Thursday, August 16, 2012


341. இழப்பது கொல்லோ பெருங்கவின்!

பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 4-இல் காண்க.
 
பாடலின் பின்னணி: ஒரு தலைவனின் பெண்ணை, வேந்தன் ஒருவன் மணம் செய்துகொள்ள விரும்புகிறான். ஆனால் அப்பெண்ணின் தந்தை அவளை அவ்வேந்தனுக்கு மணம் செய்விக்க மறுக்கிறான். அதனால், வேந்தனுக்கும் பெண்ணின் தந்தைக்கும் போர் தொடங்கும் நிலை உருவாகிறது. ‘நான் நாளை அவளை மணப்பேன்; அல்லது அவள் தந்தையோடு போர் செய்து இறப்பேன்’ என்று வேந்தன் வஞ்சினம் கூறுகிறான். இந்தக் காட்சியைக் கண்ட புலவர் பரணர், வேந்தனுக்கும் பெண்ணின் தந்தைக்கும் நடைபெறப்போகும் போரில் அவ்வூர் அதன் அழகை இழந்துவிடுமோ என்று வருந்துகிறார். அவர் வருத்தத்தை இப்பாடலில் காணலாம்.

திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.
துறை: மகட்பாற் காஞ்சி. ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.

வேந்துகுறை யுறவுங் கொடாஅன் ஏந்துகோட்டு
அம்பூந் தொடலை அணித்தழை அல்குல்
செம்பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை;
எழுவிட்டு அமைத்த திண்நிலைக் கதவின்
அரைமண் இஞ்சி நாட்கொடி நுடங்கும்                                              5
.. .. .. . .. .. ... .. .. .. ..
புலிக்கணத் தன்ன கடுங்கண் சுற்றமொடு
மாற்றம் மாறான் மறலிய சினத்தன்
பூக்கோள் எனஏஎய்க் கயம்புக் கனனே;
விளங்குஇழைப் பொலிந்த வேளா மெல்லியல்
சுணங்கணி வனமுலை அவளொடு நாளை                                          10

மணம்புகு வைகல் ஆகுதல் ஒன்றோ
ஆரமர் உழக்கிய மறங்கிளர் முன்பின்
நீள்இலை எஃகம் அறுத்த உடம்பொடு
வாரா உலகம் புகுதல் ஒன்றெனப்
படைதொட் டனனே குருசில்; ஆயிடைக்                                            15

களிறுபொரக் கலங்கிய தண்கயம் போலப்
பெருங்கவின் இழப்பது கொல்லோ
மென்புல வைப்பின்இத் தண்பணை ஊரே!

அருஞ்சொற்பொருள்: 1. குறையுறல் = பணிந்து கேட்டல். 2. தொடலை = மாலை. 4. எழு = கணையமரம். 5. இஞ்சி = புறச்சுவர்; நுடங்கல் = அசைதல். 7. மாற்றம் = வஞ்சின மொழி; கணம் = கூட்டம்; மறல் = போர். 8.பூக்கோள் = போருக்கேற்ற பூவைப் பெற்றுக் கொள்ளுதல்; ஏய் = ஏவி;கயம் = குளம். 9. வேள்தல் = மணம் புரிதல்.  10. சுணங்கு = தேமல்; வனம் = அழகு. 11. வைகல் = நாள். 12. உழக்குதல் = கலக்குதல்; கிளர்தல் = எழுதல்; முன்பு = வலிமை. ஆயிடை = அவ்விடத்து. 13. எஃகம் = வேல்; மறுத்தல் = தடுத்தல். 16. கயம் = குளம். 17. கவின் = அழகு. 18. பணை = மருதநிலம்.

கொண்டு கூட்டு: தந்தை கொடானாய், மாறானாய், சினத்தனாய்க் கயம்புக்கனன்; குருசில் நாளை ஆகுதல் ஒன்று; வாரா உலகம் புகுதல் ஒன்று எனப் படை தொட்டனன்; இத்தண்பனை ஊர் கவின் இழப்பது கொல்லோ எனக் கூட்டுக.

உரை: வேந்தன் வந்து பணிவோடு, ‘ பெண் தருக’ என்று கேட்டாலும் அப்பெண்ணின் தந்தை தன் பெண்ணைக் கொடுக்கமாட்டான். உயர்ந்த பக்கங்களையும் அழகிய பூவோடு தழையும் சேர்த்துக் கட்டிய தழையுடை  அணிந்த இடையையும் சிறந்த வேலைப்பாடு அமைந்த சிலம்பையுமுடைய இளம்பெண்னின் தந்தை கணையமரத்தை குறுக்கே கொண்ட கதவையும், அரைத்த மண்ணால் அமைந்த மதிலையும், நாள்தோறும் வெற்றிக் குறியாக எடுத்த கொடியையும், புலிக்கூட்டத்தை ஒத்த வலிய வீரர்களையும் உடையவன்.  அவன் கூறிய வஞ்சினச் சொல்லைத் தவறாமல் செய்து முடிப்பவன்; போர் குறித்த சினமுடையவன்; வீரர்கள் அனைவருக்கும் போருக்குரிய பூக்களை பெற்றுக்கொள்ளுமாறு கட்டளையிட்ட பிறகு, நீராடுவதற்காகக் குளத்தில் மூழ்கினான். பெண்கேட்டு வந்த வேந்தன், ’விளங்கும் அணிகலன்களை அணிந்து, அழகுடையவளாய், மணமாகாதவளாய், மெல்லியல்புடையவளாய், தேமல் படர்ந்த அழகிய முலையினையுடைய அவளை நான் நாளை மணம் செய்துகொள்வேன்; அல்லது, அரிய போரைச் செய்தற்குரிய ஆற்றலோடு நீண்ட இலைவடிவில் ஆகிய வேலால் புண்பட்ட உடலோடு மேலுலகம் புகுவேன்.  இந்த இரண்டில் யாதாவது ஒன்று நாளை நடைபெற வேண்டும்.’ என்று வஞ்சினம் கூறித் தன் படைக் கருவிகளைக் கையில் எடுத்தான்.  நீராடும் யானைகள் போரிடுவதால் கலங்கிச் சேறாகும் குளம்போல், இவ்விருவரும் செய்யும் போரால் நன்செய் வயல்கள் பொருந்திய ஊராகிய இந்த மருதநிலத்தூர் தன் அழகை இழக்கும் போலும்.


340. அணித்தழை நுடங்க!

பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 306-இல் காண்க.
பாடலின் பின்னணி: அழகும் இளமையும் மிகுந்து விளங்கிய பெண் ஒருத்தியைக் கண்ட தலைவன் ஒருவன் அவளைத் திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தோடு ‘அவள் யார்?’ என்று அருகிலிருந்த ஒருவரைக் கேட்டான். அதற்கு அவர், அந்த இளம் பெண்ணின் தந்தை அவளை, யானையை எதிர்த்துப் போரிட்டு வெல்லும் வலிமையுடைய மன்னனுக்குத்தான்  மணம் செய்விப்பதாக முடிவு செய்துள்ளான் என்று விடை அளித்தார். இந்தக் காட்சியைப் புலவர் அள்ளூர் நன்முல்லையார் இப்பாடலில் சித்திரிக்கிறார்.

திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.
துறை: மகட்பாற் காஞ்சி. ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.

அணித்தழை நுடங்க ஓடி மணிப்பொறிக்
குரலம் குன்றி கொள்ளும் இளையோள்,
மாமகள் .. .. .. .. .. ..
யார்மகள் கொல்லென வினவுதி கேள்நீ
எடுப்ப எடா அ.. .. .. .. .. .. ..                                                     5

.. .. .. .. .. மைந்தர் தந்தை
இரும்பனை அன்ன பெருங்கை யானை
கரந்தையஞ் செறுவில் பெயர்க்கும்
பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந் தனனே.

அருஞ்சொற்பொருள்: 1. நுடங்கல் = அசைதல்; மணி = அழகு. 2. குரல் = கொத்து. 3. மா = அழகு, மாமகள் = மா+மகள்= அழகிய மகள். 7. இரு = பெரிய. 8. கரந்தை = ஒரு கொடி; செறு = வயல். 9. வரைதல் = உறுதி செய்தல்.

உரை: ’இடையில் அணிந்த தழை உடை அசையுமாறு ஓடிச் சென்று, அழகிய புள்ளிகளையுடைய குன்றிமணிக் கொத்துக்களைச் சேகரிக்கும், இளமையும் அழகும்  பொருந்திய இவள் யாருடைய மகள்?’ என்று கேட்கிறாயா? நான் கூறுகிறேன். நீ கேட்பாயாக. இவளுக்கும் இவளுடன் பிறந்தோர்க்கும் தந்தையானவன், கரிய பனைபோன்ற பெரிய துதிக்கைகளையுடைய யானைகளைக் கரந்தைக் கொடி நிரம்பிய வயலில் தாக்கிக் கொல்லும் வலிமை மிக்க மன்னருக்கு இவளைத் திருமணம் செய்விப்பது என்று முடிவு செய்துள்ளான்.

சிறப்புக் குறிப்பு: சங்க காலத்தில் பூக்களையும் இலைகளையும் சேர்த்துச் செய்த உடைகளை இளம்பெண்கள் அணிவது மரபு.  ’பெருங்கை யானை  பெயர்க்கும் பெருந்தகை மன்னர்’ என்றது, பெருவேந்தருள்ளும் யானையைக் கொல்லும் பேராண்மை உடையவர் என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது.

339. வளரவேண்டும் அவளே!

பாடியவர்: பெயர் தெரியவில்லை.
பாடலின் பின்னணி: முல்லையும் நெய்தலும் கூடிய நிலத்திலுள்ள ஒரு தலைவனின் பெண், தனக்குக் கணவனாக வருபவன் ஒரு அரசனாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை தன் மனத்தில் மறைத்து வைத்திருப்பதாக அவ்வூர்ப் பெண்கள் எண்ணுகின்றனர். அவள் மிகவும் சிறு வயதினள்; அவள் இன்னும் வளர வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். இந்தக் காட்சி இப்பாடலில் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. இப்பாடல் சிதைந்துள்ளதால், இப்பாடலுக்குத் தெளிவான பொருள் விளங்கவில்லை.

திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.
துறை: மகட்பாற் காஞ்சி. ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.


வியன்புலம் படர்ந்த பல்ஆ நெடுஏறு
மடலை மாண்நிழல் அசைவிடக் கோவலர்
வீததை முல்லைப் பூப்பறிக் குந்து;
குறுங்கோல் எறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல்
நெடுநீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து;                           5

தொடலை அல்குல் தொடித்தோள் மகளிர்
கடலாடிக் கயம்பாய்ந்து
கழிநெய்தற் பூக்குறூஉந்து;
பைந்தழை துயல்வருஞ் செறுவில் ததைந்த
.. .. .. .. .. . . ..கலத்தின்                                                   10

வளர  வேண்டும் அவளே; என்றும்
ஆரமர் உழப்பதும் அமரியள் ஆகி,
முறஞ்செவி யானை வேந்தர்
மறங்கெழு நெஞ்சங் கொண்டொளித் தோளே.

அருஞ்சொற்பொருள்: 1. வியன் = அகன்ற; புலம் = இடம் . 2. மடல் = பூ; மடலை = பூக்களையுடைய மரம்; கோவலர் = இடையர். 3. வீ = பூ; ததைதல் = நெருங்குதல். 5. வாளை = ஒரு வகை மீன்; உகளுதல் = தாவுதல். 6. தொடலை = மாலை (மேகலை). 7. கயம் = குளம்; குறூஉந்து = பறிக்கும். 9. துயல்வரும் = அசையும்; செறு = வயல்; ததைதல் =நெருங்குதல். 12. அமரிய = விரும்பிய.

கொண்டு கூட்டு: பறிக்குந்து; உகளுந்து; குறூஉந்து; வளரவேண்டும் அவளே; வேந்தர் நெஞ்சம் கொண்டு ஓளித்தோளே எனக் கூட்டுக.

உரை: அகன்ற, புல்வளர்ந்த நிலத்தில் மேய்ந்த பல பசுக்களுடன் கூடிய நெடிய காளைகள், பூக்களுடைய மரங்களின் நிழலில் தங்கி அசை போட்டுக் கொண்டிருக்கின்றன. இடையர்கள், பூக்கள் மிகுந்த முல்லைக் கொடிகளிலிருந்த பூக்களைப் பறித்துக் கொண்டிருக்கின்றனர். சிறிய கோலால் எறியப்பட்ட குறுமுயல்கள்  நீர்நிலையிலுள்ள வாளைமீன்கள் போலத் தாவுகின்றன. மேகலை அணிந்த இடையையும் வளை அணிந்த தோள்களையுமுடைய பெண்கள் கடலில் நீராடிக், குளங்களில் மூழ்கிக் கடற்கரையில் உள்ள கழியில் நெய்தற் பூக்களைப் பறிக்கின்றனர்.   தன் பொருட்டு வேந்தர்கள் அரிய போர் செய்வதை விரும்பினவள்போல், முறம் போன்ற காதுகளையுடைய யானைகளைக் கொண்ட வேந்தர்களின்வீரம் பொருந்திய நெஞ்சைக் கவர்ந்து பிறர் அறியாதவாறு அவள் அதை மறைத்துக் கொள்கிறாள். அவ்வூர் மக்கள் அவ்விளம்பெண் இன்னும் வளர வேண்டும் என்று விரும்பினர்.

338. ஓரெயின் மன்னன் மகள்!

பாடியவர்: குன்றூர் கிழார் மகனார். குன்றூர் என்பது ஓரூர். இவ்வூரைச் சார்ந்தவரான குன்றூர் கிழாரின் இயற்பெயர் தெரியவில்லை.  நற்றிணையில் குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார் என்ற புலவர் ஒருவர் ஒருபாடல் (332) இயற்றியுள்ளார். ஆகவே, இப்பாடலை இயற்றியவரும் குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார் என்பவரும் ஒருவராக இருக்கலாம் என்பது ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்களின் கருத்து.
  
பாடலின் பின்னணி: ஓருரில், மிகுந்த  செல்வத்துடன் கூடிய தலைவன் ஒருவன் உள்ளான்.  முடிசூடிய மூவேந்தர்களானாலும், அவர்கள் அவனிடம் வந்து அவன் தகுதிக்கேற்பப் பணிந்து கேட்டால்தான் அவன் தன் பெண்ணை அவர்களுக்குத் திருமணம்  செய்விக்க உடன்படுவான்.  குன்றூர் கிழார் மகனார், இப்பாடலில், அத்தலைவனைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.
துறை: மகட்பாற் காஞ்சி. ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.
ஏர்பரந்த வயல்  நீர்பரந்த செறுவின்
நெல்மலிந்த மனைப் பொன்மலிந்த மறுகின்
படுவண்டு ஆர்க்கும் பன்மலர்க் காவின்
நெடுவேள் ஆதன் போந்தை அன்ன
பெருஞ்சீர் அருங்கொண் டியளே; கருஞ்சினை                                    5

வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்                                               
மலைந்த சென்னியர் அணிந்த வில்லர்
கொற்ற வேந்தர் வரினும் தன்தக
வணங்கார்க்கு ஈகுவன் அல்லன்வண் தோட்டுப்
பிணங்குகதிர்க் கழனி நாப்பண் ஏமுற்று                                             10

உணங்குகலன் ஆழியின் தோன்றும்
ஓர்எயில் மன்னன் ஒருமட மகளே!

அருஞ்சொற்பொருள்: 1. பரத்தல் = பரவுதல் (உழுதல்); செறு = வயல். 2. பொன் = அழகு; மலிதல் = மிகுதல்; மறுகு = தெரு. 3. படுதல் = தோன்றல்; ஆர்த்தல் = ஒலித்தல். 4. போந்தை = ஓரூர். 5. கொண்டி = பிறர் பொருளைக் கொள்ளுதல் (கொள்ளை); கரு = கரிய; சினை = கிளை. 6. ஆர் = ஆத்தி; போந்தை = பனை. 7, சென்னி = தலை; மலைந்த = அணிந்த. 9. தோடு = இலை. ஓலை. 10. பிணங்குதல் = பின்னுதல்; கழனி = வயல்; நாப்பண் = நடுவே; ஏமுற்று = கட்டப்பட்டு. 11. உணங்கல் = காய்தல்; ஆழி = கடல். 12. எயில் = மதில்; மடம் = இளமை.

கொண்டு கூட்டு: மன்னன் மடமகள்; அரும் கொண்டியள்; அவளை வேந்தர்வரினும் தந்தக வணக்கார்க்கு ஈகுவன் அல்லன்; வணங்கிப் பெறுக எனக் கூட்டுக.

உரை: வளமான தோட்டையும், பின்னிக் கிடக்கும் கதிரையைமுடைய வயல்களுக்கு நடுவில், ஒற்றை மதிலால் சூழப்பட்ட கோட்டை ஒன்று உள்ளது. அந்தக் கோட்டை, கடற்கறையில் கட்டப்பட்டுக் காய்ந்து கிடக்கும் மரக்கலம் போல் காட்சி அளிக்கிறது. அந்தக் கோட்டைக்குரியவனின் இளமை பொருந்திய ஒப்பற்ற மகள், ஏர் உழுத வயலையும், நீர் நிறைந்த விளைநிலங்களையும், நெல் நிரம்பிய வீட்டையும், அழகு மிகுந்த தெருக்களையும் , மொய்க்கும் வண்டுகள் ஒலிக்கும் பன்மலர்ச் சோலையையும் உடைய நெடுவேள் ஆதனின் போந்தை என்னும் ஊர் போன்ற பெருஞ்சிறப்புடன் கூடிய செல்வத்தைப் பகைவர்களிடமிருந்து பெற்றவள்.  கரிய கிளைகளையுடைய வேம்பின் பூமாலை, ஆத்தி மாலை, பனந்தோட்டு மாலை ஆகியவற்றைச் சூடிய, வெற்றி மிக்க முடிவேந்தரில் ஒருவர் அவளை மணக்க விரும்பி அவள் தந்தையிடம் பெண் கேட்க வந்தாலும் தன் தகுதிக்கேற்பத் தன்னை வணங்கி இரந்து கேட்டால் ஒழிய அவள் தந்தை அவளை அவருக்கு மணம் செய்விக்க மாட்டான். 

337. இவர் மறனும் இற்று!

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 8-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒருகால், கபிலர் சோழநாட்டில் உள்ள ஓரூருக்குச் சென்றார். அவ்வூர்த் தலைவனின் மகள் அழகிலும் அறிவிலும் சிறந்தவளாகவும் திருமணம் செய்விப்பதற்கேற்ற வயதுடைவளாகவும் இருந்தாள்.  அவள் தந்தையோ மிகுந்த ஆரவாரமானவன். தமையனார்களோ வீரம் மிகுந்தவர்கள். அவளை மணம் செய்துகொள்வதற்காக வேந்தர் பலரும்  வந்த வண்ணம் இருந்தனர். கபிலர், ’இவளை மணம் செய்துகொள்ளும் பேறுடையவர் யாரோ’ என்று வியக்கிறார். அவர் வியப்பு இப்பாடலாக வெளிப்பட்டுள்ளது.

திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.
துறை: மகட்பாற் காஞ்சி. ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.

ஆர்கலி யினனே சோணாட்டு அண்ணல்;
மண்ணாள் செல்வர் ஆயினும் எண்ணார்
கவிகை வாள்வலத்து ஒழியப் பாணரிற்
பாடிச் சென்றார் வரல்தோறு அகமலர்பு
ஈதல் ஆனா இலங்குதொடித் தடக்கைப்                                    5

பாரி பறம்பின் பனிச்சுனை போலக்
காண்டற்கு அரியள் ஆகி, மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவொடு, மண்ணிய
துகில்விரி கடுப்ப நுடங்கித் தண்ணென
அகிலார் நறும்புகை ஐதுசென்று அடங்கிய                      10

கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு
மனைச்செறிந் தனளே வாணுதல்; இனியே,
அற்றன் றாகலில் தெற்றெனப் போற்றிக்
காய்நெல் கவளம் தீற்றிக் காவுதொறும்
கடுங்கண் யானை காப்பனர் அன்றி                                15

வருதல்  ஆனார் வேந்தர்; தன்ஐயர்
பொருசமம் கடந்த உருகெழு நெடுவேல்
குருதி பற்றிய வெருவரு தலையர்
மற்றிவர் மறனும் இற்றால்; தெற்றென
யாரா குவர்கொல் தாமே , நேரிழை                                20

உருத்த பல்சுணங்கு அணிந்த
மருப்பின் வனமுலை ஞெமுக்கு வோரே?

அருஞ்சொற்பொருள்: 1. ஆர்கலி = ஆரவாரம்; சோணாடு = சோழநாடு; அண்ணல் = தலைவன்; மண்ணிய = நனைத்த. 3. கவிகை = கவிந்த கை; வலம் = வலிமை. 5. இலங்குதல் = விளங்குதல். 6. சுனை = நீர்நிலை. 8. பொலிவு = அழகு; மண்ணிய = நனைத்த. 9. கடுப்ப = ஒப்ப; நுடங்குதல் = துவளுதல். 10. ஐது = அழகு. 11. கபில நிறம் = கருமை கலந்த பொன்மை; நெடுமை = பெருமை; நெடுநகர் = அரண்மனை. 12. செறிதல் = அடங்குதல். 13. தெற்றென = தெளிவாக. 14. தீற்றுதல் = தின்னப் பண்னுதல் (ஊட்டுதல்); காவு = கா = சோலை. 16. ஐயர் = பெரியோர்; தனையர் = தமையனார். 17. உரு = வடிவு. 18. வெரு = அச்சம். 19. இற்று = இத்தன்மைத்து; ஆல் = அசைச் சொல்; தெற்று = தெளிவு. 20. நேரிழை = தகுதியான அணிகலன்களை அணிந்தவள். 21. உருத்தல் = தோன்றுதல்; சுணங்கு = தேமல். ஞெமுக்குதல் = அமுக்குதல், அழுந்தத் தழுவுதல். 22. வனம் = அழகு.

கொண்டு கூட்டு: அண்ணல் ஆர்கலியினன்; வாணுதல் சுனைபோலக் காண்டற்கரியளாகிய மனைச் செறிந்தனள்; இனி அற்றன்றாகலின், வேந்தர் வருதலானார்; தண்னையர் வெருவரு தலையர்; மறனும் இற்று; ஞெமுக்குவோர் யாராகுவர்கொல் எனக் கூட்டுக.

உரை: சோழநாட்டுத் தலைவன் மிகுந்த ஆரவாரமுடையவன். உலகத்தை ஆளும் அரசர்களும், தங்கள் பெருமையை எண்ணிப் பார்க்காமல், பிறருக்குப் பரிசளிப்பதற்காகக் கவிந்த தங்கள் கைகளில், வெற்றியைத் தரும் வாளை ஏந்தாமல், பாணர்களைப் போலப் பாடிப் பாரியிடம் பரிசுபெறச் சென்றனர். அவர்கள் வந்தபொழுது மனம் மலர்ந்து, குறையாது கொடுத்த, விளங்கும் தொடியணிந்த கையையுடையவன் பாரி. அவன் நாட்டிலிலுள்ள பறம்பு மலையிலுள்ள குளிர்ந்த நீர்நிலை, யாரும் காண்பதற்கு அரியது. அதுபோல் யாராலும் காண்பதற்கரியவளாய், பெண்மை நிறைந்த அழகுடன் அத்தலைவனின் மகள் விளங்கினாள்.  நீரில் நனைத்துக் காயவிடப்பட்ட மெல்லிய துணி காற்றில் அசைவதுபோல் அசைந்து, குளுமையான அகில் தந்த நறும்புகை மெதுவாகச் சென்று படிந்த கபில நிறமுடைய பெரிய அரண்மனையில் சோழநாட்டுத் தலைவனின் பெண் அடைத்துவைக்கப்பட்டிருந்தாள்.  ஒளிபொருந்திய நெற்றியையுடைய அவளை அடைய முடியாது என்பதைத் தெளிவாக உணர்ந்த அரசர்கள், சினங் கொண்ட கண்களையுடைய தங்கள் யானைகளைச் சோலையில் கட்டிப்போட்டு, விளைந்த நெல்லின் அரிசியில் உண்டாகிய கவளத்தை உண்பித்துத் அந்த யானைகளைப் பாதுகாத்து வந்தனரே தவிரப் போரிடத் துணியவில்லை. அப்பெண்ணின் தமையன்மார், பகைவர்களை வெற்றிகொண்ட நெடிய வேலையும், குருதி தோய்ந்த, அச்சம் தரும் தலையையும் உடையவர்களாக இருந்தனர். அவர்களின் வீரம் அத்தன்மையது.  சிறந்த அணிகலன்களை அணிந்த, தேமல் படர்ந்த, அப்பெண்ணின் கொம்பு போன்ற அழகிய இளமுலைகளை இறுகத் தழுவுவோர் யாரோ? தெளிவாகத் தெரியவில்லை.

Wednesday, August 15, 2012


336. அறன்இலள் பண்புஇல் தாயே!

பாடியவர்: பரணர்.  இவரை பற்றிய குறிப்புக்களைப் பாடல் 4-இல் காண்க.

பாடலின் பின்னணி: ஒரு வேந்தன் ஒரு பெண்ணை மணம் செய்துகொள்ள விரும்புகிறான். அப்பெண்ணின் தந்தை அவளை அவ்வேந்தனுக்குத் திருமணம் செய்துவிக்க விரும்பவில்லை.  ஆகவே, அவ்வேந்தனுக்கும் அப்பெண்ணின் தந்தைக்கும் போர் தொடங்கும் நிலை உருவாகியுள்ளது. போரைத் தடுத்து நிறுத்துவதற்கு யாரும் முயற்சி செய்யவில்லை.  இதைக் கண்ட புலவர் பரணர், அப்பெண்ணின் தாய் அவளை அழகாக வளர்த்திருந்தாலும் இப்பொழுது நடைபெறப் போகும் போரைத் தடுப்பதற்கு அவள் முயற்சி செய்யாததால், அவள் அறமில்லாதவள் என்று கூறுகிறார்.

காஞ்சித் திணை: பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.
மகட்பாற் காஞ்சி: ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.


வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே;
கடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்;
ஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின்
களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த
ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே;                                  5

இயவரும் அறியாப் பல்லியம் கறங்க
அன்னோ, பெரும்பேது உற்றன்றுஇவ் வருங்கடி மூதூர்;
அறன்இலள் மன்ற தானே விறன்மலை
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
முகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத்                                  10

தகைவளர்த்து எடுத்த நகையொடு
பகைவளர்த்து இருந்தஇப் பண்புஇல் தாயே.

அருஞ்சொற்பொருள்: 1. வேட்ட = விரும்பிய; கடவன = செய்ய வெண்டியவன; கழிப்பு = கழித்தல் = போக்குதல். 3. வீங்கல் = பருத்தல், மிகுதல். 5. மூழ்த்தல் = மூடுதல். 6. இயவர் = வாச்சியக்காரர் (இசைக் கருவிகளை வாசிப்பவர்கள்); பல்லியம் = பல இசைக் கருவிகள்; கறங்கல் = ஒலித்தல். 7. அன்னோ = ஐயோ; பேது = வருத்தம்; கடி = காவல். 9. வெற்பு = மலை ; கோங்கு = ஒரு மரம். 10. முகை = மலரும் பருவத்தரும்பு; வனப்பு = அழகு; ஏந்திய = தாங்கிய. 11. தகை = அழகு; நகை = மகிழ்ச்சி.

கொண்டு கூட்டு: வேந்தன் சினத்தினன்; தந்தை செய்யான்; களிறு சேரா; மறவர் வாய் மூழ்த்தனர்; ஊர் பேதுற்றன்று; தாய் அறனிலள் என்று கூட்டுக.

உரை: இந்தப் பெண்ணை மணஞ்செய்துகொள்ள விரும்பிய வேந்தன் மிகுந்த சினமுடையவன்.  இப்பெண்ணின் தந்தை தான் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யமாட்டான்.  ஒளிறும் முகத்தில் உள்ள, பெரிய தொடி அணிந்த கொம்புகளையுடைய யானைகள் காவல் மரத்தில் கட்டப்படவில்லை.  வேந்தனையும் அப்பெண்ணின் தந்தையையும் சேர்ந்துள்ள, வேலேந்திய வீரர்கள் வாய்திறவாமல் உள்ளனர்.  இசை வல்லுநர்களும் அறியாத பல இசைக்கருவிகள் முழங்குகின்றன.  ஐயோ! அரிய காவல் உள்ள இந்தப் பழமையான ஊர் பெரும் துன்பத்துக்குள்ளாகியது. வலிமை வாய்ந்த வேங்கை மலையில் மலர்ந்த, கோங்கமரத்தினுடைய அரும்பின் அழகை ஒத்த, முதிராத இளமுலையையுடைய இப்பெண்ணை மிகவும் அழகுடையவளாக வளர்த்ததால் மகிழ்ச்சியைப் பெற்ற அவள் தாய், இப்போது பகையை வளர்த்திருக்கும் பண்பில்லாதவள். உறுதியாக அவள் அறமில்லாதவள்.

சிறப்புக் குறிப்பு:  ஒருபெண்ணை திருமணம் செய்விப்பது அவள் தந்தையின் கடமை. இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெண்ணின் தந்தை, தன் பெண்ணைத் திருமணம் செய்விக்காததால், ‘கடவன கழிப்பு இவள் தந்தையும் செய்யான்’ என்று புலவர் கூறுகிறார்.  ‘களிறும் கடிமரமும் சேரா, சேர்ந்த ஒளிறுவேள் மறவரும் வாய்மூழ்த்தனர்’ என்பது யானைகளும் வீரர்களும் போருக்கு ஆயத்தமாகி நிற்பதைக் குறிக்கிறது.

335. கடவுள் இலவே!

பாடியவர்: மாங்குடி கிழார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 24-இல் காண்க.

பாடலின் பின்னணி: பூக்களில் சிறந்தவை குரவம், தளவு, குருந்து, முல்லை ஆகியவைதான் என்றும், உணவுப் பொருட்களில் சிறந்தவை வரகு, தினை, கொள், அவரை ஆகிய நான்கு மட்டுமே என்றும், குடிகளில் சிறந்த குடிகள் துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற நான்கு குடிகளே என்றும், இறந்த வீரர்களின் நடுகல்லைத் தவிர, வழிபடுவதற்கேற்ற கடவுள் வேறு எதுவும் இல்லை என்றும் தன் கருத்தை இப்பாடலில் புலவர் மாங்குடி கிழார் கூறுகிறார்.  இப்பாடல் தொடக்கப் பகுதியில் சிதைந்துள்ளது.

திணை:  வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை: மூதின் முல்லை. வீரர்க்கல்லாமல் அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் சினமுண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்.

அடலருந் துப்பின் .. .. .. ..
குரவே தளவே குருந்தே முல்லையென்று
இந்நான் கல்லது பூவும் இல்லை;
கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு                                      5

இந்நான் கல்லது உணாவும் இல்லை;
துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்                      10

கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.


அருஞ்சொற்பொருள்: 1. அடல் = கொல்லுதல், அழித்தல்; துப்பு = வலிமை. 2. குரவு = ஒரு செடி; தளவு = செம்முல்லை; குருந்து = குருக்கத்தி. 5. பொறி = புள்ளி; கிளர்தல் = நிறைதல். 7. துடி = உடுக்கை; குறிஞ்சிப் பறை; துடியன் = துடியடிப்பவன்; கடம்பன் = ஒரு குடி; பறையன் = பறையடிப்பவன். 9. ஒன்னாமை = பொருந்தாமை; தெவ்வர் = பகைவர். 10. மருப்பு = கொம்பு (தந்தம்). 11. பரவுதல் = வழிபடுதல். 12. உகுத்தல் = சொரிதல், தூவல்.

உரை: அழித்தற்கரிய வலிமையையுடைய … குரவமலர், தளவுமலர், குருந்த மலர், முல்லைமலர் ஆகிய இந்நான்கு மலர்களைத் தவிர வேறு மலர்களும் இல்லை. கரிய அடியையுடைய வரகு, பெரிய கதிரையுடைய தினை, சிறிய கொடியில் விளையும் கொள், புள்ளிகள் நிறைந்த அவரை இவை நான்கைத் தவிர வேறு உணவுப்பொருட்களும் இல்லை.  துடியன், பாணன், பறையன், கடம்பன் ஆகிய இந்நான்கு குடிகளைத் தவிர வேறு குடிகளும் இல்லை.  மனம் பொருந்தாத பகைவரின் முன்னே நின்று அவர் படையெடுப்பைத் தடுத்து, ஒளிறும் உயர்ந்த கொம்புகளையுடைய யானைகளைக் கொன்று தாமும் விழுப்புண்பட்டு இறந்தவர்களின் நடுகல்லைத் தவிர,  நெல்லைத் தூவி வழிபடுவதற்கேற்ற கடவுளும் வேறு இல்லை.

சிறப்புக் குறிப்பு: புலவர் மாங்குடி கிழார் என்ன காரணத்தினால் குரவு, தளவு, குருந்து, முல்லை ஆகிய மலர்களைத் தவிர வேறுமலர்கள் இல்லையென்றும், உணவுப் பொருட்களில் சிறந்தவை வரகு, தினை, கொள், அவரை ஆகிய நான்கு மட்டுமே என்றும், குடிகளில் சிறந்தவை துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற நான்கு குடிகளே என்றும், வழிபடுவதற்கேற்ற கடவுள் இறந்த வீரர்களின் நடுகல்லைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று கூறுகிறார் என்பது தெரியவில்லை. ஒருசிற்றூரில் தான் கண்ட காட்சியைத் தன் கருத்தில் கொண்டு இவ்வாறு கூறுகிறார் என்று தோன்றுகிறது.

334. மனையோள் கைதூவாளே; காளையும் கைதூவானே!

பாடியவர்: மதுரைத் தமிழ்க் கூத்தனார் (334). சங்க காலத்தில் வழக்கிலிருந்த கூத்து வகைகளில் தமிழ்க் கூத்து என்பது ஒருவகைக் கூத்து, இப்புலவருடைய இயற்பெயர் தெரியவில்லை. இவர் தமிழ்க் கூத்தில் வல்லவராக இருந்ததாலும், மதுரையைச் சார்ந்தவராக இருந்ததாலும் இவர் மதுரைத் தமிழ்க் கூத்தனார் என்று அழைக்கப்பட்டார். இவர் இயற்றியதாக வேறு பாடல்கள் சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை.

பாடலின் பின்னணி: வேந்தன் ஒருவனின் ஊரின் இயல்பையும், அவன் பரிசிலர்க்குப் பொற்பட்டம் அணிந்த யானைகளைத் தவறாமல் தருபவன் என்றும், அவன் மனைவி விருந்தோம்பலில் சிறந்து விளங்கினாள் என்றும் புலவர் மதுரைத் தமிழ்க் கூத்தனார் இப்பாடலில் குறிப்பிடுகிறார். இப்பாடலில் சில வரிகள் சிதைந்துள்ளன.

திணை:  வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை: மூதின் முல்லை. வீரர்க்கல்லாமல் அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் சினமுண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்.

காமரு பழனக் கண்பின் அன்ன
தூமயிர்க் குறுந்தாள் நெடுஞ்செவிக் குறுமுயல்
புன்றலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின்
படப்புஒடுங் கும்மே.. .. .. .. பின்பு .. .. ..
.. .. .. .. .. .. னூரே மனையோள்                                       5

பாணர் ஆர்த்தவும் பரிசிலர் ஓம்பவும்
ஊணொலி அரவமொடு கைதூ வாளே;
உயர்மருப்பு யானைப் புகர்முகத்து அணிந்த
பொலம் புனையோடை. .. .. .. .. .. .. ப்
பரிசில் பரிசிலர்க்கு ஈய                                                  10

உரவுவேற் காளையும் கைதூ வானே.


அருஞ்சொற்பொருள்: 1. காமர் = அழகு; பழனம் = நீர்நிலை (பொய்கை); கண்பு = சண்பங் கோரை. 2. தூ = தூய்மை. 3. புன்தலை = இளந்தலை; ஆர்த்தல் = ஆரவாரித்தல்.  4. படப்பு = வைக்கோற் போர். 6. ஆர்தல் = உண்ணுதல். 7. கைதூவாள் = கைவிட மாட்டாள். 8. மருப்பு = கொம்பு; புகர் = புள்ளி. 9. பொலம் = பொன்; ஓடை = நெற்றிப்பட்டம். 11. உரவு = வலிமை.

கொண்டு கூட்டு: முயல் படப்பு ஒடுங்கும்; மனையோள் கைதூவாள்; காளையும் கைதூவான் எனக் கூட்டுக.

உரை: அழகிய நீர்நிலைகளின் கரைகளில் வளர்ந்திருக்கும் சண்பங்கோரை போன்ற தூய்மையான மயிரையும், குட்டையான கால்களையும், நீண்ட காதுகளையுமுடைய சிறிய முயல், இளஞ்சிறுவர்கள் ஊர் மன்றத்தில்  ஆரவாரம் செய்வதால் வைக்கோற் போரில் பதுங்கும்.  .. . வேந்தனது ஊர் அத்தகையது.  அந்த இல்லத்தில், பாணரை உண்ணச் செய்வதும், பரிசிலரை வரவேற்று அவர்களுக்கு ஆதரவு அளிப்பதும் ஆரவாரத்தோடு நடைபெறுகின்றன. அவ்வில்லத்தின் மனைவி அச்செயல்களைச் செய்வதைக் கைவிடமாட்டாள்.  உயர்ந்த கொம்புகளையும், புள்ளிகளையுமுடைய முகத்தையும் கொண்ட யானையின் பொன்னாலான நெற்றிப்பட்டத்தை பரிசாகப் பரிசிலர்களுக்கு அளிப்பதை, வலிய வேலை உடைய தலைவனும் கைவிடமாட்டான்.

333. தங்கினிர் சென்மோ புலவீர்!

பாடியவர்: பெயர் தெரிந்திலது.
பாடலின் பின்னணி: ஒரு புலவர் மற்ற புலவர்களை வேளாண்குடியைச் சார்ந்த ஒருவனிடம் ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலில் சில வரிகள் சிதைந்துள்ளன.

திணை:  வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை: மூதின் முல்லை. வீரர்க்கல்லாமல் அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் சினமுண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்.

நீருள் பட்ட மாரிப் பேருறை
மொக்குள் அன்ன பொகுட்டுவிழிக் கண்ண
கரும்பிடர்த் தலைய பெருஞ்செவிக் குறுமுயல்
உள்ளூர்க் குறும்புதல் துள்ளுவன உகளும்
தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின்                                      5

உண்கென உணரா உயவிற்று ஆயினும்
தங்கினிர் சென்மோ புலவீர்! நன்றும்
சென்றதற் கொண்டு மனையோள் விரும்பி
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தெனக்                             10

குறித்துமாறு எதிர்ப்பை பெறாஅ மையின்
குரல்உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து
சிறிது புறப்பட்டன்றோ விலள்; தன்னூர்
வேட்டக் குடிதொறுங் கூட்டு .. .. ..
.. .. .. .. உடும்பு செய்                                                       15

பாணி நெடுந்தேர் வல்லரோடு ஊரா
வம்பணி யானை வேந்துதலை வரினும்
உண்பது மன்னும் அதுவே
பரிசில் மன்னும் குருசில்கொண் டதுவே.


அருஞ்சொற்பொருள்: 1. மாரி = மழை; உறை = மழைத்துளி. 2. மொக்குள் = நீர்க் குமிழி; பொகுட்டு = கொட்டை. 3. கரு = கரிய; பிடர் = பிடரி (கழுத்து). 4. புதல் = புதர்; உகளுதல் = தாவுதல், பாய்தல். 5. தொள்ளை = துளை; படர்தல் = செல்லுதல். 6. உயவு = வருத்தம். 7. சென்மோ = செல்க. 8. சென்றதற் கொண்டு =  சென்றதனால். 10. இரவல் மாக்கள் = இரவலர்கள். 11. குறித்துமாறு எதிர்ப்பு = குறியெதிர்ப்பு (அளவு குறித்துப் பெற்று, அவ்வளவு திருப்பித் தருவது). 12. குரல் = கதிர்; உணங்கல் = காய்தல். 13. புறப்படன்றோ இலள் = போகுமாறு விடமாட்டாள். 16. பாணி = கை(ஆகுபெயராக கைச்சரட்டைக் குறிக்கிறது); ஊரா = ஊர்ந்து. 17. வம்பு = கச்சு. 19. குரிசில் = தலைவன், அரசன்; தலைவருதல் = தோன்றுதல். 19. மன், உம் – அசைச் சொற்கள்.

கொண்டு கூட்டு: புலவீர், மன்றத்துத் தங்கினிர் சென்மோ; சென்றதற் கொண்டு மனையோள் விரும்பி, தீர்ந்தென, பெறாமையின், புறப்பட்டன்றோவிலள்; வேந்து தலைவரினும் உண்பது அது; பரிசில் குரிசில் கொண்டது எனக் கூட்டுக. 

உரை: நீரில் விழுந்த மழைத்துளியாலுண்டாகிய பெரிய குமிழி போலிருக்கும் கொட்டை போன்ற விழிகள் பொருந்திய கண்களையும், கரிய பிடரியையுமுடைய தலையையும், பெரிய காதுகளையுமுடைய சிறுமுயல் உள்ளூரில் உள்ள சிறிய புதர்களில் துள்ளித் திரியும் வளைகளுடைய மன்றத்திற்குச் சென்றால், அங்குள்ளவர்கள் உண்ணுக என்று விருந்தோம்பல் செய்ய இயலாது வருந்துவார்கள். அவ்வாறு இருப்பினும், புலவர்களே, நீங்கள் அங்கே தங்கிச் செல்க. அவ்வீட்டில் இருந்த வரகு, தினை எல்லாம் பரிசிலர்கள் உண்டதால் தீர்ந்து போயின. அம்மனைக்குரியவள்,  கைம்மாறாக உணவுப்பொருட்களைப் பெற இயலாமையால், கதிரிடத்தே முற்றி உலரி விதைக்காக விடப்பட்டிருக்கும் தினையை விருப்பத்துடன் உரலிலிட்டு இடித்துச் சமைத்து உணவு அளிப்பாளே அல்லாமல், உணவின்றி உங்களை வறிதே போகவிடமாட்டாள்…. உடும்பின் தோலால் செய்யப்பட்ட கைச்சரடு அணிந்து நெடிய தேரைச் செலுத்தும் வீரர்களோடு ஊர்ந்து, கச்சணிந்த யானைகளையுடைய வேந்தர்கள் அவ்வீட்டிற்கு வந்தாலும் அவர்கள் உண்பதும் அவ்வுணவேயாகும்.  அவ்வீட்டுத் தலைவன் தன்னிடம் வரும் பரிசிலர்களுக்கு வழங்கும் பரிசில் அவன் பகைவரை வென்று பெற்ற பொருளேயாகும்.

332. மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே !

பாடியவர்: விரியூர் நக்கனார்(332). விரியூர் என்பது சேர நாட்டில் இருந்த ஓரூர். தற்போது, இவ்வூர் கேரள மாநிலத்தில் உள்ளது. சங்க இலக்கியத்தில் இவர் இயற்றியதாக புறநானூற்றில் உள்ள ஒருபாடல் மட்டுமே உள்ளது.
பாடலின் பின்னணி: இப்பாடலில், வீரன் ஒருவனின் வேலை, புலவர் விரியூர் நக்கனார் வியந்து பாடுகிறார்.
திணை:  வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை: மூதின் முல்லை. வீரர்க்கல்லாமல் அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் சினமுண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்.

பிறர்வேல் போலாது ஆகி இவ்வூர்
மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே;
இரும்புற நீறும் ஆடிக் கலந்துஇடைக்
குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்;
மங்கல மகளிரொடு மாலை சூட்டி                                             5

இன்குரல் இரும்பை யாழொடு ததும்பத்
தெண்ணீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து
மண்முழுது அழுங்கச் செல்லினும் செல்லும்; ஆங்கு
இருங்கடல் தானை வேந்தர்
பெருங்களிற்று முகத்தினும் செலவு ஆனாதே.                           10

அருஞ்சொற்பொருள்: 3. இரு = பெரிய; புறம் = பக்கம்; இரும்புறம்  - வேலின் இலைப் பகுதியைக் குறிக்கிறது; நீறு = புழுதி. 4. குரம்பை = குடிசை. 6. இரும்பை = இரும் + பை = பெரிய பை; ததும்புதல் = நிரம்பி வழிதல். 7. படு = குளம். 8. மண் = பூமி (உலகம்); அழுங்கல் = மிக வருந்துதல். 10. ஆனாமை = குறையாமை.

கொண்டு கூட்டு: வேல் பெருந்தகையுடைத்து; கிடக்கும், செல்லும், செலவு ஆனாதாகலின் எனக் கூட்டுக .
உரை: பிறருடைய வேலைப்போல் அல்லாமல், இந்த ஊரைச் சார்ந்த வீரனின் (தலைவனின்) வேல் மிகுந்த பெருமை உடையதாகும்.  அந்த வேலின் பெரிய இலைப்பகுதியில் புழுதிபடிந்து குடிசையின் கூரையில் இருந்தாலும் இருக்கும்.  அந்த வேல், மாலை சூட்டப்பட்டு, மங்கல மகளிரின் இனிய குரலோடு, பெரிய பையில் அமைந்த யாழின் இசையும் கலந்து இசைக்க, தெளிந்த நீருள்ள குளங்களையும் தெருக்களையும் ஊர்வலமாக வந்து, உலகம் முழுதும் உள்ள பகைவர்களின் நாடுகளில் உள்ளவர்கள் அனைவரையும் வருந்தச் செய்யும். அவ்வேல், பெரியகடல் போன்ற படையையுடைய வேந்தரின் யானைகளின் முகத்திலும் தவறாமல் செல்லும்.

சிறப்புக் குறிப்பு: வேலின் பெருமையைக் கூறியதால் வீரனின் பெருமையும் கூறப்பட்டது.