Monday, August 10, 2009

96. அவன் செல்லும் ஊர்!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் அதியமான் பொகுட்டெழினி. இவன் கொடைச் சிறப்பும் வெற்றிச் சிறப்பும் உடையவன். இவனைப் புகழ்ந்து அவ்வையார் இயற்றிய மூன்று (96, 102, 392) பாடல்கள் புறநானூற்றில் உள்ளன.

பாடலின் பின்னணி: அவ்வையார் பொகுட்டெழினியிடம் மிகுந்த அன்பு உடையவர். அவன் அழகிலும் வலிமையிலும் சிறந்தவன். அவனுடைய அழகாலும் வலிமையாலும் அவனுக்குத் தீங்கு வரக்கூடும் என்ற கருத்தை இப்பாடலில் அவ்வையார் கூறுகிறார்.

திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்
திரண்டுநீடு தடக்கை என்ஐ இளையோற்கு
இரண்டு எழுந்தனவால் பகையே; ஒன்றே,
பூப்போல் உண்கண் பசந்து தோள் நுணுகி
5 நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றோ
‘விழவுஇன்று ஆயினும், படுபதம் பிழையாது
மைஊன் மொசித்த ஒக்கலொடு துறைநீர்க்
கைமான் கொள்ளுமோ?’ என
உறையுள் முனியும்அவன் செல்லும் ஊரே.

அருஞ்சொற்பொருள்:
1. அலர்தல் = மலர்தல்; அம் = அழகு; பகடு = வலிமை, பெருமை (அகன்ற). 2. தடக்கை = பெரிய கை. 4. நுணுகுதல் = மெலிதல். 6. படு - மிகுதிக் குறிப்பு; பதம் = உணவு. 7. மை = செம்மறி ஆடு; ஊன் =தசை, புலால்; மொசித்தல் = உண்ணல்; ஒக்கல் = சுற்றம். 8. கைம்மான் = கைமான் = யானை. 9. உறையுள் = இருப்பிடம்; முனிதல் = வெறுத்தல்.

கொண்டு கூட்டு: என் ஐ இளையோர்க்கு பகை இரண்டு எழுந்தன; ஒன்று, மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றோ துறைநீர்க் கைமான் கொள்ளுமோ என உறையுள் முனியும் அவன் செல்லும் உரே எனக் கூட்டுக.

உரை: மலர்ந்த தும்பைப் பூவாலான மாலையை அணிந்த அழகிய அகன்ற மார்பினையும், திரண்டு நீண்ட பெரிய கையையும் உடைய என் தலைவன் அதியமானின் மகனுக்கு இரண்டு பகைகள் தோன்றி உள்ளன. ஒன்று, பூப்போன்ற, மைதீட்டிய கண்கள் பசந்து, தோள்கள் மெலிந்த பெண்கள் காதல் நோயால் இவன் மீது கொண்ட சினம். மற்றொன்று, விழா இல்லையாயினும், தவறாது மிகுந்த அளவில் ஆட்டுக்கறியை உண்ட சுற்றத்தினரோடு இவன் வேறு வேறு ஊர்களுக்குச் செல்லும் பொழுது அங்குள்ள மக்கள், இவன் யானைகள் அவர்களுடைய நீர்த்துறைகளில் இறங்கி அங்குள்ள நீரை எல்லாம் குடித்துவிடுமோ என்று அவர்கள் கொண்ட வெறுப்பு. இவை இரண்டும் இவனுக்குப் பகையாகும்.

சிறப்புக் குறிப்பு: பொகுட்டெழினியின் அழகிலும் இளமையிலும் மயங்கிய பெண்கள் அவன் மீது காதல் கொண்டு தங்கள் காதல் நிறைவேராததால் அவன் மீது கோபம் கொள்கிறார்கள். மற்றும், அவன் தன் படையுடன் வேறு வேறு ஊர்களுக்குச் செல்லும் பொழுது அங்குள்ள மக்கள் அவன் யானைகள் தங்கள் குளங்களைப் பாழ் செய்துவிடுமோ என்று அவன் மீது வெறுப்படைகிறார்கள். இந்த இரண்டு காரணங்களால் அவனுக்குப் பெண்களும் அவன் செல்லும் ஊரில் உள்ள மக்களும் பகைவர்கள் என்று கூறி, அவ்வையார் பொகுட்டெழினியின் அழகையும் வெற்றிகளையும் பாராட்டுகிறார்.

95. புதியதும் உடைந்ததும்!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: தொண்டை நாட்டை ஆண்ட தொண்டைமான் அதியமான் மீது பகை கொண்டான். தன்னிடத்துப் படைவலிமை அதிகமாக இருப்பதாக எண்ணி மிகவும் செருக்கடைந்திருந்தான். தொண்டைமானின் செருக்கை அறிந்த அதியமான், தன் படை வலிமையையும் தொண்டைமான் தோல்வி அடைவது உறுதி என்பதையும் அவனுக்கு அறிவுறுத்துமாறு அவ்வையாரைத் தன் தூதுவராகத் தொண்டைமானிடம் அனுப்பினான். அவ்வையார் தொண்டைமானைக் காணச் சென்றார். தன் படைவலிமையை எண்ணிச் செருக்கொடு இருந்த தொண்டைமான், அவ்வையாரைத் தன் படைக்கலக் கொட்டிலுக்கு அழைத்துச் சென்று, தன் படைக்கருவிகளைப் பெருமையோடு காண்பித்தான். அவன் கருத்தை அறிந்த அவ்வையார், தொண்டைமானின் படைக்கலங்களைப் புகழ்வது போல் இகழ்ந்தும், அதியமானின் படைக்கலங்களை இகழ்வது போல் புகழ்ந்தும் இப்பாடலில் கூறுகிறார்.

திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: வாண் மங்கலம். அரசனுடைய வாளைப் புகழ்தல்.

இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய்அணிந்து
கடியுடை வியன்நக ரவ்வே; அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
5 கொல்துறைக் குற்றில மாதோ; என்றும்
உண்டாயின் பதம்கொடுத்து
இல்லாயின் உடன்உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே.

அருஞ்சொற்பொருள்:
1.இவ்வே = இவையே; பீலி = மயில் தோகை. 2. கண் = உடம்பு: திரள் = திரட்சி; நோன்மை = வலிமை; காழ் = காம்பு; திருத்துதல் = சீர்ப்படுத்துதல், அழகு செய்யப்படுதல். 3. கடி = காவல்; வியன் = அகன்ற; நகரம் = அரண்மனை; அவ்வே = அவையே. 4. கோடு = பக்கம்; நுதி = நுனி. 5. கொல் = கொல்லன்; துறை = இடம்; குற்றில் = கொட்டில் (சிறிய இடம்); மாது - அசைச் சொல். 6. பதம் = உணவு. 8. ஒக்கல் = சுற்றம். 9. வை = கூர்மை.

கொண்டுகூட்டு: எம் கோமான் வைந்நுதி வேல், கொல்துறைக் குற்றில; இவ்வே கடியுடை வியன்நகரவ்வே.

உரை: செல்வம் இருந்தால் மற்றவர்களுக்கு உணவளித்துப் பிறகு தான் உண்ணுவதும், செல்வம் இல்லையானால் (குறைந்தால்) தன் உணவைப் பிறரோடு பகிர்ந்து உண்ணும் பண்புடைய, வறிய சுற்றத்தார்களின் தலைவனாகிய பெருமைக்குரிய என் வேந்தன் அதியமானின் கூர்மையான வேல்கள், பகைவரைக் குத்தியதால் பக்கமும் நுனியும் முரிந்து கொல்லர்களின் சிறிய உலைக்களத்தில் எந்நாளும் உள்ளன. ஆனால், உன் படைக்கருவிகளான இவை, மயில் தோகை அணிவிக்கப்பட்டு, மாலை சூட்டப்பட்டு, வலிய திரண்ட பிடிகளை உடையதாய் நெய் பூசப்பட்டு, அழகு செய்யபட்டு காவல் மிக்க பெரிய இடத்தில் உள்ளன.

சிறப்புக் குறிப்பு: தூது என்ற அதிகாரத்தில், திருவள்ளுவர்,

கடனறிந்து காலம் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை. (குறள் - 687)
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது. (குறள் - 690)

என்கிறார். அதாவது, தன் கடமையை அறிந்து காலத்தையும் இடத்தையும் ஆராய்ந்து சிந்தித்து உரைப்பவன் சிறந்த தூதன். மற்றும், தான் கூறும் செய்தியால் தான் உயிரிழக்க நேரினும், தன்னாலான எல்லா முயற்சிகளையும் குறையாது செய்து தன் அரசனுக்கு நன்மை உண்டாக்குபவனே சிறந்த தூதன். இந்த குறட்பாக்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அவ்வையாரின் சொல்வன்மையும் செயலும் இருப்பதை இப்பாடலின் மூலம் நாம் அறிய முடிகிறது.

94. சிறுபிள்ளை பெருங்களிறு!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: அரசவையிலிருந்தாலும் போர்க்களத்திலிருந்தாலும் அவ்வையார்க்கும் அவர் போன்ற புலவர்களிடத்தும் அதியமான் இன்முகமும் இன்சொல்லும் உடையவனாக இருப்பதை வியந்து ” பெரும! நீ எமக்கு இனியவன்; ஆனால் உன் பகைவர்க்கு இன்னாதவன்” என்று அவ்வையார் இப்பாடலில் அதியமானைப் பாராட்டுகிறார்.

திணை: வாகை. வாகைப்பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தல்.
துறை: அரச வாகை. அரசனது வெற்றியைக் கூறுதல்.

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்,
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும எமக்கே; மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
5 இன்னாய் பெருமநின் ஒன்னா தோர்க்கே.

அருஞ்சொற்பொருள்:
1.குறு மாக்கள் = சிறுவர்கள்; கோடு = கொம்பு (தந்தம்); கழாஅல் = கழுவுதல். படிதல் = அமருதல் 4. துன்னுதல் = நெருங்குதல்; கடாம் = யானையின் மத நீர். 5. இன்னாய் = இனிமை இல்லாதவன்; ஒன்னாதோர் = பகைவர்

உரை: பெரும! ஊரில் உள்ள சிறுவர்கள் தனது வெண்மையான தந்தத்தைக் கழுவுவதற்கு நீர்த்துறையில் (பொறுமையாக) அமர்ந்து இருக்கும் பெரிய யானையைப் போல நீ எமக்கு இனிமையானவன். ஆனால், உன் பகைவர்க்கு, நீ நெருங்குதற்கு அரிய மதம் கொண்ட யானையைப் போல இன்னாதவன்.

93. பெருந்தகை புண்பட்டாய்!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: ஒரு சமயம் நடைபெற்ற போரில், அதியமான் பகைவர்கள் அனைவரையும் வென்றான். வெற்றி பெற்றாலும், அவன் போரில் பகைவர்களின் படைக்கருவிகளால் தாக்கப்பட்டு மார்பிலும் முகத்திலும் புண்பட்டான். போரில் வெற்றி வாகை சூடி விழுப்புண்ணோடு இருக்கும் அதியமானைக் கண்ட அவ்வையார் பெருமகிழ்ச்சி அடைந்தார். இப்பாடலில், “பெரும, உன்னால் போரில் தோற்கடிக்கப்பட்டவர்கள் சிதறியோடினார்கள். அவர்கள் அவ்வாறு தோற்று ஓடியதால், விழுப்புண் படாமல் நோயுற்று வாளால் வெட்டப்பட்டு அடக்கம் செய்யப்படும் இழிவிலிருந்து தப்பினர். மற்றும், பகைவர்கள் ஓடியதால், இனி போர்கள் நடைபெற வாய்ப்பில்லை; ஆகவே, இனி நீ போர்களில் வெற்றி பெறுவது எப்படி சாத்தியமாகும்?” என்று கூறுகிறார்.

திணை: வாகை. வாகைப்பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தல்.
துறை: அரச வாகை. அரசனது வெற்றியைக் கூறுதல்.

திண்பிணி முரசம் இழுமென முழங்கச்
சென்றுஅமர் கடத்தல் யாவது? வந்தோர்
தார்தாங் குதலும் ஆற்றார் வெடிபட்டு
ஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்
5 நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்
காதல் மறந்துஅவர் தீதுமருங் கறுமார்
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி
மறம்கந்து ஆக நல்லமர் வீழ்ந்த
10 நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கஎன
வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ
வரிஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து
அண்ணல் யானை அடுகளத் தொழிய
அருஞ்சமம் ததைய நூறிநீ
15 பெருந் தகை விழுப்புண் பட்ட மாறே.

அருஞ்சொற்பொருள்:
1.திண்மை = வலிமை; பிணி = கட்டு; இழும் - ஒலிக் குறிப்பு. 2. அமர் = போர்; கடத்தல் = வெல்லுதல்; யாவது = எவ்வாறு. 3. தார் = முற்படை; வெடிபடுதல் = சிதறுதல். 4. மரீஇய = மருவிய, தழுவிய; பீடு = பெருமை, வலிமை. 5. விளித்தல் = இறத்தல்; யாக்கை = உடல்; தழீஇய = தழுவிய. 6. மருங்கு = பக்கம், விலாப்பக்கம். 7. புரிதல் = விரும்பல். 8. திறம் = செவ்வை (செப்பம்), மேன்மை. 9. கந்து = பற்றுக்கோடு. 10. நீள் = உயரம், ஒளி; உழி = இடம். 11. போழ்தல் = பிளத்தல்; உய்ந்தனர் = தப்பினர்; மாதோ - அசைச் சொல்.12. ஞிமிறு = வண்டு, தேனீ;ஆர்க்கும் = ஒலிக்கும்; கடாம் = யானையின் மத நீர். 13. அடுகளம் = போர்க்களம். 14. சமம் = போர்; ததைதல் = நெருங்கல், சிதைதல்; நூறுதல் = வெட்டுதல், அழித்தல். 15. மாறு = ஆல்.

கொண்டு கூட்டு: பெருந்தகை, நீ அருஞ்சமம் ததைய நூறி விழுப்புண் பட்டவாற்றால் நின்னொடு எதிர்த்து வந்தோர் தாம் பீடில் மன்னர் விளித்த யாக்கை தழீஇ நீள் கழல் மறவர் செல்வுழுச் செல்கென வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் ஆதலின், இனி முரசு முழங்கச் சென்றமர் கடத்தல் யாவது எனக் கூட்டுக.

உரை: பெருந்தகையே! உன்னை எதிர்த்து வந்த பெருமை இல்லாத மன்னர்கள் உன்னுடைய முற்படையையே தாங்கமுடியாமல் சிதறி ஓடினர். அம்மன்னர்கள் (அவ்வாறு ஓடியதால்), நோயுற்று இறந்தவர்களின் உடலைத் தழுவி, அவர்கள் மேல் உள்ள ஆசையை மறந்து, அவர்கள் போரில் வாளால் இறக்காத குற்றத்தை (இழிவை) அவர்களிடத்தினின்று நீக்க வேண்டி, நான்கு வேதங்களையும் நன்கு கற்றறிந்து அறத்தை விரும்பும் பார்ப்பனர், செம்மையான, விரும்பத்தக்க பசுமை நிறமுள்ள புல்லைப் (தருப்பையைப்) பரப்பி, அதில் அவர்களின் உடலைக் கிடத்தி, “தமது ஆண்மையில் பற்றுடன் போரில் மாய்ந்த வீரக்கழலணிந்த வீரர்கள் செல்லும் இடத்திற்குச் செல்க” என வாளால் பிளந்து அடக்கம் செய்யப்படும் இழிவிலிருந்து தப்பினர். வரிகளை உடைய வண்டுகள் ஒலித்து வாயில் புகுகின்ற மதம் கொண்ட யானைகளைப் போர்க்களத்தில் நெருங்கி அழித்து விழுப்புண் பட்டதால், இனி வலிய கட்டமைந்த முரசம் “இழும்” என்னும் ஒலியுடன் முழங்குமாறு போரில் வெல்வது எப்படி? பகைவர்கள் ஓடியதால் இனி, போர்கள் நிகழ வாய்ப்பில்லை; அதனால் போரில் வெல்லும் வாய்ப்பும் இல்லை என்பது பொருள்.

92. மழலையும் பெருமையும்!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.

பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: அதியமான் அவ்வையார்க்கு அரிய நெல்லிக்கனியை அளித்ததால், அவர் மனம் மகிழ்ந்து, நாக்குழறிப் பலவாறாக அவனைப் புகழ்கிறார். அவற்றை அதியமான் அன்போடு கேட்கிறான். அந்நிலையில், அவன் அன்பை வியந்து அவ்வையார் இப்பாடலை இயற்றுகிறார்.

திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;
பொருள்அறி வாரா; ஆயினும், தந்தையர்க்கு
அருள்வந் தனவால் புதல்வர்தம் மழலை;
என்வாய்ச் சொல்லும் அன்ன; ஒன்னார்
5 கடிமதில் அரண்பல கடந்த
நெடுமான் அஞ்சி! நீஅருளல் மாறே.

அருஞ்சொற்பொருள்:
1. கொள்ளுதல் = ஏற்றுக் கொள்ளுதல்; புணர்தல் = பொருந்துதல். 2. அறிவரா = அறிய வாரா. 5. கடி = காவல்; கடத்தல் = வெல்லுதல். 6. மாறு = ஆல்

கொண்டு கூட்டு: புதல்வர் மழலை தந்தையர்க்கு அருள் வந்தன; அஞ்சி, நீ அருளுதலால் என் வாய்ச்சொல்லும் அன்ன எனக் கூட்டுக.

உரை: குழந்தைகளின் மழலை யாழிசையோடும் ஒத்து வராது; தாளத்தோடும் பொருந்தாது; பொருள் அறிவதற்கும் முடியாது. அது அவ்வாறு இருப்பினும், தந்தையர்க்கு அம்மழலைச் சொற்கள் குழந்தைகள் மீது அன்பை வரவழைக்கின்றன. பகைவர்களுடைய காவல் மதில்களையும் பல அரண்களையும் வென்ற அதியமான் நெடுமான் அஞ்சியே! என் சொற்களைக் கேட்டு நீ என்னிடம் அன்பு காட்டுவதால், என் சொற்களும் குழந்தைகளின் மழலைச் சொற்கள் போன்றனவே.

சிறப்புக் குறிப்பு: இப்பாடலில் அவ்வையார் மழலைச் சொற்களின் சிறப்பைக் கூறுவதைப்போல் திருவள்ளுவர்,

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். (குறள் - 66)

என்று கூறுகிறார்.