Thursday, September 16, 2010

180. நீயும் வம்மோ! முதுவாய் இரவல !

பாடியவர்: கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன் (180). இவன் பெயர் ஈர்ந்தூர் கிழான் கோயமான் என்று சில உரையாசிரியர்கள் கருதுகின்றனர். ஈர்ந்தூர் என்பது இக்காலத்தில் கொங்கு நாட்டில் ஈஞ்ஞூர் என்று அழைக்கப்படுகிறது. இவன் சோழ வேந்தர்களுக்குத் துணையாகப் போர்புரிந்தவன்.
பாடலின் பின்னணி: இப்பாடல், ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறனிடம் பரிசில் பெற்ற பாணன் ஒருவன் பசியால் வாடும் பாணன் ஒருவனை ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: வல்லாண் முல்லை: பாணாற்றுப் படையும் ஆகும்.
வல்லாண் முல்லை: ஒரு வீரனுடைய வீட்டையும் ஊரையும் இயல்பினையும் சொல்லி அவனது புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.
பாணாற்றுப் படை: பரிசு பெற்ற பாணன், பரிசு பெற வரும் பாணனுக்குச் செல்லும் வழியும் புரவலன் புகழும் கூறி ஆற்றுப்படுத்துதல்.

நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே;
இல்லென மறுக்கும் சிறுமையும் இலனே;
இறையுறு விழுமம் தாங்கி அமர்அகத்து
இரும்புசுவைக் கொண்ட விழுப்புண் நோய்தீர்ந்து
5 மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி
வடுவின்றி வடிந்த யாக்கையன் கொடையெதிர்ந்து
ஈர்ந்தை யோனே பாண்பசிப் பகைஞன்
இன்மை தீர வேண்டின் எம்மொடு
நீயும் வம்மோ! முதுவாய் இரவல!
10 யாம்தன் இரக்கும் காலைத் தான்எம்
உண்ணா மருங்குல் காட்டித் தன்ஊர்க்
கருங்கைக் கொல்லனை இரக்கும்
திருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே.

அருஞ்சொற்பொருள்:
1.நிரப்பு = வறுமை (இன்மை). 3. இறை = அரசன்; விழுமம் = துன்பம். 5. மயங்கி = கலந்து. 6. வடு = குற்றம்; வடிவு = அழகு. 11. மருங்குல் = வயிறு.

கொண்டு கூட்டு: பாண்பசிப் பகைஞன் ஈர்ந்தை யோன்; அவன் தன்னை யாம் இரக்கும் காலைத் தான் எம் மருங்குல் காட்டி நெடுவேல் வடித்திசின் எனக் கருங்கைக் கொல்லனை இரக்கும்; முதுவாய் இரவல, இன்மை தீர வேண்டின், எம்மொடு நீயும் வம்மோ எனக் கூட்டுக.

உரை: முதிய இரவலனே! ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன் இரப்பவர்களின் வறுமையைத் தீர்க்கும் அளவிற்குக் கொடுக்கும் செல்வம் உடையவன் அல்லன்; ஆனாலும், இல்லையென்று மறுத்துக் கூறும் சிறுமை இல்லாதவன். அவன், தன் அரசனுக்கு வந்த துன்பங்களைத் தான் தாங்கிக்கொண்டு, போர்க்களத்தில் படைக்கருவிகளால் உண்டாகும் விழுப்புண்களை ஏற்றுக் கொண்டவன். மருந்துக்காக பல இடங்களில் வெட்டப்பட்ட அடிமரம்போல் உடலெல்லாம் வடுக்கள் நிறைந்திருந்தாலும் அவன் குற்றமற்ற அழகிய உடலுடையவன்; இரவலரை எதிர்பார்த்திருப்பவன்; ஈர்ந்தூர் என்னும் ஊரைச் சார்ந்தவன்; பாணர்களின் பசிக்குப் பகைவன். உன்னுடைய வறுமை தீர வேண்டுமானால், நீ என்னோடு வருவாயாக. நாம் இரக்கும் பொழுது, நம்முடைய பசியால் வாடும் வயிற்றைத் தன் ஊரில் உள்ள வலிய கைகளுடைய கொல்லனிடம் காட்டிச் சிறந்த இலைவடிவில் அமைந்த நெடிய வேலை வடிப்பாயாக என்று கூறுவான்.

சிறப்புக் குறிப்பு: கொல்லனிடம் வேல் வடிப்பாயாக என்று கூறுவது, பகைவர்களோடு போருக்குச் சென்று, அவர்களை வென்று, பொருள் கொண்டுவந்து இரப்போர்க்கு அளிப்பதற்காக என்ற பொருளில் கூறப்பட்டிருக்கிறது.

No comments: