Tuesday, December 28, 2010

206. எத்திசைச் செலினும் சோறே

பாடியவர்: அவ்வையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காண்க.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காண்க.
பாடலின் பின்னணி: அதியமான் கடையெழு வள்ளல்களுள் ஒருவன். அவனது கொடைப் புகழ் தமிழகமெங்கும் பரவியிருந்தத்து. பல ஊர்களிலிருந்தும் அவனைக் காணப் புலவர்களும், பாணர்களும், பரிசிலர்களும் வந்தவண்ணம் இருந்தனர். அதியமானின் புகழைக் கேள்விப்பட்ட அவ்வையார், பரிசிலர் பலரோடும் சேர்ந்து அதியமானைக் காண வந்தார். அவ்வையாரோடு வந்த பரிசிலர் அனைவரும் அதியமானிடம் பரிசு பெற்று விடைபெற்றுச் சென்றனர். அவ்வையாரின் புலமையையும் திறமையையும் கேள்விப்பட்ட அதியமான், அவரைத் தன்னுடன் சிலகாலம் தங்க வைக்க வேண்டும் என்று விரும்பினான். அவருக்குப் பரிசு அளித்தால் அவர் தன் அரண்மனையைவிட்டுச் சென்றுவிடுவார் என்று எண்ணி அவ்வையாருக்குப் பரிசளிக்காமலும் தன்னை காண்பதற்கு அவருக்கு வாய்ப்பு அளிக்காமலும் அதியமான் காலம் கடத்தினான். அதியமான் பரிசளிக்காமல் இருப்பது, தன்னைக் காணாது இருப்பது போன்ற செயல்களின் உள்நோக்கம் அவ்வையாருக்குப் புரியவில்லை. ஆகவே, அவர் தன்னை அதியமான் அவமதிப்பதாக எண்ணி, அதியமான் மீது கோபம் கொண்டார். ஒருநாள், அதியமானைச் சந்திப்பதற்கு அரன்மனைக்குச் சென்றார். ஆனால், வாயிற்காவலன் எப்பொழுதும்போல், அதியமானைக் காணவிடாமல்அவ்வையாரைத் தடுத்து நிறுத்தினான். ”நீ பரிசிலர்க்கு எப்பொழுதும் வாயிற்கதவை அடைப்பதில்லை; ஆனால், எனக்கு மட்டும் வாயிற் கதவை அடைக்கிறாய்; அதனால் எனக்கு அதியமானைக் காண வாய்ப்பில்லை; அதியமான் சொல்லித்தான் நீ இவ்வாறு செய்கிறாய்; உன் அரசனாகிய அதியமான் தன்னை அறியாதவனா? அல்லது என்னை அறியாதவனா? நான் சோற்றுக்காகவா இங்கே தங்கியிருக்கிறேன்? நான் இனிமேல் இங்கே இருக்கப் போவதில்லை. நான் என்னுடைய யாழையும் மூட்டை முடிச்சுகளையும் தூக்கிக்கொண்டு புறப்படப்போகிறேன். அறிவும் திறமையும் உடைவர்களுக்கு எங்கு சென்றாலும் சோறு கிடைக்கும்.” என்று வாயிற்காவலனிடம் கூறினார். இதை அறிந்த அதியமான், அவ்வையாருக்கு மிகுந்த அளவில் பரிசளித்துத் தன் அரசவைப் புலவராக நீண்டகாலம் தன்னுடனேயே இருக்கச்செய்தான்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ் வலிமை கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.

வாயி லோயே! வாயிலோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
5 பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கோல்? என்னறி யலன்கொல்?
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்,
10 காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே.

அருஞ்சொற்பொருள்:
2. வள்ளியோர் = வரையாது கொடுப்போர்; வயங்குதல் = விளங்குதல், மிகுதல். 3. உரன் = வலிமை (மன வலிமை). 4. வரிசை = தகுதி. 6. கடு = விரைவு; மான் = குதிரை; தோன்றல் = அரசன். 9. வறுந்தலை = வெற்றிடம். 10. காவுதல் = சுமத்தல்; கலம் = யாழ்; கலப்பை = கலம் + பை = யாழ் மற்றும் பல பொருள்களையும் தூக்கிச் செல்வதற்குப் பயன்படும் பை. 12. மழு = கோடரி.

உரை: வாயிற் காவலனே! வாயிற் காவலனே! வரையாது கொடுக்கும் வள்ளல்களின் காதுகளில், விளங்கிய சொற்களை விதைத்துத் தாம் விரும்பிய பரிசிலை விளைவிக்கும் மனவலிமையோடு, தம் தகுதிக்கேற்பப் பரிசுபெற விழையும் பரிசிலர்க்குக் கதவுகளை மூடாத வாயிற் காவலனே! விரைந்தோடும் குதிரைகளையுடைய அரசனாகிய அதியமான் நெடுமான் அஞ்சி தன்னை அறியாதவனா? அல்லது, என்னை அறியாதவனா? அறிவும் புகழுடையவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதனால் உலகம் வெற்றிடமாகிவிடவில்லை. ஆகவே, என் யாழையும், மூட்டை முடிச்சுகளையும் தூக்கிக்கொண்டு நான் செல்கிறேன். மரம் வெட்டும் தச்சனின் திறமை வாய்ந்த சிறுவர்கள் கோடரியுடன் செல்லும் காடு போன்றது இவ்வுலகம். நான் எங்கே சென்றாலும் அங்கே சோறு (பரிசில்) கிடைக்காமல் போகாது.

சிறப்புக் குறிப்பு: பரிசிலர்களுக்குச் சிறுவர்களும், கல்வி, திறமை ஆகியவற்றிற்கு கோடரியும், சோற்றிற்கு காட்டிலுள்ள மரமும் உவமை என்று கொள்க.

No comments: