Tuesday, December 28, 2010

209. நல்நாட்டுப் பொருந!

பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார். இவரை பற்றிய குறிப்புகளை பாடல் 151 - இல் காண்க.
பாடப்பட்டோன்: மூவன். மூவன் என்பது இவனது இயற்பெயர். இவன் ஒரு குறுநில மன்னன். இவன் நாடு கடற்கரையைச் சார்ந்த நெய்தல் நிலவளமும் வயலும் வயல் சார்ந்த மருதநிலத்தின் வளமும் கொண்டதாக இருந்தது.
பாடலின் பின்னணி: மூவன் கொடையில் சிறந்தவன் என்ற புகழோடு விளங்கினான். அதனால் பெருந்தலைச் சாத்தனார் அவனைக் காணச் சென்றார். மூவன், பெருந்தலைச் சாத்தனாருக்குப் பரிசளிக்காமல் காலம் தாழ்த்தினான். அவனிடமிருந்து பரிசு பெறலாம் என்ற நம்பிக்கையை இழந்த சாத்தனார், மூவன் தன்னை இகழந்ததாகக் கருதினார். “மலையிலிருந்த மரம் ஒன்று பழுத்த பழங்கள் உடையது என்று எண்ணிப் பறவைகள் அந்த மரத்தை நாடிச் சென்றன. ஆனால், பருவகாலம் மாறியதால் அம்மரத்தில் பழங்கள் இல்லை. பறவைகள் பழங்கள் இல்லாமல் திரும்பின. அப்பறவைகளைப்போல், நான் உன்னை நாடி வந்தேன்; நான் இப்பொழுது வெறுங்கையோடு செல்லவேண்டிய நிலையில் உள்ளேன். நீ எனக்குப் பரிசு அளிக்காவிட்டால், நான் அது குறித்து வருந்த மாட்டேன். நீ நோயில்லாமல் வாழ்வதையே நான் விரும்புகிறேன். ஆனால், நான் பரிசு இல்லாமல் திரும்பிச் செல்வது நமக்குள் இருக்கட்டும்.” என்று கூறிப் பெருந்தலைச் சாத்தனார் பரிசு பெறாமலேயே சென்றார்.

திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ் வலிமை கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் கடா நிலை என்பது “உன்னைப் பாடிய யாவரும் பரிசில் பெற்றனர்” என்று கூறித் தனக்கும் பரிசில் வேண்டும் என்று புரவலரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது.

பொய்கை நாரை போர்வில் சேக்கும்
நெய்தல்அம் கழனி நெல்அரி தொழுவர்
கூம்புவிடு மென்பிணி அவிழ்ந்த ஆம்பல்
அகல் அடை அரியல் மாந்தித் தெண்கடல்
5 படுதிரை இன்சீர்ப் பாணி தூங்கும்
மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந!
பல்கனி நசைஇ அல்கு விசும்பு உகந்து
பெருமலை விடர்அகம் சிலம்ப முன்னிப்
பழனுடைப் பெருமரம் தீர்ந்தெனக் கையற்றுப்
10 பெறாது பெயரும் புள்ளினம் போல, நின்
நசைதர வந்து நின்இசை நுவல் பரிசிலேன்
வறுவியேன் பெயர்கோ? வாள்மேம் படுந!
ஈயாய் ஆயினும் இரங்குவென் அல்லேன்;
நோயிலை ஆகுமதி; பெரும, நம்முள்
15 குறுநணி காண்குவ தாக; நாளும்
நறும்பல் ஒலிவரும் கதுப்பின் தேமொழித்
தெரியிழை மகளிர் பாணி பார்க்கும்
பெருவரை அன்ன மார்பின்
செருவெம் சேஎய் நின் மகிழ்இரு க்கையே.

அருஞ்சொற்பொருள்:
1. பொய்கை = குளம்; போர்வு = வைக்கோற் போர்; சேத்தல் = கிடத்தல், தங்கியிருத்தல். 2. கழனி = வயல்; தொழுவர் = உழவர். 3. பிணி = அரும்பு; ஆம்பல் = அல்லி. 4. அடை = இலை; அரியல் = மது; மாந்துதல் = குடித்தல். 5. சீர் = தாளவொத்து; பாணி = இசை; பாணி தூங்குதல் = தாளத்திற்கேற்ப ஆடுதல். 6. மென்புலம் = மருதமும் நெய்தலும். 7. அல்கல் = தங்குதல்; விசும்பு = ஆகாயம்; உகந்து = உயர்ந்து. 8. விடர் = மலைப்பிளவு, குகை; சிலம்பு = ஒலி; முன்னுதல் = முற்படுதல், எதிர்ப்படுதல். 9. கையறுதல் = செயலறுதல். 11. நசை = விருப்பம்; நுவலுதல் = கூறுதல். 12. வறுவியேன் = வறுமையுடையவன். 15. குறு நணி = மிகுந்த நெருக்கம். 16. பல் = பல; ஒலித்தல் = தழைத்தல்; கதுப்பு = பெண்களின் கூந்தல். 17. தெரியிழை = ஆராய்ந்த ஆபரணம் (ஆராய்ந்த ஆபரணங்களைத் தரித்த பெண்); பாணி = காலம், சமயம். 18. வரை = மலை. 19. சேய் = முருகன்; செரு = போர்; மகிழிருக்கை = அரசவை, நாள் ஓலக்கம் ( அரசன் நாட்பொழுதில் வீற்றிருந்து அரசாட்சி செய்யும் இடம்)

கொண்டு கூட்டு: பொருந, வாள் மேம்படுந, சேஎய், நின் இசை நுவல் பரிசிலேன்; வறுவியேன்; பெயர்கோ; ஈயாய் ஆயினும் இரங்குவேன் அல்லேன்; பெரும், நோயிலை ஆகுமதி; நம்முள் குறுநணியை நின் மகிழிருக்கைக் காண்குவதாக; பிறர் காணாது ஒழிக எனக் கூட்டுக.

உரை: குளத்தில் மேய்ந்த நாரை வைக்கோற் போரில் உறங்கும் நெய்தல் நிலத்தில் உள்ள வயல்களில் நெல்லை அறுவடை செய்யும் உழவர், நன்கு மலர்ந்த ஆம்பலின் அகன்ற இலைகளில் மதுவை உண்டு, தெளிந்த கடல் அலைகளின் இனிய சீரான ஒலிக்கேற்ப ஆடுகின்றனர். இத்தகைய வளமான நெய்தல் மற்றும் மருத நிலங்களையுடைய நல்ல நாட்டுக்குத் தலைவனே! பழங்களை விரும்பி, தாம் வாழும் ஆகாயத்தில் உயரப் பறந்து, பெரிய மலைக் குகையில் எதிரொலி முழங்கச் சென்று, பழமரத்தில் பழங்கள் இல்லாததால் வருந்தி மீளும் பறவைகளைப் போல், உன் மீதுள்ள விருப்பத்தினால் உன் புகழைக் கூற வந்த நான் பரிசு பெறாமல் வெறுங்கையோடு செல்லப் போகிறேனா? வாட்போரில் சிறந்த வீரனே! நீ எனக்குப் பரிசளிக்காவிட்டாலும் நான் வருந்தமாட்டேன். நீ நோயில்லாமல் வாழ்வாயாக! தலைவ! நாள்தோறும், மணமுடைய, நீண்ட, தழைத்த கூந்தலோடு, ஆராய்ந்த ஆபரணங்களை அணிந்து, தேன்போன்ற இனிய மொழி பேசும் பெண்கள் உன்னுடைய மலைபோன்ற மார்பைத் தழுவும் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீ போரை விரும்பும் முருகனுக்கு ஒப்பானவன். நான் பரிசு பெறாமல் செல்வது உன் அரசவையில் உன்னோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்களுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கட்டும் .

No comments: