வறுமையால் இரப்பவர்களுக்கு ஒன்றும் ஈயாததால், முற்காலத்தில் வாழ்ந்த வள்ளல்களின் வரிசையில் சேராதவர்களாக உள்ளனர். கால்வரைத் தாழ்ந்து ஒன்றோடு ஒன்று மாறி மாறி ஒலிக்கும் பெரிய மணிகளும், நெற்றியில் புள்ளிகளும், அசையும் இயல்பும் உடைய யனைகளை, பாடிவருபவர்க்குக் குறையாது கொடுக்கும் அழிவில்லாத நல்ல புகழையும், வலிய குதிரைகளையும் உடைய தலைவனாகிய குமணனைப் பாடி நின்றேன். பெருமை பெற்ற பரிசிலர் பரிசு பெறாமல் வறிதே செல்லுதல், தான் நாடு இழந்ததைவிட மிகவும் கொடுமையானது என்று கூறித் தன் தலையை எனக்குப் பரிசாக அளிப்பதற்காக என்னிடம் வாளைக் கொடுத்தான். தன்னிடம் தன்னைவிடச் சிறந்த பொருள் யாதும் இல்லாமையால் அவன் அவ்வாறு செய்தான். போரில் புறம் காட்டி ஓடாத கொள்கையுடைய உன் தமையனைக் கண்டு வெற்றி மிகுந்த மகிழ்ச்சியோடு நான் உன்னிடம் வந்தேன்.

சிறப்புக் குறிப்பு: உலகில் நிலைபெற்று இருப்பது புகழைத் தவிர வேறொன்றும் இல்லை என்று திருவள்ளுவர் கூறுவது இங்கு குறிப்பிடத் தக்கது.

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல். (குறள் - 233)

பிறர் வறுமையை அறிந்து அவர்களுக்கு உதவி செய்பவன் (ஒப்புரவு செய்பவன்) வருந்துவது அவனால் பிறருக்கு உதவி செய்ய முடியாத நிலையில்தான் என்ற கருத்தைத் திருவள்ளுவர்,

நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செய்யும்நீர
செய்யாது அமைகலா வாறு. (குறள் - 219)

என்று ஒப்புரவு என்னும் அதிகாரத்தில் கூறுகிறார். திருவள்ளுவர் கருத்தும், இப்பாடலில் குமணன் தன்னால் பெருந்தலைச் சாத்தனாருக்குப் பரிசு கொடுக்க முடியவில்லையே என்று வருந்துவதும் ஒத்திருப்பது குறிப்பிடத் தக்கது.

164. வளைத்தாயினும் கொள்வேன்!

பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 151-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: குமணன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 158-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: இப்பாடலில், தன் வறுமையையும் தன் மனைவி படும் துயரத்தையும் குமணனிடம் எடுத்துரைத்துத், தனக்குப் பரிசில் அளிக்குமாறு பெருந்தலைச் சாத்தனார் குமணனை வேண்டுகிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் விரும்பிப் புரவலரிடம் சென்று தன் விருப்பத்தைக் கூறுதல்.

ஆடுநனி மறந்த கோடுஉயர் அடுப்பின்
ஆம்பி பூப்பத் தேம்புபசி உழவாப்
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
5 சுவைத்தொறும் அழூஉம்தன் மகத்துமுக நோக்கி
நீரொடு நிறைந்த ஈர்இதழ் மழைக்கண்என்
மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ
நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண!
என்நிலை அறிந்தனை யாயின் இந்நிலைத்
10 தொடுத்தும் கொள்ளாது அமையலென்; அடுக்கிய
பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ்
மண்ணமை முழவின் வயிரியர்
இன்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே.

அருஞ்சொற்பொருள்:
1.அடுதல் = சமைத்தல்; நனி = மிகவும்; கோடு = பக்கம். 2. ஆம்பி = காளான்; தேம்பல் = இளைத்தல், மெலிதல், வாடல்; உழத்தல் = வருந்துதல். 3. திரங்கி = தளர்ந்து. 4. இல்லி = துளை; தூர்த்தல் = நிரப்புதல். 7. எவ்வம் = துன்பம், வெறுப்பு. 8. படர்தல் = செல்லுதல். 10. தொடுத்தும் = வளைத்தும். 11 பச்சை = தோல். 12. மண் = மார்ச்சனை. 12. வயிரியர் = கூத்தர்.

உரை: சமைத்தலை முற்றிலும் மறந்த உயர்ந்த பக்கங்களையுடைய அடுப்பில் காளான் பூத்திருக்கிறது. உடல் மெலிந்து வருந்தி, பால் இல்லாததால் தோலோடு சுருங்கித் துளை மூடிய பயனில்லாத வற்றிய முலையச் சுவைத்து அழும் என் குழந்தையின் முகத்தை நோக்கி, நீர் மல்கிய ஈரம் படிந்த இமைகளைக்கொண்ட கண்களுடைய என் மனைவியின் துன்பத்தை நினைத்து உன்னை நாடி வந்தேன். நல்ல முறையில் போரிடும் குமணா! என் நிலையை நீ அறிந்தாயாயின், இந்த நிலையில் உன்னை வளைத்துப் பிடித்துப் பரிசில் பெறாமல் விடமாட்டேன். பலவாக அடுக்கிய, இசையமைந்த நரம்புகளையுடைய, தோலால் போர்த்தப் பட்ட நல்ல யாழையும், மார்ச்சனை பூசிய மத்தளத்தையும் உடைய கூத்தர்களின் வறுமையைத் தீர்க்கும் குடியில் பிறந்தவனே!

163. எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோயே!

பாடியவர்: பெருஞ்சித்திரனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 158-இல் காணலாம்.
பாடப்பட்டோர்: பெருஞ்சித்திரனாரின் மனைவி.
பாடலின் பின்னணி: குமணனிடம் பரிசு பெற்ற பெருஞ்சித்திரனார், தன் இல்லத்திற்குச் சென்று, தான் குமணனிடமிருந்து பரிசாகப் பெற்ற செல்வத்தை எல்லோரோடும் பகிர்ந்து கொள்ளுமாறு தன் மனைவியிடம் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.

நின் நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும்
பன்மாண் கற்பின்நின் கிளைமுத லோர்க்கும்
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்
5 இன்னோர்க்கு என்னாது என்னோடும் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே!
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேல் குமணன் நல்கிய வளனே.

அருஞ்சொற்பொருள்:
1.நயந்து = விரும்பி; உறைதல் = வாழ்தல். 2. மாண் = மடங்கு; முதலோர் = மூத்தோர். 3. கடும்பு = சுற்றம்; யாழ - முன்னிலை அசைச் சொல். 4. குறி எதிர்ப்பு = எதிர் பார்ப்பு. 5. சூழ்தல் = ஆராய்தல், கலந்து ஆலோசித்தல். 6. வல்லாங்கு = நல்ல முறையில் (சிறப்பாக).

கொண்டு கூட்டு: மனை கிழவோய்! குமணன் நல்கிய வளன் நீயும் எல்லோர்க்கும் கொடுமதி எனக் கூட்டுக.

உரை: என் மனைவியே! பழங்கள் தொங்கும் மரங்கள் நிறைந்த முதிரமலைத் தலைவனும் செவ்விய வேலையுடையவனுமாகிய குமணன் கொடுத்த இந்தச் செல்வத்தை, உன்னை விரும்பி வாழ்பவர்க்கும், நீ விரும்பி வாழ்பவர்க்கும், பல வகைகளிலும் சிறந்த கற்புடைய உனது சுற்றத்தாருள் மூத்தோருக்கும், நமது சுற்றத்தாரின் கொடிய பசி நீங்குவதற்காக உனக்குக் கடன் கொடுத்தோர்க்கும், மற்றும் இன்னவர்களுக்கு என்னாமல், என்னையும் கலந்து ஆலாசிக்காமல், இப்பொருளை வைத்து நாம் நன்றாக வாழலாம் என்று எண்ணாது அதை எல்லோர்க்கும் கொடு.

162. இரவலர்அளித்த பரிசில்!

பாடியவர்: பெருஞ்சித்திரனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 158-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: இளவெளிமான். இளவெளிமான், வெளிமான் என்னும் குறுநில மன்னனின் இளவல்.
பாடலின் பின்னணி: இளவெளிமான் தன் தகுதி அறிந்து தனக்குப் பரிசளிக்கவில்லை என்று எண்ணி, அவன் அளித்த பரிசிலை ஏற்க மறுத்து,பெருஞ்சித்திரனார் குமணனிடம் பரிசு பெறச் சென்றார். குமணன், பெருஞ்சித்திரனாருக்குப் பெருமளவில் பரிசளித்தான். பரிசு பெற்ற பெருஞ்சித்திரனார், தன் ஊருக்குப் போகாமல், இளவெளிமான் ஊருக்குச் சென்று குமணன் அளித்த யானை ஒன்றை, இளவெளிமானின் காவல் மரத்தில் கட்டி, அதைத் தான் அவனுக்கு அளித்த பரிசு என்று கூறிச் சென்றார். மற்றும், இப்பாடலில் “இரப்போர்க்குப் பொருள் கொடுக்கும் புரவலன் நீ அல்லன்; ஆனால், பொருள் கொடுத்து உதவும் புரவலர்கள் இல்லாமலும் இல்லை. உலகில் இரவலர்களும் புரவலர்களும் உள்ளனர் என்பதை நீ அறிவாயாக” என்று அவனுக்கு அறிவுரை கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் விடை. பரிசில் பெற வந்த ஒருவன் அதனை பெற்றோ அல்லது பெறாமலோ, பரிசில் அளிப்பவனிடம் விடை பெறுதல்.

இரவலர் புரவலை நீயும் அல்லை;
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்;
இரவலர் உண்மையும் காண்இனி; இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண் இனி; நின்ஊர்க்
5 கடிமரம் வருந்தத் தந்துயாம் பிணித்த
நெடுநல் யானைஎம் பரிசில்;
கடுமான் தோன்றல் செல்வல் யானே.

அருஞ்சொற்பொருள்:
5.கடிமரம் = காவல் மரம். 7. கடுமான் = விரைவாகச் செல்லும் குதிரை; தோன்றல் = அரசன், தலைவன்

உரை: இரப்பவர்களுக்குப் பொருள் கொடுத்து உதவும் புரவலன் நீ அல்லன். இரப்பவர்களுக்குப் பொருள் கொடுத்து உதவும் புரவலர்கள் இல்லாமலும் இல்லை. இரவலர்கள் உள்ளனர் என்பதையும் அவர்களுக்குப் பொருள் கொடுத்து உதவும் புரவலர்களும் உள்ளனர் என்பதையும் நீ அறிந்து கொள்வாயாக. உன் ஊரில் உள்ள காவல் மரம் வருந்துமாறு அதில் நான் கட்டிய பெரிய நல்ல யானை, நான் உனக்கு அளிக்கும் பரிசில். விரைவாகச் செல்லும் குதிரைகளையுடைய தலைவா! நான் செல்கிறேன்.

161. வேந்தர் காணப் பெயர்வேன்!

பாடியவர்: பெருஞ்சித்திரனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 158-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: குமணன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 158-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: இளவெளிமான் அளித்த பரிசிலை ஏற்க மறுத்து, பெருஞ்சித்திரனார் குமணிடம் பரிசில் பெறச் சென்றார். வறுமையில் வாடும் தன் மனைவியை நினைத்து வாடும் அவர் மனத்தை அறிந்த குமணன், அவருக்குப் பெருமளவில் பரிசளிக்க நினைத்தான். அந்நிலையில், பெருஞ்சித்திரனார் குமணன் முன் நின்று, “அரசே, நான் மலை போன்ற யானையின் மீது ஏறி என் ஊருக்குச் செல்ல விரும்புகிறேன். நான் யானை மீது வருவதைக் கண்டு என் மனைவி வியப்படைய வேண்டும். என் தகுதியை ஆராயாமல், உன் தகுதியை ஆராய்ந்து எனக்குப் பரிசு வழங்குக. எனக்குப் பரிசு கொடுக்காத மன்னர்கள், நான் உன்னிடம் பெறும் பரிசுகளைக் கண்டு நாணுமாறு எனக்கு நீ பரிசளிக்க வேண்டுகிறேன்.” என்று இப்பாடலில் கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.

நீண்டொலி அழுவம் குறைய முகந்துகொண்டு
ஈண்டுசெலல் கொண்மூ வேண்டுவயின் குழீஇப்
பெருமலை யன்ன தோன்றல சூல்முதிர்பு
உரும்உரறு கருவியொடு பெயல்கடன் இறுத்து
5 வளமழை மாறிய என்றூழ்க் காலை
மன்பதை யெல்லாம் சென்றுணக் கங்கைக்
கரைபொரு மலிநீர் நிறைந்து தோன்றியாங்கு
எமக்கும் பிறர்க்கும் செம்மலை யாகலின்
அன்பில் ஆடவர் கொன்றுஆறு கவரச்
10 சென்றுதலை வருந அல்ல அன்பின்று
வன்கலை தெவிட்டும் அருஞ்சுரம் இறந்தோர்க்கு
இற்றை நாளொடும் யாண்டுதலைப் பெயரஎனக்
கண்பொறி போகிய கசிவொடு உரன்அழிந்து
அருந்துயர் உழக்கும்என் பெருந்துன் புறுவிநின்
15 தாள்படு செல்வம் காண்டொறும் மருளப்
பனைமருள் தடக்கையொடு முத்துப்பட முற்றிய
உயர்மருப்பு ஏந்திய வரைமருள் நோன்பகடு
ஒளிதிகழ் ஓடை பொலிய மருங்கில்
படுமணி இரட்ட ஏறிச் செம்மாந்து
20 செலல்நசைஇ உற்றனென் விறல்மிகு குருசில்!
இன்மை துரப்ப இசைதர வந்துநின்
வண்மையில் தொடுத்தஎன் நயந்தனை கேண்மதி!
வல்லினும் வல்லேன் ஆயினும் வல்லே
என்அளந்து அறிந்தனை நோக்காது சிறந்த
25 நின்அளந்து அறிமதி பெரும என்றும்
வேந்தர் நாணப் பெயர்வேன்; சாந்தருந்திப்
பல்பொறிக் கொண்ட ஏந்துஎழில் அகலம்
மாண்இழை மகளிர் புல்லுதொறும் புகல
நாள்முரசு இரங்கும் இடனுடை வரைப்பின்நின்
30 தாள்நிழல் வாழ்நர் நன்கலம் மிகுப்ப
வாள்அமர் உழந்தநின் தானையும்
சீர்மிகு செல்வமும் ஏத்துகம் பலவே.

அருஞ்சொற்பொருள்:
1.நீண்ட = நெடிய (பெரிய); அழுவம் = கடல். 2. ஈண்டு = விரைவு; கொண்மூ = மேகம்; வயின் = இடம்; குழீஇ = திரண்டு. 3. சூல் = கருப்பம். 4. உரும் = இடி; உரறு = ஒலி; கருவி = துணைக்கரணம் (இடி, மின்னல்); இறுத்தல் = வடித்தல், தங்குதல் ( பெய்தல்). 5. என்றூஊழ் = கோடை. 6. மன்பதை = எல்லா மக்களும்; உண = உண்ண. 7. மலிதல் = நிறைதல். 11. கலை = ஆண்மான்; தெவிட்டல் = அசையிடுதல். 12. யாண்டு = ஆண்டு; 13. பொறி = ஓளி; கசிவு = ஈரம் (இரக்கம்); உரன் = வலிமை. 14. உழத்தல் = வருந்துதல்.15. மருளல் = வியத்தல். 16. மருள் = (போன்ற)உவமை உருபு. தடக்கை = பெரிய கை (துதிக்கை). 17. மருப்பு = கொம்பு (தந்தம்); வரை = மலை. மருள் = போன்ற; நோன் = வலிய; பகடு = ஆண் யானை. 18. ஓடை = யானையின் நெற்றிப் பட்டம்; மருங்கு = பக்கம். 19. இரட்டல் = மாறி மாறி ஒலித்தல். 20. நசை = விருப்பம்; விறல் = வெற்றி, வலிமை. 20. குருசில் = அரசன், தலைவன். 21. துரப்ப = துரத்த. 22. தொடுத்தல் = கோத்தல், சேர்த்தல்; நயம் = அன்பு 27. பொறி = புள்ளி (தேமல்); அகலம் = மார்பு. 28. புல்லுதல் = தழுவுதல்; புகலுதல் = விரும்புதல். 31. உழத்தல் = பழகுதல், வெல்லுதல்.

கொண்டு கூட்டு: அருந்துயர் உழக்கும் துன்புறுவி மருளப் பகடேறிச் செலல் நசைஇ, உற்றனென்; கேள்மதி; பெரும, மகளிர் புகலத் தாள்நிழல் வாழ்நர் நன்கல மிகுப்ப வாளமர் உழந்த நின் தானையும் செல்வமும் ஏத்துக பலவே எனக் கூட்டுக.

உரை: பெரிதாக ஒலிக்கும் கடலில் உள்ள நீர் குறையும் வகையில் அந்நீரை முகந்து கொண்டு, விரைந்து செல்லும் மேகங்கள் வேண்டிய இடத்துத் திரண்டு பெரிய மலை போல் தோன்றி, கருவுற்று, இடி, மின்னல் ஆகியவற்றுடன் கூடி முறையாகப் பெய்து வளத்தைத் தரும் மழை இல்லாத கோடைக் காலத்தில், உலகத்து உயிர்களெல்லாம் குடிப்பதற்காகக் கங்கை ஆறு கரை புரண்டு ஓடும் அளவிற்கு நீர் நிறைந்ததாக உள்ளது. எமக்கும் பிறர்க்கும் நீ அது (கோடையிலும் நீர் நிறைந்த கங்கையைப்) போன்ற தலைவன்.

அன்பில்லாத வழிப்பறிக் கள்வர், வழியில் செல்வோரைக் கொன்று, அவர்களின் பொருட்களைப் பறித்தலால், முடிவற்ற காட்டு வழி செல்லுவதற்கு எளிதானதல்ல. தம் உயிர் மீது அன்பில்லாமல், வலிய கலைமான்கள் (ஆண் மான்கள்) அசைபோட்டுத் திரியும் அரிய காட்டு வழியில் சென்றவர்க்கு, “இன்றோடு ஒரு ஆண்டு கழிந்தது” என்று எண்ணிக் கண்களில் ஒளியிழந்து, இரக்கத்தோடு உடல் வலிமையும் இழந்து, பொறுத்தற்கரிய துன்பமுற்று வறுமையில் என் மனைவி வாடுகிறாள். உன் முயற்சியால் வந்த செல்வத்தை அவள் காணுந்தோறும் வியக்கும் வகையில், பனை போன்ற துதிக்கையையும், முத்து உண்டாகுமாறு முதிர்ந்த தந்தங்களையும் உடைய மலை போன்ற, ஓளி திகழும் நெற்றிப் பட்டங்கள் அழகு செய்யும் யானையின் இரு பக்கங்களிலும் தொங்கும் மணிகள் மாறி மாறி ஒலிக்க அந்த யானை மீது ஏறிப் பெருமையுடன் செல்ல விரும்புகிறேன். வெற்றிப்புகழ் மிகுந்த தலைவனே!

எனது வறுமை துரத்த, உனது புகழ் என்னைக் கொண்டு வர நான் இங்கு வந்தேன். உனது கொடைத்திறத்தைப் பற்றிய சில செய்திகளை நான் பாடல்களாகத் தொடுத்ததை அன்போடு கேட்பாயாக. நான் அவற்றைச் சொல்வதில் வல்லவனாக இருந்தாலும் இல்லாவிட்டலும் என் அறிவை அளந்து ஆராயாமல், சிறந்த உன்னை அளந்து அறிவாயாக.

பெரும! நீ எனக்கு அளிக்கும் பரிசிலைக் கண்டு மற்ற மன்னர்கள் எந்நாளும் நாணுமாறு நான் திரும்பிச் செல்வேன். சந்தனம் பூசியதும், பல அழகிய புள்ளிகள் (தேமல்கள்) நிறைந்ததுமான உன் அழகான மார்பைச் சிறப்புடை மகளிர் தழுவுந்தோறும் விரும்புபவர்களாகுக. நாளும் முரசு ஒலிக்கும் உன் நாட்டில், உன் நிழலில் வாழும் மக்கள் நல்ல அணிகலன்கள் மிகுந்தவர்களாக இருப்பார்களாக. வாட்போர் புரிவதில் பயிற்சி பெற்ற உன் படையையும், உன் சிறந்த செல்வத்தையும் பலவாக வாழ்த்துவோம்.