Monday, March 18, 2013

393. பழங்கண் வாழ்க்கை!


393. பழங்கண் வாழ்க்கை!

பாடியவர்: நல்லிறையனார் (393). குறுந்தொகையில் ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்று தொடங்கும் பாடலைப் பாடிய இறையனார் என்பவரிடமிருந்து இவரை வேறுபடுத்துவதற்காக, இவர் நல்லிறையனார் என்று அழைக்கப்பட்டதாக ஓளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார். இவர் பாடியதாக சங்க இலக்கியத்தில் காணப்படும் ஒரே பாடல், புறநானூற்றில் உள்ல 393- ஆம் பாடல் ஒன்றுதான். 
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். இவனைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 34-இல் காண்க.
பாடலின் பின்னணி: ’அரசே, நாங்கள் பல நாட்களாக வறுமையால் வாடுகிறோம். எங்களை ஆதரிக்கும் வள்ளன்மை உடையவரைத் தேடினோம். உலகத்து வளமெல்லாம் ஓரிடத்து இருந்தாற் போல நீ உள்ளாய் என்று அறிந்து, உன்னுடைய நல்ல புகழை நினைத்து, உன்னிடம் வந்தோம். உண்ண உணவும், உடுக்க நல்ல உடையும், செல்வமும் கொடுத்து அருள்வாயாக. பெருமைக்குரிய உன் திருவடிகளை நாங்கள் பலமுறை பாடுவோம்.’ என்று ஒருபாணன் கூறுவதாக இப்பாடலைப் புலவர் நல்லிறையனார் இயற்றியுள்ளார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: கடை நிலை. அரண்மனை வாயிலில் நின்று பாடுதல்.

பதிமுதற் பழகாப் பழங்கண் வாழ்க்கைக்
குறுநெடுந் துணையொடு கூர்மை வீதலின்
குடிமுறை பாடி ஒய்யென வருந்தி
அடல்நசை மறந்தஎம் குழிசி மலர்க்கும்
கடனறி யாளர் பிறநாட்டு இன்மையின்                 5

வள்ளன் மையின்எம் வரைவோர் யாரென
உள்ளிய உள்ளமொடு உலைநசை துணையா
உலகம் எல்லாம் ஒருபாற் பட்டென
மலர்தார் அண்ணல்நின் நல்லிசை உள்ளி
ஈர்ங்கை மறந்தஎன் இரும்பேர் ஒக்கல்                   10

கூர்ந்தஎவ் வம்விடக் கொழுநிணம் கிழிப்பக்
கோடைப் பருத்தி வீடுநிறை பெய்த
மூடைப் பண்டம் இடைநிறைந் தன்ன
வெண்நிண மூரி அருள,  நாளுற
ஈன்ற அரவின் நாவுருக் கடுக்கும்என்            15

தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கிப்
போதுவிரி பகன்றைப் புதுமலர் அன்ன
அகன்றுமடி கலிங்கம் உடீஇச் செல்வமும்
கேடின்று நல்குமதி பெரும! மாசில்
மதிபுரை மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி                   20

ஆடுமகள் அல்குல் ஒப்ப வாடிக்
கோடை யாயினும் கோடா ஒழுக்கத்துக்
காவிரி புரக்கும் நன்னாட்டுப் பொருந!
வாய்வாள் வளவன் வாழ்கெனப்
பீடுகெழு நோன்தாள் பாடுகம் பலவே.                   25


அருஞ்சொற்பொருள்: 1. பதிதல் = ஊன்றல் (இங்கு தொடக்கத்தைக் குறிக்கிறது); பழங்கண் = துன்பம். 2. துணை = துணைவி (மனைவி); கூர்மை – இங்கு அறிவுக் கூர்மையைக் குறிக்கிறது; வீதல் = கெடுதல். 3. ஒய்யென = விரைவாக. 4. அடல் = கொல்லுதல்; அடுதல் = சமைத்தல்; நசை = விருப்பம்; குழிசி = பானை; மலர்க்கும் = நிமிரச் செய்யும். 6. வரைதல் = தனக்குரியதாக்குதல் (ஆதரவு அளித்தல்). 7. உலைதல் = வருந்துதல்.10. ஈர்ங்கை = ஈரக்கை. 11. எவ்வம் = துன்பம். 14. மூரி = ஊன் துண்டு. 15. கடுக்கும் = ஒக்கும். 16. சிதாஅர் = கந்தை; துவர = முழுதும். 17. போது = மலரும் பருவத்தரும்பு; பகன்றை = ஒரு செடி. 18. கலிங்கம் = உடை; உடீஇ = உடுப்பித்து. 20. புரை = போன்ற; தெளிர்ப்ப = ஒலிக்க; தெளிர்ப்ப ஒற்றி = ஒலிக்குமாறு அறைந்து.21. ஒல்கல் = தளர்தல். 23. பொருநன் = அரசன். 24. வாய்வாள் = குறிதவறாத வாள்; வளவன் = கிள்ளிவளவன். 25. பீடு = பெருமை;

கொண்டு கூட்டு: வீதலின் வருந்தி, உள்ளமொடு, நசைதுணையாக, ஒருபாற்பட்டென, உள்ளி, மறந்த என் ஒக்கல், கிழித்து, அருளி, நீக்கி, உடீஇ, நல்குமதி, பெரும, தெளிர்ப்ப ஒற்றி, பொருந, வாழ்கெனப் பாடுகம் எனக் கூட்டுக. 

உரை: தொடக்கம் முதலே பழகி அறியாத துன்பமான வாழ்க்கையில், என்னுடைய இளைய நெடிய மனைவி வருந்தினாள்; என் அறிவுக் கூர்மையும் கெட்டது. குடிகள் தோறும் முறையே சென்று பாடி, ஈவோரில்லாதலால் மிகவும் வருந்தி, சோறாக்கும் விருப்பத்தை மறந்த எம்முடைய பானையை நிமிர்த்து மீண்டும் சமைக்கச் செய்யும் வள்ளன்மை உடையவர்கள் பிற நாடுகளில் இல்லாததால், வறுமைத் துன்பம் நீங்க வேண்டும் என்ற விருப்பம் துணையாக, வள்ளன்மையோடு எம்மை ஆதரிப்பவர் யார் என்று நாங்கள் எண்ணிப் பார்த்தோம். உலகத்து வளமெல்லாம் ஓரிடத்து இருந்தாற்போல, மலர்மாலை அணிந்த தலைவனாகிய நீ உள்ளாய் என்று அறிந்து, உன்னுடைய நல்ல புகழை நினைத்து, உண்ணுவதால் கை ஈரமாவதை மறந்த (உண்ணுவதை மறந்த) என் பெரிய சுற்றத்தின் வறுமைத் துன்பம் நீங்குமாறு நாங்கள் உன்னிடம் வந்தோம்.  கோடையில் பருத்தியிலிருந்து பஞ்சை எடுத்து மூட்டை மூட்டையாக வீடு நிறைய வைத்தது போல், மிகுதியாக இருக்கும், வெண்ணிறமான, கொழுமை நிறைந்த ஊனைத் துண்டாக்கி, வழங்கி எங்களை உண்ணச் செயது, ஈனுதற்குரிய நாள் வந்தவுடன் முட்டை ஈன்ற பாம்பின் பிளந்த நாவைப் போல் இருந்த என்னுடைய பழைய, கிழிந்த உடையை முற்றிலும் நீக்கி, அரும்பு விரிந்து மலர்ந்த புதிய பகன்றை மலரைப் போல், அகன்ற மடிப்புகளையுடைய உடையை உடுத்தச் செய்து செல்வமும் நிரம்பக் கொடுப்பாயாக, பெரும! ஆடும் பெண் ஆடிய பிறகு தளர்ந்து ஒடுங்குவதுபோல் எல்லாப் பொருளும் வாடி வதங்கும் கோடைக் காலத்திலும் தவறாது நீர் ஒழுகி வளம் பெருக்கும் காவிரி ஓடும் நல்ல நாட்டுக்கு அரசே! மாசற்ற முழுமதி போன்ற தடாரிப் பறையை ஒலிக்குமாறு அறைந்து, ’குறி தவறாத வாளையுடைய கிள்ளிவளவன் வாழ்க என்று உன்னுடைய பெருமைக்குரிய வலிய திருவடிகளைப் பலமுறை பாடுவோம்.’   

392. அமிழ்தம் அன்ன கரும்பு!


392. அமிழ்தம் அன்ன கரும்பு!

பாடியவர்: ஔவையார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 87-இல் காண்க.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி. இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 96-இல் காண்க.
பாடலின் பின்னணி: அதியமான் பொகுட்டெழினியின் வெற்றிகளையும், விருந்தோம்பலையும், கொடைத்தன்மையையும், அவன் முன்னோருள் ஒருவன் கரும்பைத் தன் நாட்டிற்குக் கொண்டு வந்ததையும் ஒரு பாணன் கூற்றாக வைத்து இப்பாடலை ஒளவையார் இயற்றியுள்ளார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: கடை நிலை. அரண்மனை வாயிலில் நின்று பாடுதல்.

மதிஏர் வெண்குடை அதியர் கோமான்
கொடும்பூண் எழினி நெடுங்கடை நின்றியான்
பசலை நிலவின் பனிபடு விடியல்
பொருகளிற்று அடிவழி யன்ன என்கை
ஒருகண் மாக்கிணை ஒற்றுபு கொடாஅ                  5

உருகெழு மன்னர் ஆர்எயில் கடந்து
நிணம்படு குருதிப் பெரும்பாட்டு ஈரத்து
அணங்குடை மரபின் இருங்களந் தோறும்
வெள்வாய்க் கழுதைப் புல்இனம் பூட்டி
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்           10

வைகல் உழவ, வாழிய பெரிதுஎனச்
சென்றுயான் நின்றனெ னாக; அன்றே
ஊருண் கேணிப் பகட்டுஇலைப் பாசி
வேர்புரை சிதாஅர் நீக்கி, நேர்கரை
நுண்ணூற் கலிங்கம் உடீஇ உண்ம்எனத்                15

தேட்கடுப்பு அன்ன நாட்படு தேறல்
கோண்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ,
ஊண்முறை ஈத்தல் அன்றியும் கோண்முறை
விருந்திறை நல்கி யோனே; அந்தரத்து
அரும்பெறல் அமிழ்தம் அன்ன                     20

கரும்புஇவண் தந்தோன் பெரும்பிறங் கடையே.

அருஞ்சொற்பொருள்: 1. ஏர் = ஒப்பு. 2. கொடு = வளைவு; பூண் = அணி; கொடும்பூண் = வளைந்த அணிகலம். 3. பசலை நிலவு = ஒளி மழுங்கிய நிலவு. 5. ஒற்றுபு = ஒற்றி; கொடாஅ = (திறை) கொடுக்காத. 6. உரு = அச்சம்; ஆர் = அரிய; எயில் = மதில்; கடந்து = அழித்து. 7. பாடு = கேடு. 8. அணங்கு = பேய் மகள். 11. வைகல் = நாள் தோறும். 13. பகடு = பெருமை; பகட்டிலை = பெரிய இலை. 14. புரை = உவமையுருபு (ஒத்த); சிதார் = கந்தை. 15. கலிங்கம் = உடை; உடீஇ = உடுப்பித்து.16. தேறல் = கள்ளின் தெளிவு.17. கோள்மீன் = கோள்; அளைஇ = கலந்து. 19. அந்தரம் = அப்பால் உள்ள நாடு; அயல் நாடு, தேவலோகம். 21. பிறங்கடை = வழித்தோன்றல்.

கொண்டு கூட்டு: எழினி நெடுங்கடை நின்று, யான் மாக்கிணை ஒற்றுபு, வாழிய பெரிதெனச் சென்று நின்றனெனாக, அன்றே, கரும்பிவண் தந்தோன் பிறங்கடையாகிய அவன், சிதாஅர் நீக்கி, கலிங்கம் உடீஇ, தேறல் அளைஇ, விருந்திறை நல்கினானெனக் கூட்டுக.

உரை: முழுமதி போன்ற வெண்கொற்றக் குடையையுடைய அதியர் வேந்தனாகிய, வளைந்த அணிகலன் அணிந்த எழினியின் அரண்மனையின் முற்றத்தில் நின்று, நான் பெரிய யானையின் காலடி போன்ற ஒருகண் தடாரிப் பறையை, ஒளி மழுங்கிய நிலவில் பனிபொழியும் விடியற்காலை நேரத்தில் அறைந்தேன். ’திறை கொடாத, அஞ்சத்தக்கப் பகைவேந்தரின் அரிய மதில்களை அழித்துத் தசையும் குருதியும் தோய்ந்ததால் ஈரமடைந்த, துன்பந்தரும் பேய்மகள் உறையும் பெரிய போர்க்களமெல்லாம், வெளுத்த வாயுள்ள கழுதையை ஏரில் பூட்டி உழுது, வெண்ணிற வரகும், கொள்ளும் விதைத்து, இடைவிடாமல் போராகிய உழவைச் செய்யும் வேந்தே, நீ நீடு வாழ்க.’ என்று வாழ்த்தினேன்.   என்னைக் கண்டவுடன், ஊரில் உள்ளவர்கள் நீருண்ணும் கிணற்றில் படர்ந்துள்ள பெரிய இலைகளையுடைய பாசியின் வேர்களைப் போல் கிழிந்திருந்த என் உடையைக் களைந்து, நுண்ணிய நூலாலான உடையை உடுப்பித்து, தேள் கொட்டினால் நெறியேறுவதைப் போல நாள்பட்டு நன்கு புளித்த கள்ளை வானத்தில் மின்னும் கோள்போல் ஒளிறும் பொற்கலங்களில் அளித்தது மட்டுமல்லாமல், முறைப்படி என்னை விருந்தினனாக இருத்தி உண்பித்தான்.   அவன், அயல்நாட்டில் இருந்து பெறுதற்கரிய அமிழ்தம் போன்ற கரும்பை இந்நாட்டிற்குக் கொண்டுவந்தவனுடைய பெரிய வழித்தோன்றல்.    

Monday, March 4, 2013

391. வேலி ஆயிரம் விளைக!


391. வேலி ஆயிரம் விளைக!

பாடியவர்: கல்லாடனார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 23-இல் காண்க.
பாடப்பட்டோன்: பொறையாற்றுக் கிழான். பொறையாறு என்பது சோழநாட்டில் கடற்கரையில் இருந்த ஓரூர். இவனைப் பாடியவர் கல்லாடனார். இவன் புலவர்களுக்கு பெருமளவில் ஆதரவு அளித்த புரவலன்.
பாடலின் பின்னணி: கல்லாடனார் முன்பு ஒருமுறை பொறையாற்றுக் கிழானைக் கண்டு அவனிடம் பரிசு பெற்றவர். அவர் வடவேங்கட நாட்டைச் சார்ந்தவர். அங்கு வளம் குன்றி வறுமை மிகுந்தது.. அவர் முன்பு ஓருமுறை பொறையாற்றுக் கிழானைக் கண்டு பரிசு பெற்றதை அறிந்தவர்கள் அவர் நிலையைக் கண்டு வருந்தி, பொறையாற்றுக் கிழானை மீண்டும் காணுமாறு கூறினார். அவர்கள் கூறியதற்கேற்ப, அவரும் அவனிடம் பரிசு பெறச் சென்றார். அவனை, ’நீ உன் மனைவியுடன் இனிதாக உறங்குக.’ என்றும் ‘உன் நாட்டில் வேலிக்கு ஆயிரம் கலம் நெல் விளைந்து வளம் பெருகுக.’ என்றும் வாழ்த்தினார். புலவர் கல்லாடனார் இப்பாடலைத் தன் கூற்றாக இல்லாமல் ஒருபொருநன் கூற்றாக அமைத்துள்ளார். 

பாடாண் திணை: ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: கடைநிலை. அரண்மனை வாயிலில் நின்று பாடுதல்.

தண்துளி பலபொழிந்து எழிலி இசைக்கும்
விண்டு அனைய விண்தோய் பிறங்கல்
முகடுற உயர்ந்த நெல்லின் மகிழ்வரப்
பகடுதரு பெருவளம் வாழ்த்திப் பெற்ற
திருந்தா மூரி பரந்துபடக் கெண்டி                         5

அரியல் ஆர்கையர் உண்டுஇனிது உவக்கும்
வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென
ஈங்குவந்து இறுத்தஎன் இரும்பேர் ஒக்கல்
தீர்கை விடுக்கும் பண்பின் முதுகுடி
நனந்தலை மூதூர் வினவலின்………             10

முன்னும் வந்தோன் மருங்கிலன் இன்னும்
அளியன் ஆகலின் பொருநன் இவன்என
நின்னுணர்ந்து அறியுநர் என்உணர்ந்து கூறக்
காண்கு வந்திசிற் பெரும, மாண்தக
இருநீர்ப் பெருங்கழி நுழைமீன் அருந்தும்               15

துதைந்த தூவியம் புதாஅம் சேக்கும்
ததைந்த புன்னைச் செழுநகர் வரைப்பின்
நெஞ்சமர் காதல் நின்வெய் யோளொடு
இன்துயில் பெறுகதில் நீயே வளஞ்சால்
துளிபதன் அறிந்து பொழிய                                   20

வேலி ஆயிரம் விளைகநின் வயலே!

அருஞ்சொற்பொருள்: 1. எழிலி = மேகம்; இசைக்கும் = முழங்கும். 2. விண்டு = மலை; பிறங்கல் = சிறுமலை, திரள். 3. முகடு = உச்சி. 4. பகடு = எருது (யானை, எருமை, பசு இவற்றின் ஆண்). 5. மூரி = திரண்ட ஊன் தடி; கெண்டி = கிண்டி. 6. அரியல் = கள்; ஆர்கையர் = உண்பவர்; உவத்தல் = மகிழ்தல். 7. வரைப்பு = எல்லை. 8. இறுத்தல் = தங்குதல்; இரு = பெரிய; ஒக்கல் = சுற்றம். 9. தீர்கை = நீங்குதல். 10. நனந்தலை = அகன்ற இடம். 11. மருங்கு = செல்வம். 15. இரு = கரிய. 16. துதைந்த = செறிந்த; தூவி = இறகு; புதா = ஒருவகை நாரை அல்லது ஒரு வகைப் பறவை.  சேக்கும் = தங்கும். 17. ததைந்த = செறிந்த. 18. வெய்யோள் = விரும்பப்பட்டவள். 20. துளி = மழை; பதன் = காலம், பருவம். 21. வேலி = ஒரு நில அளவு ( 1 வேலி = 6.74 ஏக்கர்); ஆயிரம் என்பது ஆயிரம் கலத்தைக் குறிக்கிறது (ஒரு கலம் = 12 மரக்கால்; ஒரு மரக்கால் =  4 படி).

கொண்டு கூட்டு: வடபுலம் பசித்தென, இறுத்த ஒக்கல், வினவின் என, உணர்ந்து கூற, காண்கு வந்திசின், பெரும, வரைப்பின் வெய்யோளோடு இன்றுயில் பெறுக; துளிபொழிய, வயல் விளைக எனக் கூட்டுக.

உரை: வேங்கட நாடாகிய வடநாட்டில், குளிர்ந்த மழைத்துளிகளை மிகப் பெய்து மேகங்கள் முழங்கும் மலை போல, எருதுகளின் உழைப்பால் நெல் விளைந்து குவிந்திருந்தது. அவ்வெருதுகளின் உழைப்பால் பெற்ற பெரும் வளத்தை மகிழ்ச்சியோடு வாழ்த்தி, ஊன்கறியைச் சிறுசிறு துண்டுகளாக்கிக் கள்ளோடு உண்டு என்னுடைய பெரிய சுற்றத்தார் மகிழ்ச்சியோடு அங்கு இருந்தனர்.  ஆனால், அந்த வேங்கட நாடு வறுமையுற்றது.  ஆகவே, என் சுற்றத்தார், இங்கே வந்து தங்கினர்.  அவர்கள் இந்நாட்டை விட்டு நீங்கும் இயல்புடையவரல்லர். பழங்குடிகள் நிறைந்த  அகன்ற இடத்தையுடைய மூதூரில் …. ’இவன் முன்பே இங்கு வந்தவன்; பொருளில்லாதவன். ஆதலால், இரங்கத்தக்கவன்.’  என்று உன்னோடு நெருங்கிப் பழகி உன் உள்ளத்தை அறிந்தவர்கள் கூற, நான் உன்னைக் காண வந்தேன். பெரும! கரிய நீர்மிகுந்த பெரிய கழியில் மீன்களைத் தேடி உண்ணும், செறிந்த சிறகுகளையுடைய புதா என்னும் பறவைகள் தங்கும் அடர்ந்த புன்னைமரங்களையுடைய பெரிய அரண்மனையில், உன்மீது காதல் கொண்ட, உன்னால் விரும்பப்பட்ட, உன் மனைவியுடன் நீ இனிதாக உறங்குக. நெல்வளம் பெருகுமாறு தகுந்த காலத்தில் மழை பொழிந்து உன் நாட்டில் வேலிக்கு ஆயிரம் கலம் நெல் விளைவதாக. 

390. காண்பறியலரே!


390. காண்பறியலரே!

பாடியவர்: ஔவையார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 87-இல் காண்க.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 87-இல் காண்க. 
பாடலின் பின்னணி: ’அதியமானின் அரண்மனையை அவனிடம் அன்புடையவர்கள் அணுக முடியுமே தவிர, அவனுடைய பகைவர்கள் கனவிலும் நெருங்க முடியாது. ஒருநாள் இரவு, நான் அதியமானின் மனைமுற்றத்தில் நின்று, தடாரிப் பறையைக் கொட்டி அவன் புகழைப் பாடினேன். அதைக் கண்ட அதியமான், என்னுடைய அழுக்கேறிய உடையைக் களைந்து, புத்தாடை உடுப்பித்து, கள்ளும் சோறும் அளித்தான்; என் சுற்றத்தாருக்கு நெல்லும் பொன்னும் கொடுத்தான். தங்கள் வறுமையைப் போக்குவதற்கு வானம் மழை பெய்யவில்லை என்று சிலர் வருந்துகிறார்கள், அவர்கள் அதியமானைப் பற்றி அறியாதவர்கள் அல்லது அவனைப் பற்றி அறிந்திருந்தும் அவனை காணாதவர்கள்.’ என்று அதியமானின் கொடைத்தன்மையை பொருநன் ஒருவன் புகழ்வது போல் ஒளவையார் இப்பாடலை இயற்றியுள்ளார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: இயன் மொழி. அரசனின் இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

அறவை நெஞ்சத்து ஆயர் வளரும்
மறவை நெஞ்சத்து ஆயி லாளர்
அரும்பலர் செருந்தி நெடுங்கால் மலர்கமழ்
விழவணி வியன்களம் அன்ன முற்றத்து
ஆர்வலர் குறுகின் அல்லது காவலர்              5

கனவிலும் குறுகாக் கடியுடை வியன்நகர்
மலைக்கணத்து அன்ன மாடம் சிலம்பஎன்
அரிக்குரல் தடாரி இரிய ஒற்றிப்
பாடி நின்ற பன்னாள் அன்றியும்
சென்ற ஞான்றைச் சென்றுபடர் இரவின்                10

வந்ததற் கொண்டு நெடுங்கடை நின்ற
புன்தலைப் பொருநன் அளியன் தான்எனத்
தன்உழைக் குறுகல் வேண்டி என்அரை
முதுநீர்ப் பாசி அன்ன உடைகளைந்து
திருமலர் அன்ன புதுமடிக் கொளீஇ             15

மகிழ்தரல் மரபின் மட்டே அன்றியும்
அமிழ்தன மரபின் ஊன்துவை அடிசில்
வெள்ளி வெண்கலத்து ஊட்டல் அன்றி
முன்னூர்ப் பொதியில் சேர்ந்த மென்னடை
இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு அகற்ற                20

அகடுநனை வேங்கை வீகண் டன்ன
பகடுதரு செந்நெல் போரொடு நல்கிக்
கொண்டி பெறுகஎன் றோனே உண்துறை
மலைஅலர் அணியும் தலைநீர் நாடன்
கண்டார் கொண்டுமனை திருந்தடி வாழ்த்தி….      25

வான்அறியல என்பர் அடுபசி போக்கல்
அண்ணல் யானை வேந்தர்
உண்மையோ அறியலர் காண்புஅறி யலரே!

அருஞ்சொற்பொருள்: அறவை நெஞ்சம் = அறம் புரியும் நெஞ்சம்; ஆயர் = இடையர்; வளர்தல் = மிகுதல். 2. மறவை நெஞ்சம் = வீரம் பொருந்திய நெஞ்சம்; ஆயில் = ஆய்+இல் ஆய் = சிறுமை; இல் = வீடு; ஆயில் = ஆய்+இல் = சிறிய வீடு. 3, செருந்தி = ஒருவகை மரம். 4. வியன் = பெரிய. 6. கடி = காவல். 7. கணம் = கூட்டம்; சிலம்ப = ஒலிக்க. 8. இரிய = கிழிய; ஒற்றி = அறைந்து. 10. ஞான்று = நாள், பொழுது; படர்தல் = செல்லுதல். 13. உழை = இடம்; அரை = இடை. 15. மடி = ஆடை; கொளீஇ = கொள்ளச் செய்து. 16. மட்டு = கள்.  17. அடிசில் = சோறு. 19. பொதியில் = மன்றம். 20. இரு = பெரிய; ஒக்கல் = சுற்றத்தார்; புலம்பு = தனிமை, வருத்தம். 21. அகடு = உள்ளிடம்; வீ = பூ. 22. பகடு = எருது. 23. கொண்டி = கொள்ளை (பிறர் பொருள் முதலியவற்றைக் கொள்ளுதல்). 26. வான் = மழை.

கொண்டு கூட்டு: வியன்கண் மன்ன முற்றத்து, வியனகர், மாடம் சிலம்ப, தடாரி ஒற்றி, பாடிநின்ற தன்றாக, கொண்டு, என, குறுகல் வேண்டி, களைந்து, கொளீஇ, ஊட்டலன்றியும், ஒக்கல் புலம்பகற்ற, நல்கி, பெறுக என்றோன், நாடன், அறியலரும் காண்பறியலரும் என்பர் எனக் கூட்டுக.

உரை: மலர்ந்த செருந்தி முதலிய மரங்கள் அடர்ந்த பெரிய காட்டில், அறம்புரியும் மனப்பான்மையுடைய இடையர்களும், வீரம் மிகுந்த சிறுகுடியினரும் கூடி எடுக்கும்,  மணம் கமழும் விழாக்களினால் அழகுறும் மன்றத்தைப் போல் அதியமானின் பெரிய அரண்மனை இருந்தது. அந்த அரண்மனையின் முற்றம் அன்புடையவர்கள் மட்டுமே அணுகக் கூடியதாகவும், பகைவர்களால் கனவில்கூட நெருங்க முடியாத அளவுக்குக் காவலுடையதாகவும் இருந்தது.  அந்த அரண்மனையின் முற்றத்தை அடைந்து, மலைகளின் கூட்டம் போன்ற மாடங்களில் எதிரொலி உண்டாகுமாறு தடாரிப் பறை கிழியும்படி அறைந்து, நான் பல நாட்கள் பாடவில்லை.  நான் சென்ற முதல்நாள் இரவுப் பொழுதிலேயே, நான் வந்ததைக் கண்ட அதியமான் தன்னுடைய அரண்மனையின் நெடியவாயிலில் நின்று பாடுபவன் இரங்கத் தக்கவன் என்று எண்ணினான். நான் அவனை அணுகுவதைப் பார்த்து, என் இடுப்பில் பழமையான பாசிபோல் அழுக்குப் படிந்திருந்த கந்தைத் துணியை அகற்றி, அழகிய மலர் போன்ற புத்தாடையைக் கொடுத்து அணியச் செய்தான். அதுமட்டுமல்லாமல், மகிழ்ச்சி அளிக்கும் கள்ளையும், அமிழ்து போன்ற சுவையுடைய ஊன்துவையல் கலந்த சோறும் வெள்ளிக் கலத்தில் கொடுத்து உண்ணச் செய்தான். ஊரின் முன்னிடமாகிய மன்றத்தில் தங்கியிருந்த என் சுற்றத்தார், என்னைப் பிரிந்ததால் அடைந்த தனிமைத் துயரத்தை நீக்க, எருதுகளைக் கொண்டு விளைவித்த, தேனால் உள்ளிடம் நனைந்த வேங்கைப் பூவைப் போன்ற நிறமுடைய செந்நெல்லைப் போரோடு அளித்து, இதனைக் கொள்க என்றான். மலையில் பூத்த மலர்களை கொண்டுவந்து நீர்த்துறைகளில் சேர்க்கும் நீர்வளம் பொருந்திய நாட்டுக்கு உரியவன் அதியமான். இரவலர்கள் அவனைக் கண்டால், அவன் அவர்களைத் தன் மனைக்கு அழைத்துச் செல்வான். அவர்கள் அங்குச் சென்று, அவனுடைய திருவடிகளை வாழ்த்தி …… ‘எங்கள் பசித்துயரை அறிந்து அதைப் போக்குதற்காக மழைகூடப் பெய்யவில்லை’ என்பர் சிலர். அவர்கள் பெருமித மிக்க யானைகளையுடைய தலைவன் அதியமானை அறியாதவரும், அறிந்தும் அவனைக் காணாதவரும் ஆவர்.

389. நெய்தல் கேளன்மார்!

389. நெய்தல் கேளன்மார்!

பாடியவர்: கள்ளில் ஆத்திரையனார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 175-இல் காண்க.
பாடப்பட்டோன்: நல்லேர் முதியன். இவன் தமிழகத்தின் வட எல்லையாகிய வேங்கட நாட்டை ஆண்ட வேந்தர்களான புல்லி, ஆதனுங்கன் முதலியோரின் வழித்தோன்றல்.

பாடலின் பின்னணி: ’நான் சிறுவனாக இருந்த பொழுது, உன் முன்னோனாகிய ஆதனுங்கனைக் ஒருமுறைக் காண வந்தேன், வறுமைக் காலமாயினும் தன்னை மறவாது வந்து காண வேண்டும் என்று கூறி, அவன் எனக்குப் பரிசு அளித்தான். அவன் இன்று நான் சென்று காணும் இடத்தில் இல்லை; சென்றால் காண முடியாதவனும் அல்லன். அந்த ஆதனுங்கன் போல் நீயும் எனக்குப் பரிசளிப்பாயாக.’ என்று ஒருபொருநன் கூற்றாக இப்பாடலைப் புலவர் கள்ளில் ஆத்திரையனார் இயற்றியுள்ளார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: இயன் மொழி. அரசனின் இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

நீர்நுங்கின் கண்வலிப்பக்
கானவேம்பின் காய்திரங்கக்
கயங்களியும் கோடைஆயினும்
ஏலா வெண்பொன் போகுறு காலை
எம்மும் உள்ளுமோ பிள்ளைஅம் பொருந,              5

என்றுஈத் தனனே இசைசால் நெடுந்தகை
இன்றுசென்று எய்தும் வழியனும் அல்லன்
செலினே காணா வழியனும் அல்லன்
புன்தலை மடப்பிடி இனையக் கன்றுதந்து
குன்றக நல்லூர் மன்றத்துப் பிணிக்கும்                  10

கல்லிழி அருவி வேங்கடங் கிழவோன்
செல்வுழி எழாஅ நல்லேர் முதிய
ஆத னுங்கன் போல நீயும்
பசித்த ஒக்கல் பழங்கண் வீட
வீறுசால் நன்கலம் நல்குமதி பெரும              15

ஐதுஅகல் அல்குல் மகளிர்
நெய்தல்கே ளன்மார் நெடுங்கடை யானே!

அருஞ்சொற்பொருள்:  1. கண் = தேங்காய், பனை முதலியவற்றின் முளை கிளம்பும் இடம்; வலிப்ப = வன்மையாக (கடினமாக). 2. திரங்க = சுருங்குதல், உலர்தல். 4. ஏலா = இயலா; வெண்பொன் = வெள்ளி; காலை = காலம், பொழுது. 6. இசை = புகழ்; சால் = நிறைவு. 9. பிடி = பெண்யானை; இனைய = வருந்த. 12. செல்வுழி எழா = மனம் செல்லும் வழியில் செல்லாத. 12. முதிய = முதியனே (முதியன் என்பவனை அழைத்தல்). 14. ஒக்கல் = சுற்றம்; பழங்கண் = துன்பம்; வீடுதல் = கெடுதல். 15. வீறு = தனிப்பட்ட சிறப்பு. 16. ஐது = மெல்லியது. 17. நெய்தல் = நெய்தல் பறை (சாப்பறை, இரங்கல் பறை)

கொண்டு கூட்டு: வலிப்பத் திரங்கக் களியும் கோடை ஆயினும், போகுறு காலையும், பொருந, உள்ளுமோ என்று ஈத்தனன்; நெடுந்தகை; அல்லன், அல்லன், கிழவோனாகிய  முதிய, நீயும், ஆதனுங்கன் போல பழங்கண் வீட, நல்குமதி; பெரும, மகளிர் நெடுங்கடையில் நெய்தல் கேளன்மார் எனக் கூட்டுக.

உரை: நீருடைய நுங்கு காய்ந்து கல்லைப் போலக் கடினமானாலும், காட்டு வேம்பின் காய் பழுக்காமல் சுருங்கி உலர்ந்து போனாலும், நீர்நிலைகள் வற்றிச் சேறு காய்ந்து கிடந்தாலும், வெள்ளி தெற்கே செல்லும் வறுமைக் காலமானாலும், இளைய பொருநனே, ’எம்மையும் உன் நினைவில் கொள்வாயாக’ என்று கூறிப் பெரும்புகழ் வாய்ந்த ஆதனுங்கன் எனக்குப் பெருமளவில் பொருள்களைஅளித்தான். நான் இன்று சென்று காணும் இடத்தில் அவன் இல்லை; சென்றால் காண முடியாதவனும் அல்லன். சிறிய தலையையுடைய பெண்யானைகள் வருந்த, அவற்றின் கன்றுகளை கொண்டுவந்து குன்றுகளுடைய நல்ல ஊரின் மன்றத்தில் கட்டிவைக்கும் கற்களினூடே பாயும் அருவிகளையுடைய வேங்கட மலைக்கு உரிய நல்லேர் முதியனே! நீ மனம் போன போக்கில் போகாதவன். உன் முன்னோனாகிய ஆதனுங்கனைப் போல், பசியால் வாடும் என் சுற்றத்தாருடைய துன்பம் நீங்கச் சிறந்த நல்ல அணிகலன்களை வழங்குவாயாக. மெல்லிய இடையையுடைய உன் மகளிர் உன்னுடைய பெரிய மனையின் முற்றத்தில் என்றும் நெய்தற்பறையைக் (இரங்கல் ஒலியைக்) கேளாதிருப்பார்களாக. 

388. நூற்கையும் நா மருப்பும்!


388. நூற்கையும் நா மருப்பும்!

பாடியவர்: மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் (388). இவர் இயற்பெயர் மள்ளனார். இவர் மதுரையைச் சார்ந்த அளக்கர் ஞாழலார் என்பவரின் மகனாகையால் மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.  இவர் பாடியனவாக அகநாநூற்றில் ஏழு பாடல்களும் (33, 144, 174, 244, 314, 344, 353), குறுந்தொகையில் இரண்டு பாடல்களும் (188, 215), நற்றிணையில் இரண்டு பாடல்களும் (297, 321), புறநானூற்றில் ஒருபாடலும் காணப்படுகின்றன. அம்மள்ளனார் என்ற பெயருடைய புலவர் ஒருவர் நற்றிணையில்  உள்ள 82-ஆம் பாடலை இயற்றியுள்ளார். அம்மள்ளனார் என்பவரும் இப்பாடலை இயற்றிய மள்ளனார் என்பவரும் ஒருவர் அல்லர் என்று கருதப்படுகிறது.
பாடப்பட்டோன்: சிறுகுடிகிழான் பண்ணன். இவனைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 173-இல் காண்க.

பாடலின் பின்னணி: இப்பாடலில் பாடப்பட்டிருக்கும் பண்ணன் என்பவன் கொடையிற் சிறந்தவன். பொருநன் ஒருவன் பண்ணனிடம் சென்று, தன் வறுமையைக் கூறியவுடன், பண்ணன் அவனுக்குப் பெருமளவில் பொருள் கொடுத்து உதவியதைப் பாணன் கூற்றாக புலவர் இப்பாடலில் கூறுகிறார்.   ’நாள் தோறும் பண்ணனின் புகழை நான் பாடாவிட்டால் அவன் என் பெருஞ்சுற்றத்தாரைப் பேணாது ஒழிவானாக.’ என்றும் அப்பாணன் கூறுவதாக இப்பாடலில் புலவர் மள்ளனார் கூறுகிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: இயன் மொழி. அரசனின் இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.


வெள்ளி தென்புலத்து உறைய விளைவயல்
பள்ளம் வாடிய பயன்இல் காலை
இரும்பறைக் கிணைமகன் சென்றவன் பெரும்பெயர்
சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தித்
தன்நிலை அறியுநன் ஆக அந்நிலை                       5

இடுக்கண் இரியல் போக உடைய
கொடுத்தோன் எந்தை கொடைமேந் தோன்றல்
நுண்ணூல் தடக்கையின் நாமருப் பாக
வெல்லும் வாய்மொழிப் புல்லுடை விளைநிலம்
பெயர்க்கும் பண்ணற் கேட்டிரவன் ……                          10

வினைப்பகடு ஏற்றம் எழீஇக் கிணைத்தொடா
நாடொறும் பாடேன் ஆயின், ஆனா
மணிகிளர் முன்றில் தென்னவன் மருகன்
பிணிமுரசு இரங்கும் பீடுகெழு தானை
அண்ணல் யானை வழுதி                                       15

கண்மா றிலியர்என் பெருங்கிளைப் புரவே!


அருஞ்சொற்பொருள்: 1. வெள்ளி = வெள்ளி என்று அழைக்கப்படும் கோள் (சுக்கிரன்); உறைதல் = தங்குதல்; விளைவயல் பள்ளம் = விளைவயல்களும் நீர்நிலைகளும். 2. காலை = காலம், பொழுது. 5. அறியுநன் = அறிவித்தான். 6. இரியல் = விட்டுப் போதல். 7. தோன்றல் = அரசன், தலைவன். 8. நுண்ணூல் = நுண்ணிய நூல் (நுண்ணிய நூலறிவு); தடக்கை = பெரிய கை (இங்கு துதிக்கையைக் குறிக்கிறது); மருப்பு = கொம்பு (தந்தம்). 11.  ஏற்றம் = உயர்வு; புகழ். 13. மருகன் = வழித்தோன்றல். 14. இரங்கல் = ஒலித்தல்; பீடு = பெருமை; தானை = படை. 15. வழுதி = பாண்டியன். 16. கண்மாறலீயர் = கண்மாறுக; கண்மாறல் = புறக்கணித்தல்.

உரை: வெள்ளியாகிய கோள் தெற்கே இருந்தது; விளைவயல்களும் நீர்நிலைகளும் வாடிய பயனற்ற நிலையில் இருந்தன. அத்தகைய வறுமைக் காலத்தில் பெரிய பறையாகிய தடாரிப் பறையை இசைக்கும் பொருநன் ஒருவன் பெரும்புகழுடைய சிறுகுடிப் பண்ணனிடம் சென்று தன் வறுமையை அறிவித்தான். அப்பொழுதே, அப்பொருநனின் வறுமைத் துன்பம் நீங்குமாறு, தன்னிடம் இருந்த பொருள்களைச் சிறுகுடிப் பண்ணன் அவனுக்குக் கொடுத்தான்.  எங்கள் தந்தை போன்ற சிறுகுடிப் பண்ணன் கொடையால் மேம்பட்ட தலைவன். நுண்ணிய நூல்களைத் துதிக்கையாகவும், நாவைக் கொம்பாகவும் உடைய யானைகளாகிய வெல்லும் பாடல்களை இயற்றும் புலவர்களுக்கு, நெல் விளையும் நிலங்களை அவன் பரிசாக அளிப்பதை நான் கூறக் கேட்பீராக…. அவனுடைய உழவுத் தொழிலுக்குரிய எருதுகளின் புகழை யாழோடு இசைத்து கிணைப்பறையை அறைந்து நாள்தோறும் நான் பாடேனாயின், மணிகட்டிய முற்றத்தையும், வாரால் கட்டப்பட்ட முரசு முழங்கும் பெருமை பொருந்திய சிறந்த யானைப்படையையுமுடைய பாண்டியன் வழித்தோன்றலான சிறுகுடிப் பண்ணன் என் பெரிய சுற்றத்தாரைப் பாதுகாக்கும் அருட்செயலை செய்யாது ஒழிவானாக.

சிறப்புக் குறிப்பு: பண்ணன் உழவுத்தொழிலால் பெருவளம் பெற்றுக் கொடையில் சிறந்து விளங்கியதனால் அவனுடைய எருதுகள் புகழுக்குரியவை என்று புலவர் மள்ளனார் கருதுவதாகத் தோன்றுகிறது.

387. சிறுமையும் தகவும்!


387. சிறுமையும் தகவும்!
பாடியவர்: குன்றுகட் பாலியாதனார் (387). இவரது இயற்பெயர் ஆதன். இவர் குன்றுகட் பாலி என்னும் ஊரைச் சார்ந்தவராதலால் குன்றுகட் பாலியாதனார் என்று அழைக்கப்பட்டார். குன்றுகட் பாலி என்னும் ஊர் இப்பொழுது பாலிக்குன்னு என்ற பெயருடன் கேரள மாநிலத்தில் கோழிக்கோடு அருகில் உள்ளது. குன்றுகட் பாலியாதனார் என்ற பெயர் குண்டுகட் பாலியாதனார் எனத் திரிந்ததாகக் கருதப்படுகிறது. இப்புலவர் புறநானூற்றில் உள்ள 387 – ஆம் பாடலையும் நற்றிணையில் உள்ள 220 – ஆம் பாடலையும் இயற்றியவர். 
பாடப்பட்டோன்: சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன். சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்ற சேரமன்னன் சிக்கற்பள்ளி என்னும் ஊரில் இறந்ததால் சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் என்று அழைக்கப்பட்டான்.
பாடலின் பின்னணி: ஒருகால், புலவர் குன்றுகட் பாலியாதனார் சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனைக் காணச் சென்றார். அவன் பகைவரை வென்று அவர்களிடமிருந்து திறையாகப் பெற்ற பொருளை நண்பர்களுக்கும் பரிசிலர்களுக்கும் அளிக்கும் சிறப்பை அவர் கண்டார். அவர் அவனுடைய வெற்றியைப் புகழ்ந்து பாடினார். அவன் களிறுகளையும், குதிரைகளையும் மற்ற பொருள்களையும் அவர் கனவிலும் கண்டிராத அளவுக்கு வழங்கினான். அவன் கொடைச் சிறப்பைக் கண்டு மகிழ்ந்த குன்றுகட் பாலியாதனார், ‘பொருநையாற்று மணலினும் அதைச் சுற்றியுள்ளள வயல்களில் விளையும் நெல்லினும் பல ஆண்டுகள் வாழ்க.’ என்று செல்வக் கடுங்கோ வாழியாதனை வாழ்த்தினார். இப்பாடலை ஒருபாணன் கூற்றாகப் புலவர் குன்றுகட் பாலியாதனார் இயற்றியுள்ளார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ் வலிமை கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: வாழ்த்தியல். தலைவனை வாழ்த்துதல்.


வள்உகிர வயல்ஆமை
வெள்அகடு கண்டன்ன
வீங்குவிசிப் புதுப்போர்வைத்
தெண்கண் மாக்கிணை இயக்கி, என்றும்
மாறு கொண்டோர் மதில்இடறி                             5

நீறுஆடிய நறுங்கவுள
பூம்பொறிப் பணைஎருத்தின
வேறுவேறு பரந்துஇயங்கி
வேந்துடைமிளை அயல்பரக்கும்
ஏந்துகோட்டு இரும்பிணர்த் தடக்கைத்                  10

திருந்துதொழிற் பலபகடு
பகைப்புல மன்னர் பணிதிறை தந்துநின்
நகைப்புல வாணர் நல்குரவு அகற்றி
மிகப்பொலியர்தன் சேவடியத்தையென்று
யாஅன்இசைப்பின் நனிநன்றுஎனாப்           15

பலபிற வாழ்த்த இருந்தோர்தங் கோன்….
மருவஇன்நகர் அகன் கடைத்தலைத்
திருந்துகழல் சேவடி குறுகல் வேண்டி
வென்றிரங்கும் விறன்முரசினோன்
என்சிறுமையின் இழித்து நோக்கான்           20

தன்பெருமையின் தகவுநோக்கிக்
குன்றுறழ்ந்த களிறென்கோ?
கொய்யுளைய மாஎன்கோ?
மன்றுநிறையும் நிரைஎன்கோ?
மனைக்களமரொடு களம்என்கோ?               25

ஆங்கவை, கனவுஎன மருள வல்லே நனவின்
நல்கி யோனே நசைசால் தோன்றல்
ஊழி வாழி பூழியர் பெருமகன்!
பிணர்மருப்பு யானைச் செருமிகு நோன்தாள்
செல்வக் கடுங்கோ வாழி யாதன்                           30

என்னாத் தெவ்வர் உயர்குடை பணித்திவண்
விடுவர் மாதோ நெடிதே நில்லாப்
புல்லிலை வஞ்சிப் புறமதில் அலைக்கும்
கல்லென் பொருநை மணலினும் ஆங்கண்
பல்லூர் சுற்றிய கழனி                                 35

எல்லாம் விளையும் நெல்லினும் பலவே.



அருஞ்சொற்பொருள்: 1. வள் = கூர்மை; உகிர் = நகம். 2. அகடு = வயிறு. 3. வீங்கு விசி = வரிந்து கட்டப்பட்ட. 5. மாறு கொண்டோர் = பகைவர்; இடறுதல் = ஊறுபடுத்தல் (இடித்தல்). 6. நீறு = புழுதி; கவுள் = கன்னம். 7. பணை = பருமை; எருத்து = கழுத்து.
9. மிளை = காவற்காடு. 10. பிணர் = சொரசொரப்பு; தடக்கை = பெரிய கை (துதிக்கை). 11. பகடு = யானை, பசு, எருமை இவற்ரின் ஆண். 13. நகைப்புலவாணர் = மகிழ்வூட்டும் புலமை மிக்க இரவலர்; நல்குரவு = வறுமை. 17. மருவல் = நெருங்குதல்; நகர் = அரண்மனை (பெரிய வீடு). 19. விறல் = வலி. 21. தகவு = தகுதி. 22. உறழ்ந்த = போன்ற. 23. உளை = தலையாட்டம் (குதிரையின் தலையில் அணியப்படுவது). 27. நசைசால் = விருப்பமிக்க. 28. பூழி = ஒருநாடு. 29. மருப்பு = கொம்பு. 29. செரு = போர். 31. தெவ்வர் = பகைவர். 33. புல்லிலை வஞ்சி = இலையில்லாத வஞ்சி (வஞ்சி நகரத்தைக் குறிக்கிறது); அலைத்தல் = அடித்தல், அசைத்தல்.  

கொண்டு கூட்டு: கிணை இயக்கி, தந்து, அகற்றில் பொலியர்தன், சேவடி என்று இசைப்பின் நனிநன்று எனா, வாழ்த்த இருந்தோர் தங்கோன், குறுகல் வேண்டி, இரங்கும், முரசினோன்; நோக்கான் நல்கியோன் தோன்றல், பெருமகன், செல்வக் கடுங்கோ வாழியாதன் என்னாத் தெவ்வர் குடைபணித்து, நில்லாது விடுவராதலின், மணலினும் நெல்லினும் பல வூழி வாழி எனக் கூட்டுக.

உரை: என்னுடைய பெரிய தடாரிப்பறை, வயலில் வாழ்வதும் கூர்மையான நகங்களையுடையதுமான ஆமையின் வயிறு போன்ற வெண்ணிறமான புதிய தோலால் இறுக்கிக் கட்டப்பட்ட தெளிந்த கண்ணையுடையது. அந்தப் பெரிய தடாரிப் பறையை அறைந்து, ‘எப்பொழுதும் பகைவரின் மதிலை இடித்தலால், புழுதிபடிந்த கன்னங்களையுடைய, பூவேலைப்பாடுடைய பட்டமணிந்த, பெரிய கழுத்தையுடைய, வேறுவேறாகப் பரவிச் சென்று பகைவேந்தர்களின் காவற்காட்டில் உலவும், உயர்ந்த கொம்புகளையும் பெரிய சொரசொரப்பான துதிக்கையும், நல்ல தொழில் செய்யும் பல யானைகளையுடைய பகைநாட்டு வேந்தர் பணிந்துவந்து, உனக்குத் தரவேண்டிய திறையைத் தந்தார்கள். அவர்கள் தந்த பொருளைக்கொண்டு, உனக்கு இன்பம் அளிக்கும் அறிவிற் சிறந்த இரவலர் நண்பர் முதலியோரது வறுமையைப் போக்கினாய். உன்னுடைய திருவடிகள் மிகவும் விளங்குக.’ என்று நான் அவனைப் புகழ்ந்து பாடினால் அது மிகவும் நன்றென்று மற்ற இயல்புகளைச் சொல்லி வாழ்த்த இருந்தவர்க்கு வாழியாதன் தலைவன்.  அவன் நெருங்குதற்கு இனிய பெரிய அரண்மனையின் அகன்ற முற்றத்தில் தன்னுடைய நல்ல கழலணிந்த திருவடிகளை வந்தடையுமாறு போர்க்களத்தில் பகைவரை வென்று முழக்கும் வலிய முரசுடையவன். அவன் என் சிறுமையைக் கண்டு இகழ்ந்து நோக்காமல், தன் பெருமையையும் தகுதியையும் நோக்கி, மலை போன்ற களிறுகளையும், பிடரிமயிர் கொய்யப்பட்டு, தலையாட்டம் அணிந்த குதிரைகளையும், மன்றம் நிறைந்த ஆநிரைகளையும், மனைப்பணியாளரும் களப்பணியாளரும் கனவென்று மயங்குமாறு நனவில் அளித்த அன்பு நிறைந்த தலைவன்; பூழி நாட்டார்க்குத் தலைவன். சொரசொரப்புடைய துதிக்கையும் கொம்புமுடைய யானைகள் செய்யும் போரில் மேம்பட்ட வலிய முயற்சியுடைய செல்வக் கடுங்கோ வாழியாதன் என்று அவன் பெயரைக்கூறிய அளவில், பகைவர் தம்முடைய உயர்ந்த குடையைத் தாழ்த்தி வணங்கிக், காலம் தாழ்த்தாமல், செய்ய வேண்டிய சிறப்புக்களைச் செய்து இங்கே வரவிடுவர். ஆதலால், வஞ்சி மாநகரத்தின் மதிலை அலைக்கும் பொருநையாற்று மணலினும், அதைச் சுற்றியுள்ள பல வயல்கள் அனைத்திலும் விளையும் நெல்லையும்விட அவனுடைய வாழ்நாட்கள் மிகுதியாகுக.