Thursday, August 16, 2012


341. இழப்பது கொல்லோ பெருங்கவின்!

பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 4-இல் காண்க.
 
பாடலின் பின்னணி: ஒரு தலைவனின் பெண்ணை, வேந்தன் ஒருவன் மணம் செய்துகொள்ள விரும்புகிறான். ஆனால் அப்பெண்ணின் தந்தை அவளை அவ்வேந்தனுக்கு மணம் செய்விக்க மறுக்கிறான். அதனால், வேந்தனுக்கும் பெண்ணின் தந்தைக்கும் போர் தொடங்கும் நிலை உருவாகிறது. ‘நான் நாளை அவளை மணப்பேன்; அல்லது அவள் தந்தையோடு போர் செய்து இறப்பேன்’ என்று வேந்தன் வஞ்சினம் கூறுகிறான். இந்தக் காட்சியைக் கண்ட புலவர் பரணர், வேந்தனுக்கும் பெண்ணின் தந்தைக்கும் நடைபெறப்போகும் போரில் அவ்வூர் அதன் அழகை இழந்துவிடுமோ என்று வருந்துகிறார். அவர் வருத்தத்தை இப்பாடலில் காணலாம்.

திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.
துறை: மகட்பாற் காஞ்சி. ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.

வேந்துகுறை யுறவுங் கொடாஅன் ஏந்துகோட்டு
அம்பூந் தொடலை அணித்தழை அல்குல்
செம்பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை;
எழுவிட்டு அமைத்த திண்நிலைக் கதவின்
அரைமண் இஞ்சி நாட்கொடி நுடங்கும்                                              5
.. .. .. . .. .. ... .. .. .. ..
புலிக்கணத் தன்ன கடுங்கண் சுற்றமொடு
மாற்றம் மாறான் மறலிய சினத்தன்
பூக்கோள் எனஏஎய்க் கயம்புக் கனனே;
விளங்குஇழைப் பொலிந்த வேளா மெல்லியல்
சுணங்கணி வனமுலை அவளொடு நாளை                                          10

மணம்புகு வைகல் ஆகுதல் ஒன்றோ
ஆரமர் உழக்கிய மறங்கிளர் முன்பின்
நீள்இலை எஃகம் அறுத்த உடம்பொடு
வாரா உலகம் புகுதல் ஒன்றெனப்
படைதொட் டனனே குருசில்; ஆயிடைக்                                            15

களிறுபொரக் கலங்கிய தண்கயம் போலப்
பெருங்கவின் இழப்பது கொல்லோ
மென்புல வைப்பின்இத் தண்பணை ஊரே!

அருஞ்சொற்பொருள்: 1. குறையுறல் = பணிந்து கேட்டல். 2. தொடலை = மாலை. 4. எழு = கணையமரம். 5. இஞ்சி = புறச்சுவர்; நுடங்கல் = அசைதல். 7. மாற்றம் = வஞ்சின மொழி; கணம் = கூட்டம்; மறல் = போர். 8.பூக்கோள் = போருக்கேற்ற பூவைப் பெற்றுக் கொள்ளுதல்; ஏய் = ஏவி;கயம் = குளம். 9. வேள்தல் = மணம் புரிதல்.  10. சுணங்கு = தேமல்; வனம் = அழகு. 11. வைகல் = நாள். 12. உழக்குதல் = கலக்குதல்; கிளர்தல் = எழுதல்; முன்பு = வலிமை. ஆயிடை = அவ்விடத்து. 13. எஃகம் = வேல்; மறுத்தல் = தடுத்தல். 16. கயம் = குளம். 17. கவின் = அழகு. 18. பணை = மருதநிலம்.

கொண்டு கூட்டு: தந்தை கொடானாய், மாறானாய், சினத்தனாய்க் கயம்புக்கனன்; குருசில் நாளை ஆகுதல் ஒன்று; வாரா உலகம் புகுதல் ஒன்று எனப் படை தொட்டனன்; இத்தண்பனை ஊர் கவின் இழப்பது கொல்லோ எனக் கூட்டுக.

உரை: வேந்தன் வந்து பணிவோடு, ‘ பெண் தருக’ என்று கேட்டாலும் அப்பெண்ணின் தந்தை தன் பெண்ணைக் கொடுக்கமாட்டான். உயர்ந்த பக்கங்களையும் அழகிய பூவோடு தழையும் சேர்த்துக் கட்டிய தழையுடை  அணிந்த இடையையும் சிறந்த வேலைப்பாடு அமைந்த சிலம்பையுமுடைய இளம்பெண்னின் தந்தை கணையமரத்தை குறுக்கே கொண்ட கதவையும், அரைத்த மண்ணால் அமைந்த மதிலையும், நாள்தோறும் வெற்றிக் குறியாக எடுத்த கொடியையும், புலிக்கூட்டத்தை ஒத்த வலிய வீரர்களையும் உடையவன்.  அவன் கூறிய வஞ்சினச் சொல்லைத் தவறாமல் செய்து முடிப்பவன்; போர் குறித்த சினமுடையவன்; வீரர்கள் அனைவருக்கும் போருக்குரிய பூக்களை பெற்றுக்கொள்ளுமாறு கட்டளையிட்ட பிறகு, நீராடுவதற்காகக் குளத்தில் மூழ்கினான். பெண்கேட்டு வந்த வேந்தன், ’விளங்கும் அணிகலன்களை அணிந்து, அழகுடையவளாய், மணமாகாதவளாய், மெல்லியல்புடையவளாய், தேமல் படர்ந்த அழகிய முலையினையுடைய அவளை நான் நாளை மணம் செய்துகொள்வேன்; அல்லது, அரிய போரைச் செய்தற்குரிய ஆற்றலோடு நீண்ட இலைவடிவில் ஆகிய வேலால் புண்பட்ட உடலோடு மேலுலகம் புகுவேன்.  இந்த இரண்டில் யாதாவது ஒன்று நாளை நடைபெற வேண்டும்.’ என்று வஞ்சினம் கூறித் தன் படைக் கருவிகளைக் கையில் எடுத்தான்.  நீராடும் யானைகள் போரிடுவதால் கலங்கிச் சேறாகும் குளம்போல், இவ்விருவரும் செய்யும் போரால் நன்செய் வயல்கள் பொருந்திய ஊராகிய இந்த மருதநிலத்தூர் தன் அழகை இழக்கும் போலும்.

No comments: