Monday, November 23, 2009

125. புகழால் ஒருவன்!

பாடியவர்: வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார். பெருஞ்சாத்தானார் என்பது இவரது இயற்பெயர். சங்க காலத்தில் பொன்னின் தரம் ஆய்பவர்கள் வண்ணக்கனார் என்று அழைக்கப்பட்டனர். இப்புலவர் பொன்னின் தரம் ஆய்வதைத் தம் தொழிலாகக் கொண்டிருந்தமையால் இவர் வண்ணக்கன் என்று அழைக்கப்பட்டதாக அறிஞர்கள் கருதுகின்றனர். இவர் வட நாட்டிலிருந்து குடியேறியதால் வடம என்ற அடைமொழியும் இவர் பெயரோடு இணைக்கப்பட்டுள்ளது.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி. மலையமான் திருமுடிக்காரியைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 121-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: ஒரு சமயம் சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறைக்கும் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்கும் இடையே போர்மூண்டது. அப்போரில், மலையமான் திருமுடிக்காரி, சோழனுக்குத் துணையாக சேரனை எதிர்த்துப் போர் புரிந்தான். அது கண்ட வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தானார், “போரில் வென்றவன் உன்னால்தான் வெற்றி பெற்றாதாகக் கூறுவான். போரில் தோற்றவன், நீ போரில் ஈடுபடாமல் இருந்திருந்தால் தோல்வி அடைந்திருக்க மாட்டோம் என்று கூறுவான்” என்று திருமுடிக்காரியின் வலிமையை இப்பாடலில் புகழ்கிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன
நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை
பரூஉக்கண் மண்டையொடு ஊழ்மாறு பெயர
உண்கும் எந்தைநிற் காண்குவந் திசினே!
5 நள்ளாதார் மிடல்சாய்ந்த
வல்லாளநின் மகிழிருக்கையே
உழுத நோன்பகடு அழிதின் றாங்கு
நல்லமிழ்து ஆகநீ நயந்துண்ணும் நறவே;
குன்றத் தன்ன களிறு பெயரக்
10 கடந்தட்டு வென்றோனும் நிற்கூ றும்மே;
வெலீஇயோன் இவன்எனக்
கழலணிப் பொலிந்த சேவடி நிலங்கவர்பு
விரைந்துவந்து சமந்தாங்கிய
வல்வேல் மலையன் அல்லன் ஆயின்
15 நல்லமர் கடத்தல் எளிதுமன், நமக்குஎனத்
தோற்றோன் தானும் நிற்கூ றும்மே
தொலைஇயோன் இவன்என
ஒருநீ ஆயினை பெரும பெருமழைக்கு
இருக்கை சான்ற உயர்மலைத்
20 திருத்தகு சேஎய்நிற் பெற்றிசி னோர்க்கே.

அருஞ்சொற்பொருள்:
1.பனுவல் = பஞ்சு. 2. தயங்குதல் = நிலை தவறுதல்; குறை = உண்ணுவதற்குப் பக்குவப்படுத்தப்பட்ட தசை. 3. பரூஉ = பருமை; மண்டை = இரப்போர் கலம்; ஊழ் = முறைமை. 5. நள்ளாதார் = பகைவர்; மிடல் = வலிமை; சாய்த்தல் = கெடுத்தல், முறித்தல். 6. மகிழ் இருக்கை = மகிழ்ச்சியான இடம் (அரசவை). 7. பகடு = காளை மாடு; அழி = வைக்கோல். 8.நயத்தல் = விரும்புதல்; நறவு = மது. 9. பெயர்தல் = சிதைவுறுதல். 10. கடந்து அடுதல் = எதிர் நின்று போரிடுதல். 11. வெலீஇயோன் = வெல்வித்தவன் (வெற்றிக்குக் காரணமாக இருந்தவன்). 12. கவர்பு = கவர்ந்து. 13. சமம் = போர். 15. மன் - அசைச்சொல். 17. தொலைஇயோன் = தோல்விக்குக் காரணமாக இருந்தவன். 20. சேஎய் = முருகன்.

கொண்டு கூட்டு: பெரும! சேஎய்! வென்றோனும், வெலியோன் இவனென நிற்கூறும்: தோற்றோனும், தொலைஇயோன் இவனென நிற்கூறும்: அதனால், நிற்பெற்றிசினோர்க்கு ஒருநீ ஆயினையாதலால், நின் மகிழிருக்கைக் கண்ணே உண்கும் எந்தைநிற் காண்குவந்திசின்; பகடு அழிதின்றாங்கு நீ உண்ணும் நறவு நல்ல அமிழ்தாக எனக் கூட்டுக.

உரை: அரசே! பகைவரின் வலிமையை அழித்த வலியவனே! பெண்கள் நூல் நூற்பதற்குப் பயன்படுத்தும் பஞ்சு போல் மென்மையானதாகவும், நெருப்பின் வெப்பத்தைத் தணிக்கும் வகையில் நன்கு சமைக்கப்பட்டதும் கொழுமை நிறைந்ததுமான ஊன் துண்டுகளையும், பெரிய பாத்திரங்களில் வார்த்த கள்ளையும் முறையாக மாறி மாறி உண்ணலாம் என்று உன் மகிழ்ச்சியான இடத்திற்கு உன்னைக் காண வந்தோம். உழுத வலிய காளை (நெல்லைத் தின்னாமல்) வைக்கோலைத் தின்பதுபோல் நீ விரும்பி உண்ணும் மது அமிழ்தம் ஆகட்டும்.

மலைபோன்ற யானை சிதைவுறுமாறு எதிர் நின்று போரிட்டு வென்றவனும் வெற்றிக்குக் காரணமாக இருந்தவன் நீதான் என்று கூறுவான். வீரக் கழலணிந்த, சிறந்த திருவடிகளால் போர்க்களத்தைக் கைக்கொள்ள விரும்பி, விரைந்து வந்து போரைத் தடுத்த வலிய வேலையுடைய மலையன் வராது இருந்திருந்தானானால், நல்ல போரை வெல்லுதல் நமக்கு எளிதாக இருந்திருக்கும் என்று போரில் தோற்றவனும் தம் தோல்விக்குக் காரணமாக இருந்தவன் நீதான் என்று கூறுவான். ஆகவே, அரசே! உன்னை நட்பாகவும் பகையாகவும் கொண்டவர்களுக்கு, நீ பெரிய மழைக்கு இருப்பிடமான உயர்ந்த மலையையுடைய சிறந்த முருகனைப் போல் ஒப்பற்ற ஒருவன் ஆனாய்.

சிறப்புக் குறிப்பு: தனது முயற்சியால் வந்த பொருளெல்லாம் பிறர்க்கு அளித்து, எஞ்சியதைக் காரி உண்பது குறித்து, “உழுத நோன்பகடு அழிதின்றாங்கு நல்லமிழ்து ஆகநீ நயந்துண்ணும் நறவே” என்று வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார் இப்பாடலில் கூறுவது போல் தோன்றுகிறது.

சூரபத்மன் என்ற அரக்கன் தேவர்களுக்கு இன்னல் விளைவித்தாகவும், தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, சிவபெருமான் முருகப் பெருமானை உருவாக்கி, அவரைத் தேவர்களுக்குத் துணையாக சூரபத்மனை எதிர்த்துப் போரிடுமாறு பணித்ததாகவும், அப்போரில் முருகப் பெருமான் சூரபத்மனைக் கொன்று வெற்றி பெற்றதாகவும், வெற்றி பெற்ற தேவர்களும் தோல்வியுற்ற அரக்கர்களும் முருகனின் வலிமையைப் புகழ்ந்ததாகவும் கந்த புராணம் கூறுகிறது. தேவர்களுக்குத் துணையாக முருகன் போர் செய்தது போல் காரி சோழனுக்குத் துணையாகப் போர்செய்ததால் இப்பாடலில் வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் காரியை முருகனுக்கு ஒப்பிடுகிறார் என்று கருதப்படுகிறது.

No comments: