Monday, March 18, 2013

393. பழங்கண் வாழ்க்கை!


393. பழங்கண் வாழ்க்கை!

பாடியவர்: நல்லிறையனார் (393). குறுந்தொகையில் ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்று தொடங்கும் பாடலைப் பாடிய இறையனார் என்பவரிடமிருந்து இவரை வேறுபடுத்துவதற்காக, இவர் நல்லிறையனார் என்று அழைக்கப்பட்டதாக ஓளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார். இவர் பாடியதாக சங்க இலக்கியத்தில் காணப்படும் ஒரே பாடல், புறநானூற்றில் உள்ல 393- ஆம் பாடல் ஒன்றுதான். 
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். இவனைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 34-இல் காண்க.
பாடலின் பின்னணி: ’அரசே, நாங்கள் பல நாட்களாக வறுமையால் வாடுகிறோம். எங்களை ஆதரிக்கும் வள்ளன்மை உடையவரைத் தேடினோம். உலகத்து வளமெல்லாம் ஓரிடத்து இருந்தாற் போல நீ உள்ளாய் என்று அறிந்து, உன்னுடைய நல்ல புகழை நினைத்து, உன்னிடம் வந்தோம். உண்ண உணவும், உடுக்க நல்ல உடையும், செல்வமும் கொடுத்து அருள்வாயாக. பெருமைக்குரிய உன் திருவடிகளை நாங்கள் பலமுறை பாடுவோம்.’ என்று ஒருபாணன் கூறுவதாக இப்பாடலைப் புலவர் நல்லிறையனார் இயற்றியுள்ளார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: கடை நிலை. அரண்மனை வாயிலில் நின்று பாடுதல்.

பதிமுதற் பழகாப் பழங்கண் வாழ்க்கைக்
குறுநெடுந் துணையொடு கூர்மை வீதலின்
குடிமுறை பாடி ஒய்யென வருந்தி
அடல்நசை மறந்தஎம் குழிசி மலர்க்கும்
கடனறி யாளர் பிறநாட்டு இன்மையின்                 5

வள்ளன் மையின்எம் வரைவோர் யாரென
உள்ளிய உள்ளமொடு உலைநசை துணையா
உலகம் எல்லாம் ஒருபாற் பட்டென
மலர்தார் அண்ணல்நின் நல்லிசை உள்ளி
ஈர்ங்கை மறந்தஎன் இரும்பேர் ஒக்கல்                   10

கூர்ந்தஎவ் வம்விடக் கொழுநிணம் கிழிப்பக்
கோடைப் பருத்தி வீடுநிறை பெய்த
மூடைப் பண்டம் இடைநிறைந் தன்ன
வெண்நிண மூரி அருள,  நாளுற
ஈன்ற அரவின் நாவுருக் கடுக்கும்என்            15

தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கிப்
போதுவிரி பகன்றைப் புதுமலர் அன்ன
அகன்றுமடி கலிங்கம் உடீஇச் செல்வமும்
கேடின்று நல்குமதி பெரும! மாசில்
மதிபுரை மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி                   20

ஆடுமகள் அல்குல் ஒப்ப வாடிக்
கோடை யாயினும் கோடா ஒழுக்கத்துக்
காவிரி புரக்கும் நன்னாட்டுப் பொருந!
வாய்வாள் வளவன் வாழ்கெனப்
பீடுகெழு நோன்தாள் பாடுகம் பலவே.                   25


அருஞ்சொற்பொருள்: 1. பதிதல் = ஊன்றல் (இங்கு தொடக்கத்தைக் குறிக்கிறது); பழங்கண் = துன்பம். 2. துணை = துணைவி (மனைவி); கூர்மை – இங்கு அறிவுக் கூர்மையைக் குறிக்கிறது; வீதல் = கெடுதல். 3. ஒய்யென = விரைவாக. 4. அடல் = கொல்லுதல்; அடுதல் = சமைத்தல்; நசை = விருப்பம்; குழிசி = பானை; மலர்க்கும் = நிமிரச் செய்யும். 6. வரைதல் = தனக்குரியதாக்குதல் (ஆதரவு அளித்தல்). 7. உலைதல் = வருந்துதல்.10. ஈர்ங்கை = ஈரக்கை. 11. எவ்வம் = துன்பம். 14. மூரி = ஊன் துண்டு. 15. கடுக்கும் = ஒக்கும். 16. சிதாஅர் = கந்தை; துவர = முழுதும். 17. போது = மலரும் பருவத்தரும்பு; பகன்றை = ஒரு செடி. 18. கலிங்கம் = உடை; உடீஇ = உடுப்பித்து. 20. புரை = போன்ற; தெளிர்ப்ப = ஒலிக்க; தெளிர்ப்ப ஒற்றி = ஒலிக்குமாறு அறைந்து.21. ஒல்கல் = தளர்தல். 23. பொருநன் = அரசன். 24. வாய்வாள் = குறிதவறாத வாள்; வளவன் = கிள்ளிவளவன். 25. பீடு = பெருமை;

கொண்டு கூட்டு: வீதலின் வருந்தி, உள்ளமொடு, நசைதுணையாக, ஒருபாற்பட்டென, உள்ளி, மறந்த என் ஒக்கல், கிழித்து, அருளி, நீக்கி, உடீஇ, நல்குமதி, பெரும, தெளிர்ப்ப ஒற்றி, பொருந, வாழ்கெனப் பாடுகம் எனக் கூட்டுக. 

உரை: தொடக்கம் முதலே பழகி அறியாத துன்பமான வாழ்க்கையில், என்னுடைய இளைய நெடிய மனைவி வருந்தினாள்; என் அறிவுக் கூர்மையும் கெட்டது. குடிகள் தோறும் முறையே சென்று பாடி, ஈவோரில்லாதலால் மிகவும் வருந்தி, சோறாக்கும் விருப்பத்தை மறந்த எம்முடைய பானையை நிமிர்த்து மீண்டும் சமைக்கச் செய்யும் வள்ளன்மை உடையவர்கள் பிற நாடுகளில் இல்லாததால், வறுமைத் துன்பம் நீங்க வேண்டும் என்ற விருப்பம் துணையாக, வள்ளன்மையோடு எம்மை ஆதரிப்பவர் யார் என்று நாங்கள் எண்ணிப் பார்த்தோம். உலகத்து வளமெல்லாம் ஓரிடத்து இருந்தாற்போல, மலர்மாலை அணிந்த தலைவனாகிய நீ உள்ளாய் என்று அறிந்து, உன்னுடைய நல்ல புகழை நினைத்து, உண்ணுவதால் கை ஈரமாவதை மறந்த (உண்ணுவதை மறந்த) என் பெரிய சுற்றத்தின் வறுமைத் துன்பம் நீங்குமாறு நாங்கள் உன்னிடம் வந்தோம்.  கோடையில் பருத்தியிலிருந்து பஞ்சை எடுத்து மூட்டை மூட்டையாக வீடு நிறைய வைத்தது போல், மிகுதியாக இருக்கும், வெண்ணிறமான, கொழுமை நிறைந்த ஊனைத் துண்டாக்கி, வழங்கி எங்களை உண்ணச் செயது, ஈனுதற்குரிய நாள் வந்தவுடன் முட்டை ஈன்ற பாம்பின் பிளந்த நாவைப் போல் இருந்த என்னுடைய பழைய, கிழிந்த உடையை முற்றிலும் நீக்கி, அரும்பு விரிந்து மலர்ந்த புதிய பகன்றை மலரைப் போல், அகன்ற மடிப்புகளையுடைய உடையை உடுத்தச் செய்து செல்வமும் நிரம்பக் கொடுப்பாயாக, பெரும! ஆடும் பெண் ஆடிய பிறகு தளர்ந்து ஒடுங்குவதுபோல் எல்லாப் பொருளும் வாடி வதங்கும் கோடைக் காலத்திலும் தவறாது நீர் ஒழுகி வளம் பெருக்கும் காவிரி ஓடும் நல்ல நாட்டுக்கு அரசே! மாசற்ற முழுமதி போன்ற தடாரிப் பறையை ஒலிக்குமாறு அறைந்து, ’குறி தவறாத வாளையுடைய கிள்ளிவளவன் வாழ்க என்று உன்னுடைய பெருமைக்குரிய வலிய திருவடிகளைப் பலமுறை பாடுவோம்.’   

No comments: