Monday, March 4, 2013

389. நெய்தல் கேளன்மார்!

389. நெய்தல் கேளன்மார்!

பாடியவர்: கள்ளில் ஆத்திரையனார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 175-இல் காண்க.
பாடப்பட்டோன்: நல்லேர் முதியன். இவன் தமிழகத்தின் வட எல்லையாகிய வேங்கட நாட்டை ஆண்ட வேந்தர்களான புல்லி, ஆதனுங்கன் முதலியோரின் வழித்தோன்றல்.

பாடலின் பின்னணி: ’நான் சிறுவனாக இருந்த பொழுது, உன் முன்னோனாகிய ஆதனுங்கனைக் ஒருமுறைக் காண வந்தேன், வறுமைக் காலமாயினும் தன்னை மறவாது வந்து காண வேண்டும் என்று கூறி, அவன் எனக்குப் பரிசு அளித்தான். அவன் இன்று நான் சென்று காணும் இடத்தில் இல்லை; சென்றால் காண முடியாதவனும் அல்லன். அந்த ஆதனுங்கன் போல் நீயும் எனக்குப் பரிசளிப்பாயாக.’ என்று ஒருபொருநன் கூற்றாக இப்பாடலைப் புலவர் கள்ளில் ஆத்திரையனார் இயற்றியுள்ளார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: இயன் மொழி. அரசனின் இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

நீர்நுங்கின் கண்வலிப்பக்
கானவேம்பின் காய்திரங்கக்
கயங்களியும் கோடைஆயினும்
ஏலா வெண்பொன் போகுறு காலை
எம்மும் உள்ளுமோ பிள்ளைஅம் பொருந,              5

என்றுஈத் தனனே இசைசால் நெடுந்தகை
இன்றுசென்று எய்தும் வழியனும் அல்லன்
செலினே காணா வழியனும் அல்லன்
புன்தலை மடப்பிடி இனையக் கன்றுதந்து
குன்றக நல்லூர் மன்றத்துப் பிணிக்கும்                  10

கல்லிழி அருவி வேங்கடங் கிழவோன்
செல்வுழி எழாஅ நல்லேர் முதிய
ஆத னுங்கன் போல நீயும்
பசித்த ஒக்கல் பழங்கண் வீட
வீறுசால் நன்கலம் நல்குமதி பெரும              15

ஐதுஅகல் அல்குல் மகளிர்
நெய்தல்கே ளன்மார் நெடுங்கடை யானே!

அருஞ்சொற்பொருள்:  1. கண் = தேங்காய், பனை முதலியவற்றின் முளை கிளம்பும் இடம்; வலிப்ப = வன்மையாக (கடினமாக). 2. திரங்க = சுருங்குதல், உலர்தல். 4. ஏலா = இயலா; வெண்பொன் = வெள்ளி; காலை = காலம், பொழுது. 6. இசை = புகழ்; சால் = நிறைவு. 9. பிடி = பெண்யானை; இனைய = வருந்த. 12. செல்வுழி எழா = மனம் செல்லும் வழியில் செல்லாத. 12. முதிய = முதியனே (முதியன் என்பவனை அழைத்தல்). 14. ஒக்கல் = சுற்றம்; பழங்கண் = துன்பம்; வீடுதல் = கெடுதல். 15. வீறு = தனிப்பட்ட சிறப்பு. 16. ஐது = மெல்லியது. 17. நெய்தல் = நெய்தல் பறை (சாப்பறை, இரங்கல் பறை)

கொண்டு கூட்டு: வலிப்பத் திரங்கக் களியும் கோடை ஆயினும், போகுறு காலையும், பொருந, உள்ளுமோ என்று ஈத்தனன்; நெடுந்தகை; அல்லன், அல்லன், கிழவோனாகிய  முதிய, நீயும், ஆதனுங்கன் போல பழங்கண் வீட, நல்குமதி; பெரும, மகளிர் நெடுங்கடையில் நெய்தல் கேளன்மார் எனக் கூட்டுக.

உரை: நீருடைய நுங்கு காய்ந்து கல்லைப் போலக் கடினமானாலும், காட்டு வேம்பின் காய் பழுக்காமல் சுருங்கி உலர்ந்து போனாலும், நீர்நிலைகள் வற்றிச் சேறு காய்ந்து கிடந்தாலும், வெள்ளி தெற்கே செல்லும் வறுமைக் காலமானாலும், இளைய பொருநனே, ’எம்மையும் உன் நினைவில் கொள்வாயாக’ என்று கூறிப் பெரும்புகழ் வாய்ந்த ஆதனுங்கன் எனக்குப் பெருமளவில் பொருள்களைஅளித்தான். நான் இன்று சென்று காணும் இடத்தில் அவன் இல்லை; சென்றால் காண முடியாதவனும் அல்லன். சிறிய தலையையுடைய பெண்யானைகள் வருந்த, அவற்றின் கன்றுகளை கொண்டுவந்து குன்றுகளுடைய நல்ல ஊரின் மன்றத்தில் கட்டிவைக்கும் கற்களினூடே பாயும் அருவிகளையுடைய வேங்கட மலைக்கு உரிய நல்லேர் முதியனே! நீ மனம் போன போக்கில் போகாதவன். உன் முன்னோனாகிய ஆதனுங்கனைப் போல், பசியால் வாடும் என் சுற்றத்தாருடைய துன்பம் நீங்கச் சிறந்த நல்ல அணிகலன்களை வழங்குவாயாக. மெல்லிய இடையையுடைய உன் மகளிர் உன்னுடைய பெரிய மனையின் முற்றத்தில் என்றும் நெய்தற்பறையைக் (இரங்கல் ஒலியைக்) கேளாதிருப்பார்களாக. 

No comments: