Monday, November 16, 2009

120. பெருவிறல் நாடு நந்துங் கொல்லோ?

பாடியவர்: கபிலர். கபிலரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105 - இல் காணலாம்.

பாடலின் பின்னணி: முன்பு, பாரியின் பறம்பு நாட்டில், புன்செய் நிலத்தில் வரகு, தினை, எள் போன்ற பொருள்கள் நிறைய விளைந்தன. அந்நாட்டு மக்கள் மிகுந்த அளவில் கள்ளும் ஊனும் உண்டார்கள். இது போன்ற புது வருவாயுடைய வளமான நாடு இனி அழிந்துவிடுமோ என்று எண்ணிக் கபிலர் புலம்புவதை இப்பாடலில் காணலாம்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான கருத்துகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல். கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.

வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவல்
கார்ப்பெயல் கலித்த பெரும்பாட்டு ஈரத்துப்
பூழி மயங்கப் பலஉழுது வித்திப்
பல்லி ஆடிய பல்கிளைச் செவ்விக்
5 களை கால் கழாலின், தோடு ஒலிபு நந்தி
மென்மயிற் புனிற்றுப்பெடை கடுப்ப நீடிக்
கருந்தாள் போகி ஒருங்குபீள் விரிந்து
கீழும் மேலும் எஞ்சாமைப் பலகாய்த்து
வாலிதின் விளைந்த புதுவரகு அரியத்
10 தினைகொய்யக் கவ்வை கறுப்ப அவரைக்
கொழுங்கொடி விளர்க்காய் கோள்பதம் ஆக
நிலம்புதைப் பழுனிய மட்டின் தேறல்
புல்வேய்க் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து
நறுநெய்க் கடலை விசைப்பச் சோறுஅட்டுப்
15 பெருந்தோள் தாலம் பூசல் மேவர
வருந்தா யாணர்த்து நந்துங் கொல்லோ
இரும்பல் கூந்தல் மடந்தையர் தந்தை
ஆடுகழை நரலும் சேட்சிமைப் புலவர்
பாடி ஆனாப் பண்பிற் பகைவர்
20 ஓடுகழல் கம்பலை கண்ட
செருவெஞ் சேஎய் பெருவிறல் நாடே!

அருஞ்சொற்பொருள்:
1.வெப்பு = வெப்பம்; சுவல் = மேட்டு நிலம். 2. கார் = கார் காலம் ( ஆவணி, புரட்டாசி); கலித்த = மிகுந்த; பாடு = இடம் . 3. பூழி = புழுதி; மயங்குதல் = கலத்தல். 4. பல்லியாடல் = நெருக்கமாக விளைந்த பயிர்களப் விலக்குவதற்கும் மற்றும் களையெடுப்பதற்கும் உழவர்கள் செய்யும் ஒரு பணி; செவ்வி = சமயம், நிலை. 5. கழால் =கலைதல், களைதல்; தோடு = இலை; ஒலிதல் = தழைத்தல்; நந்தி = விளங்கி (பெருகி). 6. புனிற்ற = ஈன்றணிமை ( பிரசவித்தவுடன்); பெடை = பறவையின் பெட்டை; கடுப்ப = ஒப்ப; நீடி = நீண்டு. 7. தாள் = தண்டு; போகுதல் = நீளம்; பீள் = பயிரிளங்கதிர். 9. வாலிதின் = சீராக. 10. கவ்வை = எள்ளிளங்காய்; கறுப்ப = கறுக்க. 11. விளர்தல் = வெளுத்தல்; கோள் = ஏற்றுக் கொள்ளுதல். 12. பழுனுதல் = முதிர்தல்; மட்டு = கள். 13. குரம்பை = குடிசை; பகர்தல் = கொடுத்தல். 14. விசைத்தல் = வேகமுறல்(துள்ளல்). 15. தாலம் = கலம்; பூசல் = கழுவுதல்; மேவுதல் = உண்ணல்.16. யாணர் = புது வருவாய்; நந்துதல் = அழிதல். 17. இரும் = கரிய. 18. கழை = மூங்கில்; நரலும் = ஒலிக்கும்; சேட்சிமை = உயர்ச்சி. 19. ஆனா = குறையாத. 20. கம்பலை = ஆரவாரம். 21. செரு = போர்; வெம்பல் = விரும்புதல்; விறல் = வலிமை, வெற்றி.

பல்லியாடல்: “பல்லியாடுதல், தாளியடித்தல், ஊடடித்தல் என்பன ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்கள். அது நெருங்கி முளைத்த பயிர்ளை விலக்குதற்கும், எளிதாகக் களை பிடுங்குவதற்கும் கீழ்நோக்கியுள்ள கூரிய பல முனைகளையுடைய பலகையின் இரண்டு பக்கத்திலும் மேற்புறத்திலுள்ள வளையங்களில் கட்டிய கயிறுகளைச் சேர்த்துப் பூட்டிய நுகத்தை வாய் கட்டப்பட்டுள்ள எருதுகளின் பிடரியில் வைத்துப் பூட்டி உழச்செய்தல்” - பழைய உரையாசிரியரின் குறிப்பு.

கொண்டு கூட்டு: செரு வெஞ்சேஎய் பெருவிறலது சேட்சிமையையுடைய நாடு யாணர்த்து; அது நந்துங் கொல்லொ எனக் கூட்டுக.

உரை: வெப்பம் நிறைந்ததாகவும் வேங்கை மரங்களுடையதுமான சிவந்த மேட்டு நிலத்தில் கார்காலத்து மழைக்குப் பிறகு மிகுந்த ஈரமான பெரிய இடத்தில் புழுதி கலக்குமாறு உழவர்கள் பலமுறை உழுது பின்னர் விதைகளை விதைக்கின்றனர். அதன் பிறகு, பல்லியாடி நெருங்கி முளைத்தப் பயிர்களைப் பிரிப்பதோடு மட்டுமல்லாமல் களைகளையும் நீக்குகின்றனர். பல கிளைகளையுடைய வரகுப் பயிர்களிலிருந்து களைகள் அடியோடு நீக்கப்பட்டதால் அவை இலைகளுடன் தழைத்துப் பெருகி, கரிய தண்டுகள் நீண்டு, அண்மையில் முட்டையிட்ட மெல்லிய மயில்களின் நிறத்தோடு காட்சி அளிக்கின்றன. எல்லாக் கதிர்களும் விரிந்து, அடியிலும் மேல் பாகத்திலும் காய்த்து சீராக விளைந்த புதிய வரகை உழவர்கள் அறுவடை செய்கின்றனர். தினைகளைக் கொய்கின்றனர். எள்ளிளங்காய்கள் முற்றி இருக்கின்றன. அவரையின் வெண்ணிறக்காய்கள் பறிப்பதற்கு ஏற்ற நிலையில் உள்ளன. நிலத்தில் புதைக்கப்பட்ட முதிர்ந்த கள்ளை புல்லைக் கூரையாகக்கொண்ட குடிசையில் உள்ள மக்கள் அனைவருக்கும் கொடுக்கின்றனர். மணம் வீசும் நெய்யில் கடலையை வறுத்து அதைச் சோறோடு சேர்த்துச் சமைத்து அனைவருக்கும் மகளிர் உணவளித்துப் பின்னர் பாத்திரங்களைக் கழுவுகின்றனர். கரிய கூந்தலுடைய மகளிரின் தந்தையாகிய பாரி, அசையும் மூங்கில் ஒலிக்கும் உயர்ந்த மலை உச்சியையுடையவன். அவன் புலவரால் பாடப்படும் பெருமையில் குறைவற்றவன். பகைவர் புறமுதுகு காட்டி ஓடும் ஆரவாரத்தைக் கேட்டவன். அவன் போரை விரும்பிய முருகனைப் போன்ற பெரிய வெற்றியையுடையவன். அவன் நாடு, வருந்தாமல் கிடைக்கும் புது வருவாய் உள்ள நாடு. அந்நாடு அழிந்துவிடுமோ?

சிறப்புக் குறிப்பு: இப்பாடலில் கபிலர் கூறுவதைப் போல், பலமுறை உழுதால் பயிர்கள் நன்றாக விளையும் என்ற கருத்து திருக்குறளிலும் காணப்படுகிறது.

தொடிப்புழுதி கஃசா உணக்கிற் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். (குறள் - 1037)
பொருள்: ஒரு நிலத்தை உழுதவன் ஒருபலப் புழுதி காற்பலம் ஆகும் வண்ணம் அவ்வுழவடிப் புழுதியைக் காயவிடுவானாயின் அந்நிலத்தில் விளையும் பயிர்கள் ஒரு பிடி எருவும் தேவையின்றிச் செழித்து வளரும்.

No comments: