Monday, March 18, 2013

395. அவிழ் நெல்லின் அரியல்!


395. அவிழ் நெல்லின் அரியல்!

பாடியவர்: மதுரை நக்கீரர். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 56-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழநாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன். சோழநாட்டில் உறையூருக்குக் கிழக்கே இருந்த பிடவூர் என்னும் ஊருக்குத் தலைவனாக இருந்தவன் பிடவூர் கிழான். பிடவூர் கிழானின் மகன் பெருஞ்சாத்தன். இவனைப் பாடியவர் மதுரை நக்கீரர். இவன் புலவர்களைப் பேணுவதில் சிறந்து விளங்கினான்.
பாடலின் பின்னணி: ஒருகால், மதுரை நக்கீரர் சோழநாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனைக் காணச் சென்றார். அவன் அவரை அன்போடு வரவேற்று உணவும் உடையும் செல்வமும் அளித்தான். பெருஞ்சாத்தன் தன் மனைவியை அழைத்து ‘இவரை என்போல் போற்றுக’ என்று கூறினான். அவன் செயலால் நக்கீரர் பெருவியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார். அவன் அன்பையும், கொடைத்தன்மையையும் ஒரு பாணன் கூற்றாக வைத்து இப்பாடலை இயற்றியுள்ளார். இப்பாடலில் சில அடிகள் சிதைந்துள்ளன.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: கடை நிலை. அரண்மனை வாயிலில் நின்று பாடுதல்.

மென்புலத்து வயல்உழவர்
வன்புலத்துப் பகடுவிட்டுக்
குறுமுயலின் குழைச்சூட்டொடு
நெடுவாளைப் பல்உவியல்
பழஞ்சோற்றுப் புகவருந்திப்                         5

புதல்தளவின் பூச்சூடி
அரிப்பறையால் புள்ஓப்பி
அவிழ்நெல்லின் அரியலாருந்து
மனைக்கோழிப் பைம்பயிரின்னே
கானக்கோழிக் கவர்குரலொடு                     10

நீர்க்கோழிக் கூப்பெயர்க்குந்து
வேயன்ன மென்தோளால்
மயிலன்ன மென்சாயலார்
கிளி கடியின்னே
அகல்அள்ளற் புள்இரீஇயுந்து                       15

ஆங்கப்,  பலநல்ல புலன்அணியும்
சீர்சான்ற விழுச்சிறப்பின்
சிறுகண் யானைப் பெறலருந் தித்தன்
செல்லா நல்லிசை உறந்தைக் குணாது
நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்  20

அறப்பெயர்ச் சாத்தன் கிணையேம் பெருமவென
முன்னாள் நண்பகல் சுரன்உழந்து வருந்திக்
கதிர்நனி சென்ற கனையிருள் மாலைத்
தன்கடைத் தோன்றி என் உறவு இசைத்தலின்
தீங்குரல் . . கின் அரிக்குரல் தடாரியோடு             25

ஆங்குநின்ற எற்கண்டு
சிறிது நில்லான் பெரிதுங் கூறான்
அருங்கலம் வரவே அருளினன் வேண்டி
ஐயென உரைத்தன்றி நல்கித் தன்மனைப்
பொன்போல் மடந்தையைக் காட்டி இவனை         30

என்போல் போற்றுஎன் றோனே அதற்கொண்டு
அவன்மறவ லேனே பிறர்உள்ள லேனே
அகன்ஞாலம் பெரிது வெம்பினும்
மிகவானுள் எரிதோன்றினும்
குளமீனோடும் தாள்புகையினும்                            35

பெருஞ்செய் நெல்லின் கொக்குஉகிர் நிமிரல்
பசுங்கண் கருனைச் சூட்டொடு மாந்தி
விளைவு ஒன்றோ வெள்ளம்கொள்கஎன
உள்ளதும் இல்லதும் அறியாது
ஆங்குஅமைந் தன்றால் வாழ்கவன் தாளே.   40அருஞ்சொற்பொருள்: மென்புலம் = மருத நிலம். 2. வன்புலம் = முல்லை நிலம்; பகடு = எருது. 4. உவியல் = அவியல். 5. புகவு = உணவு. 6. புதல் = புதர்; தளவு = செம்முல்லை. 7. ஓப்பி = ஓட்டி. 8. அரியல் = கள்; ஆருந்து = உண்ணும். 9. பயிரின் = அழைப்பின். 12. வேய் = மூங்கில். 14. கடிதல் = ஓட்டுதல். 15. அள்ளல் = சேறு; இரீஇயந்து = கெட்டு ஓடும். 16. புலன் = இடங்கள். 17. சீர்சான்ற = தலைமையமைந்த. 18. தித்தன் = ஒரு சோழன். 19. செல்லா நல்லிசை = கெடாத நல்ல புகழ்; உறந்தை = உறையூர்; குணாது = கிழக்கே. 20. வேண்மான் – ஒருவன் பெயர்; கடி = காவல். 21. அறப்பெயர் = அறத்தால் உண்டாகிய புகழ். 22. சுரன் = சுரம் = காடு; உழலல் = அசைதல். 23. நனி = மிக; கனை = திரட்சி. 24. கடை = புறவாயில்.  26. எற்கண்டு = என்+கண்டு = என்னைக் கண்டு. 29. ஐ = மென்மை. 30. மடந்தை = பெண் (மனைவி). 33. வெம்புதல் = காய்தல். 35. குளமீன் = குள வடிவில் உள்ள ஒருவிண்மீன்; தாள் = தாள் மீன் ( ஒரு விண்மீன்). 36. உகிர் = நகம்; நிமிரல் = சோறு. 37. கருனை = பொரியல்; சூடு = சூட்டு இறைச்சி; மாந்தி = உண்டு. 40. தாள் = முயற்சி.

கொண்டு கூட்டு: அரியலாகும், கூப்பெயர்க்கும், புள்ளிரியும் புலனணியும் பிடவூர் சாத்தன் கிணையேம் பெரும, வருந்தி, தோன்றி, இசைத்தலின் எற்கண்டு நில்லானாய், கூறானாய், அருளுவானாய், வேண்டி, உரைத்ததன்றி, நல்கி, காட்டி, போற்றென்றான்; அதற்கொண்டு, மறவலேன்; உள்ளலேன்; தோன்றினும், புகையினும், மாந்தி, கொள்கென அறியாது, அவன்தாள் அமைந்தன்று; வாழ்க எனக் கூட்டுக.

உரை: மென்புலமாகிய மருத நிலத்தில் உள்ள உழவர்கள் தங்கள் எருதுகளை முல்லை நிலத்தில் மேயவிடுவர். அவர்கள் சிறிய முயலின் குழைந்த சூட்டிறைச்சியுடன் நெடிய வாளை மீனைக்கொண்டு செய்த பலவகையான அவியலைப் பழஞ்சோற்றுடன் சேர்த்து உண்ணுவர்; புதர்களிலே மலர்ந்த செம்முல்லைப் பூவைத் தலையில் சூடிக்கொள்வர்; மெல்லிய ஓசையுடைய தடாரிப் பறையை அடித்துக் கதிர்களை தின்னவந்த பறவைகளை ஓட்டுவர்; நெற்சோற்றிலிருந்து வடிக்கப்பட்ட கள்ளை அருந்துவர். அத்தகைய உழவர்கள் வாழும் இல்லங்களிலுள்ள கோழிகள் பசுமையான குரலில் கூவ, காட்டுக்கோழி தன் குரலை எழுப்ப, நீர்க்கோழிகளும் தங்கள் குரலை எழுப்பும். மூங்கில் போன்ற தோளையும் மயில் போன்ற மெல்லிய சாயலையுமுடைய மகளிர் வயல்களிலுள்ள கிளிகளை ஓட்டுவதால், அகன்ற சேறுள்ள இடத்தில் இருக்கும் பறவைகள் அங்கிருந்து பறந்து செல்லும்.  அங்கே, பல நல்ல விளைநிலங்கள் சூழ்ந்திருக்கும். நாங்கள், தலைமையமைந்த செல்வச் சிறப்பும், சிறிய கண்களையுடைய யானைகளும், பெறுதற்கரிய கெடாத நல்ல புகழுமுடைய தித்தன் என்பவனின் உறையூருக்குக் கிழக்கே, பெரிய கையையுடைய வேண்மான் என்பவனுக்குரிய, அரிய காவல் பொருந்திய பிடவூரிலுள்ள, அறச்செயல்களால் புகழ்பெற்ற சாத்தனின் கிணைப்பொருநர்.   

பெரும! முந்திய நாள் நண்பகலில் காட்டு வழிகளில் நடந்து வருந்தி, ஞாயிற்றின் கதிர்கள் மறைந்த இருள் சூழ்ந்த மாலைப் பொழுதில் அவன் முற்றத்தில் நான் வந்ததை அறிவிப்பதற்காக இனிய குரலுடன்…. தடாரிப் பறையுடன் நின்ற என்னைக் கண்டு, சிறிதும் காலம் தாழ்த்தாமல், அதிகமாக எதுவும் பேசாமல், அரிய அணிகலன்களைப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் வருவித்தான். அவற்றிலுள்ள பொருள்களை அன்போடு, இனிய சொற்களைப் பேசி அவன் எனக்கு அருளினான். என்னை அவனுடைய இல்லத்திற்கு அழைத்துச் சென்று, பொன்போன்ற அவன் மனைவிக்கு என்னை அறிமுகப்படுத்தி, ‘இவனை என்னைப் போல் பேணுக.’ என்றான். அதனால், அவனை மறவேன்; அவனைத் தவிர வேறு யாரையும் நினையேன். இப்பெரிய உலகம் மழையின்றி மிகுந்த வெப்பத்தால் வாடினாலும், வானத்தில் எரிமீன்கள் தோன்றினாலும், குளமீனும் தாள்மீனும் புகைந்து தோன்றினாலும், பெரிய வயல்களில் விளைந்த, கொக்கின் நகம் போன்ற சோற்றையும், வளமான பொரியலையும், சூட்டிறைச்சியையும் உண்டு, விளைச்சல் வெள்ளம் போல் பெருகி, ’உள்ளது எது? இல்லாதது எது?’ என்று அறிய முடியாதவாறு அவனுடைய முயற்சி அமைந்துள்ளது. அது வாழ்க.

No comments: