Thursday, September 16, 2010

176. காணா வழிநாட்கு இரங்கும் என் நெஞ்சம்

பாடியவர்: புறத்திணை நன்னாகனார்(176, 376, 379, 381, 384). இவர் இயற்பெயர் நன்னாகனார். இவர் புறத்திணைப் பாடல்களை இயற்றுவதில் வல்லாவராக இருந்ததால் இவருக்கு இப்பெயர் வந்திருக்கலாம். இவர் ஓய்மான் வில்லியாதனையும், ஓய்மான் நல்லியக் கோடனையும், கரும்பனூர் கிழானையும் பாடியுள்ளார். இவர் புறநானூற்றில் ஐந்து பாடல்களை இயற்றியுள்ளார்.
பாடப்பட்டோன்: ஓய்மான் நல்லியக் கோடன் (176). ஓய்மான் என்பது ஓய்மா நாட்டை உடையவன் என்று பொருள்படும். திண்டிவனத்தைச் சார்ந்த பகுதி அக்காலத்தில் ஓய்மா நாடென்று அழைக்கப்பட்டது. அந்நாட்டில், மாவிலங்கை, வேலூர், எயிற்பட்டினம், கிடங்கில், ஆமூர் என்ற ஊர்கள் இருந்தன. நல்லியக் கோடன் மாவிலங்கையைத் தலைநகராகக்கொண்டு ஓய்மா நாட்டை ஆண்டு வந்தான். இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் இயற்றிய சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் ஓய்மான் நல்லியக் கோடன் என்பது குறிப்பிடத் தக்கது. “நன்மா விலங்கை மன்ன ருள்ளும் , மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வாள், உறுபுலித் துப்பின் ஓவியர் பெருமகன்” என்று சிறுபாணாற்றுபடையில் சிறப்பிக்கப்படுவதால், நல்லியக் கோடன் ஓவியர் குடியைச் சார்ந்தவனென்றும், ஓவியர் மா நாடென்பது ஓய்மா நாடென மருவியிருக்கலாம் என்றும் அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார்.
பாடலின் பின்னணி: வேங்கடத்தின் அருகில் இருந்த கரும்பனூர் சென்று, கரும்பனூர் கிழானைப் பாடி, அவனிடம் மிகுந்த அளவில் பரிசுகள் பெற்றுப் பல நாட்கள் யாரிடமும் இரவாது தம் இல்லத்தே நன்னாகனார் இனிது வாழ்ந்துவந்தார். அவர், தற்பொழுது தன்னிடம் வந்ததைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்த நல்லியக் கோடன் அவருக்குப் பெருமளவில் பரிசுகள் அளித்து அவரைச் சிறப்பித்தான். அதனால் பெரு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்த நன்னாகனார், இப்பாடலில் நல்லியக் கோடனைப் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

ஓரை ஆயத்து ஒண்தொடி மகளிர்
கேழல் உழுத இருஞ்சேறு கிளைப்பின்
யாமை ஈன்ற புலவுநாறு முட்டையைத்
தேன்நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம்
5 இழுமென ஒலிக்கும் புனலம் புதவின்
பெருமா விலங்கைத் தலைவன் சீறியாழ்
இல்லோர் சொன்மலை நல்லியக் கோடனை
உடையை வாழியெற் புணர்ந்த பாலே!
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
10 ஓரூர் உண்மையின் இகழ்ந்தோர் போலக்
காணாது கழிந்த வைகல் காணா
வழிநாட்கு இரங்குமென் நெஞ்சமவன்
கழிமென் சாயல் காண்தொறும் நினைந்தே.

அருஞ்சொற்பொருள்:
1.ஓரை = மகளிர் விளைட்டுகளில் ஒன்று; ஆயம் = கூட்டம். 2. கேழல் = பன்றி; இரு = கரிய; கிளைப்பு = கிண்டுகை. 5. புனல் = நீர்; அம் - இடைச் சொல்; புதவு = மதகு. 7. மலைத்தல் = சூடுதல். 8. பால் = ஊழ். 11. வைகல் = நாள். 13. கழி = மிகுதி.

கொண்டு கூட்டு: என் நெஞ்சம் அவன் சாயலைக் காணுந்தோறும் நினைந்து வழிநாட்கிரங்கும்; என்னைப் புணர்ந்த பாலே; நீ நல்லியக் கோடனை உடயை; நீ வாழ்வாயாக எனக் கூட்டுக.

உரை: ஒளிபொருந்திய வளையல்களை அணிந்து, ஓரை விளையாட்டு விளையாடும் மகளிர், பன்றிகள் கிளரிய கரிய சேற்றில், ஆமைகள் இட்ட புலால் மணக்கும் முட்டைகளையும், தேன் மணக்கும் ஆம்பல் கிழங்குகளையும் கிண்டி எடுப்பர். இழும் என்ற ஒலியுடன் மதகுகளின் வழியே நீரோடும் பெரிய மாவிலங்கை என்னும் ஊர்க்குத் தலைவன் நல்லியக் கோடன். அவன் சிறிய யாழையுடைய வறியவர்கள் பாடும் புகழ்மாலைகளை அணிந்தவன். அத்தகைய நல்லியக் கோடனைத் துணையாக நான் பெற்றதற்குக் காரணம் என்னைச் சார்ந்த நல்வினைதான். வாழ்க என் நல்வினை! பாரியின் பறம்பு நாட்டில் குளிர்ந்த நீர்ச் சுனைகளில் தெளிந்த நீர் எப்பொழுதும் அருகேயே இருந்ததால் அந்நாட்டு மக்கள் அதைப் பெரிதாகக் கருதவில்லை. அதுபோல், அருகிலேயே இருந்தும், இதுவரை பல நாட்கள் நான் நல்லியக் கோடனைக் காணாது கழித்தேன். ஆனால் நல்லியக் கோடனின் மிகுந்த நற்குணங்களைக் காணும்பொழுது, இனிவரும் நாட்களில் அவனைக் காணாத நாட்கள் இருக்குமோ என்று நினைத்து என் நெஞ்சம் வருந்துகிறது.

No comments: