Tuesday, April 7, 2009

PuRanaanuuRu - Poem 73

73. உயிரும் தருகுவன்!


பாடியவர்: சோழன் நலங்கிள்ளி; 'நல்லுருத்திரன் பாட்டு' எனவும் பாடம். சோழன் நலங்கிள்ளிக்கும் அவன் உறவினன் சோழன் நெடுங்கிள்ளிக்குமிடையே பகை இருந்தது. ஒரு சமயம் அவர்களுக்கிடையே போர் மூண்டது. புலவர் கோவூர் கிழார் அவர்களைச் சமாதானப்படுத்திப் போரை நிறுத்தியதைப் புறநானூற்றுப் பாடல் 45-ல் காணலாம். மற்றொரு சமயம் சோழன் நலங்கிள்ளி ஆவூரை முற்றுகையிட்ட பொழுது சோழன் நெடுங்கிள்ளி போரிடாமல் அரண்மனையில் அடைபட்டுக் கிடந்தான். அவனுக்குப் புலவர் கோவூர் கிழார் அறிவுரை கூறியதாகப் புறனானூற்றுப் பாடல் 44 கூறுகிறது. சோழன் நலங்கிள்ளி படை வலிமையும் சிறந்த ஆட்சித் திறமையும் தமிழ்ப் பலமையும் கொண்டவன். புறநானூற்றில் 15 பாடல்களில் இவன் புகழப்படுகிறான். புறநானூற்றில் இவன் இயற்றிய பாடல்கள் இரண்டு (73 மற்றும் 75).

பாடலின் பின்னணி: சோழன் நெடுங்கிள்ளி சோழன் நலங்கிள்ளியை எதிர்த்துப் போரிட வருகிறான். “நெடுங்கிள்ளி ஏன் போருக்கு வருகிறான்? என்னுடைய நாடு வேண்டுமென்று என்னடி பணிந்து என்னைக் கேட்டால் என் நாட்டையும் தருவேன்; என் உயிரையும் தருவேன். ஆனால் என்னையும் என் ஆற்றலையும் மதிக்காமல் போரிட நினைத்தால் அவனுக்குப் பெருமளவில் துன்பந்தரும் வகையில் போரிடுவேன்” என்று சோழன் நலங்கிள்ளி வஞ்சினம் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: காஞ்சி

துறை: வஞ்சினக் காஞ்சி

மெல்ல வந்து, என் நல்லடி பொருந்தி

ஈயென இரக்குவர் ஆயின், சீருடை

முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்;

இன்னுயிர்ஆயினும்கொடுக்குவென், இந்நிலத்து

5 ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாதுஎன்

உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின்

துஞ்சு புலி இடறிய சிதடன் போல

உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக்

கழைதின் யானைக் கால்அகப் பட்ட

10 வன்றிணி நீண்முளை போலச், சென்றுஅவண்

வருந்தப் பொரேஎன் ஆயின், பொருந்திய

தீதுஇல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்

பல்லிருங் கூந்தல் மகளிர்

ஒல்லா முயக்கிடைக் குழைக, என்தாரே!

அருஞ்சொற்பொருள்:

2. சீர் = புகழ், பெருமை. 3 தாயம் = உரிமைச் சொத்து; தஞ்சம் = எளிமை. 7. சிதடன் = குருடன். 8. மைந்து = வலிமை. 10. வன்திணி = வலிய திண்ணிய. 13. இரு = கரிய 14. ஒல்லா = பொருந்தாத; முயக்கு = தழுவல், புணர்தல்; குழைக = துவள்க, வாடுக

உரை: மெல்ல வந்து என் காலில் விழுந்து “கொடு” என்று என்னைக் கெஞ்சிக் கேட்டால் புகழுடைய முரசோடு கூடிய என்னுடைய உரிமைச் சொத்தாகிய இந்நாட்டை அடைவது எளிது. அது மட்டுமல்லாமல், என் இனிய உயிரைக்கூடக் கொடுப்பேன். ஆனால், வெட்ட வெளியில் படுத்துறங்கும் புலிமேல் தடுக்கி விழுந்த குருடன் போல் இந்நாட்டு மக்களின் ஆற்றலைப் போற்றாது போருக்கு வந்து என்னை ஏளனப்படுத்தும் அறிவிலி நெடுங்கிள்ளி இங்கிருந்து தப்பிப்போவது அரிது. மூங்கில் தின்பதற்கு வந்த வலிய யானையின் காலில் குத்திய வலிய பெரிய நீண்ட முள்போல் அவனைத் துன்புறுத்திப் போரிடேனாயின், தீதில்லாத நெஞ்சத்தோடு காதல் கொள்ளாத மிகுந்த கரிய கூந்தலையுடைய மகளிர் (விலை மகளிர்) என்னைத் தழுவுவதால் என் மாலை வாடட்டும்.

சிறப்புக் குறிப்பு: விலைமகளிரோடு தொடர்பு கொள்வது நல்லொழுக்கமில்லை என்பதை திருவள்ளுவர்,

அன்பின் விழையார்; பொருள் விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும். (குறள் - 911)

என்ற குறளில் கூறுவதை இமன்னனின் கூற்றோடு ஒப்பு நோக்குக.

1 comment:

Agathiyan John Benedict said...

எளிய நடை... சுருக்கமான உரை... வாசிக்க மிக விருப்பமானதாக இருக்கிறது. பாராட்டுகள்.
புறநானூற்றையும் திருக்குறளையும் நீங்கள் முடிச்சுப் போடுவதும் சிறப்பு. ஒரு கல்லில் இரு மாங்காயை வீழ்த்தும் உம் திறம் பாராட்டுக்குரியதே. தொடரட்டும்....