Monday, January 10, 2011

211. நாணக் கூறினேன்!

பாடியவர்: பெருங்குன்றூர் கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 147 – இல் காண்க.
பாடப்பட்டோன்:
சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 210 – இல் காண்க.
பாடலின் பின்னணி: சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறையிடம் பரிசு பெற விரும்பிச் சென்ற பெருங்குன்றூர் கிழார் அவன் அரண்மனையில் சில நாட்கள் தங்கியிருந்தார். அவன் அவருக்குப் பரிசு அளிக்காமல் காலம் கடத்தினான். அவர், அவன் வெற்றிகளைப் புகழ்ந்து பாடினார். அவன் அவருடைய பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தான். அவன் பரிசு கொடுப்பதுபோல் சிலசெயல்களைச் செய்தான். இவ்வாறு சில நாட்கள் கழிந்தன. ஆனால், பரிசு கொடுக்காமல் அவன் தன்னை ஏமாற்றுவதை அவர் உணர்ந்தார். இனி, சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறையிடம் பரிசு பெறுவதற்கு வாய்ப்பில்லை என்ற முடிவுக்குப் பெருங்குன்றூர் கிழார் வந்தார். ”உன்னிடம் பரிசில் பெறலாம் என்று எண்ணி வந்தேன்; உன்னைப் புகழ்ந்தேன். நான் பாடிய படல்களை நீ விரும்பிக் கேட்டாய். பரிசு கொடுக்காத பிறருடைய கொடிய செயல்களையும் கூறினேன். ஆனால், நீ பரிசு கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்துவிட்டாய். உண்ண உணவில்லாததால், என் வீட்டின் பழைய சுவர்களைப் பல இடங்களில் தோண்டிய எலிகள் அங்கேயே இறந்து கிடக்கின்றன. என் மனைவியின் முலைகளில் பால் இல்லாததால், என் புதல்வன் பால் குடிப்பதையே மறந்துவிட்டான். நான் என் மனைவியை நினைத்து அவளிடம் செல்கிறேன். நீ வாழ்க!” என்று கூறிப் பெருங்குன்றூர் கிழார், சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறையிடம்இருந்து விடை பெற்றுச் சென்றதாக இப்பாடலில் காண்கிறோம்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் விரும்பிப் புரவலரிடம் சென்று தன் விருப்பத்தைக் கூறுதல்.

அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலேறு
அணங்குடை அரவின் அருந்தலை துமிய
நின்றுகாண் பன்ன நீள்மலை மிளிரக்
குன்றுதூவ எறியும் அரவம் போல
5 முரசு எழுந்து இரங்கும் தானையோடு தலைச்சென்று
அரைசுபடக் கடக்கும் உரைசால் தோன்றல்!நின்
உள்ளி வந்த ஓங்குநிலைப் பரிசிலென்
வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன்எனக்
கொள்ளா மாந்தர் கொடுமை கூறநின்
10 உள்ளியது முடிந்தோய் மன்ற; முன்னாள்
கையுள் ளதுபோல் காட்டி வழிநாள்
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம்
நாணாய் ஆயினும் நாணக் கூறி என்
நுணங்கு செந்நா அணங்க ஏத்திப்
15 பாடப் பாடப் பாடுபுகழ் கொண்டநின்
ஆடுகொள் வியன்மார்பு தொழுதெனன் பழிச்சிச்
செல்வல் அத்தை யானே; வைகலும்
வல்சி இன்மையின், வயின்வயின் மாறி
இல்எலி மடிந்த தொல்சுவர் வரைப்பின்
20 பாஅல் இன்மையின் பல்பாடு சுவைத்து
முலைக்கோள் மறந்த புதல்வனொடு
மனைத்தொலைந் திருந்தவென் வாள்நுதற் படர்ந்தே.

அருஞ்சொற்பொருள்:
1. மரபு = இயல்பு; புயல் = மழை பெய்தல்; ஏறு = பெரிய இடி. 2. அரவம் = பாம்பு, ஓசை; அணங்குதல் = அஞ்சுதல்; துமிதல் = வெட்டப்படுதல். 3. மிளிர்தல் = பிறழ்தல். 4. தூஎறியும் = தூவ எறியும்; தூவல் = சிந்தல், சிதறல். 5. தலைச் சென்று = மேற்சென்று. 6. அரைசு = அரசு; உரை = புகழ்; சால் = மிகுதி, நிறைவு; தோன்றல் = அரசன். 7. உள்ளி = நினைத்து. 9. கொள்ளா = ஏற்றூ கொள்ளாத. 10. மன்ற = நிச்சயமாக. 12. புறநிலை = வேறுபட்ட நிலை. 14. நுணங்குதல் = நுண்மையாதல். 16. ஆடு = வெற்ற; வியன் = அகன்ற. பழிச்சுதல் = வாழ்த்துதல். 17. வைகல் = நாள். 18. வல்சி = உணவு; வயின் = இடம். 19. மடிதல் = சாதல்; வரைப்பு = எல்லை. 22. வாள்நுதல் = ஒளிபொருந்திய நெற்றி; படர்ந்து = நினைத்து.

கொண்டு கூட்டு: தோன்றல், நின் உள்ளி வந்த பரிசிலன் ஆகிய நான் கூற, நின் உள்ளியது செய்தலான், வருத்தம் கூறி ஏத்தித் தொழுதனென் பழிச்சி, வரைப்பின் மனைக்கண்ணே புதல்வனோடு தொலைந்திருந்த என் வாள்நுதலை நினைத்துச் செல்வல் எனக் கூட்டுக.

உரை: அச்சம் தரும் இயல்புடைய பெருமழை பெய்யும்பொழுது, இடியோசைக்கு அஞ்சும் பாம்பின் தலையைப் பிளக்கும் பெரிய இடிபோல் உன் முரசு ஒலிக்கிறது. மற்றும், உன் முரசின் ஒலியைக் கேட்டு, நிலத்தை நிமிர்ந்து நின்று பார்ப்பதுபோல் உயர்ந்து நிற்கும் நெடிய மலைகள் அதிர்கின்றன; சிறிய குன்றுகள் சிதறுகின்றன. அத்தகைய முரசின் முழக்கத்தோடு சென்று, வேந்தர்கள் பலரையும் எதிர்நின்று கொல்லும் புகழமைந்த தலைவ! நீ வள்ளல் தன்மை உடையவனாதலால், என்னை வணங்கி, எனக்குத் தகுந்த பரிசு அளிப்பாய் என்று உன்னை நினைத்து வந்த உயர்ந்த பரிசிலன் நான். என் போன்ற புலவர்களை ஏற்றுக்கொண்டு, எமக்குப் பரிசளிக்காதவர்களின் கொடிய செயல்களைச் சொல்லக் கேட்டும், நீ நினைத்ததை நீ நிச்சயமாகச் செய்து முடித்தாய். முதல் நாள், பரிசிலை எனக்குக் கொடுப்பதுபோல் காட்டிப் பின்னர் அது இல்லாதவாறு நீ செய்ததை நினைத்து நான் வருந்துவதற்கு நீ வெட்கப்படவில்லை. நீ வெட்கப்படும் வகையில், நான் நுணுக்கமாக ஆய்வுசெய்து, என் செவ்விய நாக்கு வருந்துமாறு, நாள்தோறும், உன்னைப் புகழ்ந்து பாடப்பாடக் கேட்டு மகிழ்ந்தாய். வெற்றி பொருந்திய அகன்ற மார்பையுடைய உன்னை வாழ்த்துகிறேன்.

நாள்தோறும், உணவில்லாததால் என் வீட்டின் பழைய சுவர்களில் வேறுவேறு இடங்களில் மாறிமாறித் தோண்டிய எலிகள் அங்கேயே இறந்து கிடக்கின்றன. அத்தகைய பழைய சுவர்களையுடைய வீட்டில் என் மனைவி வாழ்கிறாள். பலமுறை சுவைத்தும் என் மனைவியின் முலைகளில் பால் இல்லாததால், என் மகன் பால் குடிப்பதையே மறந்துவிட்டான். அத்தகைய வறுமையில் வாடும் என் மனைவியின் ஒளிபொருந்திய நெற்றியை நினைத்து நான் செல்கிறேன்.

No comments: