Tuesday, April 7, 2009

PuRanaanuuRu - Poem 70

70. குளிர்நீரும் குறையாத சோறும்

பாடியவர்: கோவூர் கிழார்: (கோவூர் அழகியார் எனவும் பாடம்). இவர் கோவூரைச் சார்ந்தவர். வேளாண் மரபினர். இவர் புறநானூற்றில் 15 பாடல்களை இயற்றியவர். சோழன் நலங்கிள்ளிக்கும் சோழன் நெடுங்கிள்ளிக்கும் இடையே போர் மூண்ட பொழுது, கோவூர் கிழார், “ ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே; இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால், குடிப்பொருள் அன்று, நும் செய்தி” என்று கூறி அவர்களைச் சமாதானப்படுத்திப் போரைத் தடுத்தி நிறுத்தினார் (புறம்- 45). பின்னர், ஒரு சமயம் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளியை ஆவூரில் முற்றுகையிட்ட பொழுது நெடுங்கிள்ளி போரிடாமல் அரண்மனையில் அடைபட்டுக் கிடந்தான். அவ்வமயம், “அறவை யாயின்,’நினது’ எனத் திறத்தல்! மறவை யாயின், போரொடு திறத்தல்; அறவையும் மறவையும் அல்லை யாகத் திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின் நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல் நாணுத்தக வுடைத்திது காணுங் காலே “ என்று அறிவுரை கூறினார். மற்றும், சோழன் நெடுங்கிள்ளி, இளந்தத்தன் என்னும் புலவனை ஒற்றன் எனத் தவறாகக் கருதிக் கொல்ல நினைத்தான். அப்போது, புலவர் கோவூர் கிழார், “இளந்தத்தன் ஒற்றன் அல்ல; அவர் ஒரு புலவர்” என்று எடுத்துரைத்து அப்புலவரைக் காப்பாற்றினார் (புறம் - 47). சோழன் கிள்ளி வளவன், மலையமான் என்பவனின் மக்களை யானையின் காலிலிட்டுக் கொல்ல முயன்ற பொழுது, அச்சிறுவர்களின் இயல்புகளைக் கூறி, அவர்களைக் காப்பாற்றினார் (புறம் - 46). புலவர் கோவூர் கிழார், சிறந்த அறிவும், ஆழ்ந்த புலமையும், மன்னர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்கும் மன உரமும் கொண்ட சான்றோர் என்பது அவர் இயற்றிய பாடல்களிலிருந்து தெரிகிறது.

பாடப்பட்டவன்: கிள்ளி வளவன். இவன் படை வலிமை, கொடைத்தன்மை, தமிழ்ப் புலமை ஆகியவற்றில் சிறந்தவன். புறநானூற்றில் 19 பாடல்கள் இவனைப் புகழ்கின்றன. இவனைப் பாடிய புலவர் பெருமக்கள் பலர். புறநானூற்றில் இவன் இயற்றிய பாடல் ஒன்றும் உள்ளது (புறம் 173).

பாடலின் பின்னணி: கோவூர் கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் பாடிப் பரிசு பெற்றவர். அவன் மீது மிகுந்த அன்பு கொண்டவர். சிறுகுடி என்னும் ஊரில் பண்ணன் என்னும் வள்ளல் ஒருவன் இருந்தான். கிள்ளி வளவனும் பண்ணனும் நெருங்கிய நண்பர்கள். “தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன், பண்ணன் சிறுகுடி” என்று அகநானூற்றுப் பாடல் 54-இல் பண்ணன் சிறப்பிக்கப்படுகிறான். பண்ணனை “பசிப்பிணி மருத்துவன்” என்று புறநானூற்றில் உள்ள 173 -ஆம் பாடலில் கிள்ளி வளவன் புகழ்கின்றான். கோவூர் கிழார் பண்ணன் மீதும் மிக்க அன்பு கொண்டவர். இப்பாடலில், கோவூர் கிழார், கிள்ளி வளவனின் நாட்டு வளத்தையும் பண்ணனின் ஈகையையும் புகழ்ந்து பாடிப் பாணன் ஒருவனை கிள்ளி வளவனிடமும் பண்ணனிடமும் ஆற்றுப்படுத்துகிறார்.

திணை : பாடாண். துறை: பாணாற்றுப்படை.

தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண!
கயத்து வாழ் யாமை காழ்கோத் தன்ன
நுண்கோல் தகைத்த தெண்கண் மாக்கிணை
இனிய காண்க; இவண் தணிக எனக் கூறி;
5 வினவல் ஆனா முதுவாய் இரவல!
தைத் திங்கள் தண்கயம் போலக்,
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்,
அடுதீ அல்லது சுடுதீ அறியாது;
இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்,
10 கிள்ளி வளவன் நல்லிசை யுள்ளி,
நாற்ற நாட்டத்து அறுகாற் பறவை
சிறுவெள் ளாம்பல் ஞாங்கர்,ஊதும்
கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்
பாதிரி கமழும் ஓதி, ஒண்ணுதல்,
15 இன்னகை விறலியடு மென்மெல இயலிச்
செல்வை ஆயின், செல்வை ஆகுவை;
விறகுஒய் மாக்கள் பொன்பெற் றன்னதோர்,
தலைப்பாடு அன்று, அவன் ஈகை;
நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே!

அருஞ்சொற்பொருள்
1. தேம் = தேன்; தீ = இனிமை; தொடை = யாழின் நரம்பு. 2. கயம் = குளம்; காழ் = வலிய கம்பி. 3. தெண் = தெளிந்த. 5. ஆனாமை = நீங்காமை; முதுவாய் = முதிய வாய்மையுடைய. 7. கூழ் = உணவு; வியல் = அகலம். 12. ஆம்பல் = அல்லி; ஞாங்கர் = மேலே. 14. பாதிரி = ஒரு மரம்; ஓதி = பெண்களின் கூந்தல். 15. இயலுதல் = நடத்தல். 17. ஓய்தல் = அழிந்து ஒழிதல் (வெட்டுதல்). 18. தலைப்பாடு = தற்செயல் நிகழ்ச்சி

உரை: தேன் போன்ற இனிய இசையை அளிக்கும் சிறிய யாழையுடைய பாண! குளத்தில் வாழும் ஆமையை வலிய கம்பியில் கோத்ததைப் போல் நூண்ணிய குச்சிகளால் பொருத்தப்பட்ட தெள்ளிய கண்ணையுடைய பெரிய கிணையைக் காட்டி “இதை இனிதே காண்க; இங்கே சற்று இருந்து செல்க” என்று கூறும் முதுமையும் வாய்மையும் உடைய இரவலனே!

கிள்ளி வளவனின் நாடு, தை மாதத்தில் தெளிந்த குளிர்ந்த நீரையுடைய குளம் போல் கொள்ளக் கொள்ளக் குறையாத உணவுப் பொருட்களுடைய அகன்ற பெரிய நகரங்களுடையது. அந்நாடு, பகைவர்களால் தீக்கிறையாக்கப்பட்டதில்லை. அங்கு சமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் தீயை மட்டுமே காணமுடியும். கிள்ளி வளவன், பசிப்பணியை நீக்குவதற்குத் தேவையான நீர் வளமும் நில வளமும் மிகுந்த நல்ல நாட்டுக்கு அரசன். அவன் புகழை நினைவுகொள். நீ கிள்ளி வளவனை நோக்கிச் செல்லும் வழியில், நறுமணத்தை விரும்பும் வண்டுகள் வெண்ணிற ஆம்பல் மலர்களின் மேலே ஒலிக்கும் சிறுகுடி என்ற ஊரில், வள்ளல் தன்மை உடைய கையையும் ஈகையில் சிறந்தவனுமான பண்ணன் என்ற ஒருவன் உள்ளான். பாதிரி மணம் கமழும் கூந்தலும் ஒளிபொருந்திய நெற்றியும் உடைய உன் விறலியுடன் மெல்ல மெல்ல நடந்து சிறுகுடிக்குச் செல்வாயானால், நீ செல்வந்தன் ஆவாய். பண்ணன் உனக்குப் பரிசுகளை அளிப்பான். பண்ணனின் ஈகை, விறகு வெட்டப் போனவனுக்குப் பொன்கிடைத்ததைப்போல் தற்செயலாக நடைபெறும் நிகழ்ச்சி அல்ல; நீ அவனிடம் பரிசு பெறுவது உறுதி. பரிசு கிடைக்குமா என்று நீ ஐயப்படத் தேவையில்லை. வாழ்க பண்ணனின் தாள்கள்!

2 comments:

Naanjil Peter said...

Puram400 blog is very nice and the presentation is excellent. Please post the previous paadalkal from 1 to 69. This blog will become a source for reference for readers and research scholars.
I appreciate your service to Tamil literature.
nanRi
Naanjil Peter

.கவி. said...

நன்றி திரு. பிரபாகரன் ஐயா.

நிச்சயம் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.

இலக்கியம் சார்ந்த இடுகைகளுக்கு ஒன்றிரண்டு பின்னூட்டுக்களே உள்ளது வருத்தம் அளிக்கின்றது.

ஆர்வமாக உள்ள நண்பர்கள் அன்பு கூர்ந்து பின்னூட்டுக்களை இடுகைகளில் அளியுங்கள்.

இலக்கிய முயற்சிகள் பாராட்டப் பட வேண்டும், போற்றப்பட வேண்டும்.

திரை சார்ந்தவற்றை மட்டுமே போற்றாமல் இலக்கியங்களையும் போற்றும் ஆர்வத்தை மேலும் மேலும் வளர்க்க இந்த இடுகைகள் பெரும்பணி ஆற்றுகின்றன.

அன்புடன்

.கவி.


--- On Wed, 4/22/09
அன்புள்ள கவி,

உங்கள் மின்னஞ்சலுக்கு மிக்க நன்றி. நீங்கள் கூறியது போல் திணைக்கும் துறைக்கும் விளக்கங்களை அளிப்பது பயனுள்ளதாக இருக்கும். அடுத்து வரும் இடுகைகளில் திணைக்கும் துறைக்கும் விளக்கங்கள் அளிக்கிறேன். ஆனால், பாடல் எழுதிய புலவர், பாடப்பட்ட அரசர் ஆகியோருடைய காலங்கள் ஆய்வுக்குரியன. பல அரசர்களுடைய ஆட்சிக் காலம் வரலாற்று நூல்களிலிலோ அல்லது இலக்கியத்திலோ தெளிவாகக் கூறப்படவில்லை. ஆதார பூர்வமாகத் தெரிந்தவற்றை எழுதுகிறேன்.அன்புடன்,

பிரபாகரன்


----- Original Message -----
அன்புள்ள திரு. பிரபாகரன்.

தொடரட்டும் தங்கள் பணி.

இயன்றால், துறை விளக்கங்களையும், பாடல் பாடப் பெற்ற காலத்தையும், அரசர் / புலவர் வாழ்ந்த காலத்தையும் இணையுங்களேன்.

அறியாதோர் அறிந்து கொள்ளவும் உதவுமே.

அன்புடன்
.கவி.