Tuesday, December 28, 2010

207. வருகென வேண்டும்

பாடியவர்: பெருஞ்சித்திரனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 158-இல் காண்க.
பாடப்பட்டோன்: இளவெளிமான். இவன் வெளிமான் என்பவனின் தம்பி. வெளிமான் ஓரு சிறந்த கொடைவள்ளல். தமிழ் நட்டில் பல பகுதிகளில் வெளிமான் என்ற பெயருடன் தொடர்புடைய ஊர்கள் இருப்பதாகவும், வெளிமானல்லூர் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அவ்வை. சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் தம் நூலில் கூறுகிறார்.
பாடலின் பின்னணி: புலவர் பெருஞ்சித்திரனார் மிகவும் வறுமையில் வாடியவர். தம் வறுமையைத் தீர்ப்பதற்காகக் கொடை வள்ளலாகிய வெளிமானைக் காணச் சென்றார். இவர் வெளிமானின் அரண்மனைக்குச் சென்ற சமயத்தில், வெளிமான் இறக்கும் தருவாயில் இருந்தான். அவன், தன் தம்பியாகிய இளவெளிமானிடம், பெருஞ்சித்திரனார்க்குத் தகுந்த பரிசில் அளிக்குமாறு கூறிய பின்னர் இறந்தான். ஆனால், இளவெளிமான் புலவர்களின் தகுதி அறிந்து பரிசு கொடுக்கும் ஆற்றல் இல்லாதவன். இளவெளிமான், பெருஞ்சித்திரனாரைக் காணும்போது காணாததுபோல் நடந்துகொண்டான். அவரைக் கண்டாலும், அவனிடத்தில் முகமலர்ச்சி இல்லை; அவரை முறையாக வரவேற்கவில்லை. இளவெளிமானின் இத்தகைய செயல்களால் வருத்தமடைந்த புலவர் பெருஞ்சித்திரனார், இப்பாடலில் தம் மனவருத்தத்தை வெளிப்படுத்துகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ் வலிமை கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.

எழுஇனி நெஞ்சம்; செல்கம் யாரோ
பருகு அன்ன வேட்கை இல்வழி
அருகிற் கண்டும் அறியார் போல
அகம்நக வாரா முகன்அழி பரிசில்
5 தாள் இலாளர் வேளார் அல்லர்
வருகென வேண்டும் வரிசை யோர்க்கே
பெரிதே உலகம்; பேணுநர் பலரே;
மீளி முன்பின் ஆளி போல
உள்ளம் உள்அவிந்து அடங்காது வெள்ளென
10 நோவா தோன்வயின் திரங்கி
வாயா வன்கனிக்கு உலமரு வோரே.

அருஞ்சொற்பொருள்:
1. செல்கம் = செல்வோம். 2. பருகுதல் = குடித்தல்; பருகு அன்ன வேட்கை = நீர் வேட்கை உடையவன் நீரைக் கண்டவுடன் குடிப்பது போல், கண்டவுடன் மிகுந்த அன்பு காட்டும் பண்பு. 4. நக = மகிழ; அழிதல் = நிலைகெடுதல். 5. தாள் = முயற்சி.; வேளார் = விரும்ப மாட்டர்கள். 6. வரிசையோர் = பரிசிலர். 8. மீளி = வலிமை; முன்பு = வலிமை; ஆளி = சிங்கம். 9. வெள்ளென = கண்டோர் யாவருக்கும் தெரியுமாறு. 10. வயின் = இடம்; திரங்குதல் = தளர்தல். 11. வாயா வன்கனி = நன்றாகப் பழுக்காமல் கன்றிய கனி ; உலமரல் = திரிதல், சுழல்தல்.


கொண்டு கூட்டு: வாயா வன்கனிக்கு உலமருவோர் யாரோ? நெஞ்சமே, உள்ளம் உள்ளவிந்து அடங்காது, யாளிபோல், இனி எழு, செல்கம் எனக் கூட்டுக.

உரை: மிகுந்த விருப்பமில்லாமல், கண்டும் காணாதுபோல் இருந்து, உள்ளத்தில் மகிழ்ச்சியில்லாமல், முகம் திரிந்து தரும் பரிசிலை முயற்சி இல்லாதவர்கள்தான் விரும்புவர். வரும்பொழுது, “வருக, வருக” என்று எம்மை வரவேற்க வேண்டும். தகுதி உடையோர்க்கு இந்த உலகம் பெரியது; எங்களை விரும்புவோர் பலரும் உள்ளனர். வலிமை மிகுந்த சிங்கம்போல் ஊக்கம் குறையாது, என் நெஞ்சமே! இப்பொழுதே நீ எழுவாயாக; நாம் செல்வோம். கண்டோர் யாவருக்கும் தெரியுமாறு, எம்மைக் கண்டு இரக்கம் கொள்ளாதவரிடத்து வருந்திநின்று, கனியாத கனியை அடைய அலைபவர் யாரோ?

சிறப்புக் குறிப்பு:
திருவள்ளுவர் “பருகுவார் போலினும்” என்ற சொற்றொடரை

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது. (குறள் - 811)

என்னும் குறளில் ”அன்பின் மிகுதியால் கண்டவுடன் குடித்துவிடுவார் போல் “ என்ற பொருளில் பயன்படுத்தியிருப்பது காண்க.

உள்ளன்பில்லாமல், முக மலர்ச்சியில்லாமல் பெருஞ்சித்திரனாரின் நெஞ்சத்தைப் புண்படுத்திய இளவெளிமானின் செயல், வள்ளுவர் விருந்தோம்பல் என்னும் அதிகாரத்தில்,

மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. (குறள் - 90)

என்று கூறும் குறளுக்கு ஒருஎடுத்துக்காட்டு.

No comments: