Monday, September 14, 2009

97. இறுக்கல் வேண்டும் திறையே!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: அதியமான் நெடுமான் அஞ்சிக்குத் திறை செலுத்த வேண்டிய வேந்தர்களில் சிலர், அதனைச் செலுத்தாது அதியமானோடு போர் புரிவதற்குத் திட்டமிட்டனர். அதை அறிந்த அவ்வையார், “அதியமானின் வாட்படை, விற்படை, களிற்றுப் படை, குதிரைப் படை மற்றும் காலாட் படை எல்லாம் போர் செய்வதில் மிகுந்த தேர்ச்சி பெற்றவை; அவனை எதிர்த்தவர்கள் தப்ப முடியாது; உங்களுக்குச் சொந்தமான ஊர்கள் உங்களிடத்தில் இருக்க வேண்டுமானால், அவனுக்குச் செலுத்த வேண்டிய திறையைச் செலுத்துங்கள்; நீங்கள் திறை கொடுக்க மறுத்தால் அவன் அதற்கு உடன்பட மாட்டான்; நிச்சயமாக உங்களை எதிர்த்துப் போரிடுவான்; நான் சொல்லியும் நீங்கள் கேட்காமல் அவனோடு போருக்குச் சென்றால் உங்கள் மகளிரிடம் இருந்து நீங்கள் பிரியப் (இறக்கப்) போகிறீர்கள்; அது நிச்சயம்.” என்று எச்சரிக்கிறார்.

திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

போர்க்குஉரைஇப் புகன்று கழித்தவாள்
உடன்றவர் காப்புடை மதில்அழித்தலின்
ஊனுற மூழ்கி உருவிழந் தனவே
வேலே, குறும்படைந்த அரண்கடந்தவர்
5 நறுங்கள்ளின் நாடுநைத்தலின்
சுரைதழீஇய இருங்காழொடு
மடைகலங்கி நிலைதிரிந்தனவே;
களிறே, எழூஉத் தாங்கிய கதவம்மலைத்துஅவர்
குழூஉக்களிற்றுக் குறும்புஉடைத்தலின்
10 பரூஉப்பிணிய தொடிகழிந்தனவே;
மாவே, பரந்துஒருங்கு மலைந்தமறவர்
பொலம்பைந்தார் கெடப்பரிதலின்
களன்உழந்து அசைஇய மறுக்குளம் பினவே;
அவன்தானும், நிலம்திரைக்கும் கடல்தானைப்
15 பொலந்தும்பைக் கழல்பாண்டில்
கணைபொருத துளைத்தோலன்னே
ஆயிடை, உடன்றோர் உய்தல் யாவது? தடம்தாள்
பிணிக்கதிர், நெல்லின் செம்மல் மூதூர்
நுமக்குஉரித்து ஆகல் வேண்டின், சென்றுஅவற்கு
20 இறுக்கல் வேண்டும் திறையே; மறுப்பின்
ஒல்வான் அல்லன் வெல்போ ரான்எனச்
சொல்லவும் தேறீர் ஆயின், மெல்லியல்
கழற்கனி வகுத்த துணைச்சில் ஓதிக்
குறுந்தொடி மகளிர் தோள்விடல்
25 இறும்பூது அன்றுஅஃது அறிந்துஆ டுமினே.

அருஞ்சொற்பொருள்:
1.உரைஇ = உலாவி, சுழன்று, பரந்து; புகன்று = விரும்பி; கழிதல் = போக்குதல், நீக்குதல். 2. உடன்று = வெகுண்டு. 3. உற = மிக. 4. குறும்பு = குறும்பர், பகைவர், தீயோர். 5. நறுமை = மனம், நன்மை; நைத்தல் = கெடுத்தல். 6. சுரை = அம்புத் தலை (வேலின் தலைப் பாகம்); தழீஇய = பொருந்திய; இரு = பெரிய; காழ் = காம்பு. 7. மடை = ஆணி, ஆயுத மூட்டு. 8. எழு = கணைய மரம்; மலைத்தல் = பொருதல், வருத்துதல், எதிர்த்தல். 9. குறும்பு = அரண். 10. பரூஉ = பருமை; தொடி = கிம்புரி (யானையின் தந்தங்களில் அணியப்படும் அணிகலன்). 12. பொலம் = பொன்; பைந்தார் = பசுமை; தார் = மாலை; பரிதல் = ஓடுதல். 13. உழத்தல் = வெல்லுதல், துவைத்தல், வருத்துதல்; அசைவு = வருத்தம்; மறு = கறை. 14. திரைதல் = சுருங்குதல், திரளுதல். 15.கழல் = கழற்சிக் காய்; பாண்டில் = வட்டம். 16. தோல் = கேடயம். 17. ஆயிடை = அவ்விடத்து, அக்காலத்து; தடம் = பெரிய. 20. இறுக்கல் = திறை கொடுத்தல். 21. ஒல்லுதல் = இணங்குதல். 23. கனி = காய்; ஓதி = பெண்களின் கூந்தல். 25. இறும்பூது = வியப்பு; ஆடுதல் = போர் செய்தல்.

உரை: போர் புரிவதற்கு விரும்பி, உறையிலிருந்து எடுத்த வாள்கள் பகைவரின் காவலுடைய மதில்களை அழித்து அவர்களின் தசைக்குள் மிகவும் மூழ்கியதால் தங்கள் உருவத்தை இழந்தன. வேல்களோ, பகைவரின் அரண்களை வென்று அவர்களின் மணம் மிகுந்த கள்ளுடைய நாட்டை அழித்ததால் தலைப்பாகத்தோடு கூடிய வலிய காம்பும் ஆணியும் நிலை கெட்டன. யானைகளோ, கணையமரங்களால் தடுக்கப்பட்டக் கதவுகளைத் தாக்கி, பகைவரின் யானைகளோடு கூடிய அரண்களை அழித்ததால், தங்கள் தந்தங்களில் இறுகக் கட்டப்பட்ட பெரிய அணிகலன்களை (கிம்புரிகளை)இழந்தன. குதிரைகளோ, பரவலாக ஒன்று சேர்ந்து வந்து தாக்கிய பசும்பொன்னாலான அழகிய மாலைகளணிந்த பகைவர்களின் மார்புகளை உருவழியுமாறு வருத்தித் தாக்கிப் போர்க்களத்தில் அவர்களை அழித்ததால் தங்கள் குளம்புகளில் குருதிக் கறை கொண்டன.

அதியமான், நிலத்தைத் தன்னுள் அடக்கிய கடல் போன்ற படையுடன், கழற்காய் வடிவாகவும், வட்ட வடிவான கிண்ணிகளுடைய கேடயத்தை ஏந்திப் பொன்னாலான தும்பை மாலையை அணிந்திருக்கிறான். அவ்விடத்து, அவனுடைய சினத்துக்கு ஆளானோர் எப்படி உயிர் தப்ப முடியும்?
பெரிய தாளினையும் பின்னிக் கிடக்கும் நெற்கதிர்களையும் உடைய தலைமையும் பழைமையும் கூடிய உங்கள் ஊர் உங்களுக்குச் சொந்தமாக இருக்க வேண்டுமானால், அவனுக்குச் செலுத்த வேண்டிய திறையை நீங்கள் செலுத்த வேண்டும். திறை செலுத்த மறுத்தால் அவன் அதற்கு உடன்பட மாட்டன். அவன் உங்களை எதிர்த்துப் போரிடுவான். நான் இவ்வளவு சொல்லியும் நீங்கள் என் சொல்லைக் கேட்கவில்லையானால், மென்மையும் கழற்காயின் உதவியால் வகுத்து சுருட்டி முடியப்பட்ட கூந்தலும் சிறிய வளையல்களையும் அணிந்த உங்கள் உரிமை மகளிரின் தோள்களைத் தழுவமுடியாமல் அவர்களை விட்டு நீங்கள் பிரியப் போவதில் (இறக்கப் போவதில்) வியப்பில்லை. அதை அறிந்து போர் செய்க!

No comments: