Showing posts with label புறநானூறு - பாடல் 104. Show all posts
Showing posts with label புறநானூறு - பாடல் 104. Show all posts

Monday, September 28, 2009

104. யானையும் முதலையும்!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: ஒரு சமயம், அதியமானைப் போரில் வெல்லும் பொருட்டு, அவன் ஊராகிய தகடூரை பகைமன்னர்கள் முற்றுகை இட்டனர். போர் மூண்டது. போரில் அதியமான் வெற்றி பெற்றான். அவ்வையார், பகைமன்னர்களிடம் சென்று, “ நீங்கள், அதியமான் இளையவன் என்று எண்ணி, அவன் இருந்த ஊரிலேயே அவனை வெல்ல நினைத்தீர்கள். சிறிதளவு நீர் இருந்தாலும், அந்த நீரில் முதலை யானையை எளிதாக வென்றுவிடும். அதுபோல், அதியமானை அவன் ஊரில் உங்களால் வெல்ல முடியவில்லை. வீரர்களே, நீங்கள் இனியாவது, உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.” என்று எச்சரிக்கிறார்.

திணை: வாகை. வாகைப்பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தல்.
துறை: அரச வாகை. அரசனது வெற்றியைக் கூறுதல்.
போற்றுமின் மறவீர்! சாற்றுதும் நும்மை;
ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்
தாள்படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐ
5 நுண்பல் கருமம் நினையாது
இளையன்என்று இகழின் பெறல்அரிது ஆடே.

அருஞ்சொற்பொருள்:
1.போற்றுதல் = பாதுகாத்தல்; சாற்றுதல் = சொல்லுதல், விளம்பரப் படுத்துதல். 2. குறுமாக்கள் = சிறுவர்கள். 3. தாள் = கால்; சின்னீர் = சிறிது அளவு நீர்; அடுதல் = வெல்லுதல், கொல்லல். 4. ஈர்ப்பு = இழுப்பு; கராம் = முதலை. 5. கருமம் = செயல். 6. ஆடு = வெற்றி.

கொண்டு கூட்டு: மறவீர், நுமக்குச் சாற்றுதும்; என்ஐ இளையன் என்று இகழின் பெறலரிது ஆடே எனக் கூட்டுக.

உரை: வீரர்களே! உங்களுக்கு நான் (ஒன்று) கூறுகிறேன்! ஊர்ச் சிறுவர் விளையாடுவதால் கலங்கும் அளவுக்கு நீர் குறைவாக, அவர்களின் கால் அளவே இருந்தாலும், அந்த நீரில், முதலை யானையை இழுத்து, வென்று வீழ்த்திவிடும். அந்த முதலை போன்றவன் என் தலைவன். அவனுடைய ஊராகிய தகடூரில் அவனை வெல்வது உங்களால் இயலாத செயல். அவனுடைய நுண்ணிய ஆற்றலையும் செயல்களையும் சிந்தித்துப் பார்க்காமல், அவன் இளையவன் என்று அவனை இகழ்ந்தால் உங்களால் வெற்றி பெற முடியாது. (இனியாவது) உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.