Tuesday, January 19, 2010

145. அவள் இடர் களைவாய்!

பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 141 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 141 - இல் காணலாம்.

பாடலின் பின்னணி: பரணர் பாடியதைக் கேட்ட பேகன் அவருக்குப் பரிசில் அளிக்க முன்வந்தான். அதைக் கண்ட பரணர், “ மயிலுக்குப் போர்வை அளித்த பேகனே! நாங்கள் பசியால் இங்கு வரவில்லை; எமக்குச் சுற்றமும் இல்லை; நீ இன்றே புறப்பட்டு உன் மனைவியிடம் சென்று அவள் துன்பத்தைத் தீர்க்க வேண்டும்” என்று இப்பாடலில் கூறுகிறார்.

திணை: பெருந்திணை. பொருந்தாத காமநிலையை பற்றிக் கூறுவது பெருந்திணையாகும்.
துறை: குறுங்கலி. மனை ஒழுக்கம் தவறியவருக்கு அறிவுரை கூறி அவரை அவ்வொழுக்கத்தில் நிற்கச் செய்தல் குறுங்கலி எனப்படும்.

மடத்தகை மாமயில் பனிக்கும்என்று அருளிப்
படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக,
பசித்தும் வாரோம்; பாரமும் இலமே ;
5 களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்
நயம்புரிந் துறையுநர் நடுங்கப் பண்ணி
அறம்செய் தீமோ அருள்வெய் யோய்என
இஃதியாம் இரந்த பரிசில்அஃது இருளின்
இனமணி நெடுந்தேர் ஏறி
10 இன்னாது உறைவி அரும்படர் களைமே!

அருஞ்சொற்பொருள்:
1.மடம் = மென்மை; தகை = தன்மை; மா = கருமை; பனித்தல் = நடுங்குதல். 2. படாஅம் = படாம் = போர்வை. 3. கடாம் = மத நீர்; கலிமான் = செருக்குடைய குதிரை. 5. கோடு = யாழ்த்தண்டு. 6, நயம் புரிந்து உறையுநர் = இசை நயம் புரிந்து வாழ்பவர். 7. வெய்யோய் = விரும்புபவன். 9. இனம் = நிறை. 10. படர் = துன்பம்.

கொண்டு கூட்டு: பேக, இன்னா துறைவி அரும் படர் களை; யாழைப் பண்ணி யாம் இரந்த பரிசில் இது எனக் கூட்டுக.

உரை: மென்மையான இயல்பும் கருமை நிறமும் உடைய மயில் ஒன்று குளிரில் நடுங்குகிறது என்று எண்ணி அம்மயிலுக்குப் போர்வை அளித்தவனே! குறையாத புகழும் மதமுள்ள யானைகளும் செருக்குடைய குதிரைகளும் உடைய பேகனே! நான் பசியினால் வரவில்லை; எனக்குச் சுற்றத்தாரால் வரும் சுமையும் இல்லை. களாப்பழம் போன்ற கரிய தண்டையுடை ய சிறிய யாழுடன், இசை நயம் தெரிந்தோர் தலயைசைத்துக் கேட்குமாறு “ அறம் செய்க; அருளை விரும்புபவனே” என்று பாடி உன்னிடம் பரிசிலாகக் கேட்பது என்னவென்றால் ”நீ இன்று இரவே நிறைந்த மணிகளுடைய உயர்ந்த தேரில் ஏறிப்போய் துயரத்துடன் வாழ்பவளின் (உன் மனைவி கண்ணகியின்) துன்பத்தைக் களைவாயாக” என்பதுதான்.

No comments: