Monday, December 13, 2010

205. பெட்பின்றி ஈதல் வேண்டலம்

பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார். இவரைப் பற்றிய குறிப்புகளை பாடல் 151-இல் காண்க.
பாடப்பட்டோன்: கடிய நெடுவேட்டுவன். இவனது இயற்பெயர் நெடுவேட்டுவன். இவன் மதுரைக்கு அருகே உள்ள கோடை மலைச்சாரலில் உள்ள கடியம் என்ற ஊரைச் சார்ந்தவனாதலால் கடிய நெடுவேட்டுவன் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவனை நாடி வந்த பரிசிலர்க்கு இவன் யானைகளையும் பல பரிசுகளையும் அளித்துச் சிறப்பித்தான். இவன் வள்ளன்மையால் புகழ் பெற்றவன்.
பாடலின் பின்னணி: ஒருசமயம், பெருந்தலைச் சாத்தனார் கடிய நெடுவேட்டுவனைக் காண வந்தார். எக்காரணத்தாலோ, அவன் அவருக்குப் பரிசில் அளிப்பதற்கு கால தாமதம் செய்தான். அதனால், வருத்தமுற்ற பெருந்தலைச் சாத்தனார், “பெரும் செல்வமுடைய மூவேந்தராயினும் , அவர்கள் விருப்பமின்றி அளிக்கும் கொடையை யாம் விரும்பமாட்டோம். உன்னிடம் வரும் பரிசிலர்கள், மேகங்கள் கடலிலிருந்து நீரைக் கொண்டு செல்வதுபோல் பரிசு பெறாமல் செல்வதில்லை. ஆனால், இப்பொழுது நீ எனக்குப் பரிசில் கொடுக்கக் கால தாமதம் செய்தாய்.” என்று கூறி விடை பெறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.

முற்றிய திருவின் மூவர் ஆயினும்
பெட்பின்றி ஈதல் யாம்வேண் டலமே;
விறற்சினம் தணிந்த விரைபரிப் புரவி
உறுவர் செல்சார்வு ஆகிச் செறுவர்
5 தாளுளம் தபுத்த வாள்மிகு தானை
வெள்வீ வேலிக் கோடைப் பொருந
சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய
மான்கணம் தொலைச்சிய கடுவிசைக் கதநாய்
நோன்சிலை வேட்டுவ, நோயிலை யாகுக;
10 ஆர்கலி யாணர்த் தரீஇய கால்வீழ்த்துக்
கடல்வயிற் குழீஇய அண்ணலங் கொண்மூ
நீரின்று பெயரா ஆங்குத் தேரொடு
ஒளிறுமறுப்பு ஏந்திய செம்மற்
களிறின்று பெயரல பரிசிலர் கடும்பே.

அருஞ்சொற்பொருள்:
2. பெட்பு = அன்பு, விருப்பம். 3. விறல் = வெற்றி, வீரம்; பரிதல் = ஓடுதல்; புரவி = குதிரை. 4. உறுவர் = பகைவர்; சார்வு = புகலிடம். 5. தாள் உளம் = முயற்சியுடய உள்ளம்; தபுதல் = கெடுதல். 6. வீ = மலர். 7. புழை = துளை, வழி. 8. கதம் = சினம். 9. சிலை = வில். 10. ஆர்கலி = மிகுந்த ஒலி; தரீஇ = தந்து. 11. குழீஇய = திரண்ட; கொண்மூ = மேகம். 14. கடும்பு = சுற்றம்.

உரை: நிறைந்த செல்வத்தை உடைய மூவேந்தராயினும், எங்கள் மீது விருப்பமில்லாது அவர்கள் அளிக்கும் பரிசுகளை நாங்கள் விரும்பமாட்டோம். வெற்றி பெறுவதற்காகக் கொண்ட சினம் தணிந்து, விரைந்து ஓடும் குதிரைகளையுடைய உன் பகைவர்கள் அஞ்சி வந்து உன்னை அடைந்தால் நீ அவர்களுக்குப் புகலிடமாய் விளங்குகிறாய். அவ்வாறன்றி, முயற்சியுடன் போர் புரிந்தவர்களின் உள்ளத்தின் வலிமையை அழித்த வாட்படையை உடையவன் நீ. வெண்மையான பூக்களையுடைய முல்லையை வேலியாகக்கொண்ட கோடை என்னும் மலைக்குத் தலைவன் நீ. சிறியதாகவும் பெரியதாகவும் உள்ள வழிகளில் குறுக்கே வந்த மான்களின் கூட்டத்தை அழித்த விரைந்து செல்லும் சினம்கொண்ட நாய்களையும் வலிய வில்லையும் உடைய வேட்டுவனே! நீ துன்பமில்லாமல் வாழ்வாயாக! மிகுந்த ஒலியுடன் புதுமழையைத் தருவதற்காகக் காலூன்றிக் கடலின்மேல் கூடிய மேகம் நீரைக் குடிக்காமல் போகாது. அதுபோல், தேர்களையும், வெண்மையான தந்தங்களையுடைய யானைகளையும் பரிசாகப் பெறாது பரிசிலர் சுற்றம் வெறிதே செல்லமாட்டார்கள்.

சிறப்புக் குறிப்பு: பெருந்தலைச் சாத்தனார் பரிசு பெறாமல் கடிய நெடுவேட்டுவனிடமிருந்து விடை பெறுகிறார். அவனிடம் பரிசு பெறுவதற்காக வந்த இரவலர் கூட்டம் தேர்களையும் யானைகளையும் பெறாமல் செல்லமாட்டர்கள் என்று கூறித் தான் பரிசில்லாமல் செல்வதைச் சுட்டிக் காட்டுகிறார். மற்றும், அவர் “நோயிலை ஆகுக” என்று கூறுவது குறிப்பு மொழியால் அவனை இகழ்ந்ததுபோல் தோன்றுகிறது.

No comments: